லக மேலாதிக்க போட்டியில் பனிப்போர் காலத்திற்குப் பிறகு பின்னடைவை சந்தித்து வந்த ரசிய சமூக ஏகாதிபத்தியம் 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு மீண்டும் தன்னை உயிர்பித்துக் கொண்டு எழுந்துள்ளது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் வளர்ந்து வருகிறது.

தோழர் ஸ்டாலின் மறைவுக்கு பின்னர் தனது சோசலிசக் கொள்கைகளை கைவிட்டு படிப்படியாக உலக மேலாதிக்க போட்டியில் அமெரிக்க மேல்நிலை வல்லரசுடன் முன்னிலை வகித்து வந்த ரஷ்யா, தனது ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாகவே சுரண்டலற்ற, சமத்துவ ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு சோவியத் யூனியன் கூட்டமைப்பில் இருந்த சக 15 நாடுகளை சுரண்டுவதற்கு துவங்கியது. இதன் காரணமாகவே 90 ஆம் ஆண்டுகளில் சோவியத் அதிகாரப்பூர்வமாக சிதைவுற்றது.

ஏற்கனவே சோவியத் ஒன்றியமாக இருந்தபோது சுயசார்பு பொருளாதாரத்தில் இருந்த ரஷ்யா அதன் பிறகு கடைப்பிடித்த பொருளாதார கொள்கைகளின் காரணமாக ஏற்பட்ட கடன்கள் அனைத்தையும் படிப்படியாக அடைத்து வருகிறது. தற்போதைய நிலையில் 306.10 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக உள்ள போதும், உலக மேலாதிக்க போட்டியில் அமெரிக்க மேல்நிலை வல்லரசுடன் போட்டியிடுவதற்கு தயாராகி உள்ளது.

நேட்டோவில் இணைவதற்கு தயாரான உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை தொடுக்க துவங்கியது. கடந்த இரண்டாண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா.

அமெரிக்காவுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உலக பொருளாதாரத்தில் அதாவது GDP-யில் 35 சதவீதத்தை கட்டுப்படுத்துகிறது. தற்போது உலகை சூறையாடி வரும் G7 நாடுகளின் பொருளாதாரம் GDP-யில் 30 சதவீதமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சூழலில் ஆகஸ்டு 2024 உக்ரைன் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் இரு நாடுகளின் தூதுக் குழுக்களுடனும் உரையாடினர். அப்போது பேசிய நரேந்திர மோடி, “பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

உக்ரைனும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதன்மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும். அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இந்த மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கம் முதலே அது ஒரு பக்கம் இருக்கிறது. அது அமைதியின் பக்கம். இந்த மோதலில் முதல் உயிரிழப்பு ஒரு குழந்தை என்பது மனதை வேதனைப்படுத்துகிறது” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது இந்தியா – உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள விவாதங்களை நடத்தினேன். உக்ரைனுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. விவசாயம், தொழில்நுட்பம், மருந்து மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை நாங்கள் விவாதித்தோம். கலாச்சார இணைப்புகளை மேலும் உறுதிப்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். மோதல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம். அமைதி காக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது. அமைதியான முறையில் மோதலுக்கு தீர்வு காண்பதே மனிதகுலத்துக்குச் சிறந்தது” என பதிவிட்டுள்ளார்

ரஷ்யா-உக்ரைன் இரு நாடுகளுக்கும் மேலே நின்று நாட்டாமை செய்ய முயன்ற மோடியின் நடவடிக்கை குறித்து சங்கி கும்பல் குதியாட்டம் போட்டது. இவ்வாறு நடந்து ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து இந்தியாவின் பாதுகாப்புத் துறை செயலாளர் அஜித் தோவல் மன்னிப்பு கேட்டதுடன் பம்மி பதுங்கியுள்ளார் என்பதைதான் கீழே உள்ள காணொளி சுட்டிக்காட்டுகிறது.

உலகப் பொருளாதாரத்தில் இரண்டு ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் 11 வது இடத்தில் உள்ள ரஷ்யாவிடம் ஐந்தாவது பொருளாதாரம் ஆக உயர்ந்துள்ள இந்தியா பின்வாங்குவதற்கு காரணம் என்ன?

