ஒன்றிய அளவில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக இந்துத்துவ காவிப் பாசிஸ்ட்டுகள் ஆட்சி அதிகாரத்தை 2014 முதல் அபகரித்துக் கொண்டபின் நாட்டில் ஒன்றிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் மிக இழிந்த நிலைக்கு வாக்கு வங்கி அரசியல் – மிக மிகத் தரந்தாழ்ந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது என்பதை அறிவோம்.

தென் மாநிலங்கள் ஓரிரண்டில் அவர்களது பாச்சா பலிக்காமல் இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஊன்றிய விதை அதன் பாற்பட்டு தலைத்தோங்கி இருந்த சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணடிமை எதிர்ப்பு, சாதி தீண்டாமை ஒழிப்பு, கல்வி அறிவு, அது சார்ந்த கட்டுமானங்கள், சனாதனப் பார்ப்பன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகுதல் … என்பன போன்ற பிரச்சினைகள் (- முதலாளித்துவ பாராளுமன்றவாத வாக்கு வங்கி அரசியலின் நோய்த் தொற்று படிந்திருந்தாலும்கூட -) பேசுபொருளாக இருந்து வந்தன.

அதன் விளைவு தமிழ்நாட்டில் காவிக் கும்பல் தொடர்ச்சியாகக் கால் பதிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. RSS பாஜக காவிக் கும்பல் தமிழகத்தில் கால் ஊன்ற துவங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்கு -நீதிக்கட்சி துவங்கி பெரியார் அண்ணா போன்ற திராவிடத் தலைவர்களின் பெயரை உச்சரிக்காமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதனை ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் நன்றாகவே உணர்ந்து இருந்தது. அதன் விளைவு…?

காவிக் கும்பல் வலையில் அகப்பட்டார் கூத்தாடி விஜய்! பதவியையும் பிடித்தார்!

நடிகர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் எப்படிப்பட்ட மோசடித்தனங்கள் மூலமாக அரங்கேறியது என்பது குறித்தான கட்டுரைகள் ஏற்கனவே பல இத்தளத்தில் வந்துள்ளன.

சுருக்கமாகக் கூறின், விஜய்யின் சொத்துக் குவிப்பு, வரி ஏய்ப்பு, வெளிநாட்டு கார் இறக்குமதி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குவித்துப் போட்டுக் கொண்ட பல்லாயிரம் கோடி அசையும் & அசையா சொத்துக்கள், கருப்புப் பணம்… இவை யாவற்றையும் சேகரித்துக் கொண்ட ஒன்றிய காவிக் கும்பல் வருமான வரித்துறை மூலம் எப்படி இழுத்துப் போட்டுக் கொண்டது என்பதனை நெய்வேலி படப்பிடிப்புத் துவங்கி அலசி ஆராய்ந்தாலே உண்மை வெளிப்படும். நாம் ஒன்றும் விரிவாக விளக்கத் தேவையில்லை. அன்றைய கோடம்பாக்கம் கூடுதல் வருமான வரி ஆணையாளரும், இன்றைய சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் ஐ ஆர் எஸ்-க்கு அனைத்துமே வெட்ட வெளிச்சமாகத் தெரியும்!

மேலும் படிக்க: அரசியலற்ற அரசியலும்  கார்ப்பரேட் பின்னணியும் கலந்த கலவையாக  பாசிசக் கோமாளி விஜய்!

அன்றைய கோடம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் கூடுதல் வருமான வரி ஆணையர் (Additional Commissioner of Income Taxes)ஆகப் பணிபுரிந்த அருண்ராஜ் IRS, காவிக் கும்பலுக்கு இசைந்து மேற்கொண்ட விஜய்க்கு எதிரான நடவடிக்கைகள்; பின்பு மேற்கொள்ளப்பட்ட பேரம்; பேரம் படிந்த பின்பு துவங்கப்பட்ட தவெக; பல நூற்றுக் கணக்கான கோடி ஊழல் மோசடிகளில் மாட்டிக் கொண்ட அருண்ராஜ் டெல்லி ஒன்றிய அரசுத்துறை நிறுவனத்தால் பீகாருக்கு மாற்றி தூக்கி வீசப்பட்டது; சம்பாதித்தது போதும் என்று முடிவுக்கு வந்தவராய் பதவியை ராஜிநாமா செய்தது; பாஜகவில் இணைய விருப்பம் கொண்டு டெல்லி லாபியில் அலைந்து திரிந்தது; மோடி – அமித்ஷா கும்பல் அருண்ராஜை தமிழ்நாட்டில் அரசியல் செய்ய விஜய்யின் தவெக-வில் இணையச் செய்தது…! மேலும்…

