ஸ்ரேல் மீது சென்ற ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதை காரணமாக வைத்துக்கொண்டு பாலஸ்தீன மக்களை முற்றாக இன அழிப்பு செய்து வருகிறது இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம்.

பாலஸ்தீனத்தின் நகரான காசாவை முற்றிலுமாக தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டது. இதற்காக டன் கணக்கான ஆயுதங்களை, வெடிபொருட்களை காசாவின் மீது வீசியுள்ளது இஸ்ரேல். அடுத்து கான் யூனுஸ் நகரையும் அழித்துள்ளது. தற்போது ரஃபா நகரை குறிவைத்து குண்டுமழை பொழியத் துவங்கியுள்ளது. அங்கிருந்து மக்கள் தனது உடமைகளுடன் வெளியேறி வருகின்றனர்.

”போரின் போது வீசப்படும்  வெடி மருந்து பொருட்களில் 10% வெடிமருந்துகள் உடனடியாக வெடிக்காது என்பதுதான் ’கட்டைவிரல் விதி’ (கட்டைவிரல் அளவுள்ள வெடிகுண்டுகள்) என்று வெடிபொருள் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சுமார்  7,500 மெட்ரிக் டன் ’உயிருள்ள ஆயுதங்கள்’ காசா பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கின்றன”.

காசாவின் மீது வீசப்பட்ட வெடி மருந்துகளில் வெடிக்காத 10% வெடிப் பொருள்களின் அளவே 7500 மெட்ரிக் டன் என்றால் மொத்தம் எவ்வளவு டன் வெடி மருந்துகளை வீசியிருக்க வேண்டும் என்பதை கணக்கில் எடுத்து பார்த்தாலே கொடூரமாக உள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக சமகாலத்தில் நடக்கின்ற மனித படுகொலை, இன அழிப்பு போர்க்குற்றமாகவும், பயங்கரவாத தாக்குதலாகவும் மாறியுள்ளதை உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கண்டித்து வருகின்றனர்.

ஆனால் உலக மேலாதிக்க வெறி பிடித்தலையும் அமெரிக்காவோ சொந்த நாட்டிலேயே அம்பலமான பிறகும், ”தாங்கள் அனுப்பிய வெடி மருந்துகள் அனைத்தும் காசாவின் மீதான தாக்குதலில் தீர்ந்து விட்டது. எனவே புதிதாக நாங்கள் ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்று பித்தலாட்டம் புரிந்து வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களில் 69 சதவீதத்தை வழங்கி மிகப் பெரும் ஆயுத வியாபாரியாக, பயங்கரவாதியாக வலம்வருகின்ற அமெரிக்காதான் இன்று உலகில் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறது என்பது வரலாற்றின் கேலிக்கூத்தாகும்.

யூதர்களை நரவேட்டையாடிய ஜெர்மன், இன்று அதே யூதர்கள், ஜியோனிஸ்டுகள் பாலஸ்தீனர்களை இன அழிப்பு செய்வதற்கு தேவையான ஆயுதங்களில் 30 சதவீத ஆயுதங்களை வழங்குவது அதைவிட கொடூரமான வரலாற்று அசிங்கமாகும். இதனை ஹோலோகாஸ்ட் சம்பவத்திற்கு ‘பிராயச்சித்தம்’ என்று வேறு கூறிக் கொள்கின்றனர்.

இந்த ஆயுதங்கள் இதுவரை 35 ஆயிரம் பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வசிக்க தகுந்த இடத்தில் 17 லட்சம் பேரை வசிப்பதற்கு தள்ளியுள்ளது. பல குழந்தைகளை அனாதைகளாக்கியுள்ளது. பல பெற்றோர்களை குழந்தைகள் இல்லாமல் உள்ளவர்களாக மாற்றியுள்ளது. நோயாளிகள், உடல் ஊனமுற்றவர்கள், பசிக் கொடுமையால் தினம் தினம் அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கின்றவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், நோய் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் செத்துக் கொண்டிருக்கின்ற மக்கள், தனது அவலங்களை வெளியுலகிற்கு செய்தியாக கூட அனுப்ப முடியாத மக்கள், அன்றாடம் குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மரண ஓலங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகமெங்கும் போர் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வரும் போது, இந்தியாவில் மட்டும் பெரிதாக போராட்டம் ஏதும் நடக்கவில்லை.

