விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பட்டியலின மக்கள் சாமி கும்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை தாக்கியுள்ளது சாதிவெறி கும்பல். இது நடந்து முடிந்து ஒரு மாத காலமாகியும் இதுவரை பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் சமூக நீதி சமத்துவம் பேசும் தமிழகத்தில் இன்று வரை கருவறைக்குள் பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் பூஜை செய்ய உரிமை இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டமாக்கிய பிறகும் கூட இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. அந்த அளவுக்கு பார்ப்பனியம் கோவில்களில் கோலோச்சி வருகிறது. பார்ப்பனர்களை பொறுத்தமட்டில் அவர்களை தவிர அனைவரையுமே சூத்திரர்களாக தான் பார்க்கிறது. ஆனால் ஆதிக்க சாதிவெறியர்களோ ஒருவர் இன்னொருவரை கீழானவர்களாக பார்க்கிறார்கள். இதுவே பார்ப்பனியத்திற்கு பலம் சேர்க்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியான சம்பவம் தான் தமிழகத்தில் இன்று வரை பேசுபொருளாக உள்ளது. இது குறித்து நமது தளத்திலும் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆனால் சாதிய ‘போதையில்’ பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தாக்கப்பட்ட செய்தி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேல்பாதி கோவிலுக்குள் சாதிவெறி!

வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த அயோக்கிய கும்பலை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வேங்கைவயல் பிரச்சினை அளவுக்கு ஒர்த் இல்லை என்று தமிழக மீடியாக்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் இது ஒர்த்தா இல்லையா என்பதை தாண்டி பல காலமாக  பட்டியலின மக்கள் அனுபவிக்கும், அவர்கள் மீது செலுத்தப்படும் கொடூரமான வன்முறை. இது உடலைத் தாண்டி மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதே உண்மை. இன்றும் தமிழகத்தின் பல கிராமங்களில் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் இடத்தில் இருந்து இந்த பிரச்சினையை பாருங்கள்.

இதையும் படியுங்கள்:

♦  சாதி ஒடுக்குமுறை : உங்கள் முன்னே சில கேள்விகள் !
♦  கைநீட்டிப்‌ பேசாதீங்க! திருமாவுக்கு எதிராக ஒலித்த சாதி ஆதிக்கத்தின் குரல்!

மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்த போது அதே கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த கந்தன், கதிரவன், கற்பகம் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய கோவில் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்களை தடுத்து வெளியே நின்று சாமி கும்பிடு என்று கூறிய ஆதிக்க சாதிவெறி கும்பல் அவர்களை சராமாரியாக தாக்கியுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை கண்டித்து விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் ஈடுபட்ட பட்டியலின மக்களிடம் சமாதானம் பேசிய போலீசு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று போராட்டத்தை கைவிட வைத்தது.

இதனையடுத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்த மக்கள் அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு தங்கள் பிரச்சினை கோரிக்கையாக வைத்தனர். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “குறிப்பிட்ட கோவிலானது தற்போது இந்து அறநிலையத்துறையின் கீழ் வருகிறது. இந்த கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம். தடையேதும் இல்லை. இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன். இதை சிலர் அரசியலாக்குகிறார்கள்” என்றார்.

அமைச்சர் பொன்முடி அனைவரும் கோவிலுக்குள் போகலாம் என்று கூறியதையடுத்து இதனை அரசியலாக்கிய சாதிவெறி கும்பல், பெண்களை கோவிலுக்குள் போராட வைத்து சாதி சான்றிதழ், குடும்ப அட்டை ஆதார் அட்டை, 100 நாள் வேலை அட்டை ஆகியவற்றை திருப்பி கொடுக்கும் போராட்டத்தை நடத்தியது. இதில் சில ஆண்கள் தீக்குளிக்க முயற்சித்ததாக செய்திகள் வந்தது.

இந்த பிரச்சினையில் மக்கள் தானாக போராடவில்லை என்பது அவர்களின் போராட்டத்திலேயே காணமுடிந்தது. கோவிலில் காவல்துறையும் குறிப்பிட்ட சமூக மக்களும் அமர்ந்திருக்கையில் பேசிய பாமக எம்எல்ஏ சிவக்குமார், “எல்லாம் பழைய மாதிரி மாறிவிடும் உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும், எல்லாவற்றையும் மருத்துவர் அய்யா பார்த்துக் கொள்வார்”  என்று தெரிவித்தார். இதிலிருந்தே பாமக கட்சி மேல்பாதி மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இன்னொரு கூட்டத்தில் மேல்பாதியில் பேசிய பாமகவின் வழக்கறிஞர் பாலு “ஆண்டாண்டு காலமாக இந்த திரௌபதி அம்மன் கோவிலுக்கு என்ன வழக்கம் இருக்கிறதோ அதுவே தொடரும் என்றும், உத்திரவாதத்தை மருத்துவர் அய்யா கொடுத்துட்டு வர சொன்னார். நான் பக்கத்துல இருக்கேன்னு சொல்லு, நிலைமை சரியில்லன்னா நானே அங்கே வருவேன்னு சொல்லு என்று  சொல்லி தான் என்னை அனுப்பியுள்ளார்” என்று சாதிவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

மேல்பாதி கோவிலுக்குள் சாதிவெறி!
வழக்கறிஞர் பாலு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்

மதவெறி கட்சியான பாசிச பாஜகவுடன் கூட்டணியில் தொடரும் பாமக, சாதிவெறி கட்சியாக தமிழக உழைக்கும் மக்களிடம் பிரிவினையை தூண்டும் கட்சியாக, பாஜகவின் துணைக் கட்சியாகவே உள்ளது. அதனால் தான் பாமகவில் உள்ள பலர் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

கோவில் பிரச்சினை என்றாலே முந்திக் கொண்டுவரும் இந்து முன்னணி, இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று மணிக்கொரு முறை குரைக்கும் எச் ராஜா வகையறாக்கள் கோவில் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட  ‘தலித் இந்துக்களுக்கு’ ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. அவர்களை பொறுத்தவகையில் தலித்துக்கள் இந்துக்கள் அல்ல. எப்படா தமிழ்நாட்டுல  கலவரம் பண்ணலாம் என காத்துக் கொண்டிருக்கும் அண்ணாமலைக் கூட இதில் வாய்திறக்கவே இல்லை. காரணம் இவர்கள் அனைவரும் மனுதர்மம் என்ற  ஒற்றை புள்ளியில் இணைகிறார்கள்.

மேல்பாதி மக்களே சாதி வெறி, மதவெறியர்கள் உங்களை கேடாக பயன்படுத்துகிறார்கள் என்பதை உணருங்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் அனைத்து மக்களும் செல்ல உரிமை உண்டு. இங்கு யாரும் தாழ்ந்தவருமல்ல, உயர்ந்தவருமல்ல. கேடுகெட்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளின் சாதிவெறிக்கு பலியாகாதீர்கள்..

படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை, அன்றாடம் விலைவாசி உயர்வு, விளைவித்த பொருளுக்கு விவசாயிகளுக்கு சரியான விலையில்லை, இன்னொரு புறம் முதலாளிகளின் சொத்துகள் பன்மடங்கு உயர்ந்துக் கொண்டே போகிறது. இந்த பிரச்சினைகள் அனைத்திலும் ‘தாழ்த்தப்பட்ட மக்களோ, மேல் சாதியினரோ’ உழைக்கும் மக்கள் அனைவருமே பாதிக்கப்படுகிறோம். இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டாமா?

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here