பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பற்றி சில வார்த்தைகளில் ஆசான் லெனின் குறிப்பிட்ட ”பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்” என்ற மிகச் சரியான கூற்று குறித்து பலமுறை இதே தளத்தில் எழுதி இருக்கிறோம்.
ஆனாலும் தற்போதைய ஒன்றிய (ஆர்எஸ்எஸ் – இந்துத்துவ கைப்பாவையான) பாஜக-வும், அது பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தையான தமிழக தவெக-வும் மோசடி போலி தேர்தல் மூலம் பெற்ற வெற்றிக் களிப்பில் அவர்கள் ஆடுகின்ற ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.
01-09-2026 ஆங்கில இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் வந்துள்ள இரண்டாவது பெரிய செய்தி யாதெனில், ‘Over 6 crore names deleted so far in third phase of SIR’ என்பதாகும். அதாவது 3-வது பேஸ் எஸ் ஐ ஆர் கணக்கெடுப்பிற்கு உட்பட்ட 16 மாநிலங்களில் தற்போதைய நிலவரப்படி மட்டுமே ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து 6 கோடி பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது 36.08 கோடி வாக்காளர்களில் 6.15 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இதுவரை மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இப்பணி முடியும் தருவாயில் எத்தனை கோடி அல்லது எத்தனை லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட போகிறார்கள் என்பது மோடி அமித்ஷா கும்பலை ‘குருசேத்திரமாக’க் கொண்ட – அந்த ‘ஆண்டவர்’ ஞானேஷ் குமாருக்கே வெளிச்சம்! இது தொடர்பாக கர்நாடகா, ஆந்திரா முதலமைச்சர்கள் தத்தம் பலமான எதிர்ப்புக் குரலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எழுப்பி உள்ளனர்.
எத்தனை முறை ராகுல் அம்பலப்படுத்தினார்? வாக்கு திருட்டு என்பது இது முதல் முறை அல்லவே! தீர்வு என்ன?
ஆரம்பத்தில் கர்நாடக மாநிலம் மகாதேவ்புரா என்ற ஒரே சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திடீரென சேர்க்கப்பட்டதும் ஒரே வீட்டில் 80 பேர், 50 பேர் என குடியிருப்பதான போலி முகவரிகள் பதியப்பட்டதும், கனவில் கூட கேள்விப்படாத வினோதமான பெயர்கள் பதியப் பெற்றிருந்ததும், இதன் மூலம் கள்ள வாக்குகள் மூலம் பாஜக பெங்களூரு மத்திய தொகுதியில் வெல்வதற்கான சாத்தியப் பாட்டை ஏற்படுத்திக் கொண்டதும் ராகுல் காந்தியால் திரை போட்டு விளக்கிச் சொல்லப் பட்டவையே.
அதனைத் தொடர்ந்து அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும் பிரேசில் மாடல் அழகி லாரிசா நேரி (Larissa Nery)யின் பெயர் 22 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்ததும் 22 வாக்குகளும் தேர்தலின் போது பதியப் பெற்றதும்… இப்படி மோசடி தேர்தல் மூலமாக பாஜக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதும் இதே ராகுல் காந்தியால் திரை போட்டு விளக்கிச் சொல்லப்பட்டவையே!
இதேபோன்றுதான் ஒன்றிய அளவில் நாடாளுமன்றத் தேர்தலிலும், பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களிலும் தேர்தல் தில்லுமுல்லு மோசடிகளை தமக்கு ஏதுவான தேர்தல் ஆணையாளர்களை நியமித்து வைத்துக் கொண்டு ஆர்எஸ்எஸ் – பாஜக இந்துத்துவ கும்பல் ‘வெற்றிக்கனி’யைத் தொடர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் இந்தியா கூட்டணியோ அல்லது பிற பாஜகவை எதிர்ப்போர் என்று சொல்லிக் கொள்ளும் எதிர்க்கட்சியினரோ ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக – அவர்கள் பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றிய தேர்தல் முடிந்தவுடன் 45 நாட்களில் CCTV Footage-ஐ அழித்து விடுவது; மூன்று மாதங்களில் தேர்தல் தொடர்பான EVM இயந்திரத்தின் VVPAT எனும் ஒப்புகைச் சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அழித்து விடுதல், நீக்கப்பட்டோரின் வாக்காளர் பட்டியலைத் தர மறுத்தல், SIR தில்லு முல்லுகள் தொடர்பான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையமோ ஒன்றிய பாஜக அரசோ பொறுப்பான பதில் தர மறுத்தல்… போன்ற சட்டத்திற்குப் புறம்பான இழிசெயல்களுக்காக – இவர்கள் வீதிகளில் இறங்கி எவ்விதப் போராட்டக் களங்களை கண்டார்கள்? மாறாக மீண்டும் மீண்டும் இந்த தில்லு முல்லு மோசடி போலி பாராளுமன்றத் தேர்தலில் மூழ்கி முத்தெடுக்கவே முனைந்தார்கள். வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டார்கள்.
