”மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால், தாங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில்’ அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை’களில்தான் அதை உருவாக்குகிறார்கள்” என்றார் மார்க்ஸ்.

நிலவுகின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு வாழ்க்கை சூழ்நிலைமையோடு நாம் ஒத்து போய் வாழ்வது வாழ்க்கையே அல்ல. சூழ்நிலையின் கைதிகளாக நாங்கள் இருக்கின்றோம் என்று அங்கலாய்த்துக் கொள்வது கையாலாகாத்தனமாகும்.

மூலதனமானது முதலாளித்துவத்தின் தோற்றத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, ஏகாதிபத்திய முதலாளித்துவமாக, நிதி மூலதனக் கொடுங்கோன்மை மிக்க உலகப் பேரரசாக பரிணமித்துள்ளது. இந்த நிதி மூலதனக் கொடுங்கோன்மை, மனிதகுலத்தின் சொல்ல முடியாத அனைத்து துயரங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஏனென்றால் நிதி மூலதனத்தின் கொடூரமான சுரண்டலிலும், அது தோற்றுவிக்கின்ற  ஆகக் கொடுமையான ஏற்றத்தாழ்விலும் தான் தங்கி நிற்கின்றது.

2017 லேயே பிரபல முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களான நிதின் குமார் பார்தி, லூகாஸ் சான்சல், தாமஸ் பிகெட்டி மற்றும் அன்மோல் சோமஞ்சி ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட, “பில்லியனர் ராஜ்” என்ற தலைப்பிலான கட்டுரை, ”பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இருந்த ஏற்றத்தாழ்வைக் கூட மிஞ்சி விட்டது. இந்தியா இப்போது எப்போதும் இல்லாத வகையில் முன்னோடியில்லாத சமத்துவமின்மையை எட்டியுள்ளது” என்று வலியுறுத்துகிறது.

உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை பற்றிய முதலாளித்துவ மற்றும் தாராளவாத முதலாளித்துவ அறிஞர்களின் ஆய்வுகள் நமக்கு தெரிவித்துக் கொண்டே தான் உள்ளது. The Billionaire Raj என்று 2018 லேயே வெளியிடப்பட்ட ஆய்வு நூல், இது போன்ற பல்வேறு தரவுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் ஆக்ஸ்பாம் குழுமத்தின் அறிக்கை இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டிக் கொண்டே தான் உள்ளது.

ஆக்ஸ்ஃபாமின் சமீபத்திய அறிக்கை ”1 சதவீத இந்தியர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.4 கோடி, இது தேசிய சராசரியை விட 40 மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கிடையில், கீழே உள்ள 50 சதவீதம் மற்றும் நடுத்தர 40 சதவீதம் பேர் முறையே தேசிய சராசரியை விட 0.1 மற்றும் 0.7 மடங்குக்கு சமமான செல்வத்தை வைத்துள்ளனர். சொத்துப் பங்கீட்டின் உச்சத்தில், 92 மில்லியன் இந்தியப் பெரியவர்களில் சுமார் 10,000 தனிநபர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 2,260 கோடி, இது தேசிய சராசரியை விட 16,763 மடங்கு அதிகமாக உள்ளது.

உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2024-ல் வெளியிட்ட ஆய்வில், ”இந்தியாவின் செல்வப் பகிர்வு தொடர்பான ஆபத்தான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில், இந்தியாவின் மக்கள்தொகையில் முதல் 1 சதவீதம் பேர் நாட்டின் வருமானத்தில் 22.6 சதவீதத்தையும், அதன் செல்வத்தில் 40.1 சதவீதத்தையும் வைத்திருந்தனர், இது அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களைக் கூட மிஞ்சும்”.என்று தெரிவிக்கின்றது.

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்தும் உண்மை என்ன? ”வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கும் கோடிக்கணக்கான மக்களையும், அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத ஏழ்மை நிலையில் பரிதவித்துக் கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களையும் கொண்டுள்ள நாடு, அதற்கு நேர்மாறாக  உலகின் 5 வது பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது.  அதிலுள்ள விரல் விட்டு எண்ணத்தக்க அம்பானி, அதானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகள் உலக பணக்காரர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார்கள் என்ற கொடுமையான, சமகால முதலாளித்துவ பயங்கரவாதத்தையும், அது உருவாக்குகின்ற கோரமான விளைவுகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.” என்பதையே இந்த புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

நாட்டின் செல்வ வளங்களையும், இயற்கை, கனிம வளங்களையும், பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் புதை படிவ வளங்களையும், காட்டு வளத்தையும், கடல் வளத்தையும், விவசாய நிலங்களையும் தனது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிதி மூலதனத்தின் துணையோடு அபகரித்துக் கொண்டுள்ளார்கள் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள்.

