இந்தியாவில் நிலவும் கார்ப்பரேட் காவிப் பாசிச சூழலில் பெரும் சொத்துடைமையாளர் நலன்களுக்கான ஆட்சியே மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் நிலவுகின்றன. ஓரிரு மாநிலங்களில் காவிப் பாசிசம் தலை தூக்கப்படவில்லை என்றாலும், அதனை நோக்கிய ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் துரித நடவடிக்கைகள் குதிரை வேகப் பாய்ச்சலில் நரித்தன தில்லுமுல்லு மோசடிகள் மூலமாக முன்னேறுகிறது.

இப்படிப்பட்ட சொத்துடைமை சமுதாயத்தில் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள்,  அதன் மூலமாக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை கள் தீர்க்கப்பட்டு விடும் என்ற ‘பிரம்மை’ மக்கள் பலராலும் ‘இறைநம்பிக்கை’கள் போல், இது விடயத்திலும் மூடநம்பிக்கை களுக்கு அடிபணிந்து கிடப்பதாலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிலைமைகள் மாறப்போவதில்லை. அதனால் தான் நாம்  ஆசான் லெனின் கூறிய வார்த்தைகளான “பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்” என்பதை அடிக்கடி நினைவூட்ட வேண்டிய திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டின் நிலைமை தாங்க முடியாத அளவிற்கு மக்களைக் கொடும் துயரில் – அகலப் படு பாதாளத்தில் தள்ளிவிட்டு விட்டது. எனினும் நிலவக்கூடிய கார்ப்பரேட் மற்றும் பார்ப்பனப் பாசிச பயங்கரவாத எதிர்ப்பு என்ற அடிப் படையில் தான் இந்த பாராளுமன்ற புதை குழிக்குள் நாமும் சிக்கி கரை சேர வேண்டி உள்ளது.

அப்படிப்பட்ட காவிக் கும்பலின் தயவினைப் பெற்று, பல்வேறு விதமான வீர சாகச வார்த்தைப் பிரயோகங்களை சினிமா வசனப் பாணியில் அள்ளித் தெளித்து மக்களிடையே ஒரு கவர்ச்சியை ஈர்த்து தேர்தல் தில்லுமுல்லு மோசடிகள் மூலமாக ‘தூய சக்தி’ ‘பிதா மகன்’ ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் ஆட்சியையும் பிடித்து விட்டார்.

ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முன்பும், முதல்வராக பதவி ஏற்பு நிகழ்வின் போதும், தான் நிகழ்த்தப் போகும் சாதனை பட்டியல்களை வரிசைப்படுத்தி முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அடுத்த நிமிடமே ‘ஜூம்பூவா’ மேஜிக் பாணியில் அனைத்திலும் கையொப்பமிட்டு மக்கள் நலன்கள் – மற்றும் வரிசைப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் – சலுகைகளை வாரி வழங்கிடப் போவதாக ‘முழக்கமிட்டார் – கர்ஜித்தார்!’.

அந்த அடிப்படையில் தான் அணில் குஞ்சுகள் மட்டுமல்ல; மக்களும் ஏமாற்றம் அடைந்து வாக்குகளை அளித்தனர்; தேர்தல் ஆணைய தில்லுமுல்லு மோசடிகளும் பல்வேறு மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் அரங்கேறின. இவை பற்றி எல்லாம் நாம் ஏற்கனவே விவரித்து விளக்கியுள்ளோம்.

இப்போ என்னடான்னா…திமுக ஆட்சி 13.18 லட்சம் கோடியைக் கடன் வச்சிட்டுப் போயிடுச்சாம்…ஒப்பாரி வைக்கிறது தவெக!

இப்பொழுது ஜூன் 16-ல் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நிதி அமைச்சர் என்று சொல்லக்கூடிய மரிய வில்சன் ‘வெள்ளை அறிக்கை’ ஒன்றை தட்டுத் தடுமாறிப் படித்ததைப் பார்த்தோம். தமிழ்ப் புலமையை அவரிடமிருந்து தான் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! என்ன சொல்ல வருகிறார் என்றால் கடந்த திமுக ஆட்சி ரூ.13.18 லட்சம் கடன் வைத்து விட்டுப் போய்விட்டது; வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது வரை இல்லாத அதிகபட்ச சொந்த வரிவசூல் முயற்சி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. மூலதனச் செலவு 1.44 சதவீதமாக குறைந்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை 2.25 சதவீதத்திலிருந்து 2.22 சதவீதமாக குறைந்துள்ளது.(இது உண்மையில் சாதனையா? அல்லது வேதனையா?)இப்படி வெட்டித்தனமான புள்ளி விவரங்களையே கணித ஆசிரியர் பள்ளியில் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் தோரணையில் கணிதப் பாடம் எடுக்கிறார் மரிய வில்சன்.

