சாதி தீண்டாமை கொடுமைகளையும், ஆணாதிக்க வக்கிரங்களையும், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களையும் அடிப்படையாக கொண்டு பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின் பெரும்பான்மை மக்களை இந்து என்ற பெயரில் அடக்கி, ஒடுக்கி வரும் பார்ப்பன (இந்து) மதத்தை எதிர்த்து போராடி வருகின்ற பகுத்தறிவாளர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகளை குறிவைத்து கொலை செய்வதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ்ஸின் கொலைகார குண்டர் படைதான் சனாதன் சன்ஸ்தான். அதன் பரிவாரங்களில் ஒன்று ஹிந்து ஜன் ஜக்ருதி சமீதி,

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் என்ற இந்து மதவெறி பயங்கரவாத அமைப்பு பல்வேறு கொலைபாதகச் செயல்களை நடத்தியுள்ளது என்ற அடிப்படையில் இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மன்னிப்பு கடிதங்களை எழுதி கொடுத்தும், அதிகார வர்க்கத்தில் உள்ள ஆர்எஸ்எஸ்ஸின் கையாட்களை பயன்படுத்தியும், தன் மீதான தடைகளை நீக்கி, ’தேசபக்த அமைப்பாக’ தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறது ஆர்எஸ்எஸ்.

இந்த ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமான முறையிலும் சுமார் 800-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் செயல்படுகின்றன. அதில் ஜெர்மனியின் கொலைகார நாஜிப்படையான எஸ்எஸ் (SS) குண்டர் படையை போல உருவாக்கப்பட்டதுதான் சனாதன் சன்ஸ்தான். பஜ்ரங்கள், விஸ்வ ஹிந்து பரிஷத், அனுமன் சேனா, ஹிந்து ஜன் ஜக்ருதி சமீதி, ஹிந்து யுவ சேனா போன்ற பல பெயர்களில் செயல்படுகின்ற பாசிச குண்டர் படையில் மிகவும் கொடூரமான, நவீன ஆயுதங்களை பயன்படுத்துகின்ற கொலைகார படைக்கு பெயர் தான் சனாதன் சன்ஸ்தான்..

இரகசிய கொலைக் குழுக்களை ஏவி சனாதன் சன்ஸ்தான் இந்தியாவில் உள்ள நாத்திகர்களையும், பகுத்தறிவாளர் களையும் பட்டியலிட்டு ஒவ்வொருவராக குறி வைத்து தீர்த்துக் கட்டி வருகிறது, தற்போதும் பட்டியலுடன் நாடு முழுவதும் வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. தனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்ற யாரையும் பார்ப்பன (இந்து) மதம் வரலாற்றிலும் சரி! நிகழ்காலத்திலும் சரி! அனுமதிப்பதில்லை அல்லது விட்டு வைப்பதில்லை.

சமூக செயற்பாட்டாளரும், மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவருமான நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காலை நேரத்தில் புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடைய மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு பார்ப்பன பாசிச அமைப்பான சனாதன் சன்ஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இக்கொலை நடந்தது. நரேந்திர தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீசார் விசாரித்தனர். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014-ல் சிபிஐ விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில் சனாதன் சன்ஸ்தான் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திரசிங் தவாடேவை 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ கைது செய்தது.

மேலும், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட அதே பாணியில் கோவிந்த் பன்சாரே (2015), கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) என முற்போக்காளர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசியவர்கள், களத்தில் செயல்பட்டவர்கள் தேடித்தேடி கொல்லப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதும், சனாதன் சன்ஸ்தான் என்கிற இந்துத்துவ பயங்கரவாத அமைப்பே அதன் பின்னணியில் இருப்பதும் விசாரணையில் அம்பலமானது.

