
அமெரிக்கா வின் வீதிகள் எங்கும் பற்றி எரிகிறது. அமெரிக்காவின் கொடிகள் போராட்ட களத்தில் உள்ளவர்களால் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தொழிலாளர்கள் முதல் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள் வரை ஓரணியில் திரண்டு அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு எதிராக முழங்கி வருகின்றனர்.
ராணுவத்தை களமிறக்குவேன் என்று கொக்கரித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ராணுவத்தின் 250 ம் ஆண்டு விழாவில் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பேசிய போது ‘‘லாஸ் ஏஞ்சல்சில் போராட்டம் நடத்துபவர்கள் அமெரிக்க கொடியை தீயிட்டு எரிக்கிறார்கள். வேறொரு நாட்டு கொடியை பெருமையுடன் ஏந்திச் செல்கிறார்கள். அமெரிக்க கொடியை எரிப்பவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல. அவர்கள் மிருகங்கள். அப்படிப்பட்டவர்களை ஓராண்டு சிறையில் தள்ள நடவடிக்கை எடுப்போம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வெளிநாட்டு எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வெறும் குப்பை குவியல்கள் தான் அங்கு உள்ளன. கலிபோர்னியா ஆளுநர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் போன்றவர்கள் பொய்யர்களாக இருக்கிறார்கள்.” என்று அமெரிக்க அதிபர் ஊளையிட்டு வருகிறார்.
சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்படுவதை எதிர்த்து லாஸ் ஏஞ்சல்சில் தொடங்கிய போராட்டம் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது. தலைநகர் வாஷிங்டன் உட்பட பல நகரங்களிலும் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க (ஐசிஇ) துறையின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க சட்டத்தை கடுமையாக்கினார். இதன்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த 6ம் தேதி, குடியேற்றம் மற்றும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்சில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்த அவர்கள் உரிய ஆவணம் இல்லாத மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 118 வெளிநாட்டவர்களை கைது செய்தனர். தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்சில் போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தை ஒடுக்க அதிபர் டிரம்ப் மாகாண ஆளுநர் உள்ளிட்டோரிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல், தன்னிச்சையாக தேசிய காவல் படை மற்றும் கடற்படை வீரர்களை களமிறக்கினார்.
இவ்விரு படைகளை சேர்ந்த 4,000 வீரர்கள் லாஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தை ஒடுக்க குவிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளப்படுகின்ற அமெரிக்காவில் குடியேற்றம் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்படுவது நாடு கடத்தப்படுவது ஆகியவற்றின் காரணமாக கொந்தளிக்கின்ற மக்களின் போராட்டத் தீ அமெரிக்கா முழுவதும் பற்றி பரவி உள்ளது.
படிக்க:
🔰 அமெரிக்கா ஆரம்பித்துள்ள வரிப் போர்- வஞ்சிக்கப்படும் வளரும் நாடுகள்!
🔰 அமெரிக்காவில் பாலஸ்தீன மாணவர் கைது! குடியுரிமையை ரத்து செய்த ட்ரம்ப்!
அமெரிக்க பயங்கரவாதி உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளே புகுந்து இனக்கலவரங்கள், மதக்கலவரங்கள் முதல் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளின் மூலமாக உருவாக்கப்படுகின்ற வன்முறைகள், கலவரங்கள் ஆகியவற்றை தூண்டிவிட்டு தன்னை மட்டும் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் இந்தப் போராட்டம் பரவியுள்ளது.
இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே எதிர் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பாசிச பயங்கரவாதியான ட்ரம்ப் ஆப்கானிஸ்தான், சாட், எரித்திரியா, எக்குவடோரியல் கினியா, ஹைட்டி, ஈரான், லிபியா, மியான்மர், காங்கோ குடியரசு, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 12 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நாடுகளின் மக்கள் மீது உலகின் மிகப்பெரும் பயங்கரவாதியான பாசிச ட்ரம்ப் நடத்துகின்ற தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடுமையான கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் வீதிகளில் நடக்கின்ற போராட்டங்கள் உலகை தனது பாசிச கொடுங்கரத்தின் கீழ் வைத்து ரசித்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் முகத்திரையை கிழித்துள்ளது.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல் உலகின் மிகப் பெரும் பணக்காரனான எலன் மஸ்க் கூட்டணியுடன் சேர்ந்து மக்கள் மீது நடத்தி வந்த பல்வேறு தாக்குதல்கள் தற்போது குடியேற்ற சட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைப்பாளிகள் அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தக்கூடிய போராட்டங்களை ஆதரிக்க வேண்டியது உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்க இயக்கத்தினருக்கும் கம்யூனிஸ்டிகளுக்கும் கடமையாகும்.
உலகை சூறையாடி கொழுத்து திரிகின்ற அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் உழைப்பாளி மக்கள் நடத்துகின்ற இந்த போராட்டம் வெற்றி பெற நாமும் அமெரிக்க மக்களுடன் இணைந்து போராட்ட களத்தில் ஒன்றிணைவோம்.
◾ஆல்பர்ட்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






