தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்று 100 நாட்களை கடந்து 150 நாட்களை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக வாய்ச்சவடால் அடித்து ஆட்சியை பிடித்த பிறகு, தனது 100 நாள் ஆட்சியில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தீர்வு காணாமல் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போடுவதையே பிரதான வேலையாக செய்து வருகிறது. தவெக அரசு. இந்த 100 நாட்களில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளதாக அரசு சார்பிலும் பல்வேறு தளங்களிலும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

நடிகராக இருந்த போது தனது படங்களுக்கு 100 நாட்கள் ஓடினால் வெற்றி விழாவை கொண்டாடி பழகிய நடிகர் விஜய், இப்போது தன்னுடைய அரசுக்கு 100 வது நாள் வெற்றி விழாவை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டு கொண்டாடி மகிழ்கிறார் முதல்வரான பாசிச கோமாளி விஜய்.

தவெக அரசு வெளியிட்டுள்ள 100 நாள் சாதனை புத்தகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை முதல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம், ரூபாய் 1 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு, 717 மதுபான கடைகள் மூடல், வெற்றித் திறன் பயிற்சித் திட்டம், தமிழ் வெற்றி கிராமப்புற மறுமலர்ச்சி திட்டம், போதைப் பொருளை ஒழிக்க 65 சிறப்பு அதிரடிப்படை, அண்ணன் சீர் உள்ளிட்ட 18 திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொய்யான தகவலை பதிவு செய்துள்ளது பாசிச கோமாளி விஜய் அரசு. அதாவது, 18 திட்டங்களில் சில‌வற்றை மட்டுமே தேர்தல் நேரத்தில் தரப்பட்ட வாக்குறுதிக்கு மாறாகவும், அரைகுறையாகவும் நிறைவேற்றியுள்ளது. பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.

ஓர் ஆட்சியைப் பற்றி மதிப்பிடுவதற்கு ஓராண்டு தேவை என்றும், அதுவரை விமர்சிக்க வேண்டாம் என சிலர் பாடம் எடுக்கின்றனர். ஆனால் 100 நாட்களுக்குள்ளேயே முதல்வர் விஜய் பெரிய சாதனை படைத்தது போலவும், அவர்தான் பிரதமராக வேண்டும் என்றும் தவெக அமைச்சர்கள் துதி பாடுவதை 100 நாட்களுக்குள் ஏன் சாதனை என பெருமை பீற்றுகிறீர்கள் என கேட்பதில்லை. உண்மையில், ஒரு ஆட்சி பயணிக்கும் திசையை கணிக்க 100 நாட்களே அதிகம். அந்த வகையில் பாசிச கோமாளி விஜய் தலைமையிலான 100 நாள் ஆட்சியின் செயல்பாடுகளை வைத்தே இது கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு பாதையமைத்து கொடுக்கும் மக்கள் விரோத ஆட்சி என்பதை நிரூபித்து வருகிறது.

தவெகவின் மக்கள் விரோத ஆட்சி! பட்டினப்பாக்கம் முதல் செவிலியர்கள் போராட்டம் வரை சாட்சி!

சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த 100 நாள் ஆட்சி ‘சாதனை விழாவில்’ பேசிய முதல்வர் விஜய், அரசியல் அதிகாரத்தைப் பெறுவது எங்களது லட்சியம் அல்ல; அந்த அதிகாரத்தின் மூலம் எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே எங்களது முதன்மை நோக்கம். எங்களது 100 நாள் ஆட்சி என்பது வெறும் காலக் கணக்கு அல்ல; அது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என ரூட் மீடியா எழுதி கொடுத்த வசனத்தை மனப்பாடம் செய்து பிசிறு இல்லாமல் தெளிவாக ஒப்பித்துள்ளார் சிறு வயதில் இருந்தே நடித்து பழகிய முதல்வர் விஜய்.

ஒவ்வொரு மேடையில் பேசும் போதும், எளிய மக்களின் நலன் என்று கதையளப்பதும், நடைமுறையில் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருவதும் என செயல்பட்டு வருகிறது விஜய்யின் தவெக அரசு. குறிப்பாக, விஜய்யின் வீட்டுக்கு அருகில் தலைமைச் செயலகம் வேண்டும் என்பதால் மீனவர்களின் வாழ்வாதாரமும் சூழலியலும் பாதிக்கும் என்பது தெரிந்தே பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகளை தொடங்க அரசாணையும் வெளியிட்டது. இதற்கு மீனவர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை துவங்கினர்.

