“கைநீட்டிப்‌ பேசாதீங்க” – திருமாவுக்கு எதிராக ஒலித்த சாதி ஆதிக்கத்தின் குரல்!

0

கை நீட்டி பேசாதீங்க’ என்ற அந்த குரலில் மிக நேரடியாக ஒலிப்பது சாதிய வன்மம் தவிர வேறில்லை. சீமானிடமும் அண்ணாமலையிடமும் குழைகிறது; திருமாவளவனிடம் உயர்கிறது என்றால் அதை வேறு எப்படி அழைப்பது? அந்தக் குரல் சக பத்திரிக்கையாளர்களால் அங்கேயே கண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், சில ஆதரவு முணுமுணுப்புகளைதான் கேட்க முடிந்தது.

இந்த ஆதிக்க தொனியை வேறு எந்த அரசியல் தலைவரிடமும் இவர்கள் பின்பற்ற முடியுமா? அந்த எண்ணம்தான் வருமா? டாக்டர் ராமதாஸ் பிரஸ் மீட்டில் ஏறக்குறைய அனைவரையுமே ஒருமையில்தான் அழைப்பார். அங்கெல்லாம் முணுமுணுப்பேனும் வந்ததுண்டா? நெருக்கிப் பிடித்துக் கேட்கும் எல்லோரையும் ஆண்டி இண்டியன் என்று சொல்லும் ஹெச்.ராஜாவிடம் இந்த குரல் உயருமா? ‘அப்படிதான் பேசுவேன்’ என்று சொன்ன பிரேமலதாவிடம் இவர்கள் பம்மிய கதை தெரியாதா?

திருமாவளவனிடம் மட்டும் உயர்ந்து ஒலிக்கும் இந்த குரலுக்கான அதிகாரம், அவர்கள் வைத்திருக்கும் பத்திரிகையாளர் அடையாள அட்டையில் இருந்து வரவில்லை. அவர்களின் மண்டைக்குள் குடிகொண்டிருக்கும் சனாதன எண்ணத்தில் இருந்து பிறக்கிறது. ஏன், வேங்கைவயல் பிரச்னைக்கு திருமாவிடம் மட்டும்தான் வீராவேசமாக கேட்பீர்களா? தலித் பிரச்னைக்கு இவர்தான் பொறுப்பேற்க வேண்டுமா? போய் பழனிச்சாமியிடம் இதே Tone-ல் கேட்கலாமே… எந்தவித போராட்டமும் நடத்தாத இதர கட்சித் தலைவர்களிடம் கேட்கலாமே… இங்கு அவரிடம் வேங்கைவயல் குறித்து கேட்டது பிரச்னை இல்லை. மாறாக, அவரை இவர்கள் கையாண்ட விதம், அநாகரிகமானது. வஞ்சம் நிறைந்தது. சாதிக்காழ்ப்பை உள்ளடக்கியது.


இதையும் படியுங்கள்: மனிதன் வாயில் மலத்தை திணிப்பதும், குடிநீரில் மலத்தை கலப்பதும் தீண்டாமை வன்கொடுமையின் உச்ச கட்டங்கள்!

 

‘கையை நீட்டி பேசாதீங்க’ என்ற வார்த்தையை கேட்ட அந்த நொடியில் திருமா அவர்களின் முக உணர்வுகளை பார்த்தேன். அதில் ஈராயிரம் ஆண்டு ரேகைகள் ஓடி அலைந்தன.

கலைஞரிடம் ஒருமுறை உங்களை வாழ்நாள் எல்லாம் துரத்தியது எது என்று கேட்டபோது சாதி என்று சொன்னார். ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர் என்ற போதிலும் அவரை சாதி இடைவிடாமல் துரத்திக் கொண்டுதான் இருந்தது. திருமா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

  • பாரதி தம்பி

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here