தொடர்ச்சி…. 

அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அரிசி, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 35% வரை அதிகரித்துள்ள நிலையில் குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏழை எளிய மக்கள் கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெளிநாடு சுற்றுப்பயணம் இடைத் தேர்தல் பிரச்சாரம் என இருக்கிறார் முதல்வர் விஜய்.

பதவியேற்கும் போதே ‘என்னை தவிர எந்த பவர் செண்டரும் இங்கே கிடையாது’ என கூறினார் விஜய். ஆனால், ஜான் ஆரோக்கியசாமி ஒரு பவர் செண்டர், விஷ்ணு ரெட்டி ஒரு பவர் செண்டர், ஜெகதீஷ் ஒரு பவர் செண்டர் என நீள்கிறது பட்டியல். இன்னும் வெளியில் தெரியாமல் நிழலில் சிலர் என நிறைய பவர் செண்டர்கள் இந்த ஆட்சியிலும் உருவாகியிருக்கிறார்கள்.

படிக்க: பாசிசக் கோமாளி விஜய்யின் 100 நாள் ஆட்சி: தமிழ்நாட்டை பின்னுக்கு கொண்டு செல்லும் ஆட்சி | பகுதி 1

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் காவல்துறை உள்ளிட்ட உள்துறையை தனது கையில் வைத்திருந்தாலும், அதிகரித்து வரும் லாக்கப் மரணங்கள் குறித்து தனது ஆசனவாய் உள்ளிட்ட அனைத்து வாய்களையும் (நவ துவாரங்கள்) மூடியே இருக்கிறார் பாசிச கோமாளி.

மொத்தத்தில், தேர்தல் நேரத்தில் தரப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறை படுத்துகிறேன் என்ற பெயரில் மக்களால் அனுபவிக்க முடியாத வகையில் கட்டுப்பாடுகளுடன் அறிவிப்பு செய்து, வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என ரூட் மீடியா மூலம் தம்பட்டம் அடித்துத் கொள்வது; தனது ஒவ்வொரு திட்டத்திலும் அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார் பாசிச கோமாளி‌ விஜய்.

பாஜக வழியில் தவெக!

Catch them young என்பதை இந்திய அரசியலில் அழுத்தமாக முன்னெடுப்பது ஆர்எஸ்எஸ்சின் செயல்திட்டம். அதனைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக யோகா, ஷாகா என்று பல்வேறு வடிவங்களில் அது முன்னெடுத்து மாணவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடித்து காவி பாசிச சிந்தனையை வளர்த்து வருகிறது. குறிப்பாக, பிஎம்.ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் விக்‌ஷித் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை பற்றி போட்டிகள் வைக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது பாசிச பாஜக அரசு. இது மாணவர்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ்- பாஜக கொள்கைகளை பதிய வைத்து காவி பாசிச அரசியலை புகுத்தும் முயற்சியை செய்து வருகிறது.

அதே பாணியில் தான் விஜய் அரசு, பள்ளியில் விஜய் பிறந்தநாள் விழா; பள்ளியில் விஜய் பாட்டுக்கு குத்தாட்டம்; பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு என்று பள்ளி வளாகங்களை விஜய் ரசிகர் மன்றங்களாக மாற்றி மாணவர்களை அரசியலற்ற அரசியலுக்கு கொண்டு சென்று பாசிச சக்திகளின் அடியாள் படையாக மாற்ற முயற்சிக்கிறது.

அதிலும், மாணவர்கள் அரசியல் கற்றுக்கொள்ள கூடாது என்ற நோக்கத்தில் இடதுசாரிகளும் சி.ஜே.பி-யும் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க சுற்றறிக்கை அனுப்பியது. மாணவர் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியவுடன் தனக்கு எதுவும் தெரியாதது போன்ற பிம்பத்தை உருவாக்கி அதிகாரிகள் மீது பழி போட்டு சுற்றறிக்கையை திரும்ப பெற்றுக் கொண்டது.

பாசிச பாஜகவிற்கு நேர் எதிர் சித்தாந்தம் கம்யூனிசம் மட்டுமே. கம்யூனிஸ்ட்களை ஒழிப்பதே அதனின் முதன்மை வேலையாக செய்து வருகிறது. இதே பாணியில் உறவாடி கெடுக்கும் வகையில் குஜிலியம்பாறையில் சி.பி.ஐ.–சி.பி.எம். செயல்பாடுகளைக் கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பியது தவெக அரசு.

படிக்க: இந்திய நாட்டைக் கெடுக்கும் பாஜகவும் தமிழ்நாட்டைக் கெடுக்கும் தவெகவும்!