என்னமோ தவெக மட்டும்தான் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட்டது போலவும், இதற்கு முன்னர் எந்த ஆட்சியாளரும் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடாதது போலவும் பாவனை காட்டுகிறது கூத்தாடி விஜய் அரசு. அப்படிப்பட்ட கடன் சுமை ஏறுவதற்கும் காரணத்தை பகுத்தாராயாமல் அல்லது பெற்ற அவ்வளவு கடன்களை எந்தெந்த வகைகளில் வீணடிக்கப்பட்டு இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை அளிக்காமல், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தராமல் ஏமாற்றிய 6.5 லட்சம் கோடி குறித்த உண்மையை மறைத்து விஜய்யின் சினிமா பாணி வசனங்கள் போல ‘வெள்ளை அறிக்கை’ எனும் ‘வெட்டி அறிக்கை-யை வெளியிட்டுள்ளார் மரிய வில்சன்.

நிதித்துறை கூடுதல் செயலாளர் சித்திக், ஐஏஎஸ் பணம் எதுவும் வீணடிக்கப்பட வில்லை என்றும், ஒன்றிய அரசு அனுமதித்து உள்ள 28 விழுக்காடுக்குக் குறைவாகவே 26 விழுக்காடுகள் மட்டுமே மாநிலக் கடன் பெறப்பட்டுள்ளது என்றும், உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். ஆக, விஜய் அரசின் ‘வெள்ளை அறிக்கை’ என்பது பிறந்த குழந்தைகளின் ‘ஆய்’ துடைக்கக்கூடப் பயன்படாது என்பதே பேருண்மை!

மேலும் படிக்க: இந்தியாவின் கடன் சுமை அதிகரிப்பும், பட்ஜெட்டில் சமூக நலத்திட்ட நிதி குறைப்பும்!

ஏன் இப்படிப்பட்ட அவலத்திற்கு விஜய் அரசு முன்வந்துள்ளது என்றால் அவர்கள் கொடுத்த பிரதான வாக்குறுதிகளான அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்துப் பயிர்க் கடன்களும் ரத்து செய்யப்படும்; மகளிர் உரிமைத்தொகை ரூ.2500/- ஆக உயர்த்தித் தரப்படும்; வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000/- வழங்கப்படும்; வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்; பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு கிராம் அளவில் தங்க மோதிரம் வழங்கப்படும்; திருமணமாக இருக்கும் இளம் பெண்களுக்கு ஒரு பவுன் மோதிரம் உட்பட அண்ணன் சீர் – மாமன் சீர் வழங்கப்படும்; தமிழ்நாடு முழுவதும் மகளிர் அனைத்துப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க சட்டம் இயற்றப்படும்; 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்; விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்; வேலைவாய்ப்பு பெருக்கெடுத்து ஓடச் செய்யப்படும்…

இப்படியெல்லாம் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை எல்லாம் சினிமா டயலாக் பாணியில் அள்ளித் தெளித்தார் அல்லவா? இப்போது அவர் எதிர்பாராத விதமாக முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்டார்; கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தகிடுதத்தம் போடும் நிலை உருவான பின் மக்கள் முன் பிரச்சனைகளை மடைமாற்றம் செய்யும் இழிந்த நோக்கில் ‘வெள்ளை அறிக்கை’ படித்து திமுக மீதே பழி சுமத்தித் தப்பித்து விடலாம் என்று பார்க்கிறது கூத்தாடி விஜய்யின் தவெக அரசு.

