சென்ற ஆண்டு (2023) அக்டோபர்-03 அன்று கைது செய்யப்பட்ட நியூஸ் க்ளிக் இணைய பத்திரிகையின் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்பதை இடித்துரைத்து உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. ஏறக்குறைய ஆறு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டு, எந்த விதமான ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டதாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாசிச மோடிக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் முன்னணி இணையச் செய்தி பத்திரிக்கையான நியூஸ் கிளிக் UAPA சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டதையும், ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டதையும் எதிர்த்து மக்கள் அதிகாரம் தனது கண்டனக் குரலை எழுப்பியது.

நியூஸ் கிளிக் இணையப் பத்திரிக்கை ஆசிரியர் கைதும், விடுதலையும்!

”நேற்று காலை (3.10.23) டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு ஒன்பது பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 46 பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களின் மடிக்கணினி, அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அவற்றுக்கு எந்த விதமான ரசீதும் கொடுக்காமல் பறிமுதல் செய்துள்ளது. பிரபல சுயேச்சை ஆங்கில இணைய இதழான நியூஸ் க்ளிக் பத்திரிகையின் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா நியூஸ் க்ளிக்-கின் மனித வள மேம்பாட்டுப் பொறுப்பாளர் அமித் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் கொடிய UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்”.

”பிரபீர், அறிவியல் கண்ணோட்டமும் சமூக அக்கறையும் கொண்ட மிகச்சிறந்த பத்திரிகையாளர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்திலும் இதே போல அவர் அடக்குமுறைக்கு உள்ளாகி ஓராண்டு சிறையில் இருந்தவர். இவ்வளவு அடக்குமுறைகளையும் தாண்டி உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு உழைக்கும் மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பவர். 2021ல் இதேபோன்று நியூஸ்கிளிக் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் டெல்லி உயர்நீதிமன்றம் பிரபீரை அச்சுறுத்தி பொய் வழக்கில் போலீசார் கைது செய்யக் கூடாது என ஆணையிட்டது”. போன்ற அடிப்படையான கருத்துகளை முன்வைத்து போராடியது மக்கள் அதிகாரம். நாடு முழுவதுமுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒரே குரலில் இந்த அநீதிக்கு எதிராக போராடினர்.

படிக்க:

♦ நியூஸ் க்ளிக் மீது பாசிச பாஜகவின் தாக்குதல்! கல்லறை கட்டப்படும் பத்திரிக்கை சுதந்திரம்!

♦ நியூஸ்கிளிக் இணையதள அலுவலகத்தில் ரெய்டு! பத்திரிக்கை சுதந்திரத்தை தடுக்கும் பாசிசம்!

பாசிச மோடியின் ஆட்சிக்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள்; நாட்டின் வளங்களை பாதுகாக்க போராடுகின்ற கம்யூனிஸ்டுகள்; தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற தேசிய இன போராளிகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் தொடர்ச்சியாக பொய் வழக்குகளை பதிவு செய்வது, உடனடியாக ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு ஆள் தூக்கி சட்டமான ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது என்ற பயங்கரவாத வழிமுறைகளையே மோடி கும்பல் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த ஆள் தூக்கி சட்டமான UAPA சட்டத்தின் கீழ் 2022 வரை 8947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 550 பேர் மட்டும் தான் தண்டனை பெற்றுள்ளனர் என்று நாடாளுமன்றத்திலேயே இந்திய ஒன்றிய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களின் ஒருவரான ஆனந்த் டெல்டும்டே 2018 ஆம் ஆண்டு கைது செய்ப்பட்டு 2023 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டு 5 ஆண்டுக்கு பிறகு தான் வெளியில் வந்துள்ளார். அதேபோல JNU-வின் முன்னாள் மாணவரான உமர் காலித் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

CAA-NRC-NPR சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் முதல் மணிப்பூரின் அரசு பயங்கரவாத, ஆர்எஸ்எஸ் குண்டர் படையின் வன்முறைகளை எதிர்த்து போராடியவர்கள் வரை அனைவரும் பல்வேறு வகையில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள, சொல்லிக் கொள்ளப்படும் கருத்துரிமையை அமல்படுத்துகின்ற வாய்ப்புகள் கூட புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கு வழங்கப்படுவதில்லை.

