கிரிப்டோ கரன்சி தூண்டிலில் சிக்கும் இளம் இந்தியர்கள்!

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிரிப்டோ வர்த்தகத்தை மேற்கொள்ள அனுமதி இல்லை. எனினும் அத்தகைய சிறார்களும் கூட தங்களது பெற்றோரின் ஆவணங்களைப் பயன்படுத்தி இதில் ஈடுபட தொடங்கினர்" என்று விரிவாக விளக்குகிறார்.

0

லகெங்கும் பல்வேறு நாடுகளில் பங்குச்சந்தை வர்த்தகம் நடப்பதை நாம் அறிந்துள்ளோம். பங்குச்சந்தையில் நிறுவனங்களின் பங்குகள், கச்சா எண்ணெய், தங்கம் வெள்ளி போன்ற கனிமங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் நாணயங்கள் ஆகியவற்றில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. பங்குகளை வாங்குவது, விற்பது போன்ற வர்த்தகமும் நடக்கின்றன.

பெரு முதலீட்டு நிறுவனங்களே பெரும்பாலும் இந்தப் பங்குச் சந்தையின் போக்கை தீர்மானிக்கின்றன. உலகின் முக்கிய அரசியல் நிகழ்வுகளும் கூட சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு காரணமாக அமைகின்றன. பங்குச் சந்தையை தொடர்ந்து 2008 முதல் கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் (Virtual) நாணயத்தை வாங்குவதும், விற்பதும், அதில் முதலீடு செய்வதும் எனப் புதுவகை பங்குச்சந்தை உருவாகியுள்ளது.

கிரிப்டோ கரன்சியில் வர்த்தகம் எப்படி நடக்கிறது?

ஒரு கணினி வலைப் பின்னல் (Computer network) மூலமாக, அதன் பரிமாற்ற ஊடகமாக வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் நாணயம்தான் (காகிதப் பணமோ, உலோக நாணயமோ அல்ல) கிரிப்டோவில் பயன்படுத்தப்படுகிறது.இந்த மெய்நிகர்  (கற்பனை) நாணயங்களை வாங்கலாம், விற்கலாம் மற்றும் அதில் முதலீடும் செய்யலாம். ஆனால் இதற்கு சட்டப்படியான மதிப்போ அல்லது பாதுகாப்போ கிடையாது.

கிரிப்டோவில் பல்வேறு வகையான நாணயங்கள் உலா வருகின்றன. அதில் பிட்காயின், எத்ரியம் போன்றவை பிரபலமானவை. இந்த மெய்நிகர் நாணயங்களில் நடக்கும் வர்த்தகத்திற்கு 30 சதம் வரி போடப்படுகிறது.  இந்த வர்த்தகம் முழுவதும் பிளாக் செயின் எனும் பொதுத் தளத்தில் பதிவாகிறது. இந்த வர்த்தகத்திலும் பங்குச் சந்தையை போலவே ஒருவரின் இழப்பு மற்றவருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது.

இப்படியான கிரிப்டோ எனும் புதிய உலகத்தில் இந்தியாவின் இளம் வயதினர் அதிகம் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது. புதிய கிரிப்டோ பயனர்களில் பலர் 35 வயதிற்கும் உட்பட்டவர்கள். இதில் முதலீடு செய்வதில் பெரும்பாலானோர் பொறியாளர்களாகவும், எம்பிஏ பட்டதாரிகளாகவும், ஐடி துறை ஊழியர்களாகவும் உள்ளனர். 2021 ஆம் ஆண்டில் மட்டும் 30 முதல் 40 சதம் பெண்கள் புதிதாக இந்த வர்த்தகத்தில் நுழைந்துள்ளனர். முந்தைய ஆண்டில் இது 15 சதவீதமாக இருந்தது.

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் இந்தியா தான் உலகில் முதலிடம்!

2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 15 உள்நாட்டு கிரிப்டோ கரன்சி பரிமாற்ற தளங்கள் இருந்தன. 1.5 கோடிக்கும் அதிகமான பயணர்களுடன் இந்த வர்த்தகம் முழு வீச்சாக நடந்து வருகிறது. உண்மையில் 100 மில்லியனுக்கும் (10 கோடி) அதிகமான மக்கள் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாதான் உலகில் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், ரஷ்யா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பிளாக் செயின் மற்றும் கிரிப்டோ அசெட் நிறுவன கூற்றுப்படி அனுபவம் உள்ள முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கிரிப்டோவில் முதலீடு செய்கிறார்கள். இவர்கள் மட்டும் சுமார் 6 லட்சம் கோடிகள் வரை இதில் முதலீடு செய்துள்ளனர்.