படிக்க: ஞானேஷ்குமார்: தேர்தல் ஆணைய வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி!
அதன் விளைவு தான் பல்வேறு மாநிலங்களில் பாஜகவும் அதன் தொங்கு தசை கூட்டணி கட்சிகளும் போலித்தனமான தேர்தல் மூலம் வெற்றிகளை அறுவடை செய்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் தமிழ்நாட்டில் – பெரியார் மண்ணில் காவிக் கண்ணோட்டத்தில் அரசியலில் தடம் பதிக்க முடியாது என்பதை உணர்ந்து, தற்குறி நடிகர் விஜய்யை இழுத்துப்போட்டு அரசியலில் குறுக்கு வழியில் பாஜக தடம் பதிக்க முடிவெடுத்தது. முன்னர் சில கட்டுரைகளில் விளக்கியதைப் போன்று பாஜக தமிழ்நாட்டில் தவெக எனும் கள்ள குழந்தையைப் பெற்று போட்டது. இதை நாம் முன்னரே அறிவித்தோம்.
முதலில் அதிமுகவை அழிப்பது; ஏறத்தாழ அது முடிவுக்கு வந்துவிட்டது; தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது; அதுவும் அரசியலில் அரிச்சுவடியே தெரியாத கோமாளி நடிகர் விஜய்யை வைத்து நிறைவேற்றிக் கொண்டது; இனி, மெது…மெதுவாக விஜய்யின் தவெக-வை ஒரேயடியாக விழுங்கி விடுவது என்பது தான் பாஜக திட்டம். பல வட மாநிலங்களில் இயங்கிய மாநிலக் கட்சிகளை இப்படித்தான் விழுங்கிச் சுவை கண்டது பாசிச பாஜக எனும் ஓநாய். அது தமிழ்நாட்டிலும் நடக்கப் போகிறது என்பதற்கு அடையாளம் தான் கடந்த ஆகஸ்ட் 20 செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகில் உள்ள கோவளத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஜோசப் விஜய் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு கலந்து கொண்டார் என்ற நரித்தனத்தையும் நாம் எளிதில் கடந்து சென்று விட முடியாது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜய்யின் தோளைத் தட்டி ‘தமிழ்நாட்டில் மிகச்சிறந்த நிர்வாகத்தையும், வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்கின்றீர்கள்…’ என்று தனது வளர்ப்பு குட்டிக்கு பலத்த ஐஸ்கட்டியை உச்சந்தலையில் தூக்கி வைத்தார்.
படிக்க: ஜனநாயகன் விஜய் -ன் ஆட்சியில் சிதைக்கப்படும் ஜனநாயகம்
இந்த லட்சணத்தில் தான் தவெக-வின் ‘கொள்கை எதிரி பாஜக’ என்று நம்மை நம்பச் சொல்கின்றார்கள் ‘மாபெரும் முற்போக்காளர்கள்’. அதைவிடக் கொடுமை; ‘ஆம்! தவெக பாஜக எதிரியேதான் சிறப்பான நிர்வாகத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க முன் வந்துள்ள மாபெரும் தலைவர் விஜய்தான்; ஊழல் கறை படியாதவர் விஜய் தான்; எனவேதான் அவருக்குக் முட்டுக் கொடுக்கிறோம்; உச்சி முகர்ந்து பாராட்டு மழை பொழிகிறோம்; பாஜகவை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் பாதுகாத்து விட்டோம்; சில உதிரிகளுக்கு அமைச்சர் பதவிகளையும் பெற்று சுகம் கண்டு விட்டோம்..,’ எனச் சிவப்பு துண்டு அணிந்த இடதுசாரிகள், வெட்கங்கெட்ட காங்கிரஸ், திமிரி எழுவதையும் – திருப்பி அடிப்பதையும் விஜய்யின் காலடியில் அடமானம் வைத்து விட்ட விசிக!