மேலும் விஜய் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நாள்தோறும் சிறுமிகள், பெண்கள், மூதாட்டிகள் எனப் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளில்லை; இதில் பலர் கொன்று வீசி எறியப் பட்டுள்ளனர். சிங்கப்பெண் அதிரடி படை தொடக்க விழா நடந்த மறுநாளே ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்புணர்வு செய்து முள் புதரில் வீசப்பட்டதும்

சிவகங்கையில் பெண் காவலரே கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப் பட்டதும், சேலத்தில் தவெக-வைச் சேர்ந்த மணிகண்டன் என்ற தவெக பொறுக்கி 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு நினைத்த நேரங்களில் எல்லாம் தானும் தமது கும்பலும் பாலியல் வக்கிரங்களை பெரும் பகுதி பெண்களிடம் அரங்கேற்றுவதும், மன நலம் பாதிக்கப்பட்ட பெண் போரூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதும், பூந்தமல்லியில் 7 வயது சிறுமி, திருவள்ளூரில் 7-வது படிக்கும் மாணவி, கிருஷ்ணகிரியில், தூத்துக்குடியில், ஸ்ரீவைகுண்டத்தில், மதுரையில் பெற்றோர் இல்லாத ஒரு இஸ்லாமிய இளம்பெண்… எனத் தமிழ்நாடு எங்கனும் எண்ணிலடங் காதோர் பாலியல் வன்புணர்ச்சிக்கு இலக்காகி அவை தமிழ்நாடு முழுமைக்கும் பேசு பொருளாக மாற்றப்பட்டு, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்ற சூழலில் மரிய வில்சன் இப்படிப்பட்ட திமுகவுக்கு எதிரான போலித் தனமான ‘வெள்ளை அறிக்கை’யை வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் நிலவும் பிரதான பிரச்சனைகளினின்றும் மடைமாற்றம் செய்து திசை திருப்பி மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டு இருக்கிறது விஜய் & கோ என்பதே பேருண்மை!

ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது எப்படி வீர வசனம் பேசினார் இதே விஜய்? “என்ன ஸ்டாலின் சார்? ஸ்டாலின் ப்ரோ காதில் விழுகிறதா? நாட்டில் இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கிறது; நீங்க எதுக்குங்க சார்? உங்க ஆட்சி எதுக்குங்க சார்? உங்களுக்கு CM பதவி எதுக்குங்க சார்? பதில் சொல்லுங்க சார்;  சொல்ல மாட்டீங்க; இருந்தாவுள சொல்றதுக்கு…’

அடேங்கப்பா…பொளந்து கட்டினாரா? இல்லையா? இப்பொழுது இவ்வளவு அக்கிரமங்கள் நடந்த பிறகும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேச மறுக்கிறார் இந்த பொறுப்பற்ற முதல்வர் பொறுக்கி அரசியல்வாதி விஜய்! ஊடகவியலாளர்களை சந்திக்க மறுக்கிறார் இந்த பொறுப்பற்ற முதல்வர்!

ஆறு மாதமாவது அவகாசம் வேண்டாமா?- ஊளை இடுகிறது சில குள்ளநரிக் கூட்டம்!

சரி! ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் 10 நாட்கள் தான் நிறைவடைகின்றன; ஆறு மாத கால அவகாசமாவது வேண்டாமா என்று தவெக உட்பட சில மேதாவிகள் ‘சப்பைக் கட்டு’ கட்டுகின்றனர்! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் கூறியபடி ‘பதவியில் அமர்ந்த அடுத்த நிமிடமே நிறைவேற்றுவேன்’ என்ற அண்டப் புளுகை நாம் ஓரங்கட்டி விடுவோம்! ஆறு மாதம் என்ன? ஓராண்டே எடுத்துக் கொள்ளட்டும்!

ஆனால் நாள்தோறும் நடக்கும் எண்ணற்ற பாலியல் வன்புணர்வுகள்; கொலைகள், கொள்ளைகள், குற்றச்சம்பவங்கள், ஆணவப் படு கொலைகள், மயானத் தகராறுகள், தலித் மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், தவெக-வினரே பெரும் குற்றவாளிகளாக வலம் வருதல், மொத்தத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழ்நாடே தாங்க முடியாத அளவிற்கான கொடும் சம்பவங்கள் நீடித்திருத்திக் கொண்டிருக்கும்போது… இவற்றிற்கெல்லாமா விமர்சிக்காமல் மக்களும் ஊடகங்களும் அறிவு ஜீவிகளும் வாய்களை பொத்திக்கொண்டு ஆறு மாதம் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

