மாவோயிஸ்டுகளின் போராட்டங்கள் பொருத்தமானவை தானா?

ஒரு வாரத்திற்கு முன்னர் நாராயண்பூரில்  நடைபெற்ற மோதலில் 10 மாவோயிஸ்ட்டுகள் தியாகிகளாகியுள்ளனர். கடந்த ஏப்ரல் 16 இல், பஸ்தர் பகுதியில் காங்கேர் மாவட்டத்தில் நடந்த மோதலில் 29 மாவோயிஸ்டுகள் உயிரை விட்டுள்ளனர். இப்படி ஒரு மாதத்தில் மட்டும் 59 போராளிகள் தியாகிகளாகியுள்ளனர்.

0

மாவோயிஸ்டுகளின் போராட்டங்கள் பொருத்தமானவை தானா?ண்டாண்டு காலமாக கிராமப்புறத்தில் உழைக்கும் மக்களை மிதித்து வரும் பண்ணையார்களுக்கு –  சரியாக சொல்வதென்றால் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், நம் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு தாரைவார்க்கும் அதிகார வர்க்கத்தினர், ஆளும் வர்க்க கட்சிகள் உள்ளிட்ட, இந்திய தரகு முதலாளிகளுக்கு எதிராகவும் போராடிய வரலாற்றைக் கொண்டதுதான் நக்சல்பாரி அமைப்புகள். அவை இப்போதும் தமது  லட்சியத்தில் ஊன்றி நிற்கின்றன.

ஆனால், நக்சல்பாரி அமைப்புகள் உருவான காலம் தொட்டு இன்றைய நிலை வரை எடுத்துக் கொண்டால், அதில் பல்வேறு குழுக்களும் தமக்கே உரிய தனித்த பாதையில் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது மாவோயிஸ்ட் கட்சியாகும் .

இந்த நாட்டை விடுவிப்பதற்கான , புரட்சிக்கான ஒரே வழிமுறையாக ஆயுதப் போராட்டத்தை  முன்னிறுத்துகிறது மாவோயிஸ்ட் கட்சி.  தற்போது சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட களமிறங்கியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தின் – அதாவது பாஜகவின்  ஆட்சியை தடுத்தே தீர வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன்  ஒன்றிணைய தொடங்கியுள்ளன பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும்.  இப்படி பாசிச எதிர்ப்பு  நிலைப்பாடு எடுத்ததில் இடதுசாரி அமைப்புகளும் அடக்கம். ஆனால் மாவோயிஸ்ட் கட்சி இதிலிருந்து வேறுபடுகிறது.

மாவோயிஸ்டுகளின் தேர்தல் புறக்கணிப்பு !

சமீபத்தில் கேரளாவின் வயநாடு தொகுதிக்குட்பட்ட பகுதியில், மலை கிராமத்திற்குள் வந்த ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள், அந்த கிராம மக்களை திரட்டி சுமார் ஒரு மணி நேரம் கூட்டம் நடத்தியுள்ளனர். ராகுல் காந்தி போட்டியிடும் அத் தொகுதியில் தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்திவிட்டு சென்றதாக பத்திரிகைகள் புகைப்படத்தோடு செய்திகளை வெளியிட்டுள்ளன. 

பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கியே தீர வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் திரண்டு இருக்கும் சூழலில், இத்தகைய தேர்தல் புறக்கணிப்பு கூட்டங்கள் வரவேற்கத்தக்கதுதானா?

மாவோயிஸ்டுகள் தாம் பலவீனமாக இருக்கும் இடத்தில் திடீரென விசிட் அடித்து பிரச்சாரம் செய்து, மீண்டும் காட்டுக்குள் பின்வாங்கி உள்ளனர் என்றால், அவர்கள் பலமாக இருக்கும் சத்தீஸ்கரின் நிலை என்ன?  ‘பின்னடைவு’ என்பதாக ஆளும் வர்க்க ஆதரவு பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகளை பரப்பி வருகின்றன

தற்போது மே 9ஆம் தேதி தினமணி தலையங்கத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் சரணடைவுகள் குறித்து  எழுதப்பட்டுள்ளது. 

