டந்த ஏப்ரல் 21 அன்று, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையிலும், ,மதவெறியை தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது. இது மாதிரி நடத்தை விதிகள் (MCC) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பல பிரிவுகளை மீறியதாக இருந்தபோதிலும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆண்ட காலனிய ஆட்சியாளர்கள், உரிமைகளை கொடுப்பதில், ஆங்கிலேயர்களுக்கும்- இந்தியர்களுக்கும் இடையே காட்டிய பாரபட்சத்தை பின்பற்றுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

மதரீதியாக பிளவுபடுத்தும் பேச்சுகள்!

ஒருவேளை, அதிக மக்கள் வாக்குகளை பெற்று எதிர்க்கட்சிகள் பதவியேற்றால் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கழுத்தில் இருக்கும் தாலி உட்பட அனைத்து சொத்துக்களையும் பறித்து அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் ஊடுறுவல்காரர்களான முஸ்லீம்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று மோடி பன்ஸ்வாராவில் பேசினார்.

பிரதமரின் இந்த பேச்சின் நோக்கம் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவதாக உள்ளது. இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம் லீக் ஆற்றிய பங்கை நேரடியாக பார்த்த காங்கிரஸ், தற்போது தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகளை பிடுங்கி இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களிடம் கொடுக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளது என்று மோடி பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை முஸ்லீம்கள் உட்பட பட்டியல் சாதியினர், பழங்குடியினர், குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனப் பிரதமர் மன்மோகன் சிங் பதினெட்டு வருடங்களுக்கு முன் பேசியதை முற்றிலும் திரித்துவிட்டார், மோடி.

மன்மோகன்சிங்கின் அறிக்கையைத் திரித்து, முஸ்லிம்களுக்கு சொத்தில் முதல் உரிமையை சிங் வழங்கியதாக மோடி குரூர உள்நோக்கத்துடன் கூறினார்.

“சகோதர சகோதரிகளே, நகர்ப்புற நக்சல் சித்தாந்தம் கொண்ட இவர்கள், உங்கள் தாலியை கூட சும்மா விட மாட்டார்கள்” என்று மோடி கூறினார்.

அவர் கூறிய வார்த்தைகளின் அடிநாதம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரித்து, வாக்காளர்களில் ஒரு பிரிவினரை அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைத்து அவர்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை தனது கட்சிக்கு ஆதரவாகப் பெறுவதற்கான நோக்கம் கொண்டது.

தேர்தல் ஆணையத்தின் இரட்டை நீதி!

காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர் கட்சிகளும், ஏராளமான மக்களும், அறிவுத்துறையினரும் மோடியின் பிளவுவாத பேச்சுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை அணுகி புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்று வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் இது பற்றி வாய் திறக்கவும் இல்லை, இதுவரை நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாதிரி நடத்தை விதிகளை (MCC) எதிர்கட்சிகள் மீறுவதாக புகார் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், மத ரீதியான வெறுப்பினை தூண்டும் வகையில் பிரச்சார வியூகங்களையும், முழக்கங்களையும் தொடர்சியாக மேடை தோறும் பேசி வரும் பிரதமர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்த மோடி, ஜெய் பஜ்ரங்பலி (அனுமானுக்கு வெற்றி!) என்ற முழக்கத்தை முன்வைத்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தார். மேலும் மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்கும் போது ‘ஜெய் பஜ்ரங்பலி’ என்று முழக்கமிட்டு வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.

சட்டப்படி இத்தகைய மதரீதியான முழக்கங்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்ட செயல் ஆகும், இருந்தும் மோடி தெரிந்தே அவ்விதிகளை மீறினார். பல புகார்களை பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், உயிர்தியாகம் செய்த வீரர்களின் பெயரில், அரசியல் கட்சிகள், வாக்குகள் மற்றும் ஆதரவைக் கோருவதை தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகள் தடை செய்கிறது. ஆனால் 2019 ஆம் ஆண்டில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து மோடி வாக்கு சேகரித்தார். மற்ற கட்சி பிரமுகர்களின் மீது இதே குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், விதிகளை மதிக்காமல் புல்வாமா தியாகிகளின் பெயரில் வாக்கு சேகரித்த மோடி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேற்கண்ட செய்திகளின் மூலம் எதிர்கட்சியினருக்கு ஒரு நீதி – பிரதமருக்கு ஒரு நீதி என தேர்தல் ஆணையம் இரட்டை நிலைப்பாடு எடுப்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

உரிமைகள் மற்றும் தரநிலைகளை பயன்படுத்துவதில் தேர்தல் ஆணையத்தால் காட்டப்படும் இத்தகைய இரட்டை நிலைப்பாடு,அது ஆட்சியாளர்களுக்கு கீழ்படிந்து நடப்பதை தெளிவாக காட்டுகிறது. பிரதமர் மோடிக்கு ஒருவகையாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஒருவகையாகவும் தேர்தல் ஆணையம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவது, தேர்தல்களின் மீதான நம்பகத்தன்மையை குலைப்பதோடு ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்பை நிலைநாட்டும் வகையில் தேர்தல்கள் நேர்மையான மற்றும் சுதந்திரமான முறையில் நடத்தபட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் எண்ணத்திற்கும் முரணாக உள்ளது என்பது தெளிவாகிறது.