இளம் வயதினரை வசீகரிக்கும் இரகசியம்!

மீடியாநாமா எனும் பகுப்பாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த நிகில் பஹ்வா, இந்திய இளைஞர்களின் மீது கிரிப்டோ ஏற்படுத்தி உள்ள திகைப்பூட்டும் விளைவுகளை பகுப்பாய்வு செய்துள்ளார். அவர், “இது எளிதில் அணுகக்கூடிய வகையில் உள்ளதால் அவர்களை வசீகரித்து ஏமாற்றுகிறது. கிரிப்டோ என்பதும் லாட்டரி சீட்டு வாங்குவது போன்றதுதான்” என்கிறார்.

இந்தியாவில் பங்குச் சந்தைக்கான டீமேட்(Demat) கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், முதலீடுகள் போதிய வேகத்தில் அதிகரிப்பதாக இல்லை. எனவே கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்டால் (அதிக வருமான வாய்ப்பு மற்றும் அதிக ஆபத்து நிறைந்ததுதான் என்றாலும்) விரைவாக பணக்காரனாகிவிடலாம் என்ற வாய்ப்புள்ளதாகக் கருதுகிறார்கள்.

தமது முதலீடு விரைவாக மூன்று மடங்கு உயர்வதைக் காணும் அவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்குவதில்லை. லேசாக கால் பதித்தவர்கள் விரைவில் அதில் முழு ஈடுபாட்டுடன் மூழ்கி விடுகிறார்கள். உதாரணமாக இரண்டு லட்சம் முதலீடு என்பது 20 லட்சமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கிரிப்டோ வர்த்தகத்தில் நிகழும் ஏற்ற இறக்கங்கள் நிச்சயமாக ஆசையைத் தூண்டி வெறிபிடிக்கச் செய்யும். ஆழமானப் புரிதல்களுடன் செயல் படாதவர்களுக்கு, அதை விரைவாக பணக்காரராக்கும் கருவியாக மட்டுமே பார்க்கும் ஆபத்து உள்ளது. எளிதில் கிடைப்பதும் அதன் மீதான வசீகரத்தை அதிகரிக்கிறது.

கு காயின் இந்தியா (Ku coin India) நிறுவனத்தில் தலைமை வகிக்கும் மேத்தா டே ராய், “மெட்ரோ அல்லாத நகரங்களில் கிரிப்டோ வர்த்தகத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஏற்றம் காணப்படுகிறது. இது மொழி அல்லது இருப்பிடம் போன்ற தடைகள் ஏதுமற்றது. சிறு நகரங்களில் வசிக்கும் இளம் வணிகர்கள் ஆங்கிலத்தில் நிபுணத்துவம் இல்லை என வருத்தப்பட வேண்டியதில்லை. கடையில் சென்று பொருள் வாங்குவதைப் போல கிரிப்டோவை வாங்குவது, விற்பது மிகவும் எளிதானது. இளைஞர்களுக்கு தொழில் செய்ய வங்கிகள் கடன் வழங்கவும் மறுக்கும் சூழலில் அவர்கள் வேறு வழிகளைத் தேடுகிறார்கள். கிரிப்டோ எளிதான ஒன்றாக அவர்களுக்கு உள்ளது” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒரு இளம் இந்தியர் இந்த வர்த்தகத்தின் சூட்சுமத்தை புரிந்து கொண்டால், நாணயத்தின் ஏற்ற, இறக்கப் போக்குகளை தீர்மானிக்கலாம். இந்த வர்த்தகத்தைத் தொடங்குவதற்கு ஒரு சிறு தொகையை முதலீடு செய்தால் போதும். இது ஒரு செயலற்ற (Passive)  வருமானமாக மாறுகிறது. கோவா மற்றும் கேரளாவில் இளைஞர்கள் வர்த்தகம் செய்ததோடு, அடுத்த கட்டமாக சிறு வலைப் பின்னலை உருவாக்கி தாங்களே இடைத்தரகர்களை தவிர்த்து பயனர்களிடையே நேரடியாக கிரிப்டோ பரிவர்த்தனையை மேற்கொண்டனர்.

இந்த வகை P2P (Peer-to- Peer) சந்தையில் பாரம்பரிய வர்த்தகப் பரிமாற்றங்களை  போலன்றி, கிரிப்டோவை தங்களுக்குள் வாங்கலாம் மற்றும் விற்கலாம். இந்த வலைப் பின்னலில் பல இளம் வர்த்தகர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். 2021 ஆம் ஆண்டில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொட்டது. பள்ளிக் குழந்தைகள் கூட இதைப்பற்றி பேசத் தொடங்கினர். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிரிப்டோ வர்த்தகத்தை மேற்கொள்ள அனுமதி இல்லை. எனினும் அத்தகைய சிறார்களும் கூட தங்களது பெற்றோரின் ஆவணங்களைப் பயன்படுத்தி இதில் ஈடுபட தொடங்கினர்” என்று விரிவாக விளக்குகிறார்.

