மிழ் நாட்டின் முதலமைச்சராக பாசிச கோமாளி விஜய் பதவி ஏற்ற பின்னர் அனைத்து துறைகளிலும் ஊழல் குறைந்து விட்டதாகவும், ஊழலற்ற ஆட்சி நடத்துவதை நோக்கி தமிழக வெற்றிக் கழகம் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் பரப்பப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற ஊழியர் ஒருவர், விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களது ஷோரூம்களில் வாங்குகின்ற வாகனங்களுக்கு, பதிவு செய்யச் செல்லும் போது வாகனப் பதிவு துறையில் உள்ளவர்கள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறவில்லை. இவ்வாறு லஞ்சம் பெறக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக எங்களுக்கு அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு துறைகளில் லஞ்ச- ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், திடீர் திடீரென்று ரெய்டுகள் நடத்தி ஊழல் புரிபவர்களை கண்டுபிடிப்பதும் பரபரப்பான செய்தியாக வெளியாகிக் கொண்டுள்ளது.

அதாவது அரசியல்வாதிகள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறி வாஷிங் மெஷின் மூலம் பளிச்சென்று வெளிவருவது போல தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி விஜய் ஆட்சி வந்தவுடன் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் தனது கேடுகெட்ட பண்புகளையும் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்கின்ற கிரிமினல் குற்ற செயல்களையும் கைவிட்டு விட்டு ரமணா பட பாணியில் மாறிவிட்டார்கள் போல செய்திகளை பரப்புகின்றனர்.

திமுக ஆட்சியில் இருந்தபோது நாலு லட்சம் கோடி ரூபாய் பல்வேறு துறைகளில் ஊழல் செய்ததாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பாசிச பாஜகவின் அடிமையான பழனிச்சாமி தேர்தல் பரப்புரைகளில் முன்வைத்து பிரச்சாரம் செய்தார். இதை அப்படியே எடுத்துக் கொண்டாலும் அந்த நாலு லட்சம் கோடி ரூபாயை ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு துணை நின்றவர்கள் அந்தந்த துறையில் உள்ள அதிகார வர்க்கத்தினர் மட்டும்தான் என்பது கோமாளி விஜய் பாணியில் கூறினால் நண்பா, நண்பிஸ் என்று சொல்லக்கூடிய சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூட தெரிந்த உண்மை.

உண்மை இப்படி இருக்க அதிகார வர்க்கத்தினர் லஞ்சம் வாங்குவதையும், ஊழல் புரிவதையும் கைவிட்டு வருகிறார்கள் லஞ்சம் ஊழல் குறைந்துள்ளது என்று சூட்கேஸ் மணி அதாவது பாமகவின் அன்புமணி சத்தியம் செய்வது நமக்கு மூச்சை முட்டச் செய்கிறது.

“அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்போது, எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் அம்பலப்படுத்தப்படுகின்றன. ஆனால் அதிகார வர்க்கம் செய்யும் ஊழல்களும் மோசடிகளும் வெளியே தெரிவதில்லை. ஊழல் அதிகாரிகள் தமக்கு உரிய பங்கு கிடைக்காத ஆத்திரத்தில் போட்டுக்கொடுக்கும்போதுதான் அதிகார வர்க்கத்தினரின் ஊழல்-கொள்ளைகள் மெதுவாகக் கசிகின்றன. இருப்பினும், அதையும் முடக்கவும் மூடிமறைக்கும் தகிடுதத்தங்களில் இறங்குவதும், துறை சார்ந்த விசாரணை நடப்பதாக பூசி மெழுகுவதும், விசாரணையை இழுத்தடிப்பதும்தான் நடக்கிறது.