இவர்களால் படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கர் வழக்கில் மே 10 அன்று மகாராஷ்டிராவின் புனேயில் அமைக்கப்பட்ட சிறப்புநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கொலை குற்றவாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரில், ச்ச்சின் அண்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகிய இரண்டு பேருக்கு மட்டும் ஆயுள் தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆனால், ”இந்த வழக்கை ஏற்று நடத்திய சிபிஐ, வழக்கின் முக்கியமான அம்சமான கொலைக்கான காரணம் என்ன? (motive of the murder) என்ற கோணத்தில் விசாரணை நடத்தாமல் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் மூளையாக செயல்பட்ட நபரை கண்டறியாமல், சிலருக்கு மட்டும் தண்டனை பெற்று தருவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதை” வழக்கை விசாரித்த நீதிபதியே கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CBI, RAW, IB போன்ற உளவு நிறுவனங்களும், தற்போது பாசிச பாஜகவினால் கொண்டுவரப்பட்டுள்ள NIA உள்ளிட்ட உளவு அமைப்புகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாயாகவே செயல்படுகிறது என்பதால் அவர்கள் கைகாட்டிய நபர்களை கடுமையாக ஒடுக்குவது, தப்புவிக்க சொல்கின்ற நபர்களை மென்மையாக கையாள்வது என்ற அணுகு முறையையே கையாண்டு வருகின்றனர் என்பது தொடர்ச்சியாக அம்பலமாகி நாறி வருகிறது.

இந்த வழக்கிலும் சிபிஐ முழுமையாக விசாரணை நடத்தாமல், ஆதாரங்களை சேகரிக்காமல் கொலை பாதக அமைப்பான சனாதன் சன்ஸ்தான் அமைப்பின் மூளையாக செயல்பட்ட முன்னாள் மருத்துவர் வீரேந்திரசிங் தவாடே மீது எந்த விதமான நடவடிக்கையுமின்றி விடுவித்து கொலைகாரர்களையும், அந்த அமைப்பையும் தப்ப விட்டுள்ளது.

இதன் மூலம் ஆர்எஸ்எஸ் இரண்டு விதமான எச்சரிக்கைகளை நமக்கு விடுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஒன்று, பார்ப்பன (இந்து) மதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறவர்களுக்கு இதுதான் தண்டனை என்று அறிவிப்பதும், இரண்டு, ஒருவேளை கொலை செய்தவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாலும், அவர்கள் பற்றிய விசாரணையில் சரியாக ஈடுபடாமல் அவர்களை தப்பிக்க வைத்து விடுவோம் என்றும் அறிவித்துள்ளது.

படிக்க:

♦  சாதிகள் என்ன செய்யும்? ஆர்எஸ்எஸ் ; பாஜகவைக் கேள், சொல்லும் ! ;

கார்ப்பரேட் காவி பாசிசத்தின் ஒரு அம்சமான பார்ப்பன பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி எழுதுகின்ற, பேசுகின்ற, சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் உயிருக்கு தற்போதைய சூழலில் எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் அதனை எதிர்த்து நேருக்கு நேர் வீழ்த்தி முறியடிப்பதற்கு பதிலாக ஒதுங்கி செல்ல முடியாது அல்லது ஓட்டுக் கட்சிகளின் தயவில் தனது தோலைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதுதான் சமீப காலத்தில் ஆர்எஸ்எஸ் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் மீதான விசாரணைகள், அதை தொடர்ந்து நடக்கின்ற நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றின் மூலம் நமக்கு உணர்த்தப்படும் உண்மையாகும்.

எதிரி எந்த வகையான ஆயுதத்தை எடுத்து போராடுகின்றார்களோ, அதே ஆயுதத்தை பெரும்பான்மை மக்களும் கையில் எடுத்துக் கொள்வது தான் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி!. ஆனால் அதனை பயங்கரவாதம் என்று கூச்சலுடன் ஒடுக்க நினைப்பது ஆளும் வர்க்கத்தின் வழிமுறையாகும்.

ஷாகாகளின் மூலம் தெருச்சண்டைகளுக்கு பயிற்றுவிப்பது முதல் சனாதன் சன்ஸ்தான் மூலம் ரகசிய கொலைக் குழுக்களை உருவாக்கி பகுத்தறிவாளர்களையும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும் ஒழித்துக் கட்டுவது வரை திட்டமிட்டு செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பை தடை செய்ய கோரி போராடுவதும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது மட்டுமின்றி, பல நூற்றாண்டுகளாக நாட்டின் பெருபான்மை மக்களை ஒடுக்கி வரும் பார்ப்பன (இந்து) மதத்தை விட்டு வெளியேறி, மதச்சார்பற்றவர்களாக வாழும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு என்பதையும் பிரச்சாரமாக கொண்டு செல்வோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here