இந்தியாவின் பொருளாதரத்தை 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்தப் போகிறேன் என்று பாசிச மோடி தொடர்ச்சியாக வாய்ச்சவடால் அடித்து வருகின்றார். ’இந்தியா உலக அளவில் ஐந்தாவது பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இது மோடி ஆட்சியின் சாதனை!’ என்று ஆர்எஸ்எஸ்-பாஜகவை ஆதரிக்கின்ற,, கூலிப்பிரச்சாரகர்களான ’பொருளாதார அறிஞர்கள்’ தொடர்ந்து மார்தட்டி வருகின்றனர்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை நலனுடன் இணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். அவர்களது அடிப்படைத் தேவைகள் உணவு பொருட்கள் முதல் பல்வேறு வகையான நுகர்வு பொருட்கள் வரை அனைத்தும் அவர்களது வருவாயிலிருந்து ஈடுகாட்டுகின்ற வகையில் இருக்க வேண்டும்.
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உணவுப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது பற்றி பல்வேறு கட்டுரைகளை புதிய ஜனநாயகம் மாத இதழில் வெளியிட்டுள்ளது என்பதை அறிவீர்கள்>
சமீபத்திய ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கைப்படி, கடந்த கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் விலை 71% அதிகரித்து உள்ளது. இதற்கு நேர் எதிராக சம்பள விகிதத்தில் 37% மட்டுமே அதிகரித்துள்ளது. ஊதிய உயர்வில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த 13 மாதங்களாக உணவுப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போதைய சூழலில் வெப்ப அலை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை பயன்படுத்தி உணவு பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி கொள்ளை யடித்து வருகிறார்கள் உணவு கார்ப்பரேட்டுகள்.
எடுத்துக்காட்டாக மார்ச் 2024 இல் 8.52% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் 2024 ஏப்ரலில் 8.72% ஆக உயர்ந்துள்ளது. உணவு மற்றும் குளிர்பான பொருட்களின் பணவீக்கம் மார்ச் 2024 இல் 7.7% ஆக இருந்து ஏப்ரல் 2024 இல் 7.9% ஆக அதிகரித்துள்ளது. காய்கறி பொருட்களின் பணவீக்கம் 27.8% ஆக இருந்தது, மற்றும் ஏப்ரல் 2024 இல் பருப்பு வகைகள் 16.84% ஆக இருந்தது. CPI அளவீட்டில் 39.1% எடையுள்ள உணவுப் பணவீக்கம், தற்போது நிலவும் வெப்ப அலைகளின் காரணமாக அழுத்தத்தில் உள்ளதாக உணவு கார்ப்ப்ரேட்டுகள் புளுகி வருகின்றனர். உணவு வகைக்குள், தானியங்கள், இறைச்சி மற்றும் மீன், முட்டை, காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பல பிரிவுகளில் பணவீக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.
வெப்ப அலைகள் காரணமாக காய்கறி பணவீக்கம் மே மாதத்தில் குறைய வாய்ப்பில்லை. இந்திய விவசாயம் சாதகமான இயற்கை நிலைமைகளை பெரிதும் நம்பியிருப்பதால், பயிர்கள் மீதான எந்த எதிர்மறையான தாக்கமும் பேரழிவை ஏற்படுத்தலாம். தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை அடுத்த அறுவடை வரை அதிகமாகவே இருக்கும். இதனால் பட்டினி அலை மக்களை தாக்கி வ்ருகிறது.
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் சாதாரணமாக வேலை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தையே வாட்டி வதைக்கிறது எனும்போது தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருமானம் உயராததால் அவர்கள் வயிற்றை சுருக்கி கொள்கிறார்கள். உதாரணமாக நூறு ரூபாய்க்கு எந்த அளவிற்கு காய்கறி வாங்க முடியுமோ அதையே வாங்கி ஒரு வாரம் அல்லது ஒன்றரை வாரத்திற்கு உபயோகிக்கின்றனர். அதிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் வெங்காயம், உருளைக் கிழங்கு தவிர வேறு காய்கறிகளை பெரும்பாலும் வாங்குவ்தில்லை.