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ரஷ்யாவில் ‘மாருசியர்கள்’ தான் பெரும்பான்மை தேசிய இனம் என்ற இனப் பெருமிதமும், பிற தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு உரிமையும் தங்களுக்கு உள்ளது என்ற திட்டத்தை முன்வைத்து மீண்டும் ரஷ்யா கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த வேலையில் 2000ம் ஆண்டு முதல் ரஷ்யாவை ஆண்டு வருகின்ற புதின் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரே ஒரு பாசிச குணம் கொண்டவர் என்பதும், தயங்காமல் போர் நடத்த துணிந்தவர் என்பதும் இந்தியாவை அச்சுறுத்தியுள்ளது. இதனால் தான் மோடி-அமித்ஷா- அஜித் தோவல் முக்கூட்டு ரசியாவிடம் சரணடைந்துள்ளது.

கோவையில் ஜிஎஸ்டி குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் யதார்த்தமாக சில கேள்விகளை கேட்டிருந்தார்.

அதாவது “ பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம், ஜாமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. கிச்சனுக்கு வரும் இன்புட் அதிகாரிகளும் திணறுகிறார்கள். ஒன்று ஒரே மாதிர ஜிஎஸ்டி வைங்க. வரியை ஏற்றிவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி குழப்பம் வேண்டாம் என பேசினார்.

படிக்க:

♦ ரஷ்யா உக்ரைன் மோதல் 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது!

♦ உக்ரைன் ஆக்கிரமிப்பு – ஏகாதிபத்தியங்களுகிடையிலான யுத்தம்!

அவர் பேசியதைக் கண்டு மற்ற தொழிலதிபர்கள் அனைவரும் சிரித்தனர். இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ”இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் கவலைப்படுவதில்லை” என கொக்கரித்தார். பொது வெளியில் தனது இமேஜ் சந்தி சிரித்ததைக் கண்ட நிர்மலா அந்த தொழிலதிபரை வரவழைத்து மிரட்டியுள்ளனர்.

அது தொடர்பாக வெளியான காணொளியில், நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் ஆகியோரை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் சந்தித்து கை கூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார். அதிலும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று மன்னிப்பு கேட்டார். மேலும் நான் எந்த கட்சியிலும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியதாக பாஜகவினர் பரப்பத் துவங்கினர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதும் நாங்களாக அவரை அழைக்கவில்லை, மிரட்டவும் இல்லை. மாறாக அவரே பலமுறை போன் செய்து தான் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க போவதாக கூறினார் என்று அந்த தொகுதியின் எம்எல்ஏவான வானதி திருவாய் மலர்ந்துள்ளார்.

ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறுகுறி தொழில்களின் தாலியறுத்து வரும் பாசிச பாஜக, அதற்கு எதிராக போராடுபவர்களை கடுமையாக ஒடுக்குகிறது என்பது மட்டுமின்றி, போலியாக பல்வேறு மாநிலங்களில் இது போன்று சந்திப்புகளை நடத்தி ஏய்த்து வருகிறது என்பதும் இதன் மூலம் அம்பலமாகிறது.

இந்திய ஒன்றிய ஆளுகையின் கீழ் ஒடுக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தைச் சேர்ந்த சிறு தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் இது போன்ற கேள்வியை எழுப்பியத்துடன் ஆத்திரமடைந்து மன்னிப்பு கேட்க வைத்த இதே ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் தான் ரஷ்ய அதிபர் புதினிடம் பம்மிப் பதுங்குகிறது.

எஜமானர்களிடம் அடிமைத்தனமாக மன்னிப்பு கேட்பதும், கோழைத்தனமாக காலில் விழுவதும், தனது ஆட்சியின் கீழ் உள்ளவர்களை மூர்க்கத்தனமாக நசுக்குவதும் பாசிச பாஜகவின் இரட்டை குணாம்சமாக உள்ளது.

சிறு தொழிலதிபர்கள் மீது மட்டுமல்ல, மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள் என்று ஒவ்வொருவராக தாக்குதலை தொடுத்து வருகின்றது இதனை எதிர்த்து முறியடிக்க சில, சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாசிச பாஜகவை முற்றாக வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கருத்துடன் ஒரே ஈட்டி முனையாக ஒன்றிணைந்து பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தில் களம் காண்போம்.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here