ஏன் அணிகள் சரணடைகின்றன?

புரட்சிகர கட்சியை நோக்கி வருபவர்கள் முழுமையாக அக்கட்சியின் தத்துவமான மார்க்சியத்தை கரைத்து குடித்து இருக்க மாட்டார்கள். ஒரு குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையில் இந்தக் கொள்கைகள் சரியானவை என்ற அளவில் புரிந்து கொண்டு கூட இயக்கத்திற்குள் வருவார்கள்தான். வந்த பின்னர் ஒரு புரட்சிகர அமைப்பில் அதுவும் ஆயுதம் தாங்கி போராடக்கூடிய ஒரு கட்சியின் படைப்பிரிவில் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் துன்பங்கள் ஏராளம்.அதையெல்லாம் விருப்பபூர்வமாக ஏற்றுக்கொண்டு தாக்கு பிடிக்க வர்க்க உணர்வும், சித்தாந்த தெளிவும் தேவைப்படுகிறது.

ஒருவரின் லட்சியமும், இலக்கும், அந்த லட்சியத்தின் மீதான பிடிப்பும் எந்த அளவு வலுவாக இருக்கிறதோ, உறுதியாக இருக்கிறதோ, அதற்கேற்ப அவர் எத்தகைய துன்பங்களையும் இழப்புகளையும் தியாகங்களையும் செய்து தொடர்ந்து முன்னேறுவார்.

 இதற்கு எதிர்மறையாக, லட்சியப் பிடிப்பில், கொள்கையில் பலவீனமாக இருப்பவர்கள் அதற்கு ஏற்ப தாம் எதிர்கொள்ளும் துன்பங்களை இழப்புகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பின்னடைவார்கள். இது அனைத்து இயக்கங்களுக்கும் பொருந்தக் கூடியவை தான்.

தற்போது காடுகளின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 35 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாகவும், குறிப்பாக தெற்கு பஸ்தர் பகுதிகளில் உள்ள பைரங்கர், மலங்கர், கதேகல்யாண் பிரிவை சேர்ந்தவர்கள் மாநில அரசு முன்னெடுத்து வரும்  “வீடுகளுக்கு திரும்புங்கள் “ என்ற திட்டத்தின் விளைவாக சரணடைந்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதுவரை 180 மாவோயிஸ்டுகள் உட்பட, 796 பேர் சரண் அடைந்திருப்பதாக தினமணியின் அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் மோதல்கள் !

ஒரு வாரத்திற்கு முன்னர் நாராயண்பூரில்  நடைபெற்ற மோதலில் 10 மாவோயிஸ்ட்டுகள் தியாகிகளாகியுள்ளனர். கடந்த ஏப்ரல் 16 இல், பஸ்தர் பகுதியில் காங்கேர் மாவட்டத்தில் நடந்த மோதலில் 29 மாவோயிஸ்டுகள் உயிரை விட்டுள்ளனர். இப்படி ஒரு மாதத்தில் மட்டும் 59 போராளிகள் தியாகிகளாகியுள்ளனர். பஸ்தர் பகுதியில் மட்டும் இந்த ஆண்டில் இதுவரை 97 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு போராளியாக வாழ்வதில் உள்ள சிரமங்கள், இழப்புகள், செய்தாக வேண்டிய தியாகங்கள் காரணமாக சிலர் காடுகளில் இருந்து, மாவோயிஸ்டுகளில் இருந்து விலகி அரசிடம் தஞ்சம் அடைகின்றனர்தான். அதே போல் மலைத்தொடர்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் கார்ப்பரேட் அடியாட்களின் ஆட்சியால், நாட்டை நேசிக்கின்ற பலரும் இடதுசாரிகளை நோக்கி திரும்புவதும், மலையை நேசிக்கின்ற பழங்குடியின மக்கள் தமது மண்ணையும், மலையையும், மக்களையும் பாதுகாக்க ஆயுதமேந்த துணிவதும் தொடரத்தான் செய்கிறது. ஆனால் அந்த எண்ணிக்கை சொற்பமாகவும் அவர்கள் புலம் பெயர்வது விரிவாகவும் நடக்கிறது.

