ள்ளச்சாராயம் குடித்ததால் தமிழகத்தில் இதுவரை22 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 17 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேரும் என மொத்தமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள, எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதில் மேலும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  தொடர்ந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து விழுப்புரம் மருத்துவமனைக்கு பார்வையிட வந்த முதல்வர் முக.ஸ்டாலினிடம் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோபமடைந்த மக்கள் போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் சாராய வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து ECR சாலையிலும் போராட்டம் செய்துள்ளனர்.

கள்ளசாராயத்தால் உயிர்பலி அதிகரிக்க காரணம் என மக்கள் கூறுவது என்னவென்றால்; சாராய வியாபாரிகளுக்குள் உள்ள போட்டியில் விலையை குறைத்து விற்பனை செய்கின்றனர். இரண்டு மூட்டை வாங்கினால் ஒன்று இலவசம் என்று விற்பனை செய்துள்ளார்கள்.சுவைக்காகவும், போதைக்காகவும் மெத்தனால் அதிகம் கலப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் “ஒருவர் 5-லிருந்து 10-மில்லி மெத்தனால் குடித்தால் பார்வை பறிபோய்விடும். 50 மில்லி எத்தனால் குடித்தால் உயிரே போய்விடும். ஒருவேளை உயிரை காப்பாற்றினால் கூட கண்பார்வை போவது உறுதி” என்கிறார் தந்தி டிவியில் பேட்டியளித்த மருத்துவர் ரவி.

கடந்த 2003-ஆம் ஆண்டு, ‘தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937’ இல் ஒரு திருத்தத்தை செய்ததன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக உரிமையை அளித்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் செய்யப்பட்ட இம்மாற்றம் நவம்பர்  29, 2003 இல் அமலுக்கு வந்தது.

 

தொடக்கத்தில் அன்று எதிர்கட்சியாக இருந்த திமுக இதை எதிர்த்தாலும், 2006 ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ஏகபோக மது விற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய் கிட்டியதால் இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்து செயல்படுத்தியது.

டாஸ்மாக் நிறுவனத்தை அதாவது சாராயத்தை அரசே விற்க சொன்ன காரணம், கள்ளச்சாராயம் பெருகி விடும் என்பதால் தமிழ்நாடு வாணிபக் கழகம்(Tasmac) மூலம் சாராயம் விற்று வந்தது. ஆனால் கள்ளசாராயம் விற்பனை நின்று விட்டதா? என்றால், இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அரசுக்கும் தெரியும்.

டாஸ்மாக் ஆரம்பித்த பிறகு கள்ளச்சாராய விற்பனை ஓரளவு தடைப்பட்டது உண்மை தான். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தடுக்கப்படவில்லை, மாறாக டாஸ்மாக்கின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் என்பதே உண்மை!

அன்று முதல் இன்று வரை பல கிராமங்களில் ஊறல் போட்டு சாராயம் விற்பனை நடந்து வருகிறது. அல்லது ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி பல இடங்களுக்கு அனுப்புவது நடந்து கொண்டு தான் இருந்தது. அந்தந்த பகுதிகளில் யார்யார் சாராயம் விற்பார்கள் என்று காவல்துறைக்கு நன்றாகவே தெரியும். அரசு அழுத்தமோ அல்லது மக்கள் போராடும் பொழுதோ சம்பந்தப்பட்ட நபர்களை சம்பிரதாயத்திற்கு கைது செய்வார்கள். ஆனாலும் அந்த பகுதியில் சாராயம் விற்பனை நடந்துக் கொண்டு தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்:

இப்பொழுது கூட காவல்துறை தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடத்திய தீவிர சாராய வேட்டையில் 1,842 வழக்குகள், 1,558 பேர் கைது, 19,028 லிட்டர் சாராயம் பறிமுதல் என்று சாராய வியாபாரிகளிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு கள்ளச்சாரயத்தை அனுமதித்தவர்கள் மிகப்பெரிய நாடகத்தை நடத்தியுள்ளார்கள். ஒருவேளை கள்ளச்சாரய மரணம் நிகழவில்லை என்றால் இந்த கைதுகளும் நடந்திருக்காது. கள்ளச்சாராயம் விற்பனையும் ஜோராக நடந்து கொண்டிருந்திருக்கும்.

‘மூட்டை’ என்று குடிகாரர்களால் அழைக்கப்படும் சாராயம் 25-லிருந்து 60 வரை விற்பனையாகிறது. ‘நல்ல’ சாராயம் விலையை விட மலிவாக கிடைக்கிறது. அன்றாடம் உழைக்கும் கூலித் தொழிலாளர்கள் இதனையே கிராமப்புறங்களில் வாங்கிக் குடிக்கிறார்கள். இத்தனை நாள் அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் தெரிந்தே தான் நடக்கிறது. இன்று வீதிக்கு வந்துள்ளது. சாராயம் மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளும் தாராளமாக தமிழகத்தில் புழங்குகிறது.

‘கள்ளச்சாராயம் மட்டுமல்ல ‘நல்ல சாராயமும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே! இரண்டும் அரசின் அனுமதியோடு ஒன்று மறைமுகமாகவும், மற்றொன்று வெளிப்படையாகவும் விற்கப்படுகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மட்டுமல்ல தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், மரணத்திற்கும் பொறுப்பு அரசு தான். இழப்பீடுகள் இறந்த குடும்பங்களுக்கு தற்காலிக தீர்வை கொடுக்கலாம். ஆனால் வருங்கால சமுதாயத்தை காப்பாற்ற மதுவிலக்கே நிரந்தர தீர்வாகமுடியும். அது இந்த அரசு கட்டமைப்பில் சாத்தியமா? என்பது கேள்விக் குறியே!

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here