‘ஹபீபி’ இன்று குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்த்தேன். நான் ஒரு தொண்ணூறுகளின் சபுராளி (சபுராளி என்றால் சங்ககால மொழியில் சொன்னால் பொருள்வயின் பிரிந்து பாலைத் திணையின் பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாக பொருள் தேடி பரதேசம் ஏகியவன் என்று பொருள், சபுர் என்றால் அரபியில் பயணம் என்று பொருள்). என் மனைவியும் நானும் படத்தில் முழுமையாகக் கனெக்ட் ஆகிவிட்டோம். குறிப்பாக அந்தக் கேசட் பேசுதல், கப்பலுக்குப் போன மச்சான், மனைவிக்குக் குடும்பத்தினர் அறியாமல் இருக்கப் பெயர் தெரியாத ஒருத்தர் பெயரில் பொதிந்து எடுத்துவரும் அமாந்த (அனாமேதய) சாமான்கள், மாங்கு மாங்கு என்று எழுதி நண்பர்களிடம் சேர்க்கும் கடிதங்கள்… அந்த ஜிஎம்சி வண்டியில் நின்று தாடியுடன் பொட்டோ எடுத்து அனுப்பும் ஸ்டில் (மட்டும் நான் அப்படி ஒரு போட்டோ அனுப்பக்கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டு சவுதி போனதால் அனுப்பவில்லை), ஆனால் ஸ்டுடியோவில் மனைவி பிள்ளைகள் போட்டோ எடுத்து அனுப்புதல் என மிகச்சரியாக எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மீசை வரைந்து வந்த பலரையும் அதில் ஒருவர் எனது மச்சான் அங்குச் சந்தித்து உள்ளேன்.
அரேபியாவை ஒரு ஸ்டில்லில்கூட காட்டாமல் அரேபிய அனுபவத்தைத் திரையாக்கமாக்கியதில் இயக்குநரின் சினிமா குறித்த புரிதல் திறமை பாராட்டத் தக்கது. குறைந்த பட்சம் ஒரு ஏர்போர்ட்டைக் கூடப் படத்தில் காட்டவில்லை. அச்சு அசலான தென்மாவட்ட இஸ்லாமிய வாழ்க்கை யதார்த்தமாகப் பதிவாகியுள்ளது. தமிழில் முதன்முதலாக வந்துள்ள இஸ்லாமிய இனவரைவியல் (Tamil Islamic Ethnograpic) அல்லது வாழ்வியல் சடங்குகள் குறிப்பாக மய்யத்தை கழுவுதல் அடக்கம், ஜனாசா தொழுகை எனத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. அரேபிய இஸ்லாமிய நடைமுறைகள் இதில் மாறுபட்டவை. இஸ்லாம் ஓரிறைக் கொள்கையைக் கொண்டது என்றாலும், அது பரவிய நாடுகளில் அந்தந்த நாட்டுப் பண்பாடுகளில் விதையாக விழுந்து வேர்பிடித்த ஒன்று என்பதால் அதில் பிராந்தியமயமாக்கல் அதிகம். தென்மாவட்ட மற்றும் டெல்டா பகுதிகளின் இஸ்லாமிய வாழ்வியலில் சிற்சில மாறுபாடுகள் உண்டு என்றாலும் பொதுவான தமிழகத் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் (உருது பேசும் இஸ்லாமியர்கள் நடைமுறை வேறு) ஒரு பொதுவான வாழ்வியல் சடங்குகள் கொண்டவர்கள் என்பதால் பொதுவான தமிழ் முஸ்லிம் வாழ்வியலை அதன் யதார்த்தத்துடன் வெளிப்படுத்தும் ஒரு முக்கியமானதும் முதலில் வெளிவந்துள்ள திரைப்படமாக உள்ளது ‘ஹபீபி.
அரபுத் தமிழை மிக அழகாகப் பயன்படுத்தி உள்ளார்கள். நடிகர்கள் மிகச்சிறப்பாகத் தங்கள் நடிப்பின் மூலம் திரைப்படத்தின் யதார்த்தநிலையை இயல்பானதாக ஆக்குகிறார்கள். இஸ்லாமியர்களின் அரபு பாதிப்பால் உருவான புர்கா வரும் காலம் உட்படத் துல்லியமாக இயக்குநர் காட்சிப்படுத்தி உள்ளார். அரபியாவிற்கு இஸ்லாமியர் போகும் முன்பு இங்கு இருந்தது இரண்டு வகை துப்பட்டிகள் (அதாவது பெண்கள் உடலைப் போர்த்தி முக்காடிட்டு வரும் உடை) இருந்தன ஒன்று சாதா துப்பட்டி மற்றது கூசாலி துப்பட்டி என்பார்கள் எங்கள் பகுதியில். உழைக்கும் இஸ்லாமியப் பெண்கள் பெரும்பாலும் முக்காடிடுவதுடன் சரி. பின்னாளில் அரேபிய பாதிப்பில் புர்கா என்கிற அபயா என்கிற உடை வருகிறது. இன்று அது இஸ்லாமியப் பெண்களின் கட்டாய உடையாக மாற்றப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அதைத் துல்லியமாகப் பதிவுச் செய்கிறது.