பார்ப்பன இந்து மதத்தை முன்வைத்து இந்து ராஷ்டிரம் அமைக்க செயல்பட்டு வரும் பாசிச பாஜக, ராமர் கோயில் கட்டுவது முதல் ராம யாத்திரை நடத்துவது வரை செயல்பட்டு வருவது நாடறிந்த உண்மை. பாஜக வழியில் செயல்படும் தவெக‌ அரசும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பில் ராம யாத்திரை என்ற பெயரில் அரசு விழா நடத்தி 1000 -க்கும் மேற்பட்டோருக்கு காவி உடையில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் வேடமணிந்து பார்ப்பன இந்து மதத்தை பரப்பும் வேலையை அரசு விழாவாக நடத்தியுள்ளது.

காவிரி பிரச்சனையை திசை திருப்ப ஒன்றிய அரசு முன்வைக்கும் சூழலியலுக்கு ஆபத்தான கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்து தான் பாஜகவின் B- டீம்‌ என்பதை பறைசாற்றிவிட்டார்.

ஊழலை- லஞ்சத்தை ஒழிப்பேன்; ஊழலற்ற ஆட்சியை தருவேன் என சவடால் அடித்த பாசிச பாஜக அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில் ஊழலில் ஊறி திளைத்து வருவது அம்பலப்பட்டு நிற்கிறது. அதே பாணியில் ஊழலை ஒழிப்பேன் என கூறி ஆட்சிக்கு வந்த விஜயின் தவெக அரசும், பழனி நில மோசடி விவகாரம்; டாஸ்மாக் லாரி டெண்டர் தொடர்பாக அருப்புக்கோட்டையில் அமைச்சர் பெயரைக் கூறி, ரூ.25 லட்சம் வசூலித்த தவெக நகர செயலாளர்கள் கைது; ஓணான்கரடு பகுதியில் உள்ள தொல்லியல் நிலத்தை “எதற்கும் பயன்படாத நிலம்” எனப் பொய்ச் சான்றளித்து, ஆந்திராவின் விஜயலட்சுமி நிறுவனத்திற்கு கல்குவாரி உரிமம் வழங்கியது என ஊழல் பட்டியல் நீள்கிறது.

படிக்க: விருதுநகர் – கல்குவாரி வெடி விபத்தல்ல ! முதலாளிகளின் லாபவெறிக்காக நிகழ்ந்த பச்சைப் படுகொலை!

இந்து அறநிலையத்துறை சொத்துக்களை கோயிலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் -இந்து முன்னணி முன்வைக்கின்ற கருத்துகளை தனது ஆட்சியின் முடிவாக அறிவித்துள்ளது. கிராமப் புற ஊரக வேலை வாய்ப்பான 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி மாநில அரசும் 40 சதவிகித நிதியை போட்டு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய பாஜக அரசின் உத்தரவை ஏற்று அமைதியாக அமல்படுத்தி பாஜகவின் வழியில் செயல்படும் அடிமை ஆட்சி என்பதை நிருபித்து விட்டது.

பாசிச கோமாளி விஜய் ஆட்சி: தமிழ் நாட்டை பின்னுக்கு கொண்டு செல்லும் ஆட்சி!

மாற்று அரசியல்; ஊழலற்ற ஆட்சி தருவார்; மக்களின் தலைவர்; கும்பலை ஈர்ப்பவர் (Crowd Pullers) – கவர்ச்சி நிறை தலைவர்கள் (Charismatic Leaders); விஜய் மாமா: எங்க அண்ணன் என்று பாசிச கோமாளி விஜய்க்கும், தவெக கட்சிக்கும் ரூட் மீடியா மூலம் சமூக ஊடகங்களில் பிரம்மாண்ட பிம்பம் கட்டமைக்கப்பட்டு‌ இன்று வரை தொடர்கிறது. ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் அங்கீகாரத்துடனே இவையெல்லாம் நடக்கிறது. அதாவது, திமுக-வை ஒழித்துக் கட்டுவதற்கான ஆளும் வர்க்கத்தின் பகடைக்காய்தான் பாசிச கோமாளி விஜய் என்பதைத் தாண்டி வேறு ஒன்றும் கிடையாது. இதனைக் கூறியவுடன் திமுகவிற்கு வக்காலத்து வாங்குகிறோம் என  ‘அரசியல் அறிவுஜீவிகள்’, ‘ஞான பண்டிதர்கள்’ கிளம்பலாம். இங்கே திமுக என்று சுருக்கி பார்க்காமல் தமிழ்நாட்டில் சமூக நீதி என்பதை அரைகுறையாக கடைபிடித்து வரும் கட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என்பதே பாசிச பாஜக உள்ளிட்ட ஆளும் வர்க்கங்களின் திட்டம். இதற்கு முழு மூச்சாக பயன்படுத்தப்படுகிறது தவெக என்பதே உண்மை.