வடமாநிலங்களில் எல்லாம் கொத்துக் கொத்தாக இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் தலித்துகள் – ஆர்.எஸ்.எஸ் பாஜக இந்துத்துவக் கும்பலால் கொன்று ஒழிக்கப்பட்ட போதும் – CCA, NRC போன்ற இஸ்லாமியர்கள் குடியுரிமைகளை பறிக்க முனைந்த போதும்- காஷ்மீரில் சிறப்பு சட்டவிதி 307 நீக்கம் செய்யப்பட்ட போதும், வஃப் வாரிய சட்டம் உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், மணிப்பூரில் குக்கி இன மலைவாழ் கிறித்தவ மக்கள் நூற்றுக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போதும், இளம் பெண்கள் பலர் நிர்வாணப் படுத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட போதும் பேசா மடந்தையாகப் பிணம் போல் கிடந்திட்ட நடிகர் விஜய், தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனுக்கு ‘சிறுபான்மையினரின் பாதுகாவலனாய்த்’ தென்படுகிறார். கருப்புத் துண்டு வேங்கை வைகோவின் மதிமுக விஜய்யை புரட்சியாளனாகவே பாவிக்கிறது.
ரீல்ஸ், ரூட் மாஃபியா, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், முகநூல், யூடியூப், ஐடி விங், விர்ச்சுவல் வாரியர்ஸ்…என எண்ணற்ற வடிவங்களிலும் குழந்தைகளைக் கொண்டும் அரசியலற்ற அரசியலை தனது சினிமா கவர்ச்சியின் மூலமாக விஜய் களம் ஆடினார் என்பது உண்மைதான். ஆனால் அவை மட்டுமே காரணமாக இருந்திருந்தால் தமிழ்நாடு முழுமையும் எம்ஜிஆர் பாணியில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றிருப்பார்; தொங்கு சட்டசபையை உருவாக்கி இருக்க மாட்டார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை ‘சோபா வழிகள் மூலமாக’ பெரும்பான்மையை உருவாக்க முற்பட்டிருக்க மாட்டார்.
படிக்க: அரசியலற்ற அரசியலும் கார்ப்பரேட் பின்னணியும் கலந்த கலவையாக பாசிசக் கோமாளி விஜய்!
ஆனால் தமிழ்நாட்டில் விஜய் ஆட்சியைப் பிடிப்பதற்கு எந்தெந்த குறுக்கு வழிகள் மோசடிகள் மூலமாக அமித்ஷா கும்பல் காய்களை நகர்த்தின என்பதனை எவரும் உணரத் தலைப்படவில்லை. ஏன், திமுக-விற்கே தேர்தல் மோசடிகள் குறித்தான தெளிவான பார்வையில்லை; மாற்றுப் போராட்ட வடிவங்களும் இல்லை. தமது கட்சியின் மூத்த தலைவர்கள் எனப் படுவோரின் குறைபாடுகளை களைய முற்படவும் இல்லை. எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக நாம் தேர்தல் தில்லுமுல்லு மோசடிகள் குறித்து குறிப்பாக EVM, SIR குறித்தான தில்லுமுல்லு மோசடிகள் குறித்தான நிறைய அம்பலப்படுத்தல்களை செய்து இருந்தோம். ஆனால் எவரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்த பாடில்லை.
தற்போது கொளத்தூர் தொகுதியில் அந்த மோசடி நடந்திருப்பது குறித்து மு க ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடியுள்ளார். விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கப்படுகிறது. தேர்தல் ஆணையமோ 45 நாட்களைக் கடந்து விட்டது; எனவே, தேர்தல் ஆணையச் சட்டப்படி இந்த விசாரணையே ஏற்கத்தகுந்தது அல்ல – என்று நீதிமன்றத்தில் கேவலமாக வாதிடுகிறது. கொளத்தூர் தொகுதியைப் போன்றே தமிழ்நாடு முழுவதும் இவ்வித EVM மோசடி; SIR மோசடி நிகழ்ந்துள்ளன என்பதை எவராலும் மறுக்க இயலாது. அதனாலேயே விஜய் இந்த அளவிற்கான மைனாரிட்டி அரசை நிறுவுவதற்கு வாய்ப்பு கிட்டி உள்ளது என்பதும் பேருண்மை! இதுதான் எதார்த்த நிலை. இவை ஒரு புறம்!