தனது வரைமுறையற்ற சுரண்டலை எதிர்த்துப் போராடுகின்ற விவசாயிகள், தொழிலாளிகள், சிறு குறு தொழில் முனைவர்கள், தேசிய முதலாளிகள் உள்ளிட்ட வர்க்கங்களின் மீது பாசிச அடக்கு முறையை ஏவி விடுகிறார்கள். வேளாண் சட்டங்களை திருத்துகிறார்கள்; தொழிற்சங்க சட்டங்களை திருத்துகிறார்கள்; சிறு முதலீட்டாளர்களின் வாழ்க்கையை பறிக்கிறார்கள்; இதற்கு நேர் மாறாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி வரிச்சலுகை வாரி வழங்கப்படுகிறது..

தான் வறுமைக்கு ஆட்பட்டிருப்பதன் காரணம் என்ன? தனது குழந்தைகளை விரும்பியபடி படிக்க வைக்க முடியாத்து ஏன்?, தனது பிள்ளைகள் படித்து முடித்து வேலைக்குச் செல்ல முடியாத நிலைமை என்ன?. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு. பட்டினி சாவுகள், நோய் கொடுமைகள் இவை அனைத்திற்கும் அடிப்படை என்ன என்பதை ஏற்றத்தாழ்வுகள் உருவாக்குகின்ற ’சூழ்நிலைகளில்’ இருந்து புரிந்துக் கொள்வோம். இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள் தான் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது.

நிலவுகின்ற சமூக அமைப்பில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலமே தற்போதுள்ள வாழ்க்கையை விட மேம்பாடான வாழ்க்கையை அடைந்து விட முடியும் என சதா சர்வ காலமும் போதித்துக் கொண்டேயுள்ளனர் சமூகத்தின் செல்வத்தை அபகரித்துக் கொண்டவர்கள்.

மார்க்சியத்தை தவிர வேறு எந்த சித்தாந்தமும் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பதற்கு அடிப்படை காரணம் என்ன? அதனை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பற்றிய தத்துவார்த்த போதனையையும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பு முறையையும் முன் வைப்பதில்லை.

“சமூக ஒழுங்கின் எந்த ஒரு நலனும் கிடைக்கப் பெறாது, அனைத்துக் கேடுகளையும் தாங்கிக் கொள்ளும் ஒரு வர்க்கம்” என தொழிலாளர் வர்க்கத்தை விளிக்கும் தோழர் எங்கெல்ஸ், “அத்தகைய ஒரு வர்க்கம் சமூக ஒழுங்கை மதிக்க வேண்டும் என யாரால் கோர முடியும் ?” என்று பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டில் இருந்து முதலாளிவர்க்கத்தை நோக்கிக் கலகக் குரலை எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: மார்ச் 14:காரல் மார்க்ஸ் நினைவு தினம்! மீள்பதிவு

சமூக ஒழுங்கை சுரண்டுகின்ற சமூகத்தில், அனைத்து சொத்துக்களையும் தனது உரிமையாக்கி கொண்டுள்ள வர்க்கம் தான் விரும்பியபடி கட்டமைக்க முயல்கின்ற போது அதனால் பாதிக்கப்படுகின்ற வர்க்கம் சமூக ஒழுங்கை கடைபிடிக்க முடியாது. இதனை பாட்டாளி வர்க்கம் கலகம், புரட்சி என்கிறது! முதலாளித்துவமும், அதன் கைக்கூலி எழுத்தாளர்களும் அராஜகம் என்கிறார்கள்.

சமுதாயத்தை புரட்டிப் போடும் தலைகீழான மாற்றத்தை எந்த வார்த்தையில் முன் வைத்தால் என்ன? காரல் மார்க்சின் ஆகச்சிறந்த மாணவர்களாகிய நாம் பெரும் கலகத்தில் இறங்குவோம். அவரது பிறந்தநாளில் அதிகரித்து வரும் இருதுருவை ஏற்றத்தாழ்வுகளை  ஒழிக்க ’சமூக சூழ்நிலைகள்’ கோருகின்ற அனைத்து வகையான தியாகத்திற்கும் தயாராவோம்.

  • மணிமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here