இந்தியாவில் அதிக வரிகள் செலுத்துவது யார்? சாதாரண மக்களா? கார்ப்பரேட்டுகளா?

அரசின் கொள்கைகள், பொருளாதாரத் திட்டமிடல்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகள் இந்திய மக்களின் உழைப்பையும் இந்திய நாட்டின் செல்வங்களையும் சுரண்டிக் கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

0

ந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு குறைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் வாழ்க்கை வளம் பெறும் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வை குறைப்பதற்கு பரம்பரை வரி(inheritance tax)  விதிப்பது சரியானது என்றும் அது தவறானது; பலனைத் தராது என்றும் பலர் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இன்னொருபுறம்,GST வசூல் ஒரு மாதத்தில் 2 லட்சம் கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளதாக மார்தட்டுகிறது ஒன்றிய பாஜக அரசு.

பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக ஆகிக்கொண்டே போவதற்கும் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக ஆகிக்கொண்டே போவதற்கும் என்ன காரணம்? என்பதை கண்டுபிடித்து அதை சரி செய்வது தான் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே போவதை தடுப்பதற்கு முதன்மையானது.

ஏழை பணக்காரர்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு அதிகரித்து கொண்டே போவதற்கான காரணங்கள் வெளிப்படையாகத் தெரியும் ஒன்று. இதை தேடி, ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

அந்தக் காரணங்கள் எவை?

1.நாட்டு மக்களின் ஆகப்பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள் (தொழிலாளர்கள்,.. விவசாயக் கூலிகள், மூளை உழைப்பு தொழிலாளர்கள்) உரிய கூலி,சம்பளம் கொடுக்கப்படாமல் தங்கள் எஜமானர்களால் சுரண்டப்படுவது. இப்படி சுரண்டுவதற்கு ஏற்றவாறு நாட்டின் சட்ட திட்டங்களை அரசே வகுத்து நடைமுறைப்படுத்தி வருவது. இதனால் அபரிமிதமான தொகை லாபமாக  ஒரு சிலரிடம் குவிக்கப்படுவது.

2. நிலம், இரும்பு, நிலக்கரி,  பெட்ரோலியம் போன்ற இயற்கை வளங்கள் (அரசின் சொத்துக்கள்) அடிமாட்டு விலைக்கு, அயோக்கியத்தனமாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசால் விற்கப்படுவது.

3. வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளிகளும் பிற பெரிய முதலாளிகளும் வாங்கிய கடன்கள் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்படுவது.

4. கார்ப்பரேட்டுகள் பணக்காரர்கள் மீது  விதிக்கப்படும்  வருமான வரியின் மூலம் அரசிற்கு வரும் வருமானத்தை விட ஏழை எளிய மக்களின் மீது மறைமுகமாக  விதிக்கப்படும் வரிகள் மூலம் தான் அரசிற்கு பெரும் வருமானம் வருகிறது. அதாவது, கலால் வரி, வாட் வரி, விற்பனை வரி(ஜி எஸ் டி) என்ற வகையில் நாட்டு மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் மீதும் வரியை விதித்து உழைக்கும் மக்கள் சம்பாதிக்கும் அற்ப தொகையில் கணிசமான அளவு அரசே கொள்ளையடிப்பது.

5. தனி நபர்கள் செலுத்தும் வருமான வரியை (28% )விட  குறைந்த அளவில் கார்ப்பரேட்டுகளின் வருமானத்திற்கு(26%) வரி விதிக்கப்படுவது.

6. தண்ணீர், மின்சாரம் போன்றவைகள்  இலவசமாக அல்லது மிக மிக குறைந்த விலையில் அரசால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுவது.

7. இன்னும் இவை போன்ற காரணங்கள் பல உள்ளன. இவற்றுக்கு அடிப்படை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை.

இவற்றில் இப்பொழுது வரி வருவாய் பற்றி மட்டும் முடிந்தவரை சுருக்கமாக இங்கு பரிசீலிப்போம்.