படிக்க: 

♦ பாசிச கோமாளி விஜய்யின் மக்கள் விரோத ஆட்சி!

♦ எச்சரிக்கை: பாசிச எதிர்ப்பில் முன்னணியாக இருந்த தமிழ்நாட்டின் அரசியல் திசை மாற்றப்படுகிறது?!

மீனவர்களின் போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமை செயலகம் பற்றி இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. புதிய தலைமை செயலகமா? மீனவர்களின் வாழ்வாதாரமா? என கேட்டால் முதலமைச்சர் விஜய் மீனவர்கள் பக்கம் தான் நிற்பார் என பொய்யை அடித்து விட்டதுடன் தலைமை செயலகம் தொடர்பான வேலைகளை மெதுவாக்கினார். புதிய தலைமை செயலகத் திட்டம் கைவிடப்பட்டது என தங்களது ரூட் மீடியாக்கள் மூலமும் கருத்து பரப்பப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதிலிருந்து தலைமை செயலகப் பணியை தீவிரப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது தவெக அரசு.

அதேபோல், தனது தேர்தல் வாக்குறுதியில் மீன்பிடித் தடைக்காலத்தில் நிவாரணத் தொகையாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் பழைய தொகையான ரூ.8,000 வழங்குகிறது. இதுமட்டுமின்றி, ஆழ்கடல் படகு வாங்குவதற்கு வட்டியில்லா கடன் என்ற வாக்குறுதியும் வட்டிக்கான மானியம் என மாற்றிவிட்டது.

சென்ற திமுக ஆட்சியில், தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் தனியார்மயத்தை எதிர்த்து போராடிய போது தூய்மைப் பணியாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து ஆதரவு தெரிவித்ததுடன், தங்களது தேர்தல் வாக்குறுதியில் தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் செய்வோம் என அறிவித்தது. ஆனால்,ஆட்சிக்கு வந்ததும் 12 மாநகராட்சிகளில் தனியார்மயம் புகுத்த டெண்டர் விடப்பட்டது. தொழிலாளர்களும் ஜனநாயக சக்திகளும் எதிர்த்ததும் டெண்டர் அறிவிப்பை மட்டும் தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொண்டது. அதே நேரத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் தனியார்மயத்தை எதிர்த்தும் தூய்மை பணியாளர் பல்வேறு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எனினும், தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட பணிநிரந்தரம் செய்யாமல் தூய்மைப் பணியாளர் வாழ்வாதாரத்தை அந்தரத்தில் தொங்க விட்டுள்ளது தவெக அரசு.

தேர்தல் நேரத்தில், ‘போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்’ என்று மேடைக்கு மேடை பேசினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, டாஸ்மாக் மூடினால் கள்ள சாராயம் பெருகும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகிறார் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ். மறுபுறம், உழைக்கும் பெண்களின் தாலியறுக்கும் டாஸ்மாக்கில், இணையவழி மது முன்பதிவு; டாஸ்மாக் பார்களை தனியார்மயமாக்கும் திட்டம்; 25 புதிய மது வகைகள் அறிமுகம்; டாஸ்மாக் வருவாய் வரலாறு காணாத அதிகரிப்பு என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் போதையில் தள்ளியுள்ளது. புதிய நிதியாண்டுக்கு (2026-27) 56,000 கோடி விற்பனை இலக்காக வைத்துள்ளது. இது 5.3%  கூடுதல் விற்பனை வளர்ச்சி என வெட்கமில்லாமல் கூறுகிறது.

படிக்க:

♦ பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும்!

♦ தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!

அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் எனும் வாக்குறுதி நடைமுறைக்கு வரும்போது மாற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் கீழ் பயன்படுத்தினால் மட்டுமே இலவசம் என மக்களை‌ ஏமாற்றியது. இதனுடாகவே அறிவிக்கப்படாத மின் வெட்டு, திடீரென அதிகரித்த மின்கட்டணம் மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. மின் கட்டண உயர்வு பற்றி கேள்வி கேட்டால், கட்டண உயர்வு எதுவும் இல்லை, அதிகமாக போடப்பட்ட கட்டணம் சரி செய்யப்படும் என ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறார்களே ஒழிய, கட்டணமும்- மின் வெட்டும் குறையவில்லை. அறிவிக்கப்படாத மின் வெட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பிரதான பிரச்சனையாக, சி.எம் சார்! சி.எம் சார்! என அடித்தொண்டையில் கத்திப் பேசிப் பேசிதான் விஜய் ஆட்சிக்கே வந்தார். கொலை- கொள்ளை- கஞ்சா கலாச்சாரம் ஆகியவை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கஞ்சா போதையில் மாணவர்கள் அடித்து கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. மறுபுறம் லாக்கப் மரணங்களும் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், சிறுமிகள், வயதான பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதிலும், பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்குகளில் தவெக நிர்வாகிகளே அடுத்தடுத்து கைதாகி மக்கள் விரோதிகள் என நிருபித்து வருகின்றனர்.