அமெரிக்க அடிமை ஆர்எஸ்எஸ்-ன்
தேசபக்தி நாடகம்!

அமெரிக்காவின் அடிவருடிக் கும்பலான ஆர்எஸ்எஸ் பாஜகவினர், அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டுள்ள சீனாவை எதிர்த்து செயல்படுவது போன்றும், ’இந்திய தேசபக்தியுடன்’ செயல்படுவதை போலவும் நாடகமாடிக் கொண்டுள்ளனர்.

2019 தேர்தலில் தேர்தல் நடைமுறைகளை சீர்குலைப்பதற்காக நியூஸ் க்ளிக் முயற்சி செய்தது என்றும், சீனாவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டது என்றும், அதற்காக சீனாவிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டது, பணமோசடியில் ஈடுபட்டது என்பது போன்ற பொய் குற்றச்சாட்டுகள் தான் பாசிச மோடி கும்பல் முன்வைத்தவையாகும்.

2024 நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ள எந்த விதமான சட்ட விதிமுறைகளையும், ஏற்றுக் கொள்ளாமல் சாதி, மத, இனவெறி மற்றும் பயங்கரவாத, பிரிவினைவாக பீதியூட்டுவது, இஸ்லாமியர்களுக்கு எதிரான இன வெறுப்பு அரசியல் என்று தொடர்ச்சியாக, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகளை சீர்குலைத்து வருகின்ற மோடியின் மீது இதுபோன்று நூற்றுக்கணக்கான வழக்குகளை பதிவு செய்ய முடியும்.

உண்மையிலேயே சீனாவை இந்தியா எதிர்த்து வருகிறது என்பதும் மோசடிதான்! ஏனென்றால் 2022-23 காலகட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்த 677.20 பில்லியன் அமெரிக்க டாலர் பொருமானமுள்ள பொருட்களில் 101.80 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது மொத்த இறக்குமதியில் 15 சதவீதத்தை சீனாவை எதிர்பார்த்தே உள்ளது. குறிப்பாக அடிப்படையான தேவைகளான எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள்; இயந்திர தளவாடங்கள்; மருந்து பொருட்கள்; இரசாயன உரங்கள் மற்றும் ஆப்டிகல், போட்டோ போன்றவற்றுக்கான மூலப் பொருட்கள்; இரும்பு மற்றும் ஸ்டீல் ஆகியவற்றிற்கான கச்சா பொருட்கள்; வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் என அனைத்தையும் சீனாவிடமிருந்து தான் இந்தியா வாங்கிக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பாசிச மோடியின் சீன எதிர்ப்பு-இந்திய தேசபக்தி முகமூடி படிப்படியாக கிழித்தெறியப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி தான் நியூஸ் கிளிக் இணையதள பத்திரிகையின் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா விடுதலையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோன்ற சமூக ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் போராடுகின்ற நேர்மையான புரட்சிகர, ஜனநாயக ஊடகவியலாளர்கள் மத்தியில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் உறவு வைத்துக் கொண்டு, ஊடகம் என்ற பெயரில் மிரட்டிப் பணிய வைக்கின்ற, கீழ்த்தரமான வேலைகளை செய்து வந்த ’புரோக்கரான’ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடந்து வருகின்ற சூழலில், நியூஸ் கிளிக் ஆசிரியர் மீதான பொய் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததும். கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்தின் திசை வழியை புரிய வைப்பதுமாகும். அதன் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ’அப்ரூவராகி’ விட்டதால் ஏற்கனவே விடுதலை பெற்று விட்டார் என்பது கவனிக்கத்தக்கதுமாகும்.

  • மணிமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here