தமது பிடியில் இருந்த அதிமுக வனத்துறை கொள்ளையன் செங்கோட்டையனையும்,
ஆர்எஸ்எஸ் – ஐடி விங் கொள்ளையன் நிர்மல் குமார், கீர்த்தனா போன்ற காவிகளையும் தவெக-விற்குள் கெட்டிக்காரத்தனமாகத் தள்ளிவிட்டது R.S.S. – பாஜக காவிக் கும்பல். எல்லாவற்றையும் விட பாண்டிச்சேரி லாட்டரி புகழ் புஸ்ஸி ஆனந்த், பாஜக பினாமி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா என்ற கோடீஸ்வரனும் ஒவ்வொரு கட்சியாக மாறி கடைசியில் தவெக-வில் ஒட்டிக்கொள்ள ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலே காரணம். மொத்தத்தில் ஒன்றிய அரசுக்கு தொகுதி மறு வரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது போன்று தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் கழக ஆட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் மும்மரங்காட்டி தவெக- வைப் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டது
ஆர்எஸ்எஸ் – பாஜக காவி(லி)க் கும்பல்.

போதாக்குறைக்கு மோசடித்தனமான தேர்தல் ஆணையம், SIR, EVM, VVPAT , நீதித்துறை உட்பட அனைத்து ஏவல் துறைகளையும் பக்க பலமாக்கிக் கொண்டே தமிழ்நாட்டு அரசியலில் விஜய் என்ற அரசியலற்ற ஒரு பாசிசக் கோமாளியை, கட்சி ஆரம்பித்த மிகக்குறுகிய காலத்தில் ஆட்சி பீடத்தில் அமர்த்தி உள்ளது காவி(லி)க் கும்பல்.

ஆம்! தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ‘பெருந்தலைவர்’ காமராஜர், அண்ணா, வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள்…எனப் பலரின் படங்களை தன் முதுகுகுப் பின்னாலே தொங்க விட்டுக் கொண்டு – அவர்களது கொள்கைகள் – லட்சியங்கள் என்னவென்றே தெரியாமல் – அவர்களது கொள்கைகள் லட்சியங்களுக்கு நேர் எதிரான செயற்பாடுகளில் மூழ்கிக் கிடக்கிறார் விஜய். இதைப் பற்றி எல்லாம் ரசிகர்களுக்கோ, தொண்டர்களுக்கோ, ‘நண்பா நண்பீஸ்’ – களுக்கோ, விசில் அணில் குஞ்சுகளுக்கோ இன்ன பிற வெட்கம் மானமின்றி தவெக-வுக்கு முட்டுக்கொடுத்து நிற்கும் அரசியல் கட்சிகளுக்கோ கடுகளவு கூட அக்கறை இல்லை; முழுக்க நனைந்து சோரம் போய்விட்டதால் இது குறித்து அவர்களுக்கு கவலையும் இல்லை – என்ற வெட்கக்கேடான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கரூர் கொலைகளும் – ‘கொள்கை எதிரி’- பாஜகவுடன் கூடிக் குலாவலும்!

கடந்த 2025 செப்டம்பர் 27-ல் காலை 08:30 மணிக்கு நடிகர் விஜய் நாமக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதாகவும், அன்று பகல் 12:00 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதாகவும் முதல் நாள் 26-ம் தேதியே பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்ததை ஊடகங்களில் பார்த்தோம். ஆனால் ‘தானைத் தலைவர்’ விஜய், ‘எக்கச்சக்கமான தலைக்கு மேல் தொங்கிய பணிகளை’ முடித்துவிட்டு பனையூரிலிருந்து புறப்படுவதற்கே காலை 08:30 மணியாகிவிட்டது. அதன் பின்னர் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்து அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்து, பின்பு அங்கிருந்து நாமக்கல் வருவதற்கே 01:00 மணியாகி விட்டது. அங்கும் காலை முதல் காத்துக் கிடந்த மக்கள் வெயிலில் காய்ந்து மயக்கப்பட்டு சிலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள்.

அதன் பின்பாவது உடனடியாக இல்லா விட்டாலும் அவர் நினைத்திருந்தால் 04:30 மணிக்குள் கரூர் வந்திருக்க முடியும். ஆனால் மக்கள் நாய்களைப் போல தமக்காக காத்துக் கிடப்பார்கள் என்று கெத்துக் காண்பிக்கவும், ஊராரும் பல்வேறு அரசியல் இயக்கங்களும் விஜய்க்கு எப்பேர்ப்பட்ட ‘செல்வாக்கு’ உயர்ந்து நிற்கிறது என்ற போலித்தனமான பிம்பத்தைக் காண்பிப்பதற்காகவும், மேலும் மேலும் கூட்டம் கூடட்டும்; தொழில்துறை நகரமான கரூரில் பல்வேறு தொழிற் சாலைகளில் – நிறுவனங்களில் மாலை பணி முடிந்து வருவோரும், நாமக்கல் கூட்டத்தில் கலந்து கொண்டோரையும் இழுத்துக் கொண்டு வந்து சேர்த்து ஏற்கனவே கூடியுள்ள கூட்டத்தோடு திக்கு முக்காடச் செய்து மேலும் கூட்டம் கூடட்டும் – அலை மோதட்டும் என்று வேண்டுமென்றே தாமதமாக வந்தார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இப்படித் தாமதமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பழக்கத்தை அவர் பங்கேற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் கையாண்டார் என்பதை அறிவோம்.