கடந்த 100 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன. தவெக ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுவோம் என்று வாய்கிழிய பேசிவிட்டு, தற்போது ஆணவப்படுகொலைகளை வேடிக்கை பார்க்கிறது. அதேபோல், “அண்ணல் அம்பேத்கர் அயலக உதவித்தொகை” கீழ் வெளிநாடு படிக்க சென்ற மாணவர் பாரதிதாசனுக்கு,கடந்த ஆண்டிற்கான உதவித்தொகை ஐந்து மாதங்களாக கேட்டும் வரவில்லை என தவெக அரசின் சமூக நீதி கொள்கையை அம்பலப்படுத்தியிருந்தார். இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவரையே குற்றவாளியாக சித்தரித்ததுடன் அதனை சமூக நீதி அமைச்சரை வைத்தே செய்தது தவெக அரசு. இது குறித்து  சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்த பிறகு உதவித்தொகை வழங்கியது. இதுதான் தவெக கடைபிடிக்கும் சமூக நீதியின் லட்சணம்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியில் ஏமாற்றியது போலவே, பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் ஏமாற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டு இருந்தாலும் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கொண்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுத் தொழில் திட்டம் அமைக்கப்படும் என்கிறது. இதிலிருந்து விவசாய நிலங்களில் கார்ப்பரேட் நலன்களுக்காக தொழில் தொடங்கப்படும் என்பதே அதன் உள்ளடக்கம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதில் மக்கள் பாதிக்காத வகையில் தொழில் தொடங்கப்படும் என்பது வாய்சவடால் அடித்து ஏமாற்றும் வேலையாகும்.

காவிரியிலிருந்து நீரைத் திறந்துவிடாமல் கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்வதை அமைதியாக ஏற்றுக் கொண்டார் விஜய். அதே நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு மேக்கேதாட்டு அணையைக் கட்டத் தீவிரமாக செயல்பட்டு வருவதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்று விட்டது. அந்த தீர்மானத்திலும் ‘நடுவர் மன்றம்’ அமைக்கும் கோரிக்கையை கூடுதலாக சேர்த்து அணையை தடையின்றி கட்டுவதற்கு மறைமுகமாக உதவியுள்ளது. இது தவெக அரசு டெல்டா விவசாயிகளுக்கு செய்துள்ள வரலாற்று துரோகம் என்றால் மிகையல்ல.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வுப் பலன்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ. 14,000 கோடியை குறைத்து ஒய்வூதியர்களையும் வஞ்சித்து விட்டது விஜய் அரசு.

படிக்க:

♦ தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்

♦ பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும் பாகம்-2

கடந்த திமுக ஆட்சியில் செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடிய போது களத்திற்கு சென்ற ஆதவ் அர்ஜூனா தவெக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என பேசினார். தற்போதைய தவெக ஆட்சியில் செவிலியர்கள் பணிப்பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை சிதைக்கும் நோக்கத்துடன், போலீசை ஏவிவிட்டு பேச்சு வார்த்தைக்கு என அழைத்து சென்று இரவு நேரத்தில் கைது செய்தததன் மூலம் ஆட்சிகள் மாறினாலும் மக்களின் அவலங்கள், அரசின் அடக்குமுறைகள் மாறாது என்பதை நிரூபித்து விட்டது தவெக அரசு.

தேனி மேகமலையில் புலிகள் காப்பக விரிவாக்கம் என்ற பெயரில் 98 மலை கிராம மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்ட களத்திற்கு சென்ற தவெக அமைச்சர்கள், மக்களை அப்புறப்படுத்த மாட்டோம் எனக் கூறினர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி மக்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம் கேட்டு தனது மக்கள் விரோத மனநிலையை வெளிப்படுத்தி விட்டது.

  • (தொடரும்…)

புதிய ஜனநாயகம் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)

அக்டோபர் 2026 இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here