அரசு எனும் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் இந்த அதிகாரிகள்தான். அரசு எனும் ஆயிரங்கால் பூதத்தின் கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாக இருப்பது அதிகார வர்க்கம்தான். ஆட்சி நடத்துவதே அவர்கள்தான். அதனால்தான் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என்று குறிப்பிடப்படுகின்றனர். இலஞ்ச ஊழல் – அதிகார முறைகேடுகள் மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், அரசின் வரவு-செலவுகள், கொள்கைகள் – திட்டங்களை ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல், ஆதிக்கம், கொள்ளைக்கு ஏற்ற வகையில் வகுத்து, அவற்றைச் செயல்படுத்துபவர்கள்தான் இந்த அதிகாரிகள் கூட்டம். ஆளும் கும்பலுக்குச் சேவை செய்யும் இத்தகைய ஊழல்-மோசடி அதிகார வர்க்கத்தைக் கொண்டுள்ள அரசுக் கட்டமைவில், லோக்ஆயுக்தா போன்ற ஊழல் தடுப்பு ஏற்பாடுகளும் சட்டங்களும் போட்டாலும் அவையனைத்தும் அடுத்தடுத்து தோல்வியைத்தான் தழுவுகின்றன.

படிக்க:

♦ ரோபோ எந்திரனை மனிதனாக்கினார் இயக்குனர் ஷங்கர். அமைச்சர்களை ரோபோவாக்குகிறார் பாசிச கோமாளி விஜய்

 நடிகர் விஜய் மாஸ் ஹீரோ! முதல்வர் விஜய் ஹீரோவா – வில்லனா?

இந்நிலையில், சட்டபூர்வ கிரிமினல் கும்பலாக வளர்ந்துவிட்ட இத்தகைய ஊழல் அதிகார வர்க்கத்தை தனிநபர்களின் போராட்டங்களால் ஒழித்துவிடவோ, கடுமையான சட்டங்களால் திருத்தியமைத்துவிடவோ ஒருக்காலும் சாத்தியமில்லை. இத்தகைய அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறைகளின் அதிகாரத்தைப் பறிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவரவும் புரட்சிகர அமைப்பும் போர்க்குணமிக்க போராட்டங்களும் அவசியமாக உள்ளன என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன”. என்று 2015 ஆம் ஆண்டு மார்ச் மாத புதிய ஜனநாயகம் இதழில் எழுதி இருந்தோம்.

இந்த பத்தாண்டுகளில் அதிகார வர்க்கம் நாடு முழுவதும் செய்த லஞ்ச ஊழல் முறைகேடுகள் மற்றும் கிரிமினல் குற்றச் செயல்கள், நீதித்துறையுடன் இணைந்து அதிகார வர்க்கம் நடத்திய முறைகேடுகள் ஆகியவை பல மடங்கு அதிகரித்துள்ளன.

இந்தியாவில் இத்தகைய அதிகார வர்க்கம் என்று அழைக்கப்படுகின்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் உள்ளூரில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி வரையிலான மிகப்பெரிய வெள்ளையானை மக்களின் வரிப்பணத்தில் கணிசமான தொகையை தனக்கு ஊதியமாகவும், சட்டவிரோத முறையில் லஞ்சம் ஊழல் புரிந்து சுருட்டிக் கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள அதிகார வர்க்கத்திற்கும், அரசு ஊழியர்களுக்கும் அரசு விதிகளின்படியே தற்போதைய பட்ஜெட்டில் 26 சதவீதம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்பதும், இவர்கள் ஓய்வு பெற்ற பிறகு கொடுக்கின்ற ஓய்வூதியம் 14 சதவீதம் என்பதும் சட்ட ரீதியில் கொடுக்கப்படும் கணக்குகள் ஆகும்.

இவை தவிர  உள்ளூரில் சாதாரண சாதி சான்றிதழ் பெறுவதற்கு அதிகார வர்க்கம் என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அதிகாரிகள்  பெறுகின்ற அன்பளிப்பு முதல் தொழில் தொடங்குவதற்கு லைசென்ஸ் பெறுவது முதல் பல்வேறு வகையிலான துறைகளில் பெறப்படும் அனுமதிகள், விண்ணப்பங்களின் மீதான அங்கீகாரங்கள் ஆகியவற்றை பெறுவதற்கு அதிகார வர்க்கம் பெறுகின்ற லஞ்சம் மற்றும் ஊழல்களையும், சட்டபூர்வமாகவே பெறுகின்ற கமிஷன், விதிகளை மீறுகின்ற சட்டவிரோத கிரிமினல் குற்றச்செயல்கள் ஆகியவற்றை  ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது.

