டாலரின் ஆதிக்கம் இருப்பதால், அமெரிக்கா விரைவில் மீண்டு விடக்கூடும். பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு அந்த நாடுகளை கடுமையாக பாதிக்கும்.

மீபத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதித்துள்ள இறக்குமதி வரிகள் மிகவும் அதிகமானவை என்றார். இந்தியாவை “வரி ராஜா” என்றும் வர்த்தக உறவுகளை “அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யும் நாடு”என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல சீனாவுக்கு எதிராகவும் இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது.

இது பற்றி பரிசீலிப்பதற்கு முன்பு சற்று வரலாற்றை பின்னோக்கி பார்ப்போம். இன்றைய உலகம் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் மற்றும் பிந்தங்கிய நாடுகள் எனப் பிளவுபட்டு கிடக்கிறது. வளர்ந்த நாடுகளைத் தவிர பெரும்பாலானவை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு காரணமாக காலனிய நாடுகளாக இருந்தன.

பறிக்கப்பட்ட பொருளாதார சுதந்திரம்!

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஏராளமான காலனித்துவ நாடுகள் பெயரளவில் அரசியல் சுதந்திரம் அடைந்தன. இருப்பினும் பொருளாதார சுதந்திரத்தைப் பெற முடியவில்லை. ஆரம்பகட்டத்தில் அவை கடன் வாங்கக்கூடிய சார்பு நிலைக்கு தள்ளப்பட்டன. எனவே கடன் வழங்கும் நாடுகளிடம் இணங்கிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இது ஒரு யதார்த்த நிலையாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பெரும்பாலான நாடுகள் சுய சார்பாக வளர்வதற்கான வளங்களைப் பெற்றிருக்கவில்லை. எனவே பொருளாதார ரீதியாக உதவியோ அல்லது கடனோ வழங்கிய நாடுகளின் அறிவுரைப்படியே அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்ற வேண்டிய சார்பு நிலை ஏற்பட்டது.

சார்பு நிலையில் இருந்து கீழ்ப்படியும் நிலைக்கு மாற்றம்!

“முதலாளித்துவத்தின் பொற்காலம்” என்று அழைக்கப்பட்ட 1970-களின் பிற்பகுதியில் கட்டுப்பாடுகள் இன்னும் கூடுதல் தீவிரத்தன்மையுடன் இருந்தன. அதன் பிறகு தாராளமயமாக்கப்பட்ட சந்தையும், இங்குள்ள முதலாளிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தரகர்களாகவும் செயல்படும் நிலை உருவானது. 1990-களில் உலகமயமாக்கல் அமலாக்கப்பட்டப் பிறகு, சார்பு நிலையில் இருந்து கீழ்படிதல் நிலைக்கு பெரும்பாலான வளரும் நாடுகள் மாறின.

அப்படி கீழ்ப்படிந்த நாடுகளில் உள்ள சந்தை மீதான ஆக்கிரமிப்பும், சந்தைக்கான கொள்கைகள் உருவாக்குவதும், அதன் மீதான கண்காணிப்பும் என ஏகாதிபத்திய நாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இவையெல்லாம் பெரிய நிதி மூலதனத்தின் நலன்களை ஒட்டியே மேற்கொள்ளப் படுகின்றன. பெரும்பாலும் சர்வதேச நிதி நிறுவனங்களின் கூட்டணியோடுதான் இவை அரங்கேறுகின்றன.

இந்த முறையானது சமகால முதலாளித்துவத்தின் வளர்ந்து வரும் கட்டமைப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. லத்தீன் அமெரிக்காவில் சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கிய கடன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நிபந்தனைகள் அமெரிக்க வங்கிகளுக்கு மட்டுமே சாதகமாக இருந்தன. இந்தியாவுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைக் கடன்களிலும், நிதிக் கொள்கைகளிலும் இதே வழிமுறைகள்தான் கடைப்பிடிக்கப்பட்டது.இது போன்ற ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

நிதி மூலதனத்தின் மூலமாக ஏற்படுத்தப் படும் நிர்ப்பந்தங்கள்!

வெளிநாடுகளில் உள்ள பெரு மூலதன முதலீட்டாளர்களின் சார்பாக சந்தையில் புகுத்தப்படும் புதிய தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வளரும் நாடுகள் நிர்பந்திக்கப்படுகின்றன. இது போன்ற நாடுகளில் முதலீடு செய்யப்பட்ட வெளிநாட்டு மூலதனத்திற்கு அதிக வட்டியின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. மேலும் உள்நாட்டு நாணயத்தின் குறைவான மாற்று விகிதம் (உதாரணம் – டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி) வெளிநாட்டு நிதிக்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது. வட்டி விகிதத்தை தீர்மானிப்பதில் உரிமை இல்லாததை போலவே, நாணய மாற்று விகிதத்தையும் தீர்மானிக்க இயலாத நிலைதான் உள்ளது. இதேபோல ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகளவில் செய்வதால் உள்நாட்டு பொருளாதாரத்திற்கு பெரும் தீங்கு விளைகிறது.

வரிப் போரை தொடங்கி வைத்த அமெரிக்கா!

