தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்கள் 7.67 லட்சம் பேர். இந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் அரசு பள்ளிகளில் 91.02 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதமும், இரு பாலர் பள்ளிகளில் 94.7 சதவீதமும், பெண்கள் பள்ளிகளில் 96.39 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த பிளஸ் 2 வரை கல்வி கற்று முடித்த மாணவர்கள், தனது மேல்நிலைப் படிப்புக்காக தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
நாட்டிலுள்ள 143 கோடி மக்களும் கல்வியறிவைப் பெறுவதற்கு போராடுகின்ற நிலையில் தான் இன்னமும் இந்தியா இருந்து கொண்டுள்ளது. அரசு நடத்த வேண்டிய கல்வித் துறையானது படிப்படியாக தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு வந்ததால், இன்று நாடு முழுவதும் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களையும், தனியார் கல்விக் கொள்ளையர்கள் ஆக்கிரமித்து படுஜோராக கல்வி வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரிகளில் புதிதாக சேர்க்கை நடக்கும் போது இது பற்றிய விவாதங்கள் நடந்தாலும் அதன் பிறகு படிப்படியாக விவாதம் குறைந்து மீண்டும் அடுத்த கல்வியாண்டில் தான் அது பற்றிய பேச்சே எழுகிறது.
000
இந்தியாவில் நிலவுகின்ற பார்ப்பனிய, சாதி-தீண்டாமை கொடுமைகள் காரணமாக நமது நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது. 20-ம் நூற்றாண்டில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின், கம்யூனிஸ்டுகளின் நெடிய போராட்டத்தினால் ஒரளவு கல்வி பெறும் நிலைமை உருவாக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்த பட்டிலின, பழங்குடி மக்கள் தலை நிமிரும் போதெல்லாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தனது பள்ளியில் முதன்மை மாணவனாக உருவெடுத்த சின்னத்துரை என்ற மாணவனும், அவரது தங்கையும் சக மாணவர்களின் ஆதிக்க சாதி வெறியால் வீடு புகுந்து தாக்கப்பட்டனர். அந்த மாணவர் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 469 மதிப்பெண் பெற்றதுடன், தன்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் உயர் கல்வி படிக்கச் செல்கின்ற பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆந்திராவில் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதையடுத்து நாடே வெட்கி தலை குனிந்தது. சமீபத்தில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர் அஜித் குமார் மீதான சாதிய ரீதியான தாக்குதல் இதற்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டாகும்.
1993 ஆம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்ட அடிமைச் சாசனமான காட் ஒப்பந்தத்தின்படி கல்வியானது சேவை துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. படிப்படியாக கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றி விட்டார்கள். பி.ஏ.பய் பவுண்டேசன் வழக்கில் உச்சநீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 19 (1) (G) பிரிவின்படி தனியார் கல்வி முதலாளிகள் பள்ளி, கல்லூரி தொடங்கி தனது வர்த்தகத்தை நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கி கொள்ளையடிக்க அனுமதி வழங்கி உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தரகு முதலாளிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கல்வி வியாபாரத்தில் குதித்துள்ளனர். அவர்கள் கைதேர்ந்த அறிவு பிழைப்புவாதிகளை கொண்டு பவுண்டேஷன்களை நடத்துகின்றனர். நாடு முழுவதும் கிரிமினல் குற்ற கும்பல்கள், அரசியலில் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்த கிரிமினல்கள், தவறான வழியில் சொத்து சேர்த்த கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அதிகார வர்க்கத்திலிருந்து கொண்டு பல்வேறு ஊழல் மற்றும் கிரிமினல் தனமான நடவடிக்கையின் மூலமாக சொத்து சேர்த்த அதிகாரிகள் ஆகியவர்கள் கல்வி நிறுவனத்தை தொடங்கி கொள்ளையடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்:
- விஸ்வகர்மா யோஜனா: ஒன்றிய அரசின் நவீன குலக்கல்வித் திட்டம்!
- நீட் போன்ற போட்டி தேர்வுகள், பயிற்சி மையங்கள், தற்கொலைகள்!