விளக்குமாற்றுக்கு எதற்குப் பட்டுக் குஞ்சம்?
பல்வேறு காலக்கட்டங்களில் ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ கும்பல் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதை பல்வேறு வடிவங்களில் பார்த்து வருகிறோம். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள்; தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்; மாணவர்-இளைஞர்களுக்கு எதிரான சட்டங்கள்; கார்ப்பரேட் முதலைகளுக்கு பாதுகாப்பான சட்டங்கள்; சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள்; கல்வி உரிமை பறிப்புச் சட்டங்கள்; இந்தி சமஸ்கிருத திணிப்பு சட்டங்கள்; மாணவ மாணவியரை பலி கொடுக்கும் NEET பாதுகாப்புச் சட்டங்கள்; மாநில உரிமைகளைப் பறித்து ‘வந்தே மாதரம்’ பாட வற்புறுத்தும் சட்டங்கள்; ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே தேர்தல் – ஒரே மதம் – ஒரே கலாச்சாரம் – ஒரே கல்விக் கொள்கை என மாநிலங்களை இல்லாதொழிக்கும் அல்லது நகராட்சி அளவிற்கு தகுதி இறக்கம் செய்யும் சட்டங்கள்; இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’ என அறிவிக்க முனையும் சதிகள்; நிதி பறிப்புச் சட்டங்கள்; கீழடி அகழாய்வு உண்மைகளை புறந்தள்ளி, கீழடியையே குழி தோண்டி புதைக்க எண்ணும் இழி செயல்கள் … மொத்தத்தில் 140 கோடி மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்திக் கொண்டு, ஏற்கனவே இருக்கக்கூடிய பாராளுமன்ற கட்டிடம் போதாது என்று மக்கள் வரிப்பணத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டு – ரீல்ஸ் விடுவதற்கென புதிய பாராளுமன்ற கட்டிடம் என்ன எளவுக்குத் தேவைப்படுகிறது இந்த கார்ப்பரேட் காவி பாசிச பாஜக கும்பலுக்கு? உல்லாசங்களை அனுபவிப்பது தவிர…!
படிக்க: நாடாளுமன்றம்: தேவை புதிய கட்டிடம் அல்ல!
வாயைத் திறந்தாலே தரமற்ற வார்த்தைகளை -செய்கைகளைக் காண்பிக்கும் தற்குறி நடிகர் விஜய், கள்ள லாட்டரி புகழ் ஆதவ் அர்ஜுனா இன்னும் பிற அணில் குஞ்சுகள் சட்டமன்றத்திலும் பொது வெளியிலும் செய்கின்ற அளப்பறைகள் – கூத்துக் கும்மாளங்கள் சொல்லி மாளாதவையாக நீடிக்கின்றன. தமிழ்நாட்டில் பிறந்து கையில் எழுதி வைத்துக்கொண்டு படிக்கக்கூடிய அரசின் ‘நலத்திட்டங்களை’(?) தப்பும் தவறுமாக படிக்கின்ற தற்குறி அமைச்சர்களைப் பார்க்க முடிகிறது; இந்த அவலங்களை எல்லாம் பார்த்து தமிழ் மக்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போலியாக பட்டயக் கல்வி சான்றுகளையும், போலி முனைவர் பட்டங்களையும் ‘சுமந்து’ திரிகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு வீர தீரமாகச் சொன்ன மக்கள் நல திட்டங்கள் – வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கின்றன. தூய்மை பணியாளர்கள் போராடுகிறார்கள்; விவசாயிகள் போராடுகிறார்கள்; தொழிலாளர்கள் போராடுகிறார்கள்; மாணவர்கள் போராடுகிறார்கள்; அனைத்துப் போராட்டங்களும் அடியாள் படையான காக்கிச்சட்டையினரால் கடுமையாக அடக்கி ஒடுக்கப்படுகின்றன.