மேலும் படிக்க: பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும்!

தந்தை பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் படங்களை எல்லாம் ‘பூஜிக்கிறவர்’ என்று காண்பித்துக் கொள்ளும் அற்பவாதியான அவர், அவர்களுடைய நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் குறைந்தபட்ச அறிவைக் கூட அவர் பெற்றிருக்கவில்லை என்பதுதான் உண்மை. அவர் ஒரு பக்கா சேடிஸ்ட் என்பதை அனைவரும் அனைத்து விடயங்களிலும் அவதானித்தே வருகிறோம்! ஆக, கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் கொலையுண்டு போவதற்கு விஜய்யின் இப்பேற்பட்ட ஒழுக்கக் கேடான நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

கரூரில் கூட்ட நெரிசலைக் கண்டு காவல் துறையினர் குறிப்பிட்ட இடத்தோடு ‘வாகனம் மேற்கொண்டு செல்லக்கூடாது; கடுமையான கூட்டம் இருக்கிறது; விபரீதம் நடந்து விடக்கூடாது; இங்கே நின்றே பேசுங்கள்’ என்று டிஎஸ்பி தடுத்தும் கூட விஜய்யின் ‘கையாட்கள்’ எமது தலைவர் குறிப்பிட்ட அந்த இடத்திலேயே பேச வேண்டும் என்று அடம்பிடித்து இழுத்துச் சென்று பேச வைத்து 41 பேர் துள்ளத் துடிக்கச் செத்து மடிய காரணமாக இருந்தனர் நடிகர் விஜய்யும் அவரது கைத்தடி கும்பலும். இதில் எள்ளளவும் அய்யமில்லை. இப்படித் தம்மை பார்க்க வந்த கூட்டம் செத்து மடிகின்ற பொழுது கடுகளவும் ஈவு இரக்கமின்றி தலை தெறிக்க ஓடி பனையூர் பங்களாவில் ஒளிந்து கொண்டவர் தான் இந்த விஜய்.

கரூரிலும் திருச்சி விமான நிலையத்திலும் ஊடகவியலாளர்கள் விரட்டிச் சென்று செத்து மடிந்துள்ள கரூர் மக்களை பற்றி வினா எழுப்ப முயன்ற பொழுது செவிட்டுக் காதினராய் ஓடிய ஓட்டம் இருக்கிறதே அது எப்பேர்ப்பட்ட ஓட்டம் தெரியுமா? திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவாரே ‘போலீஸ் ட்ரைனிங்கில கூட இப்படிப்பட்டதொரு ஓட்டத்தை நான் ஓடியதே இல்லை’ என்பாரே அதைப் போல் தலை தெறிக்க ஓடினார் கூத்தாடி விஜய். இப்போதோ பெரிய வீரனாக இருக்கின்ற கொஞ்சநஞ்சம் மீசையை முறுக்குகின்றார். இதில் யார் பக்கம் தவறு இருக்கிறது என்ற விவாதப் பிரதிவாதங்கள் ஓடிக்கொண்டிருந்த போது, அன்றைய உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழு கூட்டத்தில் கரூரில் நடந்த விபரீதம் குறித்து காணொளி காட்சிகள் மூலமாக தக்க ஆதாரங்களோடு விஜய்மீது தான் குற்றம் என்பதை உணரச் செய்தார்கள். அந்த முழு ஆதாரக் காட்சிகள் அனைத்தையும் ஊடகங்கள் வாயிலாக முழுமையாகவே கண்டோம்.

பின்னர் அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகள், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், காவல்துறையின் சிபிசிஐடி சார்பான விசாரணை கமிஷன், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலில் ஒரு விசாரணை கமிஷன் என மூன்று கமிஷன்கள் போட்டு முறையான விசாரணைகளும் துவங்கி விட்டிருந்தன.