அரசிற்கு நேரடி வரி வருவாய், மறைமுக வரி வருவாய்(இதில்தான் ஜிஎஸ்டி வருகிறது) , மற்றும் பிற வகைகளில் இருந்து வருமானம் வருகிறது. நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் அரசு ஈட்டும் வரி வருவாய் 100 % என்று வைத்துக்கொள்வோம். அதில், அதிக வருவாய் உள்ளவர்கள், பணக்காரர்கள் செலுத்தும் நேரடி வரியில் இருந்து வரும் வருமானம் 34.2% என்ற அளவில் தான் உள்ளது. ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பரம ஏழைகள் உட்பட உழைக்கும் மக்கள் அனைவரும் செலுத்தும் மறைமுக வரியில் இருந்து வரும் வருமானம் என்பது 65.8% என்ற அளவிற்கு உள்ளது.

வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதென்றால், கடந்த ஏப்ரல் மாதம் GST வசூல் இதுவரை இல்லாத அளவு ரூ.2,10,267 கோடியாக உள்ளது.140 கோடி மக்களிடம் இருந்து இந்த வரி வசூலிக்கப்பட்டுள்ளது. எனில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1,501 ஜிஎஸ்டி வரி செலுத்தி உள்ளதாக தெரிகிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் அந்தக் குடும்பம் ரூ.6,004 ஜிஎஸ்டி வரி செலுத்தி இருக்கிறது என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்: ஜிஎஸ்டி வரியை ரத்து செய்! கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதித்து பொருளாதாரத்தை ஈட்டு!

குடும்ப வருமானமே  ரூ.10,000 க்குள் இருக்கும் குடும்பங்களுக்கு இது எவ்வளவு பெரிய வரிச்சுமையாக அமையும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏறத்தாழ 100 கோடி மக்கள் இத்தகைய குடும்பங்களில் தான் வாழ்கிறார்கள்.

இந்தக் குடும்பங்கள் அரசின் நலத்திட்டங்களில் இருந்து கிடைக்கும் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவுப் பொருட்களும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா உணவு , விலையில்லா சீருடை, காலணி, நோட்டு – புத்தகம் போன்றவைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை போன்றவைகள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் உள்ளனர்.அந்த அளவிற்கு அரசின் வரிக் கொள்ளை கொடுமையானதாக இருக்கிறது.

பெட்ரோலிய பொருட்கள் மீது கலால் வரி, வாட் வரி என்று தனியே அரசால் வசூலிக்கப்படுகிறது. அது ஜிஎஸ்டி- க்குள் வருவதில்லை. இதை சேர்த்து பரிசீலித்தால் இந்திய அரசு ஏழை மக்களிடம் எந்த அளவிற்கு கொடூரமாக கொள்ளை அடிக்கிறது என்பது நமக்கு புரியும்.

இதையும் படியுங்கள்: மக்களிடம் பறிக்கும் வரியை குறை! கார்ப்பரேட்டுகளிடம் வரியை உயர்த்து!

மாநில அரசுகளும், எதிர்கட்சிகளும் மக்களுக்கு நலத் திட்டங்கள் அறிவிக்கும் போதெல்லாம் முதலாளித்துவ அறிவுஜீவிகள் பலர்  Taxpayers பணம் வீணாக்கப்படுகிறது என தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் பிதற்றுவதை பார்த்திருப்பீர்கள். சாதாரண உழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டப்படும் வரி கொள்ளை கண்ணுக்குத் தெரியாமலே போய்விடுகிறது.

இப்படி ஏழை மக்களிடம் இருந்து அரசால் கொள்ளை அடிக்கப்படும் வரித்தொகை  பெருமளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொத்து சேர்ப்பதற்காகவே பயன்படுகிறது என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.

அரசின் கொள்கைகள், பொருளாதாரத் திட்டமிடல்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகள் இந்திய மக்களின் உழைப்பையும் இந்திய நாட்டின் செல்வங்களையும் சுரண்டிக் கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் வெளிப்பாடுதான் 2022-23ல், இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் மொத்த வருமானம் 100% என்று எடுத்து கொண்டால் இந்தியாவில் மேல்நிலையில் உள்ள 1% பணக்காரர்களின் வருமானம் 22.6%  ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: மே 5 : அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவு கட்ட காரல் மார்க்சின் பிறந்த நாளில் உறுதியேற்போம்!