மேலும் படிக்க: விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும்  கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்

அப்படி விமர்சித்தால், ராகவா லாரன்ஸ் என்ற பொறுக்கி நடிகன், வாக்களித்த மக்களை நோக்கி பிரியாணிக்கும் பிஸ்கட்டுக்கும் அலையும் நாய்கள் என்று மக்களை வர்ணிக்கிறான்; மாஸ்டர் மகேந்திரன் என்ற சினிமா பொறுக்கி ‘கரண்ட் இல்லைன்னா சோலார் சிஸ்டம் வச்சுக் கரண்ட் எடுத்துக் கோன்னு’ திமிர் வாதம் பேசுகிறான். இவர்களை மக்கள் செருப்பால் அடித்தாலும் தகும். இவர்களையெல்லாம் அரசியலில் மூக்கை நுழைத்து கருத்துச் சொல்வதற்கு யார் கூப்பிட்டார்கள்? அவர்களுக்கு மக்களை பற்றிய பிரச்சனைகளில் கருத்துக் கூற என்ன தகுதி இருக்கிறது? யோக்கியதாம்சம் இருக்கிறது? ‘நடித்தோமா? காசு பார்த்தோமான்னு போய்க்கிட்டே இருக்கனும்’ – என நடிகைவேள் எம் ஆர் ராதா கூறியது போல் போய்க்கொண்டே இருக்க வேண்டும். இந்த தற்குறி வாரிசு நாய்கள். மக்களைப் பார்த்து நாய்கள் என்று கூறுவதற்கு இந்த லாரன்ஸ்க்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும்?

இதில் எல்லாம் பெரிய வேடிக்கை இப்பொழுது அணிமாற துடித்துக் கொண்டிருக்கும் ‘கருப்புப் துண்டு வேங்கை’ ‘வைகோ’விடம் ஊடகவியலாளர் நேர்காணல் மேற்கொள்கின்ற பொழுது, இளைஞர் போல டீ சர்ட் அணிந்து கொண்டு இப்படி உரத்துக் கூறுகிறார்: ‘விஜய் ஆட்சி மிகச்சிறப்பாகப் பணி புரிகிறது; எள்ளளவும் சந்தேகமே இல்லை; மிகச் சிறப்பாகவே கடமை ஆற்றுகிறது…! பாலியல் வன்கொடுமைகளா… அது எல்லா ஆட்சிக் காலத்திலும் தான் நடக்கிறது; இப்பொழுது தான் புதுசா நடப்பது போலவெல்லாம் பேசக்கூடாது…’

இப்படிப்பட்ட ஜென்மங்கள் எல்லாம் எதற்காக மீசை வைத்துக் கொள்ள வேண்டும்? கருப்பு துண்டு அணிந்து கொள்ள வேண்டும்? பெரியார் அண்ணா படத்தை கையில் ஏந்தி கேவலம் ஆதவ் அர்ஜுனாவுடன் கரம் பற்றி குலாவ வேண்டும்? மொத்தத்தில் எதற்காக இதுகளுக்கு அரசியல் வேண்டும்? பட்டவரத்தனமாக தாம் ஒரு பிழைப்புவாதி என்பதனை தாம் மட்டுமல்ல; தமது மகன் துரை வைகோவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! ஏற்கனவே கட்சி கரைந்து விட்டது. அனேகமாக குதிரைப் பேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தாவுவது போல் ‘மதிமுக’-வும் தவெக-வில் இணைந்து அதன் மூலம் காவிக் கூட்டத்தில் கரையத்தான் போகிறார்கள்.

‘விஜய்’ அரசின் ‘வெள்ளை அறிக்கை’யைப் பிறந்த குழந்தைகளின் ‘ஆய்’ துடைக்கக் கூடப் பயன்படுத்த முடியாது…!