தவெக அரசும் சமூக நீதியை கடைப்பிடிக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ‘சமூக நீதித் துறை’ என்று பெயர் மாற்றி உள்ளனர். அதிக அளவில் தலித்துகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது. இதனைவிட வேறு என்ன வேண்டும் என சிலர் கம்பு சுற்றலாம். ஒரு துறையின் அல்லது திட்டத்தின் பெயரை மாற்றினாலே அதன் உள்ளடக்கமும் மாறிவிடும் என நினைப்பது முட்டாள்தனமாகும். அதாவது, சமூக நீதி (Social Justice) என்பது சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இனம், சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவித வேறுபாடுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஆட்சி அதிகாரங்களில் சமமான வாய்ப்புகளையும் நியாயத்தையும் வழங்குவதைக் குறிப்பதாகும். இதனை செய்யாமல் ஒரு துறையின் பெயரை மாற்றிவிடுவது, தலித் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருவது என செய்வதாலே சமூக நீதி கிடைத்து விட்டதாக கூறுவது அபத்தமான வாதமாகும்.

தமிழகத்தை ஏற்கனவே எம்.ஜி.ஆர் எனும் பாசிச கோமாளி ஆட்சி செய்தார். தற்போது கார்ப்பரேட் காவி பாசிச சூழலுக்கு ஏற்ப மற்றொரு பாசிச கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். தமிழ்நாட்டை பீடித்திருக்கும் அவலம் இது. இருக்கின்ற கட்சிகளின் மீது மக்களுக்குள்ள வெறுப்பின் காரணமாக, உருவாகின்ற அரசியல் வெற்றிடத்தை இட்டு நிரப்புவதற்கு ஆளும் வர்க்கங்கள் இந்த பாசிச கோமாளிகளை பயன்படுத்திக் கொள்கின்றன என்பதுதான் உண்மை. இதன் விளைவே மேற்கண்ட மக்கள் விரோத செயல்கள் எல்லாம் நடைபெறுகின்றன.

படிக்க: தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்

ஆகவே, தவெகவை மற்றொரு பிழைப்புவாத கட்சி என சுருக்கி பார்க்க முடியாது. கொள்கை, மக்கள் நலம் என்று தொடங்கி, பின்னர் சட்டமன்ற- நாடாளுமன்ற அரசியலில் ஊறி, மெல்ல மெல்லப் பிழைப்புவாதக் கட்சிகளாக சீரழிந்த வேறெந்தக் கட்சியோடும் தவெக கட்சியை ஒப்பிட முடியாது. இது கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு பாதையமைக்க, ஆளும் வர்க்கங்களால் ஊட்டி வளர்க்கப்படும் கட்சி.

இந்த பாசிச கோமாளி கட்சி தங்களது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடி மறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக, படித்து வேலை தேடும் இளைஞர்கள் முதல் உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகள் வரை‌ அனைவரின் அன்றாடத் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர். தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் பாசிச கோமாளிகள் உருவாக்கும் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி தம்மை அறியாமலேயே கார்ப்பரேட் காவி பாசிச அரசியலை ஆதரிக்கிறார்கள்.

படிக்க: 13 லட்சம் கோடி கடன்: இப்போது ஏன் ஒப்பாரி வைக்குது தவெக அரசு!

உதாரணமாக 17-வது சட்டமன்றத்திற்கான தேர்தலின் போது மற்ற எல்லா தலைவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான இடங்களிலும் குறைவான நேரம் (அதிகபட்சம் 30 நிமிடம்) மட்டுமே பேசிய பாசிச கோமாளி விஜய் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் டீ சாப்பிட்டார், முருங்கைக்காய் பறித்தார், மாட்டு வண்டி ஓட்டினார், என தான் மக்களுடன் நெருங்கி வந்துவிட்டதான தோற்றத்தை உருவாக்கி வெற்றியும் பெற்றுள்ளார். இதெல்லாம் எளிமை என நம்புவதைவிட கவர்ச்சிவாதத்திற்கு பலியாகி சுயமரியாதையும், கவுரவமும் இழந்து, தாங்கள் அறியாமலேயே அரசியலற்ற அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள்.

சுருக்கமாக சொன்னால், பார்ப்பன பாசிச கும்பலுக்கு தமிழ்நாட்டு மீது உள்ள வெறுப்பால், தமிழக மக்களை சுயமரியாதையற்ற கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு. இது தமிழ்நாட்டை பிற்போக்கை நோக்கி கொண்டு செல்லும். தமிழக மக்கள் எதிர்கொண்டிருப்பது இதுவரை கண்டிராத சிக்கலானதொரு சூழல்.

இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பது மட்டுமே தற்போதைய தேவை. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்யப் போவதில்லை. அவைகளின் வர்க்க சார்பு காரணமாக செய்யவும் முடியாது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட புரட்சிகர ஜனநாயக சக்திகள் மட்டுமே செய்யும். கார்ப்பரேட் காவி பாசிசத்தை முன் தள்ளும் பாசிச கோமாளி விஜய் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகள் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். வேறு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

  • தயாளன்.

புதிய ஜனநாயகம்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)

2026 அக்டோபர் இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here