பொறுக்குமா டெல்லி? ஆம், டெல்லியில் இருந்து பாஜக அகில இந்தியத் தலைவர் நட்டா உத்தரவிற்கு இணங்க, இதற்கு முன் எந்த மாநிலத்திலும் எந்த ஒரு நிகழ்விலும் நடத்திடாத ஒரு அசிங்கத்தை – ஆம், பாஜக சார்பான விசாரணை குழுவை – ‘மாபெரும் தலைவி’ ஹேமமாலினி தலைமையில் 8 எட்டு பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்து விஜய்க்கு ஆதரவாக அனைத்துவித முன்னெடுப்புக்களையும் விசாரணை என்ற பெயரில் மேற்கொண்டதைக் கண்டோம். இதன் மூலம் இவ்வழக்கை நீர்த்துப் போகச் செய்து, உச்ச நீதிமன்றம் போய் அங்கே உள்ள நீதிபதி ‘பிரபுக்கள்’ (ஒன்றிய காவிக் கும்பல் விரும்பியவாறு) தமிழ்நாடு அரசால் – உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று விசாரணைக் கமிஷன்களையும் கலைத்து உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்து, அதைக் கண்காணிக்க குழு ஒன்றை அமைத்து எப்படி எப்படியோ தடம் மாறி விஜய்க்கு ஆதரவாக வழக்கு நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் பின்புலமாக இருக்கிறது. அதனால் தான் ‘கொள்கை எதிரி’ பாஜகவை நோகடிக்கும் வகையில் ஒரு வார்த்தை கூட முன்பும் சரி; இன்றும் சரி; – விஜய் வாய் திறப்பதில்லை.

மேலும் படிக்க: கவர்ச்சி மோக பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!

இது ஒரு புறம் என்றால் அதிமுகவிலிருந்து இரண்டு பாஸ்கர்கள் தவெக-வில் இணைந்த விழாவில் ‘ஒழுக்க சீலர்’ஆதவ் அர்ஜுனாவோ, ‘தலைவர் எல்லா விசயத்திலும் மக்கள் பாராட்டும் வண்ணம் கட்டுப்பாட்டோடு ஆட்சி அதிகாரத்தை நடத்திச் செல்கிறார்; பைசல் செய்ய வேண்டிய ஒரே ஒரு கரூர் சம்பவ பாக்கி மட்டும் நிலுவையில் உள்ளது; அதிலும் குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்துவோம்; தக்க தண்டனை வழங்குவோம்…’ என்று கர்ஜிக்கும் ஆதவ், கரூரில் 41 பேர் செத்து மடிந்த பின் தன் தலைவனுக்கு முன்பே விரைந்தோடிச் சென்று ஜார்க்கண்ட் மாநில அரசின் பாதுகாப்பில் விளையாட்டு மைதானத்தில் உள்ளே புகுந்து தப்பித்துக் கொண்டார். இந்த லட்சணத்தில் தான் இன்று இப்படி ஊளையிடுகிறார்!

உண்மை நிலைமைகள் இவ்வாறு கிடக்க, 41 உயிர்கள் செத்து மடிந்து 285 நாட்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 10 அன்று இறந்த 31 குடும்ப வாரீசுகளுக்கு சட்டத்திற்கு புறம்பான முறையில் அரசுப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்ற பெயரில் கரூர் இடைத்தேர்தலை முன்னிட்டு கூட்டத்தை நடத்தி தன்னுடைய கெத்தை காண்பிக்க முனைந்தார்.

ஆனால் தெருக்களிலும், அவர் பேசிய கூட்டத்திலும் முன்பு போல முண்டியடிக்கும் கூட்டங்களை – மரத்தில் – மின்கம்பங்களில் – சம்பந்தமே இல்லாத பிறர் வீட்டு மாடிகளில் குரங்குகள் போல் ஏறும் – தாவும் விசில் அணில் குஞ்சுகளையும் காண முடிய வில்லை. சாலைகள் வெறிச் சோடிக் கிடந்தன. குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் தவெக சாயம் வெளுக்கத் துவங்கிவிட்டது.

சரி! கூட்டத்தில் அப்படி என்னதான் பேசினார்? ‘கரூர் சம்பவம் நடப்பதற்கு அரசாங்கமும் காவல்துறையும் தான் காரணம்; கூட்டம் அப்படி அதிகமாக இருக்கும் பொழுது எங்களைக் கொஞ்சம் போலீஸ் அலர்ட் செய்திருக்கலாமுள்ள’ என்று துளியும் வெட்கமின்றி நாக்கூசாமல் புளுகியுள்ளார். என்ன காரணத்திற்காக மக்களை 7 மணி நேரம் 8 மணி நேரம் கடும் வெயிலில் சோறு தண்ணி கூட இல்லாமல், கூட்ட நெரிசலில் இயற்கை கடன்களை கூட கழிக்க வெளியில் செல்ல முடியாமல் கொளுத்தும் வெயிலில் காக்கப் போட்டோம் என்றோ, தண்ணீர், உணவு, கழிப்பறை வசதி உட்பட ஏன் தவெக-வினரால் செய்து கொடுக்க முன்வர முடியவில்லை என்பது குறித்தோ – விஜய்யோ அவரது கைத்தடிகளோ இன்று வரை விளக்கம் அளிக்கத் தயாராக இல்லை.

இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு ‘ஓடு… ஓடு…ஓடு…ஓடு…ஓடு..வந்தேன்டா வேட்டைக்காரன்…’ என்று வெட்கமின்றி குத்தாட்டம் போடுகிறார். யாரையோ நினைத்துக் கொண்டு நையாண்டி செய்கிறார். முன்பு திருச்சியில் ஜூன் 1 நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ‘வாயில நல்லா வருது; வேணாமுன்னு பாக்கிறேன்…’ என்று ஆபாசமாகப் பேசினார்; சட்டமன்றத்தில் ஆபாசமாக உடல் மொழிகளை அசைத்துக் காண்பித்து சினிமா ஸ்டைலில் அப்பாவைத் தேடுகிறார்; ஏன், உமது மனைவி புருஷனை காணவில்லை என்றும், பிள்ளைகள் இரண்டும் அப்பாவை காணவில்லை என்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தேடி அலைந்து நிற்கின்றார்களே அவர்களுக்குப் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் விஜய் ப்ரோ.

உங்கள் ஸ்டையிலிலேயே, ‘வாயி…வாயி…வாயின்னு ஒன்னு இருந்தா எதுனாலும் பேசுவீங்களோ’ என்று கதறினீர்கள் இல்லையா? கண்ணாடி முன் நின்று தற்போது பாருங்கள் – அவை உங்களுக்கு இப்போது அப்படியே பிரதிபலிக்கும். மக்களும் அதே கேள்வியைத்தான் தற்போது உங்களை நோக்கித் திருப்பிக் கேட்கிறார்கள்.

தவெக எனும் ‘மலத் தொட்டி’யில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழ்நாட்டு வாக்கு வங்கி அரசியல்வாதிகள்!

பொது வெளியிலாகட்டும்; அரசுநிகழ்வுகளிலாகட்டும்; பொது கூட்டங்களிலாகட்டும்; சட்டமன்ற நிகழ்வுகளிலாகட்டும் விஜய்யின் பேச்சில் இப்படி மனப்பாடம் செய்து கொண்டு வந்து திமுக காரர்களை திட்டி தீர்ப்பதைத தவிர்த்து வேறு ஏதேனும் அரசியலைக் காண முடிகிறதா? நல்ல பல திட்டங்களை நடைமுறைப் படுத்தும் நோக்கில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றனவா? மாநிலத்திற்கு தரவேண்டிய ஒன்றிய அரசின் பல லட்சம் கோடி கணக்கான நிதியை பெறுவதற்காக ஓங்கிய குரல் எழுப்பப்படுகிறதா? நரித் தனமாக ஒன்றிய பாஜக அரசு இந்தி சமஸ்கிருதம் என மும்மொழித் திட்டத்தை திணிப்பது குறித்து பேசுகிறாரா? யுஜிசி திட்டத்தை அறிவித்திருப்பது குறித்தோ, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவது குறித்தோ வாய் திறந்து எதிர்ப்புக் குரல் எழுப்பியிருப்பாரா? துணைவேந்தர் நியமனங்கள், தமிழ்நாட்டின் வேந்தர் பதவி இது குறித்து முந்தைய அரசு உச்சநீதி மன்றத்தில் பெற்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்த எள்ளின் முனை அளவேணும் இந்த விஜய் மேற்கொண்டிருப்பாரா? கர்நாடகா மேகதாது அணை குறித்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி அனுப்பிவிட்டு, நடைமுறையில் போராட்ட குணத்துடன் நடவடிக்கைகளில் இறங்கி இருப்பாரா?