ஸ்டாலின் 2021-ல் முதல்வர் பொறுப்பு ஏற்கின்ற பொழுது ஏற்கனவே எடப்பாடி வைத்து விட்டுப் போன பல லட்சம் கோடி கடன் சுமையோடு தான் பதவி ஏற்றார்; வட்டிகளையும் கட்டினார். ஒன்றிய மோடி அரசு இன்று தேதியில் வைத்திருக்கக் கூடிய கடன் ரூ. 200 லட்சம் கோடியைத் தாண்டுகிறது. இந்தியாவில் பல லட்சம் கோடி கடன் பெற்று ஆட்சி நடத்தாத எந்த மாநிலமும் கிடையாது.

அவரவர்கள் கண்ணோட்டத்தில் செயல் படுத்துகின்ற ‘மக்கள் நலத்திட்டங்கள்’-க்காக கடன் பெறுகின்றனர். மறுகாலனியாக்கக் கொள்கைக் காரணமாக கார்ப்பரேட்டுகளுக்கு வாரியிறக்கப்படும் சலுகைகள் மட்டும் கணக்கில் வராது; அது விவாதப் பொருளும் ஆகாது.

டெல்லியில் மோடி தலைமையில் நிகழ்ந்த விஜய் கலந்து கொண்ட முதல் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி குறித்தும், பெண்கள் வேலை வாய்ப்பு குறித்தும், மாநிலத்தில் நடைபெறு கின்ற கல்வி உட்பட பல்வேறு விதமான நலத் திட்டங்கள் குறித்தும், இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 2-வது இடத்தைப் பெற்றிருப்பது குறித்தும் நீட்டி முழக்கிப் பேசியவர் முதல்வர் விஜய். நம்மைப் பொருத்தமட்டில் இவற்றையெல்லாம் நாம் பெரும் சாதனைகளாக எடுத்துக் கொள்வதில்லை.

எனினும் இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையிலான இப்படிப்பட்ட நிர்வாக ஒப்பீட்டு முறையில் மற்ற ஏனைய மாநிலங்களை விட தமிழ்நாடு மற்றும் கேரளா வளர்ச்சி அடைந்த மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளதை மறுக்க இயலாது. தமிழ்நாட்டின் சாதனைகளை இந்த அளவிற்கு புகழ்ந்து தள்ளி விஜய் பேசியதற்கு முந்தைய திமுக அரசின் உழைப்பும் பங்கிடும் தானே காரணம்?

ஒன்றிய அரசிடமிருந்து பல்வேறு திட்டப் பணிகளுக்காக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிதிகள் பலவற்றை ஸ்டாலினின் திமுக அரசு மும்மொழித் திட்டத்தை ஏற்க மறுத்ததாலும், INDIA கூட்டணியில் இணைந்து நின்று ஒன்றிய அரசின் பாசிசப் போக்குகளை எதிர்த்து நிற்பதில் முன்னணி பாத்திரம் வகித்ததாலும், பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை (De-Limitation) மசோவைத் தோற்கடிக்க முன்னணிப் பாத்திரம் வகித்ததாலும், திருப்பரங்குன்றத்தில் ஆர்எஸ்எஸ் பாஜக உணர்வுகள் மற்றும் கலவரக் ‘கொள்கை’த் திட்டங்களுக்கு இசைந்து தர்கா இடத்தில்கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்ததாலும்…

இப்படிப்பட்ட பல்வேறு ஒன்றிய அரசின் அராஜக நடவடிகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வந்ததால் மோடி அரசால் பேரிடர் நிதி ரூபாய் 37,000 கோடி , மும்மொழி திட்டத்தை ஏற்க மறுத்ததால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பர்தான் தர மறுத்த கல்வி நிதி 3000 கோடி ரூபாய், சென்னை மெட்ரோ வளர்ச்சித் திட்டப் பணி களுக்காக தர மறுத்த பல்லாயிரம் கோடி ரூபாய், ஜிஎஸ்டி பங்களிப்பு என இதுபோன்ற தொகை ரூ. 6.5 லட்சம் கோடிக்கு மேலாக ஒன்றிய பாஜக மோடி அரசு தமிழகத்திற்கு தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கக் கூடிய இழி செயலுக்கு எதிராகப் போர்ப் பரணி பாடுங்கள்; ‘கொள்கை எதிரி’க்கு எதிரான போராட்ட வியூகம் அமையுங்கள் விஜய் அவர்களே! வெற்று வெள்ளை அறிக்கை மக்களுக்கு நாக்கு வழிக்கக்கூடப் பயன்படாது!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here