நக்சல்பாரி அரசியல் களத்தில் முன்னணியாக நின்று போராடி வருகின்ற மாவட்டங்களில் ஒன்று தர்மபுரி. அந்த மாவட்டத்தில் நக்சல்பாரி அரசியல் அறிமுகமான காலகட்டத்தில் இடது சாகச வழிமுறைகளை நிராகரித்து மக்கள் திரள் வழி என்ற அரசியலை முன்வைத்த எமது அமைப்புகளில் இணைந்து செயல்பட துவங்கியவர் தான் தோழர் ராமன் ஆசிரியர் அவர்கள்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த தோழர் ராமன் அவர்கள் விவசாயிகளின் விவசாய புரட்சியை முன்வைத்த புதிய ஜனநாயக அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், அதற்கு பொருத்தமான மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கும் முன்னணியாக நின்று செயல்பட்டார்.
நக்சல்பாரி அரசியலை பேசினாலும், எழுதினாலும், அந்த அமைப்புகளில் செயல்பட்டாலும் கடுமையான அடக்குமுறைகள் நிகழ்ந்த தமிழ்நாட்டில் அதற்கு அஞ்சாமல் சிறைவாசத்தையும் எதிர்கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் சென்ற தோழர்களில் முக்கியமானவர் தோழர் ராமன் ஆசிரியர்.
வால்டர் தேவாரத்தின் தலைமையில் போலீஸ் படை கடுமையான அடக்குமுறைகளை ஏவிய போதிலும் அந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நின்ற தோழர் ராமன், அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் புரட்சிகர அரசியலில் ஈடுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சிகர அரசியலுக்கு வருகின்ற பலர் தான் மட்டும் அமைப்பில் செயல்படுவது, தனது பெண்டு, பிள்ளைகளை உத்தரவாதமான வாழ்க்கை முறையில் வளர்ப்பது என்பதற்கு மாறாக தனது பிள்ளைகள் நக்சல்பாரி அரசியலில் முழு நேர பணியாளர்களாக செயல்படுவதற்கு ஏற்றுக்கொண்டும், வழக்கறிஞர், மருத்துவர், ஆசிரியர் என பிற துறைகளில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்கின்ற வகையில் தனது வாரிசுகளை வளர்த்த முன்னுதாரணமிக்க தோழர் தான் ஆசிரியர் ராமன் அவர்கள்.
விவசாயிகளின் விவசாய புரட்சியை மையமாகக் கொண்ட புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கு தனது வாழ்நாளில் முக்கிய பங்களிப்புகளை செலுத்திய தோழர் ராமன் தனது 89 ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக 23.11.2026 அன்று இயற்கை எய்தினார்.
தோழரின் முன்னுதாரணமிக்க வாழ்க்கை நமக்கு பாடமாக அமையட்டும்! அவரது வாழ்நாள் கனவான புதிய ஜனநாயகப் புரட்சி பாதையில் முன்னேறி செல்வதன் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்!
தோழர் ராமன் ஆசிரியர் அவர்களுக்கு எமது சிவப்பஞ்சலி!
தோழமையுடன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி.
தர்மபுரி மாவட்டம்.






