ருவறைத் தீண்டாமைக்கெதிராக 1970-ல் தந்தைப் பெரியாரால் துவக்கி வைக்கப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம், 2022 -ல் தமிழக முதல்வர் ஸ்டாலினால் அர்ச்சகர் நியமன ஆணை வழங்கப்பட்டதன் மூலமாக ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, ஆகமக்கோவில்களிலும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் பதவியேற்றது வரையிலான சமத்துவத்துக்கான போராட்டத்தின் முன்னேற்றங்கள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்துள்ளது..

பெரியாரின் நெஞ்சில் உறுத்திக்கொண்டிருந்த முள்ளை அகற்றிவிட்டோமென மகிழ்ந்த நிலையில் இந்தத்தீர்ப்பும், அர்ச்சகர் பணி நியமன ரத்து உத்தரவும், அவரது நெஞ்சில் மட்டுமின்றி பார்ப்பனரல்லாத அனைத்து சாதி மக்களின் நெஞ்சிலும் ஈட்டியாக செருகப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடுத்த வயலூர் முருகன் கோவில் அர்ச்சகர்களின் வாரிசுகள், பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்றுதான் கோரினார்கள். ஆனால், தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனோ இன்னொரு படி மேலே போய், பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்ததுடன் வழக்குத் தொடுத்த அந்த பார்ப்பன வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கருவறைத்தீண்டாமையை உயர்த்திப்பிடித்துள்ளார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

இது ‘ சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம்’ என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை இருந்தால், அவை சட்ட ரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்று ஆதித்யன் Vs கேரள அரசு (2002) என்கிற கேரள உயர்நீதின்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.

2006ஆம் ஆண்டில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்காக தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கும், அதன் அடிப்படையில் 2022 -ல் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் 4 பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜாதியைச் சேர்ந்த இந்துக்கள் 28 பேரை நியமனம் செய்த தமிழக அரசின் உத்தரவுக்கும் எதிரானது.

பார்ப்பன  சாதி உட்பிரிவுகளான ஆதிசைவர், சிவாச்சாரியார்கள், குருக்கள் மட்டுமே, காமிக ஆகம முறையிலான  திருச்சி வயலூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக முடியும், மற்ற இந்துக்கள் அர்ச்சகராக முடியாது,  என்பதேஇத்தீர்ப்பின் சாரம்.            இத்தீர்ப்பு,  உச்சநீதி மன்ற த்தின் சேசம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள், ஆதித்யன்,நாரயண தீட்சிதலு, காசிவிசுவநாதர், சபரிமலை ஆகிய தீர்ப்புகளுக்கு எதிரானது.

பார்ப்பன மனுதாரர்கள் கவுசிக முனிவர் வழிவந்த ஆதிசைவர்கள் என்ற மத உட்பிரிவினர்  என்று வெறுமனே வாய்வழியாகக் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வயலூர் முருகன் கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் இருவரும் தாங்கள் சைவ மரபை பின்பற்றும், ஆதிசைவ மத உட்பிரிவினர் என்று மிகத் தெளிவாக பதில் மனுத்தாக்கல் செய்துள்ளபோது, அது குறித்து ஆதாரம் கேட்கிறார். பார்ப்பன மனுதார்ர்கள் கூறுவது போல இதுவும் நம்பிக்கைதான் என்று கூறியவுடன் அந்த அர்ச்சகர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் வாஞ்சிநாதனை வெளிப்படையாகவே மிரட்டுகிறார். வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி நிர்ப்பந்திக்கிறார்.

ஒரு தரப்பினரின் வாதத்தை நீதிபதி  ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்; அவர்களின் முக்கிய வாதத்தைக் குறிப்பிட்டு, அதனை ஏற்கவியலாமைக்கான காரணத்தையும் தீர்ப்பு தெரிவிக்க வேண்டும். நீதிபரிபாலனத்தின் அடிப்படையான இந்த நெறியை இத்தீர்ப்பு மீறியிருக்கிறது.

இவை தவிர மிக முக்கியமாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு W.P.NO.17802/2021 வழக்கின் தீர்ப்பில், ஆகமக் கோயில்கள் எவை என்பதை முடிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி திரு.சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைத்து, இன்னும் முடிவு வராத நிலையில், வயலூர் முருகன் கோயில் ஆகமக் கோயில்தான் என்று முடிவுக்கு வந்துள்ளது நீதி பரிபாலன முறைக்கு எதிரானது.

உச்சநீதிமன்றத்தின் 2015-ஆம் ஆண்டு ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கின் தீர்ப்பு – ஆகமங்கள் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முரணாக  இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது; பிறப்பு, சாதி ஆகியவற்றின் அடிப்படையில் எவரும் அர்ச்சகர் உரிமை கோரமுடியாது என்று மிகத்தெளிவாக கூறி இருக்கும்போது, திருச்சி வயலூரில் உள்ள 5 பிராமண குடும்பங்கள் மட்டும், பிறப்பு, சாதி அடிப்படையில் அர்ச்சகர் உரிமை கோருவதை நீதிபதி ஏற்றுக் கொண்டதும் நீதி பரிபாலன முறைக்கு எதிரானது.

இதையும் படியுங்கள்:

♦ திருச்சி குமார வயலூர் முருகன் கோயில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் ரத்து!

♦ ஆபத்தில் அர்ச்சகர் நியமனம்!

