கும்பமேளா மரணத்தில் பொய் கணக்கு காட்டிய பாசிச பாஜக! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பிபிசி!

கும்பமேளாவில் குறைந்தது 82 பேர் (இதைவிட அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது) இறந்ததற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது

1

த்தரபிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி மாதம் நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததாக உத்திரபிரதேச பாஜக அரசு அறிவித்தது. மௌனி அமாவாசை அன்று நான்கு இடங்களில் நடந்த நெரிசல் சம்பவங்களில் இந்த கொடுமை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நமது மக்கள் அதிகாரம் இணையதளத்திலும் எழுதி இருந்தோம். 37 பேர் இறந்ததாக அரசு காட்டும் கணக்கு தவறானது என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அம்பலப்படுத்தி எழுதி இருந்தோம். கவுண்டர்கரண்ட் செய்தி நிறுவனம் அப்போதே 40-க்கும் மேற்பட்டவர்கள் பிணவறையில் வைக்கப்பட்டிருந்ததாக செய்தி வெளியிட்டது. அது உண்மை என தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.

BBC யின் செய்தி பின்வருமாறு கூறி உள்ளது: “உத்தரபிரதேச அரசின் கூற்றுப்படி கூட்ட நெரிசலில் 37 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. BBC நடத்திய விரிவான புலனாய்வில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 82 பேர் இறந்ததாக தெரியவந்துள்ளது. இது போன்ற 26 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரொக்க தொகைகள் வழங்கப்பட்டதை BBC கண்டறிந்தது. ஆனால் அவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை” என BBC தமிழ் செய்தி கூறுகிறது.

கும்பமேளா அரசியலில் மறைக்கப்பட்ட உண்மைகள்!

ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற இந்த கும்பமேளாவை 66 கோடி பேர் பார்வையிட்டதாக யோகி அரசு தெரிவித்தது. இந்த 45 நாள் நிகழ்விற்கு 7000 கோடி செலவிட்டது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ‘புனித நீராடல்’ விளம்பரம் செய்யப்பட்டது. இந்திய ரயில்வேயின் சார்பாக சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. அம்பானி முதல் அமித் ஷா வரை நீராடிச் சென்றதை வட இந்திய கார்ப்பரேட் மீடியாக்கள் காட்சிப்படுத்தினர். இப்படியாக காவி கும்பலால் இது வெற்றி அடைந்த நிகழ்வாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதில் சிக்கி கூட்ட நெரிசல் மரணம் காணாமல் போனது.

இந்தியாவில் நிலவும் கடுமையான ஏற்றத்தாழ்வு கும்பமேளாவிலும் வெளிப்பட்டது. பணம் படைத்தவர்களுக்கு ஏற்ப வசதி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. குளிக்கும் இடம் வரை தனித்தனியாக அமைக்கப்பட்டன. விளம்பரங்கள் மூலம் கார்ப்பரேட்டுகளும் லட்சம் கோடிக்கு கல்லா கட்டியது.

படிக்க:

🔰 பார்ப்பன மதத்தின் மூடநம்பிக்கையின் விளைவே கும்பமேளா உயிர் பலி!

🔰 மகா கும்பமேளா: மக்கள் வரிப்பணத்தில் மூடத்தனத்தை வளர்க்கும் பாஜக அரசு!

இந்த கும்பமேளாவை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். – பாஜக தனது மைய அரசியலான இஸ்லாமிய வெறுப்பையும் மக்களிடம் பரப்பியது. கும்பமேளாவிற்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலத்தில் நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் பலியானதும் நடைபெற்றது. ரயில்களில் இடம் கிடைக்காமல் ரயில் பெட்டிகள் சூறையாடப்பட்டது நடந்தது.

கும்பமேளா நெரிசல் மரணம், டெல்லி ரயில் நிலையத்தில் இடம் பிடிக்க ஏற்பட்ட நெரிசல் மரணம், ரயில் பெட்டிகள் சூறையாடப்பட்டது என இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மகா கும்பமேளாவை வெற்றி விழாவாக கொண்டாடிய இரக்கமற்ற பாசிஸ்டுகள், தன் அரசியல் நோக்கம் நிறைவேறியதற்காக பெருமை கொள்கிறார்கள்.