கிரிப்டோ வர்த்தகத்தில் இளம் பெண்களின் அதிகரிப்பை சுட்டிக்காட்டும் அவர், இது கிரிப்டோ வர்த்தக சமூகத்தின் மதிப்பு மற்றும் பன்முகத்தன்மையை காட்டுவதாக நம்புகிறார். வசீர் எக்ஸ்சின் (Wazir X) 2022 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பெண் முதலீட்டார்கள் பங்கெடுப்பு 1355 %  உயர்ந்துள்ளது. ஆனாலும் மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் இது 15 சதம் மட்டுமே! இந்தப் பெண்களில் 63% பேர் 34 வயதுக்கு குறைவானவர்கள்.  பெண் முதலீட்டாளர்களில் பலர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களின் நகர்ப்புறங்களில் இருந்து தான் வருகின்றனர். இதற்கு டெல்லியும் விதிவிலக்கல்ல!

பிளாக் செயின் எனும் இந்த வர்த்தக நெறிமுறையில் குறியீட்டாளர்கள் (Coders) மாற்றத்தை செய்யும் போது புதிய பிட்காயின்கள் போன்றவை உருவாகின்றன. கிரிப்டோ எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது, வர்த்தகம் செய்யப்படுகிறது என்பதை இந்த மாற்றங்கள் தீர்மானிக்கின்றன.

வீழக் காத்திருக்கும் பெரும் சூதாட்டம்!

2022 ஆம் ஆண்டு கிரிப்டோகரன்சிகளுக்கான உலகின் மிகப்பெரிய வர்த்தக தளங்களில் FTX ஒன்றாகும்.  இது 2019 இல் நிறுவப்பட்டது, பஹாமாஸை தளமாகக் கொண்ட இந்த க்ரிப்டோ பரிமாற்ற நிறுவனம்  விண்ணைத்தொடும் உயர்வைக் கொண்டிருந்தது, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $30 பில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டது.

அந்த ஆண்டு இறுதிக்குள் எல்லாம் மாறிவிட்டது.  முதலாவதாக, FTX மற்றும் Alameda Research எனப்படும் சொத்து-வர்த்தக நிறுவனத்திற்கு இடையேயான தொடர்புகள் பற்றிய கவலைகள் வெளிப்பட்டன, இதில் வாடிக்கையாளர்களின் நிதிகள் FTX இலிருந்து அலமேடாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

சில நாட்களுக்குப் பிறகு, FTXன் போட்டி நிறுவனமான Binance (மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்றம்) FTT டோக்கன்களை விற்பனை செய்வதாக அறிவித்தது, இது அலமேடாவின் சொத்துக்களில் பெரும்பகுதியை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.

பீதியடைந்த வாடிக்கையாளர்கள் FTX இலிருந்து நிதியைத் திரும்பப் பெற விரைந்தனர், FTX நிறுவனம் அழிவின் விளிம்புக்குச் சென்றது. அதன் இணையதளத்தில் ஒரு பேனர் செய்தியுடன் “தற்போது திரும்பப் பெறுவதைச் செயல்படுத்த முடியவில்லை” என்று அறிவித்தது.

தளர்வாக ஒழுங்குபடுத்தப்பட்ட கிரிப்டோகரன்சியின் உலகில் நாம் கண்ட முதல் விரைவான சரிவு இதுவல்ல, இது கடைசியும் இல்லை. இது குறித்தெல்லாம்  மோடி‌ அரசுக்கு கவலை இல்லை.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு உரிய வேலைவாய்ப்புகளை வழங்க வக்கற்று இருக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசு, இதுபோன்ற சட்ட அங்கீகாரம் பெறாத வர்த்தகத்தை மறைமுகமாக ஊக்குவித்து, அதிலிருந்து வரி வருவாய் பெறுவதில் குறியாக உள்ளது. மக்கள் நலனை முற்றிலும் புறக்கணிக்கும் பாசிச மோடி அரசை வரும் தேர்தலில் வீழ்த்துவது‌ மட்டுமல்ல இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் விழிப்போடு இருக்க வேண்டும், ஒன்றிணைந்து போராட வேண்டும்..

  • குரு

மூலம்: https://scroll.in/article/1066757/why-are-so-many-young-indians-trading-in-cryptocurrency-especially-in-tier-two-cities

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here