தனது கல்வி வியாபாரத்தில் கிடைத்த கொழுத்த பணத்தை கொண்டு நாட்டில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் அரசியல் கட்சிகளின் ஆசியுடன் தேர்தலில் போட்டியிடுகின்றனர். எம்எல்ஏ, எம்பி யாகவோ அல்லது அமைச்சராகவோ மாறி மீண்டும் தனது கல்விக் கொள்ளையை எந்தவிதமான பாதகமும் இன்றி நடத்துகின்றனர்.
2024 துவக்கத்தில் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ”நாடு முழுவதும் மொத்தமுள்ள கல்லூரிகள் 42,825. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக 8,375 கல்லூரிகள் உள்ளன. மகாராஷ்டிரா 4,692 கல்லூரிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், கர்நாடகா 4,430 கல்லூரிகளுடன் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் 3,934 கல்லூரிகளுடன் நான்காவது இடத்திலும் தமிழகம் 2,829 கல்லூரிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது
அதேபோல நாட்டிலுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான கல்லூரிகள் பொதுவான கல்லூரிகளாகும். 8.7 சதவீத கல்லூரிகள் டீச்சர் டிரைனிங் சார்ந்ததாக இருக்கிறது. 6.1 சதவீத கல்லூரிகள் பொறியியல் சார்ந்தவை. மேலும்,4.3 சதவீத கல்லூரிகள் நர்சிங் கல்லூரிகளாகவும், 3.5 சதவீத மருத்துவக் கல்லூரிகளாகவும் உள்ளன. மேலும், இதில் 14,197 கல்லூரிகள் முதுகலை படிப்புகளையும் வழங்குகின்றன.. 1,063 கல்லூரிகள் பிஎச்டி படிப்புகளை வழங்குகின்றன.
தேசிய மருத்துவ ஆணையம், கடந்த ஜனவரியில் அளித்த புள்ளிவிவரங்களின்படி, நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அதாவது, 71 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. கேரளாவில் 33, புதுச்சேரியில் 9, கர்நாடகத்தில் 67, ஆந்திராவில் 32, தெலங்கானாவில் 42, மகாராஷ்டிராவில் 63 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மத்திய பிரதேசத்தில் 25, குஜராத்தில் 36, உத்தரப் பிரதேசத்தில் 67, தலைநகர் டெல்லியில் 10 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பீகாரில் 20, மேற்கு வங்கத்தில் 32 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. சண்டிகர், சிக்கிம், மேகாலயா, மிசோரம், அருணாச்சல் பிரதேசம், கோவா, டாமன்-டையு, அந்தமான் நிகோபாரில் தலா ஒரு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாகலாந்து, லடாக், லட்சத்தீவுகளில் ஒரு மருத்துவக் கல்லூரிகூட இல்லை
தமிழகத்தில் 481 பெறியியல் கல்லூரிகள் உள்ளன. ஐஐடி, என்ஐடி மற்றும் உயர்தர கல்வியை வழங்கும் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த கல்லூரிகளில் தனது உயர்கல்விக்காக மாணவர்கள் போட்டித் தேர்வுகள் எழுதுகின்றனர்.
’எங்கள் கல்லூரியில் படித்தவர்கள் நாட்டில் உள்ள போட்டித் தேர்வில் முதலிடத்தில் உள்ளார்கள்’ என்று தனியார் கல்விக் கொள்ளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்களை வாரி இறைக்கிறார்கள். அரசு கல்லூரியில் படிப்பவர்கள் இவர்களுடன் போட்டி போட முடியாது என்பதால் அரசு கல்லூரிகளுக்கு, அரசு பள்ளிகளுக்கு விளம்பரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இருந்த போதிலும் அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின், பேராசிரியர்களின் கடும் உழைப்பு காரணமாக கடுமையான போட்டியில் முன்னிலை வகிக்கின்றனர் என்பது மறுக்க முடியாது.