படிக்க:

♦ மோடி வெறுப்புணர்ச்சி பற்றி பேசுவது பாசிஸ்டுகளுக்கே உரிய நடிப்பு!

தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்சியாக மத வெறுப்பை விதைத்து வரும் மோடிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக அமைதி காக்கும் போது மோடியின் வெறுப்பு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பும்- கடமையும் நீதித்துறைக்கு உள்ளது.

மக்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில் தேர்தல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது என்று பிப்ரவரி 15 ம் தேதி அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வார்த்தைகளை பொருத்திப் பார்த்தால், மோடியின் பன்ஸ்வாரா பேச்சு விசயத்தில் தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மை மற்றும் மாதிரி நடத்தை விதிகளை மீறும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அதன் உடனடி நடவடிக்கை ஆகியவை சம வாய்ப்புக் கொள்கைக்கு முரணானது.

தேர்தல் பத்திரத் திட்டம் மீதான தீர்ப்பில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்பது “மோசடி மற்றும் சூழ்ச்சி செய்யமுடியாத வகையிலும் வேட்பாளர்களும் அவர்களின் முகவர்களும் நியாயமற்ற வழிகளையும் முறைகேடுகளையும் செய்ய முடியாத வகையிலான தேர்தல்” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

மதம் மற்றும் மதச் சின்னங்களை வாக்கு சேகரிக்க பயன்படுத்துதல் என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் அடிப்படையில் முறைகேடான செயல் என்று நீதித்துறை கூறியுள்ளது.

படிக்க:

♦ மோடியின் வாக்குமூலம்:  இந்து  முஸ்லிம் என்று பிரித்துப் பேசினால் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்!

எனவே பிரதமர் மோடியின் பன்ஸ்வாரா பேச்சு முறைகேடான செயல் என்று பொருள் கொள்ளலாம். எனவே, மோடியின் வெறுப்பு நிறைந்த பேச்சுக்காக நீதித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடைமுறைகளில் தூய்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை மட்டுமல்ல என்பது தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கும் போது கவனிக்கப்பட்டது. சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை உட்பட அரசாங்கத்தின் மற்ற உறுப்புகளுக்கும் தேர்தல் நடைமுறைகளில் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு உள்ளது.

மோடியின் பிரித்தாளும் பேச்சுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் நடைமுறையின் தூய்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தேர்தல் ஆணையம் தவறினால், அவர்களின் நம்பிக்கைஅடிப்படையில் ஒரு பிரிவினரை குறிவைத்து புறக்கணிக்கவும், வெறுக்கவும் தூண்டும் மோடியின் செயல்களுக்கு எதிராக நீதித்துறை தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனூப் பரன்வால் மற்றும் இந்திய யூனியன் ஆகியோருக்கு இடையேயான வழக்கில், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிக்க நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படும் வரை, பிரதமர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

தேர்தல் ஆணையம் ஒருபோதும் “அடிமை கமிஷனாக” மாறக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவ்வாறு செய்தது.

பன்ஸ்வாராவில் வெறுப்பு நிறைந்த உரையை நிகழ்த்தியதன் மூலம் அப்பட்டமான விதிமீறல்கள் செய்த மோடி குறித்து தேர்தல் ஆணையம் மௌனம் காப்பதன்மூலம் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ’அடிமை ஆணையம்’ ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

இத்தகைய தேர்தல் ஆணையம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தும் என்று எதிர்பார்ப்பதில் பயனில்லை. எனவே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமானால் நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டியது கட்டாயம்.

மோடியின் பத்தாண்டு கால வெறுத்தொதுக்கத்தக்க ஆட்சியின் வெறுப்பில் உள்ள மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பளிக்கும் சூழல் உள்ளது வெளிப்படையாக தெரிகிறது. அதன் வெளிப்பாடாகவே மோடி மற்றும் சங்பரிவார் கும்பலின் மதவெறி பேச்சு அமைந்துள்ளது.

EVM மோசடி, தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் ஆகிய விஷயங்களில் ஏற்கனவே அம்பலப்பட்டு நிற்கின்ற போதிலும் இத்தகைய வெளிப்படையான மதவெறி பேச்சு தேர்தல் விதிமீறல் அதற்கெதிரான தேர்தல் ஆணையத்தின் கள்ள மெளனமும், மோடியை மீண்டும் கள்ளத்தனமாக ஆட்சியில் அமர வைக்கும் அடித்தளமாகவும் இருக்கக்கூடும். இப்போதும் இந்தியா ’அமைதி‘ காத்தால், இது தான் இந்தியாவின் இறுதி தேர்தலாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு : தாமோதரன்

https://theleaflet.in/will-the-judiciary-watch-silently-as-the-eci-abdicates-responsibility-to-curb-hate-speech-by-the-pm/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here