கோயில் கருவறையில் குறிப்பிட்ட மத உட்பிரிவை ( denomination) சேர்ந்த அர்ச்சகர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியுமா? மற்ற இந்துக்கள் தொட்டால் தீட்டாகி விடுமா? என்ற கேள்விக்கு A.S.Narayana Deekshitulu – Vs – State Of A.P (1996) 9 SCC 548 – வழக்கு தீர்ப்பில், பரம்பரை உரிமையை ஒழிப்பது என்பது மத உரிமை தொடர்பான விதி 25(1) க்கு எதிராக தலையிடுவதாகும். எனவே, அர்ச்சகராகப் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட சாதி உட்பிரிவைச் சார்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல, ஆகம விதிகளில் நம்பிக்கையும் பக்தியும் உள்ளவராகவும், அந்த குறிப்பிட்ட ஆகமங்களில் உள்ள மதம், பழக்கவழக்கங்கள், பாவனைகள் அல்லது சம்பிரதாயங்களின் மீதான நம்பிக்கை மற்றும் சடங்குகளைச் செய்வதில் தேர்ச்சி ஆகியவை முன் நிபந்தனைகளாகும்.

அந்த முன்நிபந்தனைகளை நிறைவேற்றும் ஒருவர், அர்ச்சக அலுவலகத்திலோ அல்லது அதுபோன்ற பிற அலுவலகங்களிலோ பரிசீலிக்கப்பட்டு நியமிக்கப்பட தகுதியுடையவர். எனவே, அர்ச்சகர் நியமனம் என்ற மதச்சார்பற்ற செயல்பாடு யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தாது. சட்டப்பூர்வ ஒழுங்கு முறை அமலுக்கு வந்த குடியரசு முறைக்குப் பிறகு சம்மந்தப்பட்ட உட்சாதியினர் உட்பட அனைத்து தகுதியான நபர்களும் பரிசீலிக்கப்பட்டு அர்ச்சகராக நியமிக்கப்படலாம். என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது.

மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் மிகத் தெளிவான வாதங்களாக பார்ப்பனர் அல்லாத இந்து அர்ச்சகர்கள் சார்பில் பதில் மனுவாகவும், நேரடி வாதங்களாகவும் முன்வைக்கப்பட்டது. இந்த வாதங்கள் எதையும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. விவாதிக்கவுமில்லை. மேற்கண்ட வாதங்களும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றாவது சொல்ல வேண்டிய நீதிபதி, இந்நிலையில் இருந்து தவறியது அரசியல் சட்ட மாண்பிலிருந்து தவறியதாகவே அமைகிறது. இது பார்ப்பனர் அல்லாத இந்து அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

பார்ப்பனர் அல்லாத மற்ற இந்து சாதியினர் மீது பிறப்பின் அடிப்படையில், தகுதியின்மையை (disability based on birth) இத்தீர்ப்பு சுமத்துகிறது. பணி உத்தரவு ரத்து செய்யப்பட்ட பார்ப்பனர் அல்லாத  சைவ இந்து அர்ச்சகர்கள், ஆகமம், வேதம், மந்திரங்கள் கற்று தீட்சை பெற்று, முறையாக சான்றிதழ் பெற்று நேர்முகத் தேர்வில் தேர்ச்சியும் பெற்று, சரியாக பூஜை செய்து மக்கள் அங்கீகாரம் பெற்றவர்கள்தான். அவர்களின் பணிநியமனம் இன்று ரத்தாக நீதிமன்றம் சொன்ன ஒரே காரணம்  அவர்கள் பிறப்பும், சாதியும்தான்.

புனிதம் – தீட்டு என்று ஒருவர் எந்த வகையில் ஒதுக்கப்பட்டாலும் அது தீண்டாமைதான் என்று அறிவித்து பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று அறிவித்த தீர்ப்பை ஒப்பிடும் போது இந்த தீர்ப்பு படு பிற்போக்கானது. 1970 முதல் இன்று வரை நடத்தப்பட்ட நீதிமன்ற பலன்கள் அனைத்தையும் குழி தோண்டிப்புதைப்பதாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், பொதுக்கோயிலில் கருவறை தீண்டாமை மீண்டும் ஆழமாய் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆகமம், வேதம், மந்திரங்கள் கற்று , முறையாக தேர்வான அர்ச்சகர்களின் பணி உரிமை, பிறப்பின் அடிப்படையில் பறிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் விழுமியங்களாகவும் (constitutional morality) அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறாகவும் கூறப்படும் (basic structure)  சமத்துவ கோட்பாட்டை மீறுகிறது.

சமூகத்தில் சமத்துவம் மற்றும் பார்ப்பனியத்துக்கெதிரான போராட்டம் ஓங்கியிருந்தகாலத்தில் நீதிமன்றங்களு ம் ஒரளவு மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து நீதிமன்றத்திலும் ஓரளவு நியாயமான தீர்ப்புகள்ன – பாசிச சக்திகள் மே கிடைத்தது. தற்போது பார்ப்பலோங்கிய  சூழலில், சமத்துவத்துக்கெதிரானதீர்ப்பு வந்துள்ளதை அனுபவமாகக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்கேற்ப சமூகத்தில் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் நீதிமன்றத்திலிருந்து நியாயமான தீர்ப்பை எதிர் பார்க்க முடியாது.

  • அன்பழகன்

புதிய ஜனநாயகம் மே – 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here