இப்போது இறக்குமதி வரியில்தான் அமெரிக்கா கை வைத்துள்ளது. டிரம்ப் அடாவடி வரி விதிப்பில் இறங்கியுள்ளார். இந்த வரிப் போரில் நாம் வேறு வழியின்றி நுழைகிறோம். அமெரிக்கா பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி மீதான வரிகளை தடாலடியாக உயர்த்தியுள்ளார் டிரம்ப். அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ போன்றவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25 % கூடுதல் வரியும், எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு 35 % கூடுதல் வரியும் செலுத்த வேண்டிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கு முக்கிய ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளான தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு 25 % வரி உயர்வை ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அதிகப்படியான வரி விதிப்புக்கு எதிராக அந்த நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தும் நிலையில், அதற்கு பதிலடியாக மேலும் வரியை உயர்த்துவதே டிரம்பின் நோக்கமாக உள்ளது.

இதன் மூலம் அவர் ஒரு உலகளாவிய வர்த்தகப் போரை தொடங்கியுள்ளதாக புரிந்து கொள்ளலாம். இது “அமெரிக்காவை சிறப்பாக்குவோம்” என்ற அவரது முழக்கத்தை நிறைவேற்ற உதவாது என்றும், இப்படி பரஸ்பரம் வரி விதிப்பதால் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைந்து உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படக் கூடும்.

அமெரிக்க பெரியண்ணனையே அச்சுறுத்தும் சீனா!

இந்தியா போன்ற சில நாடுகளும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அவை அச்ச உணர்வின் காரணமாக சில குறிப்பிட்ட அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரியை குறைத்துள்ளன. இதன் மூலம் அமெரிக்காவை திருப்தி படுத்த முயல்கின்றனர். ஆனால் சீனா, அமெரிக்க பொருட்களுக்கு அதிரடியாக வரியை உயர்த்தியதால், அமெரிக்காவின் பங்குச்சந்தை 5 டிரில்லியன் டாலர் (சுமார் 400 லட்சம் கோடி) இழப்பை இந்த ஒரே வாரத்தில் சந்தித்தது.

கோவிட் தொற்றுக்காலத்தில் ஏற்பட்ட சரிவை விட இது அதிகம். இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் நட்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் டிரம்பின் அடாவடி அதிரடி வரிவிதிப்புதான். சீனா, டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிப்பை ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப் போவதாக அறிவித்தது.

படிக்க:

♦  ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.

  வரி விதிப்பு: வர்த்தகப் போரை தொடங்கும் ட்ரம்ப் !

இதை தொடர்ந்துதான் அமெரிக்கப் பங்குச் சந்தைகளின் முக்கிய குறியீடுகளான டவ் ஜோன்ஸ், எஸ்&பி போன்றவை 5 முதல் 6 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டாலரின் ஆதிக்கம் இருப்பதால், அமெரிக்கா விரைவில் மீண்டு விடக்கூடும். பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு அந்த நாடுகளை கடுமையாக பாதிக்கும்.

போராட்டக் களத்தில் அமெரிக்க குடிமக்கள்!

பங்குச்சந்தையின் பெரும் வீழ்ச்சியை அடுத்து, கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணமான டிரம்ப்பை கண்டித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். “உரிமைகளைப் பாதுகாப்பது, உழைக்கும் மக்களைப் பாதுகாப்பது” என்ற நோக்கில் சுமார் 200 குழுக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தனது கார்ப்பரேட் நண்பர் எலான் மஸ்க்குடன் சேர்ந்து கோடீஸ்வரர்களுக்கு சாதகமாகவும், சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றிற்கான உதவிகளை குறைத்தும் வருகிறார் டிரம்ப். அரசு செலவினங்களையும், அரசுப் பணியாளர்களையும் குறைப்பது, அரசாங்கத்தை கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த மக்கள் முழக்கமிடுகின்றனர்.

இறக்குமதி வரிகளை அதிகரித்தால் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகும். அதை அமெரிக்க மக்கள்தான் சுமக்க வேண்டும். இது போன்ற மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமின்றி பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என முழக்கம் இடுகின்றனர். மக்கள் இப்படி போராடிக் கொண்டிருக்கும் சூழலில், பாசிஸ்டுகளுக்கே உரித்தான பாணியில் டிரம்ப் தனது ஓய்வு விடுதியில் கோல்ஃப் விளையாடி பொழுதைக் கழிப்பதாக செய்திகள் வருகின்றன.

உலகையே அச்சுறுத்தும் அமெரிக்கா!

டிரம்ப் தனது வரிக் கொள்கையால் உலகையே பதட்டத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கி உள்ளார்.
சீனா, அமெரிக்காவுக்கு எதிராக கடுமையாக வினையாற்றி உள்ளது. ஆனால் ’56 இன்ச்’ மோடியோ அடக்கி வாசிக்கிறார். கேட்டால் ராஜதந்திரம் என சங்கிகள் பசப்புவார்கள். டாலரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, டாலருக்கு எதிரான நாணயத்தை உருவாக்க முயற்சி செய்யும் நாடுகளுக்கு 100 % வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கிறது. மேல்நிலை வல்லரசு என்ற மிதப்பில் ஆட்டம் போடுகிறது.

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் ஒடுக்கப்படும் நாடுகள் ஐக்கியத்தோடு ஒன்றிணைவதும், போராடும் அமெரிக்க மக்களுடன் சர்வதேச அளவில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதுமே டிரம்ப், எலான் மஸ்க் கூட்டணியின் கொட்டத்தை அடக்கும் ஒரே வழியாகும்.

  • குரு

1 COMMENT

  1. கட்டுரை மிக சிறப்பாக உள்ளது
    ஆசிரியர் குரு விற்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here