தேசீயப் புலனாய்வு  முகமை ( NIA ) ,  கடந்த ஏப்ரல்14 அன்று  டாக்டர். ஆனந்த் தெல்தும்டே – வைக் கைது  செய்தது.  பொய்க் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில்  ஆனந்த்  ஒருவர்.

ஆனந்த் பிணையில் வெளியேவர உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததை தேசீய புலனாய்வு முகமை ( NIA ) மறுக்கக் கோரியது. ‘UAPAவில் வழக்கைப்போட்டதும் இப்போது பிணைமறுக்கக் கோருவதும் என்ன காரணங்களால்? என்று தனக்கு விளங்கவில்லை ‘என்றார் சுமார் 31 மாத இருட்சிறையிலிருந்து வெளியே வந்துள்ள ஆனந்த்.

கடந்த நவம்பர் 18 – ல் மும்பை உயர்நீதிமன்றம் ஆனந்துக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது .அதை உச்சநீதிமன்றத்தில்  தேசீய புலனாய்வு முகமை ( NIA )  எதிர்த்தது. ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்து அவரை விடுவிக்க உத்தரவிட்டது . தேசீய புலனாய்வு முகமை( NIA ) – யின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து

இவ்வாறு முடிவை அறிவித்தது : ” ‘சிறப்பு விடுப்பு மனு ‘ வைத் தள்ளுபடி செய்கிறேன்.ஆனால்   இதை சம்பந்தப்பட்ட வழக்கின் இறுதி முடிவாக  எடுத்துக்கொள்ளக்கூடாது”.

ஏப்ரல் 14 , 2022 அன்று கல்வியாளரும் சமூக அரசியல் செயல்பாட்டாளருமான டாக்டர். ஆனந்தை தேசீய புலனாய்வு முகமை ( NIA ) கைது செய்தது. வழக்கு என்ன ? “2017 டிசம்பரில்  பீமா கோரேகாவ் (ன்) எல்கர் பரிஷத் நிகழ்வு நடந்ததை ஒட்டி சனவரி 2018-ல் கலவரம் வெடித்தது. நிகழ்ச்சியில் ஆனந்த் பேசிய கொதிப்பான பேச்சை ஒட்டித்தான் சனவரி 1 – ல் கலவரம் வெடித்திருக்கிறது. எனவே, ஆனந்த் கைது செய்யப்படவேண்டும். ” இப்படித்தான்  தொடங்கியது அப் பொய்வழக்கு.

பிணை கோரியபோது  ஆனந்தின்  தரப்பு வழக்குரைஞர் மிகிர் தேசாய் , ” ஆனந்த் தெல்தும்டேவுக்கு எதிராகப் பதியப்பட்ட குற்றப் பத்திரிக்கையில் எந்த ஒரு ‘பயங்கரவாதச் ‘ செயல்பற்றிய காரணங்களும் அவர்மீது சாட்டப்படவில்லை.

UAPA – ல் கைதான அவருக்குப் பிணை வழங்கவேண்டும் ”  என்று வாதிட்டார்;   மிகிர்தேசாய் மேலும் குறிப்பிட்டார்:

“கல்வியாளரான ஆனந்த் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடக்கும் பல்வேறு மாநாடுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று  அழைக்கிறார்கள். அவ்வாறு கலந்துகொள்வதே குற்றச்செயல் ( Crime ) ஆகிவிடாது”.

குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேரில் மூன்றாவது நபர் ஆனந்த்; தெலுகு கவி வரவரராவுக்கு உடல்நலச் சுகவீனம் காரணமாகப் பிணை கோரப்பட்டபோது உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்டில் விடுதலை செய்யப்பட்டார்; கடந்த ஆண்டு டிசம்பரில்  வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் விடுதலையானார்;  நவம்பர் 19 அன்று சமூக அரசியல் செயல்பாட்டாளரான கவுதம் நவ்லகா  சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் தேசீய புலனாய்வு முகமையின்  கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியதை நினைவுபடுத்திக் கொள்க.


இதையும் படியுங்கள்: ஆனந்த் டெல்டும்டேவின் சிறை வாழ்வின் இரண்டாண்டு நிறைவு: அம்பேத்கர் பேத்தியின் உருக்கமான கடிதம்!


எல்கர் பரிஷத் வழக்கில் UAPA – ன்கீழ் ‘ குற்றம் சாட்டப்பட்ட ‘ மற்ற மூவர் இன்னமும் சிறையில் உள்ளார்கள். அவர்கள் வெர்னோன் கான்சால்வஸ், ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங்  ஆகிய சமூக அரசியல் செயல்பாட்டாளர்கள்.

பல்வேறு கட்டங்களில் ஆளும்வர்க்க ஆட்சியின்கீழ்  பலவித அடக்குமுறை ஆள்தூக்கிச் சட்டங்களின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களின் துயரங்கள் பல;  குறிப்பாக, UAPA – ன்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களின்  உரிமைக்காகப் போராடிய, போராடிவரும்  எண்ணற்ற உரிமைப் போராளிகளும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  இவர்கள் அனைவரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்!

மூலம் : கவுரி லங்கேஷ் செய்திப்பிரிவு

ஆக்கம் : இராசவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here