நமது மாணவர்கள் உயர் கல்வியை பெற போட்டியிட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் நாடு முழுவதும் நிலவும் வென்ற பல்வேறு பாடத்திட்ட முறைகள் ஆகும். இதற்கு மாற்றாக தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது என்பதெல்லாம் இருந்தாலும், பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் படிப்படியாக புதிய தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த துவங்கியது. அப்போதிலிருந்து நாடு முழுவதும் ஒரே சீரான சிபிஎஸ்சி கல்வி புகுத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆண்டுடன் பிளஸ் 2 படித்தவர்கள், இனி தமிழ்நாடு மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத முடியாது. இனிமேல் சிபிஎஸ்சி தான் எழுத முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீட், நாடா, கிளாட், ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் சிபிஎஸ்சி முறையில் படித்த மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாமல் போகிறது. எனவே ஒரே பயிற்றுமுறை – ஒரே தேர்வு முறையைக் கொண்டு வந்து அவற்றை அவர்களின் தாய் மொழியில் கற்கின்ற வகையில், தேர்வெழுதுகின்ற வகையில் கல்வியை மாற்ற வேண்டும் என்பதுதான் நிரந்தரமான தீர்வாகும்.
மேலும் இந்த வேறுபாட்டை ஒழிக்க ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை விருப்பப் பூர்வமான கல்வித் தகுதியை அனைவரும் இலவசமாகப் பெற அரசே தக்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். கல்வி கற்பிப்பதை கட்டாய, அவசியமாக்க வேண்டும். கல்வி தனியார்மயத்தை எதிர்த்து போராடாமல் சிறந்த அறிவியல் பூர்வமான சமநோக்கு உள்ள கல்வியை உருவாக்க முடியாது என்பதுதான் நிதர்சனமாகும்.
பாசிச மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தியாவில் கல்வித் துறையை கார்ப்பரேட்டுகள் முழுமையாக விழுங்கத் துவங்கியது. அதற்கு பொருத்தமாக 16 வகையான சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு உகந்தவாறு புதுப்புது பாடத்திட்டங்களை உருவாக்குவது, புதுப்புது ஆய்வுகளை உருவாக்குவது கல்வியின் உள்ளடக்கத்தை மாற்றுவது, காவிமயமாக்குவது போன்றவை அனைத்தும் கல்வியில் தனியார்மயம், தாராளமாயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கையின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் என்பதை புரிந்து கொண்டு மறுகாலனியாக்கத்தையும், கல்வியில் தனியார்மயத்தையும் எதிர்த்து போராடுகின்ற சமூக உணர்வை பெற வேண்டும். தற்போது மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மை கார்ப்பரேட் காவி பாசிசாமாக கல்வியையும் தாக்கி வருகிறது.
இத்தகைய சூழலில் கல்வி கற்பிக்கும் நோக்கம் தன்னுடன் பயில்கின்ற மாணவர்கள் அனைவரையும் சமமாக கருதுகின்ற சிந்தனையும், உன்னதமான கலாச்சாரத்தையும், உயர்ந்த நாகரிகத்தையும் கொண்ட, சமூக பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட சிறந்த சமூக மனிதர்களை உருவாக்குவதாக தான் இருக்க முடியும். ஆனால் இன்று மதிப்பெண்களை பெறுவதும், அதற்காக மனப்பாடக் கல்வியின் மூலம் தனது திறனை காட்டி, போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், தேர்ந்த வல்லுனர்களாகவும் கருதப்படுகிறார்கள் என்பதுதான் கல்வி என்று சாபக்கேடாக உருவாகியுள்ளது.
எனவே என்ன படிப்பது? எந்த வேலைக்கு போவது? என்பது அவசியம் தான் என்ற போதிலும் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ வேண்டியுள்ளது< எப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்க வேண்டியுள்ளது, எப்படிப்பட்ட சமூகத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கையளித்து செல்ல வேண்டியுள்ளது என்பதையெல்லாம் சிந்திக்கின்ற வகையில், சமூக ரீதியாக நம்மை தயார் படுத்துகின்ற, சமூக விஞ்ஞானக் கல்வியை படிப்பதற்கு போதிய நேரத்தை ஒதுக்குவது அவசியம். அந்த சமூக விஞ்ஞானம் என்பது மார்க்சியம் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை..
- கனிமொழி.
படிப்பு முக்கியம் தான் அதை விட சமூகத்தின் வளர்ச்சி அவசியம் என்பதை விளக்கும் வகையில் கட்டுரை அமைந்திருந்தது. வாழ்த்துக்கள்