
பொள்ளாச்சி யில் பல ஆண்டுகளாக இளம் பெண்களை மிரட்டி, அடித்து, துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்த குற்றவாளிகள் ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
2016ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வந்த இந்த கொடூரமான வன்கொடுமைக் குற்றங்கள் 2019 ஆம் ஆண்டில் தான் வெளியில் வந்தது.
இளம் பெண்களை – கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறியோ அல்லது நண்பர் போல பழகியோ அந்தப் பெண்களின் நம்பிக்கையை பெற்று “எனது அம்மா உன்னை பார்க்க வேண்டும் என்கிறார். எனது தங்கை உன்னை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்கிறார்” என்று கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வது போல பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அதை காட்டி அந்தப் பெண்களை மீண்டும் மீண்டும் அடித்து, மிரட்டி கொடூர குற்றங்களை இளைத்திருக்கிறது இந்த கும்பல்.
இப்படி வீடியோ எடுத்து அடித்து மிரட்டப்பட்ட ஒரு இளம் பெண் இது குறித்து தனது சகோதரனிடம் கூறியுள்ளார். அந்த சகோதரர் தனது நண்பர்களுடன் சென்று அந்த அயோக்கியர்களை எச்சரித்ததுடன் அவர்களின் செல்போனை பிடுங்கி அதை பார்த்த பொழுது தான் அதில் நூற்றுக்கணக்கான பெண்களிடம் இக்கும்பல் இப்படி அயோக்கியத்தனமாக நடந்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதன் பிறகு அந்தப் பெண்ணின் சகோதரர் அந்தப் பெண்ணுடன் சென்று காவல் நிலையத்தில் பிப்ரவரி 12, 2019 அன்று புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறை வழக்கை பதிவு செய்ய மறுத்து விட்டது. இதற்கு காரணம் இதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளில் சிலர் அதிமுகவின் பொறுப்புக்களில் உள்ளவர்கள். அதிலும் குறிப்பாக அப்பொழுது அதிமுக அமைச்சராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் மகனும் இந்தக் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது மகனின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜனநாயக சக்திகளும் மகளிர் அமைப்பினரும் பல்வேறு கட்சியினரும் வீதியில் இறங்கி தொடர்ந்து போராடியதன் விளைவாக பிப்ரவரி 24ஆம் தேதி அன்று காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.
வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இதில் தண்டனை பெற்றுள்ளவர்களில் இரண்டு பேர் அதிமுகவின் பொறுப்புகளில் இருந்தவர்கள். அதிமுகவில் அமைச்சராக இருந்த ஜெயராமனின் மகன் இந்த வழக்கில் சேர்க்கப்படாததால் தண்டனையில் இருந்து தப்பிக்கப் வைக்கப்பட்டுவிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதற்கு இரண்டு விசயங்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளன. பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதை, பெண்களை அடித்து துன்புறுத்தியதை குற்றவாளிகள் வீடியோவாக எடுத்து வைத்திருந்தது ஒரு அசைக்க முடியாத ஆதாரமாகி போனது. அதேபோல பாதிக்கப்பட்ட பெண்களில் எட்டு பேர் இறுதிவரை பிறழ் சாட்சியாக மாறாமல் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்தது இன்னும் ஒரு முக்கியமான ஆதாரமாகி போனது.
இதனால் தான் இந்த வழக்கில் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக பார்க்கும் இந்த சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்வது என்பது சாதாரண விசயம் அல்ல. இப்படிப்பட்ட அசாதாரணமான விஷயத்தை செய்த அந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் பாராட்டத்தக்கவர்கள்.
இப்படி, இவர்கள் தைரியமாக செயல்பட்டதன் விளைவாக இந்த காமக்கொடூரர்கள் மேற்கொண்டு பெண்களையும் பாலியல் வண்புணர்வு செய்து துன்புறுத்துவதை தடுத்து விட்டனர் என்பது மிகவும் போற்றுதலுக்குரியது.
பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது, அடித்து உதைப்பது, அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி மீண்டும், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவது என்பதை எவ்வித உறுத்தலும் பயமும் இன்றி இந்த கும்பல் செய்து வந்திருக்கிறது. இந்த விபரங்கள் வெளியில் வந்த பொழுது தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
படிக்க:
🔰 பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மாணவர் பேரவை தேர்தல்கள் உதவும்!
🔰 பாலியல் வக்கிரவெறியில் திளைத்து நிற்கும் சினிமா கழிசடைகளை எவ்வாறு தண்டிப்பது?
இந்தக் கும்பல் தைரியமாக எந்த உறுத்தலும் இன்றி இப்படி நடந்து கொள்வதற்கு பின்புலமாக இருந்தது எது? என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.