படிக்க: 

♦ பாலஸ்தீன இனப்படுகொலை: பொய்களை கட்டவிழ்த்துவிடும் சியோனிஸ்டுகள்!

♦ இசுரேலுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய பல்கலைக்கழக மாணவர் போராட்டங்களை ஆதரிப்போம்! ஒன்றிணைவோம்!

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் பயங்கரவாத போருக்கு எதிர்ப்பு உலகம் முழுவதும் பெருகி வருகிறது. அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள், ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மக்களுடன் இணைந்து போராட தொடங்கியுள்ளனர். 

தமது நாட்டு அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்குவதை தடுத்து நிறுத்தக் கோரியும், இஸ்ரேலுக்கு எந்த விதமான உதவிகளும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி போராடுவது மட்டுமின்றி, பாலஸ்தீனத்தை ஆதரித்தும், சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்தியும் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு போராடுகின்றனர். தென் ஆப்ரிக்கா உலக நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.

காசா தரைமட்டமான பிறகும் அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் இஸ்ரேல் இராணுவம் அட்டூழியங்களை நடத்தி வருகிறது. போர் மீட்பு பணியாளர்கள், ஐநா சபையின் பணியாளர்கள், போர்க்கால உதவி மருத்துவர்கள் ஊடகவியலாளர்கள், வெடிக்காத வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் போன்ற யாரையும் பணியாற்ற விடாமல் தடுத்து வருகின்றனர்.

ஹமாஸ் இயக்கத்தை முற்றாக அழிப்பது மற்றும் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பது என்று தனது நோக்கத்தை முன்வைத்து போரை தொடர்ந்து நடத்தி வந்தாலும், இந்த இரண்டிலும் இதுவரை இஸ்ரேல் வெற்றி பெறவில்லை.

இந்தப் போருக்காக பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி 53 பில்லியன் அமெரிக்க டாலர் (2025 வரை) செலவு செய்ய திட்டமிட்டு, செலவிட்டு வந்தாலும் இதுவரை தனது இலக்கை அடைய முடியவில்லை என்ற வெறித்தனத்துடன் போரை தீவிர படுத்தியுள்ளது கொடிய பயங்கரவாதியான பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம்.

நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது இயற்கையாகவோ அல்லது விபத்தில் மரணம் அடைந்தாலோ மனம் பதைக்கிறது. கடந்த ஏழு மாத காலங்களாக பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் வரும் கொடூரமான தாக்குதல், கொத்து கொத்தாக மக்களை இஸ்ரேல் கொன்றொழிக்கின்ற செய்தியை கேள்விப்படும் யாரும் அமைதியாக இருக்கக் கூடாது.

பாசிச பயங்கரவாதம் என்பது இன அழிப்பு அல்லது நிலவெறியுடன் கூடிய அழிப்பு, மதரீதியான வெறுப்பை தூண்டி அழிப்பது என்று அந்தந்த நாடுகளின் தன்மைக்கேற்ப உருவெடுக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு, இந்தியாவில் உள்ள பாசிச குண்டர் படையான ஆர்எஸ்எஸ் பாஜக பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதற்கு தயாராவோம்.

இஸ்ரேலின் பயங்கரவாதி நெதன்யாகுவின் நண்பரான பாசிச மோடி தேர்தலை அறிவித்த நாளிலிருந்து இங்கேயும் இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்வதற்கு தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலை ஊட்டி வருகின்றார். தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர் உருவாக்கிய வெறுப்பு சொல்லிக் கொள்ளப்படக்கூடிய இந்துக்கள் மத்தியிலும், ஏற்கனவே வெறியூட்டப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் குண்டர் படையினரிடம் எரிந்து கொண்டே இருக்கும்.

பாசிஸ்டுகள் தேர்தல் வெற்றி, தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்; அவர்களின் ஆதிக்கத்தை ஒருபோதும் விட்டுத் தரமாட்டார்கள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. இந்தியாவில் அப்படிப்பட்ட சூழல் உருவாவதை தடுப்பதற்கு தற்போதிலிருந்தே போராடுவோம்.

இவை அனைத்தையும் நாம் எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டியுள்ளது அதற்கு முதற்கட்டமாக பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரைக் கண்டித்து அரசியல் ரீதியாக மக்களை அணி திரட்டுவோம்! ’இஸ்ரேலே இன அழிப்பு போரை நிறுத்து’ என்ற் முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கிளர்ச்சிகளுக்கு தயாராவோம்.

  • மாசாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here