பெரும்பான்மை மக்கள் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள், இறைச்சி, மீன் போன்ற அனைத்தையும் அவர்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தேவையான அளவிற்கு வாங்குவதில்லை, மாறாக ரூ 200 அல்லது ரூ 300 என்று குறிப்பிட்ட தொகைக்கு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பதால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு காரணமாக வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய அவலத்திற்கு உழைப்பாளி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஓரளவிற்கு நிலையான வருமானம் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் வாகனக் கடன், வீட்டுக் கடன், நகைக் கடன், கல்விக் கடன், மருத்துவக் கடன் என்று தொடர்ச்சியாக கடனாளியாகவே இருப்பதால் விலைவாசி உயர்வு அவர்களின் வாழ்க்கையும் கடுமையான சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது.
இதுபோன்று மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற விலைவாசி உயர்வு, உணவு பொருள் பணவீக்கம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் முதல் நான்கு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் பரப்புரைகள் நிகழ்த்தப்படவில்லை. ஒருவேளை காங்கிரசு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் இது பற்றி விவாதித்தாலும் அவர்கள் கூறுவதை திரித்து புரட்டி அதையும் அவர்களுக்கு எதிராக திருப்பும் வகையிலேயே மோடி கும்பல் பேசி வருகிறது.
இப்போது மட்டுமல்ல! பாசிச மோடி இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற பின் ஆர்எஸ்எஸ் தான் அன்றாட நிகழ்ச்சி நிரலைத் தீர்மானித்து வருகிறது. எந்த பொருளை பற்றி பேச வேண்டும் என்பதை பற்றியும், எந்த பொருளை பற்றி பேசினால் அடிப்படையான பிரச்சனைகளை பற்றி மக்கள் பேச மாட்டார்கள் என்பதையும் ஒரு பார்முலாவை போல கடைபிடித்து வருகின்ற ஆர்எஸ்எஸ் அன்றாட நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலில் மக்களுடைய வாழ்வாதார பிரச்சனைகள் எதுவும் விவாதிக்கப்படுவதில்லை.
படிக்க:
♦ “மோடி ஆட்சியில் உண்மையான ஊதியங்களின் வளர்ச்சி கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது!”
♦ டாலருக்கு நிகரான பணமதிப்பு வீழ்ச்சியும்! அதல பாதாளத்தில் தள்ளிய அன்னிய பொருளாதாரமும்!
பார்ப்பன இந்துமத வெறியூட்டுவது, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், ஆதிக்க சாதிகளின் இட ஒதுக்கீடு பற்றி பொய் பித்தலாட்டமான தகவல்களை அறிவிப்பது, அன்றாடம் பிரிவினைவாத, ப்யங்கரவாத, தேசிய வெறியூட்டுகின்ற பிரச்சாரத்தை தவிர மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி பேசாத கார்ப்பரேட் கைக்கூலி ஆட்சி இனியும் நீடிக்காமல் தூக்கியெறிய வேண்டிய காலகட்டத்தில் இந்தியா உள்ளது..
பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ரிசர்வ் வங்கி தனது பணவியல் கொள்கை மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் கார்ப்பரேட்டுகள் வரிச் சலுகையை அனுபவித்துக் கொண்டு,, நாட்டின் செல்வத்தையும் மக்களின் சேமிப்பையும் கொள்ளையிட்டு வருகின்றனர். இதற்கு நேரெதிராக பெரும்பான்மை மக்கள் பட்டினியிலும், வறுமைக் கொடுமையிலும் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
எனவே கடும் விலையேற்றத்துக்கு அடிப்படையான கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அரசியல், பொருளாதார கொள்கைகளை விழ்த்துகின்ற, அதற்கு மாற்றாக மக்களின் வாழ்க்கையை உத்திரவாதப்படுத்துகின்ற சுயசார்பு பொருளாதாரக் கொள்கையை கட்டமைக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி செயல்படுவதே காலத்தின் கட்டாயமாக உள்ளது..
- மருது பாண்டியன்.