படிக்க:
♦ ஆண் பாவம் பொல்லாதது | சினிமா விமர்சனம் | முகநூல் பதிவு
♦ சினிமா: பாசிசத்தின் கீழ் கலைஞன் சோதிக்கப்படுகிறான் !
காதலைச் சொல்லக் குடத்தில் சோப்பு போடும் பழக்கம், அது குறித்து அந்த இளம் இஸ்லாமியப் பெண்கள் பேசும் விதம், அதன் கொச்சையான மொழி என இத் திரைப்படத்தை மிக அழகாகவும், இயல்பாகவும் செதுக்கி உள்ளார். நானும் ஒரு நெசவாளி குடும்பத்தில் பிறந்தவன். எங்கள் தலைமுறையில் அதைவிட்டு வெளிவந்து விட்டோம். தற்போது எங்கள் ஊரில் நெசவு சார்ந்த தொழிலே இல்லை. அதாவது அச்சு கட்டுதல், பண்ணை கட்டுதல் போன்ற இஸ்லாமியர்கள் தொழில் அது. இது திரைப்படத்தில் வரும் நெசவு காகுழி என்கிற கால்குழி எங்கள் ஊரில் உள்ள செங்குந்தர்கள் சமூகத்தின் தொழில் (திருபுவனம் பட்டுச் சேலை நெசவு). அதுதான் எங்கள் ஊரின் வருமானம். அந்த நெசவிற்கு அச்சு கட்டி பண்ணை தயாரிப்பது எங்கள் தாத்தா மற்றும் எங்கள் ஊர் இஸ்லாமியர்களின் பணி. எங்கள் ஊரின் சன்னாபுரம் என்ற இஸ்லாமியப் பகுதி என்பதே இந்தப் பண்ணைக் கட்டுதல் வழி உருவாகி ஊரானதே வரலாறு. நெசவுத் தொழில் என்பது ஆதியில் நாகர்களாலும் (பார்க்க 1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம் நூல்), பிறகு தமிழகச் சமணர்களாலும் தொடரப்பட்ட ஒன்று. பல சமணர்கள் பல்லவர், பாண்டியர் காலத்தில், கழுவேற்றத்திற்குப் பயந்து இஸ்லாமைத் தழுவியதாக வரலாறு உண்டு (மெலதிகமாக இது குறித்து எனது கட்டுரை ஒன்று உள்ளது. Thazhai Mathiyavan அவர்கள் சமணர்கள் தமிழ் இஸ்லாமிய தொடர்புகள் குறித்து தனி நூலே எழுதி உள்ளார்). அவ்வகையில் இத்திரைப்படம் தமிழக இஸ்லாமியர்களின் ஆதித் தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் எப்படித் தொழில் நசிந்து பரதேசம் ஏகினார்கள் அதாவது திரைக்கடலோடி திரவியம் தேடினார்கள் என்பது மிகச் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய பெரும்பான்மை மதவாதப் பாசிசத்தின் கொடூரமான சூழலில், இஸ்லாமியச் சமூகத்தின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் வெறுப்பு, ஒவ்வாமை ஆகியவற்றைத் தணிப்பதாக அவர்களின் வறுமையான வாழ்வியலைக் காட்சிப்படுத்துகிறது இத்திரைப்படம். இஸ்லாமியர் வாழ்வை ஒரு இயங்கும் மீசியமாக மாற்றிக் காட்சியின்பத்தை வழங்கும் ஒன்றாக இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. சிறுபான்மை மக்களின் ஒரு மாற்று வாழ்வியலைத் திரையில் பதிவு செய்துள்ளார். இஸ்லாம் அல்லாத பலரும் நெருக்கமான மாற்று மத நண்பர்கள், அறிவுஜீவிகள்கூட இஸ்லாமியர் குறித்த உள்ளார்ந்த ஒரு வெறுப்பை, ஒவ்வாமையைக் கொண்டுள்ள இந்தச் சூழலில் இத்திரைப்படம் தனது அழகியல் மூலம் அரசியலை வெளிப்படுத்தி உள்ளது. திரைப்படக் குழுவினருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கும் மனம் திறந்த பாராட்டுகள். (விரிவான கட்டுரை பிறகு)
– ஜமாலன், 14-06-2026
முகநூல் பதிவு
![]()







“ஹபீபி” – திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அப்படம் மிகவும் சிறந்த தன்மையில் – ஈர்க்கப்படும் வகையில் எடுக்கப்பட்டதாக விமர்சகர் ஜமாலன் பதிவிட்டுள்ளார். ஆனால் இச்சுருக்கமான விமர்சனப் பதிவின் மூலம் திரைப்படத்தின் பெருமையை உள்ளார்ந்த தன்மையில் என்னால் உணர இயலவில்லை. ஒருவேளை இது குறித்துப் பின்னர் கட்டுரை ஒன்று எழுதுவதாக விமர்சகர் தெரிவித்துள்ளதால் அதனைப் படித்த பின் உணர முயற்சிக்கிறேன். ஒருவேளை இந்த விமர்சனம் குறித்த பார்வையில் (அதாவது புரிந்து கொள்ளும் தன்மையில்) என்னிடம் ஏதும் குறைபாடு உள்ளதோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. திரைப்படம் பார்த்தபின் முழுமையை உணர முயற்சிக்கிறேன்.