ஜூன் 12 அன்று திறக்க வேண்டிய மேட்டூர் அணையை திறக்காமல் இருந்ததற்கான காரணத்தைப் பற்றி அறிவிக்க முன்வந்தாரா? முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நடைமுறைப்படுத்த முடியாமற் போனதற்கான காரணத்தை விளக்க முன் வந்தாரா? அமெரிக்க ஈரான் போரைக் காண்பித்து ஒன்றிய அரசு சிலிண்டர் கேஸ் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் செய்வதையும் அதன் மூலமாக அனைத்து விலைவாசிகளும் ஏறுவதையும் – இதற்குக் காரணமாக அமெரிக்காவையோ அதன் பாதம் தாங்கி மோடியையோ விமர்சித்துப் பேசி இருப்பாரா? வந்தே மாதரம் பாடலை அனைத்து நிகழ்வுகளிலும் மாநில அரசுகள் இசைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக வாய் திறந்தாரா இந்த விஜய்? தொல்லியல் அகழாய்வு இயக்குனரும் ஆய்வாளருமான அமர்நாத் ராமகிருஷ்ணா கண்டறிந்த தொன்மையான கீழடி நாகரிகத்தைக் குழி தோண்டிப் புதைத்து வேத நாகரிகத்தை உயர்த்திப் பிடிக்க காவிக் கூட்டம் முனைகின்றதே, அது எவ்வளவு பெரிய கொடுமை – ஆபத்து என்பதனை உணர்ந்து காவிக் கூட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்ப என்றைக்காவது இந்த விஜய் சிந்தித்து இருப்பாரா? திருப்பரங்குன்றம் தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றி வைக்க நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் துடியாய் துடித்து உத்தரவு போட்ட வண்ணம் உள்ளாரே, இது குறித்தெல்லாம் வாய் திறந்தாரா விஜய்?

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதுவரை மாற்றுத்திறனாளி உட்பட நான்கு லாக்கப் படுகொலைகள் நடந்துள்ளன. பற்பல ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. எண்ணற்ற பாலியல் பலாத்காரக் கொடுமைகள் சிறுமிகள் முதல் கிழவிகள் வரை ‘அரங்கேற்றம்’ செய்யப்பட்டுள்ளன. குற்றச்சம்பவங்கள் நடந்தேறாத நாட்களே இல்லை; பற்பல வர்க்கத்தினரும் தத்தம் கோரிக்கைகளுக்காக போராட்டக் களத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். அனைத்துக் குற்றச்சம்பவங்களிலும் தவெக காலிகள் பெருமளவு பங்கேற்பு செய்துள்ளனர். எங்கும் எதிலும் ஊழல் என தவெக-வினர் சதிராட்டம் போடுகின்றனர். பள்ளிகளில் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாக்களில் கட்சி கொடிகளை நாட்டுவதும், விஜய்யின் சினிமா பாடல்களை பாடச் செய்வதும், பள்ளிகளில் அலுவலகங்களில் நடிகர் விஜய் படத்தை மாட்டுவதும், ஒரு அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பள்ளிக்கூடத்திலேயே விஜய்யின் திரைப்பட காட்சிகளைப் போட்டுக் காண்பித்து அரசிடம் நற்பெயர் ஈட்ட முனைந்து, தற்போது தற்காலிக பணி நீக்கத்தில் இருப்பதும் ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டையே சினிமா சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிக் கொண்டு இருக்கிறார் இந்த தற்குறி நடிகர் விஜய்.

பொய் வழக்குகள் போடுவது; தம்மை விமர்சித்து கருத்து வெளியிடுபவர்களை கைது செய்து சிறையில் தள்ளுவது இப்படி எல்லாம் அவர் ஆடுகின்ற ஆட்டத்திற்கு அளவே இல்லை. ஆனால் இவர் மட்டும் எதிர்க்கட்சியா இருக்கின்ற பொழுது என்னென்ன ஆட்டம் போட்டார்? பேசினார்?

இவ்வளவு அருவருக்கத் தகுந்த மலத் தொட்டி ஆட்சி விஜய் தலைமையில் நிகழ்ந்து கொண்டிருக்கையில், இவற்றையெல்லாம் பாரதூரமாக விமர்சிக்க முன்வராமல், மிகப் பிரமாண்டமான ஆட்சி நிர்வாகம் என மார்தட்டி அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜய் முன்பு கூட இல்லை; ஆதவ், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைகின்றனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ‘டை’ அடிக்கும் மீசைக்காரர் – கருப்பு துண்டுக்காரர் – ‘மாபெரும் வேங்கை’ வைகோவோ, அவரது அருந்தவப் புதல்வன் துரை வைகோவோ ‘ஊழலற்ற புனிதமான ஆட்சி இது; எங்கு தேடினும் இப்படிப்பட்ட ஆட்சி கிடைக்காது; மிக மிகச் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் விஜய்; தெரியாத் தனமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம்; இல்லையேல் ராஜினாமா செய்ய வைத்திருப்போம்…’ என்று ஒரே கூப்பாடு போடுகின்றனர்.

(ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக எம்எல்ஏக்களோ வைகோவிற்கு பெரும் நாமத்தை சாத்திவிட்டனர். ராஜினாமா செய்ய மறுத்து விட்டனர்) அடுத்து, இடதுசாரிகள் எனப் பீற்றிக் கொள்வோரோ ‘எங்களுக்கு எவரும் பாடம் நடத்தத் தேவையில்லை; தமிழ்நாட்டில் பாஜக நுழைந்து விடாதபடி பாதுகாக்கவே தவெக-வை வெளியிலிருந்து ஆதரிக்கிறோம்’- என மிகக் கெட்டிக்காரத் தனமாக வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார்கள். விசிக-வின் ‘எழுச்சித் தமிழர்’ தொல் திருமாவோ ‘தேர்தலுக்கு முன்பு நான் தவெக-வைக் கணித்தது வேறு வகைக் கண்ணோட்டம்; தற்போது தவெக பாஜக எதிரி என்பதை புரிந்து கொண்டபின் எனது கண்ணோட்டம் வேறு வகையை அடைந்தது; எனினும் திமுகவும் தவெக-வும்
பாஜகவை எதிர்க்க இந்தியா கூட்டணியில் இடம்பெற வேண்டும்…’ என்று புதுப் புது பொழிப்புரைகளை ஒவ்வொரு நாளும் மாறி மாறி அறிவித்த வண்ணம் உள்ளார். அவர் ஏற்றி வைத்திருந்த பெயரை பெரிதும் கெடுத்துக் கொண்டார்.

ஐயூஎம்எல் தலைவர் காதர் முகைதீனோ ‘சிறுபான்மையினரின் மிகப் பெரும் பாதுகாவலன் விஜய்’ என்று ஓங்கிக் குரல் எழுப்புகிறார். (ஆனால் விஜய்யோ, மணிப்பூர் உட்பட நாடு முழுவதும் காவிக் கும்பல் அரங்கேற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கொலைவெறி தாக்குதல்களை – மசூதிகள் இடித்துத் தள்ளப்படுவதை – தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்படுவதை பற்றி என்றுமே வாய் திறந்ததில்லை; இவர்தான் சிறுபான்மையினர் நலன் காக்கத் துடித்துக் கொண்டிருப்பவராம்)ஏதோ திமுக விமர்சித்து விட்டது என்பதற்காக ‘மந்திரி’ வன்னியரசு, ‘நாங்க திருப்பி அடித்தாத் தாங்க மாட்டீங்க’ என்று வீரமுழக்கமிடுகிறார்.

பரவாயில்லை… பின்னவர் இருவருக்கும் ஆளுக்கொரு அமைச்சர் பதவி! அதைவிட வேறு என்ன வேண்டும்? விஜய் காலில் விழுந்து கிடந்தால் போதும்; கொள்கையாவது; கோட்பாடாவது! திமிரி எழுவதாவது; திருப்பி அடிப்பதாவது! முன்பு டாக்டர் கிருஷ்ணசாமி ஜான் பாண்டியன் ஜெகன்மூர்த்தி போன்றோரை விழுங்கி அவர்களது லட்சியங்களை நீர்த்துப் போகச் செய்த காவிக் கும்பல், தற்போது தொல் திருமாவையும் நீர்த்துப் போக செய்துவிட்டது என்பது பேருண்மை!

இவற்றில் எல்லாம் பெரிய வேடிக்கை என்னவென்றால் ஆர்எஸ்எஸ் பாஜக பெற்று போட்ட கள்ளக் குழந்தையான தவெக-வை (அதுக்கு முட்டுக் கொடுக்கும் இவர்கள் அனைவரும்) ‘பாஜக எதிர்ப்பு சக்தி’ என்று பெரும் பிம்பத்தை ஏற்படுத்தி பட்டம் சூட்டி மகிழ்வது தான்! ஆம்! ‘மலத் தொட்டி’யில் மூழ்கி முத்தெடுக்க முனைகின்றனர் தமிழ்நாட்டு வாக்கு வங்கி அரசியல்வாதிகள்! எம்ஜிஆரை சிபிஐ-யின் அன்றைய மாநிலச் செயலாளர் கல்யாண சுந்தரம் உயர்த்திப் பிடித்து சினிமா நாயகர்களுக்கு அரசியல் தளம் அமைத்துக் கொடுத்தது போல், இன்று இவர்கள் கழிசடை சினிமா நாயகன் அரசியல் அற்ற தற்குறி விஜய்யைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்! இது தமிழ்நாட்டின் மிகப் பெரும் அவலம்.

திமுகவின் போலித்தனமான நடவடிக்கைகள்!

திமுக கூட்டணியின் தோல்விக்கான காரணதங்களை ஆராய 38 பேர் கொண்ட பல்வேறு குழுக்களை அமைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஆய்வுப் பணி என்ற பெயரில் பிரித்து அனுப்பியது திமுக தலைமைக் கழகம். அதில் உருப்படியாக ஏதேனும் அறிக்கை பெறப்பட்டதா? தமிழ் நாட்டில் எந்தெந்த திமுக அமைச்சர்கள் பெரும் கொள்ளை அடித்தார்கள்? எவர் எவரால் மக்கள் மத்தியில் மிகுந்த கெட்ட பெயர்கள் உருவாகக் காரணம் ஏற்பட்டது என்ற புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டதா? அவர்கள் நீக்கப்பட்டனரா? தகுதியுள்ள பலருக்கு சட்டமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்காமல் மீண்டும் மீண்டும் பழைய நபர்களுக்கே கொடுத்தது தவறு என்று உணர்ந்தார்களா?