பிழைப்புக்காக புலம் பெயரும் பழங்குடி இளைஞர்கள் !

தற்போது வட மாநிலங்களில் பின்தங்கி உள்ள மலை கிராமத்தில் உள்ள இளைஞர்களை  குறி வைத்து புலம்பெயர செய்கின்றனர். அவர்களை இந்தியாவின் தொழில் நகரங்களுக்கு அழைத்து வந்து, உரிமைகள் ஏதுமற்ற காண்ட்ராக்ட்  கூலிகளாக மாற்றும் போக்கு தீவிரமடைந்து வருகிறது. கடும் உழைப்புக்கு தயங்காத அந்த மலைவாழ் கிராம இளைஞர்களை நகர்ப்புறங்களில் அடிக்கட்டுமான திட்டங்களான ரோடுகள் பாலங்கள் போடுவது, மெட்ரோ ரயில் திட்டங்களில் வேலை வாங்குவது, கார்ப்பரேட் நிறுவனங்களில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக ஒட்டச் சுரண்டுவதும் நடந்து வருகிறது. இது இளைஞர்களை போராளிகள் பக்கம் திரும்ப விடாமல், மேலும் மேலும் சென்னை, பெங்களூர், மும்பை போன்ற தொழில் நகரங்களை நோக்கி ஈர்ப்பதாக அமைகிறது.

இதையும் படியுங்கள்: உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை கொன்று குவிக்கும் பாசிச மோடி அரசு.

எந்த ஒரு கட்சிக்கும், அமைப்புக்கும், இயக்கத்திற்கும் உறுப்பினர்கள் என்பவர்தான் அடிக்கற்கள். அந்த பலத்தைக் கொண்டுதான் எந்தக் கட்சியும், அமைப்பும், இயக்கமும் எத்தகைய சாதனையையும் செய்ய முடியும். மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் அவர்களது லட்சியத்தை நோக்கிய பயணத்தில் உதவுகிறதா அல்லது சறுக்குகிறார்களா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

கார்ப்பரேட் காவி பாசிச கும்பல்கள் நாட்டில் உள்ள முற்போக்குவாதிகள், ஜனநாயக சக்திகள், பேராசிரியர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் தமது அடியாள் படையை ஏவி  வேட்டையாடி வருகிறது; அவர்களின் குரல்வளையை நெரித்து மௌனிக்கச் செய்கின்றது; ஊபா சட்டத்தின் கீழ் சிறைகளில் போட்டு வதைக்கிறது. இவர்கள் தான் நாட்டு மக்களிடையே இந்த அரசின் தவறுகளை விமர்சித்து மக்களை சிந்திக்க தூண்டி வருபவர்கள். இவர்களின் குரல்வளையை மிதிப்பதை நாம் அனுமதிப்பதென்றால், பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேலை செய்யத் தேவையில்லை; தேர்தல் புறக்கணிப்பையே பேசிக் கொண்டிருக்கலாம்.

தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில்  தேர்தல் புறக்கணிப்பு முழக்கம் பொருத்தமானது தானா? என்பதையும், புரட்சியை நடத்த மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் மட்டும் மக்களிடையே பிரச்சாரம் செய்தால் போதுமா? என்பதையும், ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வடிவம் என்ற தமது நடைமுறை பொருத்தமானதுதானா? என்பதையும் மாவோயிஸ்டுகள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.  நாட்டை சூறையாடி வரும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்காக நாட்டை கூறு போட்டு விற்று வரும் மோடி அமித்ஷா கும்பலுக்கு எதிராகவும் பற்றியுள்ள சிறு நெருப்பை காட்டுத் தீயாக வளர்த்தெடுப்பதா அல்லது நீரூற்றி அணைக்க துணை போவதா? ஆளும் வர்க்கம் தெளிவாக களத்தில் நிற்கிறது. நெருக்கடியில் இருக்கும் புரட்சியாளர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here