கட்டாயப்படுத்தப்பட்ட இறந்தவர்களின் குடும்பங்கள்!

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் தான் இறந்ததாக சாமியார் யோகி ஆதித்தியநாத் அரசு பொய்கணக்கு காட்டினாலும் ஊடகங்களும் இந்த பொய்யை உடைக்க முன்வரவில்லை. தற்போது பிபிசியின் இந்த ஆய்வு பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தியது பாராட்டக் கூடியது.

கும்பமேளாவில் குறைந்தது 82 பேர் (இதைவிட அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது) இறந்ததற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது

பல குடும்பங்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக பிபிசியிடம் தெரிவித்தனர். அதில் ‘திடீரென உடல்நலக்குறைவு’ காரணமாக மரணம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான 26 குடும்பங்களிடம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் ஒப்படைவதற்கான காணொளி புகைப்பட ஆதாரங்களையும் பிபிசி வைத்துள்ளது. உடல்நிலை குறைவால் இறந்தவர்களுக்கு 5 லட்சம் வழங்க வேண்டிய அவசியம் என்ன. 26 பேருக்கு வழங்கிய மொத்த தொகையான ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் எங்கிருந்து வந்தது என்ற விவரம் இல்லை என்று கூறுகிறது BBC.

இவையெல்லாம் 19 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஜனவரி 29 அன்று கும்பமேளாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக உறவினர்கள் கூறுகிறார்கள். அவர்களிடம் பிரேத பரிசோதனை அறிக்கை, பிணவறையில் அளிக்கப்பட்ட ஸ்லீப்கள், சிலர் இறப்புச் சான்றிதழும் வைத்துள்ளார்கள்
ஆனால் இவர்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என பி பி சி யின் புலனாய்வு கூறுகிறது. இந்த கூட்ட நெரிசல் மரணங்களை மூன்று வகையாக பிரித்துள்ளது BBC ஆய்வு. இதில் முதல் வகை ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளது. இரண்டாம் வகை ரூ.5 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது வகையில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

காவி பாசிஸ்டுகள் தனது இந்துராஷ்டிர அரசியலுக்காக கொலை செய்ய துணிந்தவர்கள் பொய் சொல்லவா தயங்க போகிறார்கள். ஆனால் பறிபோனது என்னவோ அப்பாவி மக்களின் உயிர் கேள்வி இயலாததால் தானே 19 பேரின் குடும்பம் நிர்கதியாய் நிற்கிறது. கொரோனா மரணத்தின் எண்ணிக்கையை குறைத்ததும் பலரின் உடலை நதிக்கரையில் புதைத்தும் இதே பாசிச அரசு தானே. உபி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் பல குழந்தைகளை கொன்றதும் இவர்கள் தானே.

பாசிச கும்பலுக்கு இஸ்லாமியர்கள் மட்டும் பிரச்சினை இல்லை. உழைக்கும் வர்க்கம் தான் முதல் எதிரி. ஆனால் பாதிக்கப்படுகின்ற மக்கள் கும்பமேளா போன்ற மதநிகழ்ச்சிகளின் மூலம் குருடர்களாக்கப்படுகிறார்கள். மக்கள் மத மாயையிலிருந்து மீண்டு பாசிஸ்டுகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

  • நந்தன்

BBCயின் முழு ஆய்வு செய்தி: https://www.bbc.com/tamil/extra/r5kwsfwfez/kumbh_deaths_during_crush_tamil

1 COMMENT

  1. பாசிஸ்டுகள் மற்ற மதத்தினற்க்கு மட்டும் எதிரானவர்கள் இல்லை இந்து மதத்திற்க்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்கள் என்பதையும் முதலாளிகளுக்கு விசுவாசிகள் என்பதையும் இந்த கட்டுரை தெளிவாக புரியவைத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here