இளைய சமுதாயத்திற்கு வழி விட்டார்களா? கூட்டணி கட்சிகளுடன் சர்வாதிகாரத் தன்மையில் அல்லாமல் இணக்கமான முறையில் தொகுதி பங்கீடு செய்தார்களா? தேர்தல் ஆணையம், SIR, EVM, VVPAT போன்றவற்றின் தில்லு முல்லு மோசடிகளைப் பற்றி பாரதூரமான ஆய்வு நடத்தி அறிக்கை பெறப்பட்டதா? மோசடித்தனமான EVM வாக்கு இயந்திர முறையை மாற்றி பழைய வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த ஆய்வு அறிக்கை வழிகாட்டியதா? அதற்கான களப்போராட்டம் அறிவிக்கப்பட்டதா? கரூர் 41 பேர் உயிர் இழந்த சம்பவத்தில் விஜய் உட்பட அனைத்து முன்னணியாளர்களையும் அன்றே கைது செய்து சிறையில் தள்ளாமல் விட்டது தவறு என்றோ, ஏ1 குற்றவாளி விஜய் தான் என முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்வதை காவல்துறையினர் மேற்கொள்ளாமல் விட்டதற்கு போலீஸ் துறையை தன் கைவசம் வைத்திருந்த முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் என்பதை ஆய்வுக்குப் போன இடத்தில் எவருமே எடுத்து இயம்பவில்லையா?

மாறாக எந்த ஒரு கட்சித் தலைவனும் தமது தொண்டன் சாவதை விரும்ப மாட்டான் என்ற பாணியில் விஜய்க்கு நற்சான்றிதழ் வழங்கினாரே ஸ்டாலின் அது பற்றியும் ஆய்வுக் குழுவுக்கோ, தலைமைக்கோ அப்படி ஒரு தவறை செய்து விட்டோமே என்று உணரத் தலைப்படவில்லையா?… இதுபோன்ற எண்ணற்ற விடயங்களில் இம்மியளவும் அக்கறை செலுத்தாமல் இதே பாணியில் ‘திராவிட மாடல்’ – ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக்கொண்டுஅடுத்த தேர்தலில் நின்று ‘வெற்றிவாகை சூடலாம்’ என்று திமுக தரப்பு கனவு காணுமே யானால் அது பகற் கனவாகவே முடியும். திமுக 234 தொகுதிகளுக்கும் அனுப்பிய ஆய்வுக் குழுவின் அறிக்கைகளும், அதன் மூலம் தலைமையும் சொல்லிக் கொள்ளப்படும் உயர்மட்ட குழுவும் எடுத்த முடிவுகளும் வெட்டித் தனமானதே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ் – பாஜக – இந்துத்துவ காவிக் கும்பல் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்விக் கொள்கை, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று நான்கு கால் பாய்ச்சலில் விரைந்தோடி நாட்டை ‘இந்து ராஸ்ட்ரா’வாக மாற்றத் துடித்துக் கொண்டிருக்கையில் – நாசிச ஹிட்லர் பாணியில் ஒற்றை சர்வாதிகார ஆட்சியை நிறுவத் துடித்துக் கொண்டிருக்கையில், அவர்களை இப்போது இருக்கக்கூடிய பாராளுமன்ற தேர்தல் வடிவமுறையில் வீழ்த்தவே முடியாது; அனைத்துவிதத் தில்லுமுல்லு மோசடிகள் மூலம் மாநிலங்களிலும், ஒன்றியத்திலும் தொடர்ந்து காவிக் கும்பலே ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் எவருக்கும் அய்யம் எழத் தேவையில்லை.

இதை இந்தியா கூட்டணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனநாயக இயக்கங்களும் தொழிலாளர், விவசாயி, பொதுமக்கள், மாணவர், இளைஞர்கள் இயக்கங்கள் அனைத்தும் ஓரணி சேர்ந்து வீதிகளில் இறங்கிப் பெரும் கலகங்களில் ஈடுபடாமல், இந்தக் கார்ப்பரேட் காவிப் பாசிசத் துரோகிகளான ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ சங் பரிவார் கும்பலை எந்நாளும் வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனமான மறுக்கவே முடியாது பேருண்மை!

எனவே, வீதிகளில் இறங்குவோம்!  எழுச்சிமிகு கலகங்கள் புரிவோம்!
கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்துவோம்!
ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here