“உண்மையில், அதிகாரிகள் நடத்தும் ஊழலும் கொள்ளையும்தான் அரசியல்வாதிகளின் ஊழலைவிட மிகப் பெரியதாக இருக்கிறது. இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் செய்வதற்கும் மோசடி அம்பலமானால் அதைத் திட்டமிட்டே மூடி மறைப்பதற்கும் தப்பித்துக் கொள்ளவும் தேவையான தொழில் ரகசியங்களை ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளுக்குக் கற்றுக் கொடுத்துப் பயிற்றுவிப்பதே அதிகாரிகள் கூட்டம்தான். இவர்கள் வாங்கும் இலஞ்சத்தைக் கணக்கிடவும் முடியாது. இலஞ்சம்தான் அதிகார வர்க்கத்தின் இரத்தத்தின் இரத்தமாக இருக்கிறது. ஆதர்ஷ், காமன்வெல்த், அலைக்கற்றை, நிலக்கரி – என எல்லாவிதமான மெகா கொள்ளைகளிலும் அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் திருடுவதற்கு வழிசொல்லிக் கொடுத்திருப்பவர்கள் அதிகாரிகள்தான். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் – என இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் எல்லா மாஃபியாக்களிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு திருடுவதற்கும் தப்புவதற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் ரூட்டு போட்டுக் கொடுக்கிறார்கள்”

ஏனென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்ள அதிகாரம் இத்தகைய அதிகாரிகளிடம் கெஞ்சி கேட்கின்ற; மண்டியிட்டு செயல்படுங்கள் என்று கோரிக்கை வைக்கின்ற நிலைமையைத் தாண்டி புதிதாக எந்த அதிகாரமும், ஆட்சி மாற்றம் நடந்த பிறகு இந்த சமூக அமைப்பிற்குள் இந்த அரசு கட்டமைப்பிற்குள் வந்துவிடவில்லை.

“அதிகார வர்க்கத்தினர் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளைப் போல இலஞ்ச – ஊழல்களில் ஈடுபடமாட்டார்கள், படித்த வர்க்கத்தினரான இவர்கள் கண்ணியமாக நடப்பார்கள்; அரசியல் தலையீடு இல்லாமல் அதிகார வர்க்கத்தினர் சுயமாக இயங்கினால் ஊழல் என்பதே இருக்காது; ஊழல் முறைகேடு என்றாலே அதற்கு முதன்மைக் காரணம் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள்தான் – என்று தூய்மையான நிர்வாகத்துக்கு ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள்தான் வில்லன்களாக இருப்பதைப் போல துக்ளக், தினமணி போன்ற ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன” என்பதையும் மார்ச் 2015 புதிய ஜனநாயகம் இதழிலேயே எழுதி இருந்தோம். அந்த நிலைமை இதுவரை ஒரு சதவீதம் கூட மாறிவிடவில்லை.

எனவே, தற்போதுள்ள பாசிசமயமாகியுள்ள அரசு கட்டமைப்பின் கீழ் அரசியல்வாதிகள் மாறினால் மாற்றம் நிகழ்ந்து விடும் என்று மீண்டும் மீண்டும் மூளை சலவை செய்வதன் மூலம் புதிதாக அரசியல் அதிகாரத்தை கீழிருந்து மக்கள் கைப்பற்றி விடக்கூடாது என்பதில் ஆளும் வர்க்கத்தின் அறிவுஜீவிகளும், ஆளும் வர்க்கத்தின் குண்டந்தடிகளான போலீசு அதிகார வர்க்கம் மற்றும் ஊடகங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள்.

நிலவுகின்ற சமூக கட்டமைப்பின் மீதும் அரசு கட்டமைப்பின் மீதும் நம்பிக்கை உருவாக்குகின்ற வேலையை தொடர்ந்து செய்து கொண்டு  இருக்கிறார்கள் என்பது தான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தியாகும்.

  • மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here