2002-03  ஆம் ஆண்டின் போது இந்தியாவில் மேல்நிலையில் இருந்த 1% பணக்காரர்களின்  சொத்து மதிப்பு   15.7% ஆக இருந்தது. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் மேல்நிலையில் உள்ள 1% பணக்காரர்களின்  சொத்து மதிப்பு 40.1 % ஆக பிரமிக்கத்தக்க அளவு உயர்ந்து விட்டது. அதேசமயம், 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் அடித்தட்டில் உள்ள 50% மக்களிடம் வெறும் 6.4%  அளவு  சொத்துக்கள் மட்டுமே உள்ளன.

பரம்பரை வரி, சொத்து வரி, வருமான வரி போன்றவைகளை போடுவதன் மூலம் நாட்டின் செல்வம் ஒரு சிலரிடம் குவிவதைத் தடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஓர் அளவிற்கு தான் பயன்படும்.  கார்ப்பரேட்டுகள் உழைக்கும் மக்களை கொடூரமாக சுரண்ட அனுமதித்து விட்டு அந்த சுரண்டலில் இருந்து எவ்வளவு திருப்பி எடுக்கலாம்? எப்படி  திருப்பி எடுக்கலாம்? என்பதைப் போன்று தான் இந்த  வரிகள் உள்ளன.

நாட்டின் செல்வம் ஒரு சிலரிடம் குவிவதை உண்மையிலேயே தடுக்க வேண்டும்; ஏழை –  பணக்காரர்களிடையே வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும் (அல்லது குறைக்க வேண்டும் என்றாலும் கூட)

  1. உழைக்கும் மக்கள் கொடூரமாக அற்ப கூலிக்கு சுரண்டுப்படுவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  2. நாட்டின் இயற்கை வளங்கள், அரசின் சொத்துக்கள், அரசின் தொழில்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பது கைவிடப்பட வேண்டும். ஏற்கனவே தாரைவார்க்கப்பட்டவைகள் அரசால் திருப்பி எடுக்கப்பட வேண்டும்.
  3. வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடன்கள் முறையாக திருப்பி வசூலிக்கப்பட வேண்டும். ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களும் அவர்களிடம் இருந்து திரும்ப வசூலிக்கப்பட வேண்டும்.
  4. பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் நேரடி வரியின் அளவு உயர்த்தப்பட வேண்டும்.
  5. ஏழை, எளிய மக்களின் மீது விதிக்கப்படும் மறைமுக வரி ஜிஎஸ்டி போன்றவை பெருமளவிற்கு குறைக்கப்பட வேண்டும். மேலும், ஏழை எளிய மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ள பொருட்களின் மீது வரி விதிப்பே இருக்கக் கூடாது.
  6. தனி நபர்கள் செலுத்தும் வருமான வரியை விட கார்ப்பரேட்டுகளின் மீதான வருமான வரி அளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு கறாராக வசூல் செய்யப்பட வேண்டும்.
  7. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர், மின்சாரம், நிலம் போன்ற வற்றிற்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு கறாராக வசூலிக்கப்பட வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகள் மூலமாகத்தான் நாட்டு மக்களிடையே வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை தடுத்து நிறுத்த முடியும். பாஜக இதைச் செய்யவே செய்யாது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி கோருபவர்கள் மீது பாசிச அடக்குமுறையையே செலுத்தும் என்பது 10 ஆண்டுகால அனுபவம். அதனால்தான் பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிறோம்‌. அதனை வீழ்த்தி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், இந்திய மக்களிடையே நிலவி வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வை சரி செய்ய மேற்கண்ட நடவடிக்கைகளை  செயல்படுத்த நிர்பந்திக்க வேண்டும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here