அத்தியாவசியப் பண்டங்களின் விலைவாசி உயர்வு விண்ணைத் தொடுகிறது; சட்டமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள் பலவற்றுக்கும் பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர், ஆதவ்-வை வைத்து சண்டப்பிரசன்டம் செய்ய வைக்கிறார் விஜய்.
சட்டமன்றம் சண்டைக் களம் போல் காட்சி தருகிறது. உரிய தேதியில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நலன் தரும் வகையில் மேட்டூர் அணையை திறக்க மறுக்கிறார் விஜய். தற்போது குறுவை சாகுபடி பொய்த்துப் போயிருக்கும் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடியாவது கை கொடுக்கும் என்று நம்பி இருக்கும் சூழலில், தன் ஒருவருக்காக மட்டும் ரூ.6 கோடிச் செலவு பாதுகாப்புடன் 2 ½ மாதங்கள் தாமதித்து திறந்து விடப்பட்ட நீரும் கூட 45 நாட்களுக்கு மட்டுமே தானாம்! விவசாயிகளோ குமுறுகிறார்கள். நாட்டு மக்கள் நலன் கருதி ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முன்வரவே மாட்டேன் என்கிறார் விஜய். மோடியைப் போலவே ஊடகவியலாளர்கள் என்றால் தலை தெரிக்க ஓடுகிறார் விஜய்.
படிக்க: கரூர்: 42 மனித உயிர்கள் படுகொலை! பாசிசக் கோமாளி விஜயை கையாள வேண்டிய அணுகுமுறை!
கடந்தாண்டு கரூர் சம்பவத்தின் போது தன் ஒருவரால் மட்டுமே 41 பேர் துள்ளத் துடிக்க மாண்டுபோன தருணத்தில் கரூரிலும் திருச்சியிலும் ஊடகவியலாளர்கள் விஜய்யை மறைத்து கேள்வி கேட்க முனைந்த போது முரட்டு செவிடனாய் பனையூர் பங்களாவிற்கு சென்று ஓடி ஒளிந்தவர் தான் இந்த விஜய். இவருக்குத்தான் ரசிகர் கூட்டம் சில கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தருகிறது. சினிமா நடிகர் எம்ஜிஆருக்கு பிறகு விஜய்யின் அரசியல் வரவு என்பது தமிழ்நாட்டின் ‘சாபக்கேடு’ போலும்.
தமிழ்நாடு எங்கும் கொலை – கொள்ளை – பாலியல் வன்புணர்வுகள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு குற்றச்சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன. கொட்டடிச் சாவுகளுக்கும், ஆணவப்படுகொலைகளுக்கும் பஞ்சம் இல்லை.
இந்த லட்சணத்தில் தான் இருக்கின்ற சட்டமன்ற கட்டிடம் போதாதென்று இன்னும் பல நூறு கோடி மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விட்டு புதிய சட்டமன்றம் கட்டி கும்மாளம் அடிக்க, விதி 110-ன்கீழ் அறிவிப்பு செய்ய இருக்கிறாராம் தற்குறி நடிகர் விஜய்.
ஏற்கனவே கலைஞர் கருணாநிதி காலத்தில் 2010ல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்-கால் திறக்கப்பட்ட சிறப்பான தலைமைச் செயலகம், 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா- வினால் மீண்டும் தற்போதைய புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே வீம்புக்காக மாற்றப்பட்டது. தலைமைச் செயலகத்திற்கு என கட்டப்பட்ட மாபெரும் கட்டிடத்தை அரசு மருத்துவமனை ஆக்கினார் கொழுப்பெடுத்த பாசிச ஜெயா.
உழைக்கும் மக்களின் எண்ணற்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வக்கற்ற ஒன்றியமோ, மாநிலமோ அவர்கள் நிறுவுகின்ற பாராளுமன்ற கட்டிடமாக இருந்தாலும் சரி; சட்டமன்ற கட்டிடமாக இருந்தாலும் சரி; ‘விளக்குமாற்றுக்குப் பட்டுக்குஞ்சம்’ அணிவதைப் போன்றது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆம்! ஆசான் லெனின் வார்த்தைகளில், பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவமாகவே மாறிவிட்டன! அதற்கு சாட்சியமாக ஒன்றிய பாஜக-வும், தமிழ்நாட்டில் தவெக-வும் திகழ்கின்றன என்பது பேருண்மை!
- எழில்மாறன்