தங்களிடம் பண பலமும், பதவி பலமும் இருப்பதால் தங்களை யாராலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என்று திமிரெடுத்து திரியும் சமூக விரோதிகள் இப்படிப்பட்ட கொடூர குற்றங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர்.
அதிமுக, பாஜக போன்ற கட்சிகளில் பதவியில் உள்ள நபர்களை பயன்படுத்திக் கொண்டு எப்படிப்பட்ட கொடூர குற்றங்களையும் செய்யலாம் அதில் மாட்டிக்கொள்ளாமல் தப்பி விடலாம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்சிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
அதன் வெளிப்பாடு தான் பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு. இந்த வழக்கு விபரம் வெளியில் வந்த பொழுது அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது இந்த வழக்கை அப்படியே ஊற்றி மூடி விட அதிமுகவால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை மக்கள் கண்டித்து ஆங்காங்கு போராட்டங்களை நடத்தினர். அதன் பிறகு தான் இந்த வழக்கு மேற்கொண்டு நகரத் தொடங்கியது.
அரசியல் கட்சிகள் இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு எப்படிப்பட்ட ஆதரவை வழங்குகின்றன என்பதை இன்னும் சற்று ஆழமாக புரிந்து கொள்வதற்கு நாம் பாஜகவின் நடைமுறையை பரிசீலித்தால் போதுமானது.
2003ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது வன்புணர்வில் ஈடுபட்ட இந்து மத வெறிக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்திருந்தது. அவர்களின் தண்டனைக் காலம் முடியும் முன்பே நன்னடத்தையின் அடிப்படையில் குஜராத் பாஜக அரசு அவர்களை விடுதலை செய்தது.
விடுதலையாகி வந்த குற்றவாளிகளை ஆரத்தி எடுத்து, அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு, அவர்களின் கால்களில் விழுந்து வணங்கி வரவேற்றது பாஜக கும்பல். இந்த காணொளியை பார்த்து நாடு அதிர்ச்சியில் உறைந்து போனது.
பாலியல் குற்றவாளிகளை வரவேற்றதன் மூலம் பாஜகவினர் கூறும் செய்தி என்ன? அப்பாவி இஸ்லாமிய பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததும் அவர்களை கொன்றதும் சரிதான்; அதை நாங்கள் வரவேற்கிறோம்; இனிமேலும் இப்படி செய்வதை நாங்கள் கண்டிக்க மாட்டோம் என்பது தானே பாஜகவினர் கூறும் செய்தி?
இதை பார்க்கும் பாஜக – இந்து மத வெறியர்களின் மனங்களில் ‘வாய்ப்பு கிடைக்கும் பொழுது இஸ்லாமிய பெண்களிடம் நாமும் பாலியல் வல்லுறவில் ஈடுபடலாம். பாஜக அரசு நமக்குத் துணை நிற்கும்’ என்பது போன்ற சிந்தனைதான் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
பாலியல் குற்றவாளிகள் மட்டுமல்ல பிற குற்றவாளிகளும் கூட தண்டனையிலிருந்து தப்பிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவதற்கு காரணம் நமது சட்டம் நடைமுறைதான்.
பணம் இருப்பவர்கள் வகைத்தொகை இன்றி வருடக் கணக்கில் வழக்கை இழுத்தடிக்க முடியும்; சாட்சிகளை மிரட்டி பிறழ் சாட்சிகளாக மாற்றி விட முடியும்; கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று விடுதலை பெற்று வந்துவிட முடியும். அதேசமயம், பாதிக்கப்பட்டவர்கள் வசதியற்றவர்களாக இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட மேல்முறையீடுகளை எதிர்கொண்டு பெரும் தொகையை செலவழித்து குற்றவாளிகளுக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்றுவிட முடியாது என்ற இப்பொழுதுள்ள சட்ட நடைமுறைதான் இதற்கு காரணமாக உள்ளது.

ஏழைகளும் எளிமையாக நீதியைப் பெறும் வகையில் சட்ட நடைமுறை மாற்றப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டு புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
அந்த சட்டத்தின் அடிப்படையில், வழக்குகள் உரிய முறையில் மிக விரைவாக நடத்தி முடிக்கப்பட வேண்டும். இதற்கு வழக்கை பதிவு செய்து வழக்கை நடத்தும் அதிகாரிகளும் விசாரித்து தீர்ப்பளிக்கும் நீதிபதிகளும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக மாற்றப்பட வேண்டும். அரசு அதிகாரிகளும் நீதிபதிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்து உரிய முறையில் பரிசீலனை செய்து பதவி அளிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்குள் நடந்த குற்றம் அல்லது ஒரு மாநிலத்திற்கு மட்டுமே தொடர்புடைய வழக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலத்திலேயே இறுதித் தீர்ப்பு வழங்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட மாற்றங்களை செய்வதன் மூலமாகத்தான் நீதியை நிலை நாட்ட முடியும்.
- குமரன்
பல்லாண்டுகளாக பொள்ளாச்சியில் நீடித்து நிகழ்ந்து வந்த இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் 2019-ல்
வெளிச்சத்திற்கு வந்து அதில் பிறழ் சாட்சிகளாக மாறிவிடாமல் துணிந்து இறுதி வரை நின்று களமாடிய எட்டு பெண்களுக்கு சற்று ஆறுதல் தரக்கூடிய தீர்ப்பாக கோவை மகளிர் நீதிமன்றம் 9 குற்றவாளி கயவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி இருப்பது குறித்து சிறப்பான முறையில் கட்டுரையாளர் தோழர்
குமரன் அம்பலப்படுத்தியும், கூர்மையான வாதங்களை முன்வைத்தும், சில பிரேரணைகளை முன்மொழிந்தும் எடுத்தியம்பியுள்ளார். தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
இவ்விடயத்தில் சில வீடியோக்களை வெளிக்கொணர்ந்த நக்கீரன் கோபால் குறித்தும் இரண்டு வரிகளாவது பதிவிட்டிருக்கலாம். மேலும் இப்படிப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வக்கிர கொடுமைகளின் சூத்திரதாரியாக விளங்கிய
அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் இவ்வழக்கில் இருந்து பெயர் நீக்கம் செய்து கொண்டது விந்தையிலும் விந்தையானது. வழக்கு சிபிஐ – க்கு மாற்றப்பட்ட உடனேயே, பொள்ளாச்சி ஜெயராமன், ஊறுகாய் நிம்மி காலு கையைப் பிடித்து தமது மகனை இவ்வழக்கிலிருந்து கெட்டிக்காரத்தனமாக நீக்கம் செய்து கொண்டார். ஆனாலும் அது கிளறப்படல் வேண்டும்; அவன் கைது செய்யப்படல் வேண்டும். வழக்கில் எட்டு பெண்கள் மட்டுமே கடைசிவரை துணிச்சலாக நின்று இப்ப பிரச்சனையில் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள். ஆனால்
275 பெண்கள் என்று சொல்கிறார்கள்; 575 பெண்கள் என்று கூறுகிறார்கள்; ஆக எண்ணற்ற பெண்கள் காமக் கொடூரர்களால் இப்படி சீரழிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆக அனைத்தையும் அரங்கேற்றுவதற்கு சமூக நலன் சார்ந்த அமைப்புகளும் அரசும் குறிப்பாக காவல்துறையும் களப்பணி ஆற்றிட முன்வர வேண்டும். சம்பந்தப்பட்ட வழக்கில் குறிப்பிட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட – வழக்கை நீர்த்துப்போக செய்ய வேலை செய்த முன்னாள் கோவை காவல் கண்காணிப்பாளர் இன்று முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் இணை ஆணையராக நீடிப்பது எப்படி? என்பது பரிசீலனை செய்யப்பட வேண்டும்; அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
முதலில் வழக்கு பதிய மறுத்த காவல் ஆய்வாளர்கள் / துணை ஆய்வாளர்கள்மீதும்
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்னும் இப்பிரச்சனையில் புதையுண்டு கிடக்கும் அனைத்து உண்மை விவரங்களும் வெளிக்கொணரப்படல் வேண்டும். குற்றவாளிகள் எண்ணிக்கை பெருகுமேயானால் அனைத்து அயோக்கிய கூட்டத்தையும் கூண்டில் ஏற்றி தக்க தண்டனை வழங்கப்படல் வேண்டும். கட்டுரையைப் படித்தபின் எனக்குத் தோன்றிய சில பிரேரனைகளையே முன் வைத்துள்ளேன். இன்று தீர்ப்பு வந்தபின் எடப்பாடி உட்பட அதிமுகவின் பல இழிகுணம் படைத்த கூட்டம் இப்படிப்பட்ட தீர்ப்பு வருவதற்கு தாங்கள்தான் காரணம் என சூடு சொரணை மானம் வெட்கம் ஏதுமின்றி உரிமை கொண்டாடுவதற்கு ஆளாய்ப் பறக்கிறார்கள். இவ்வழக்கில் குற்றவாளிக்
கும்பலே அதிமுக வினர்தானே!