லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மருத்துவம் என்பது மக்களின் சேவைக்கான உயரிய துறை என்ற மதிப்பில் இருந்து கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்கான ஒரு வாய்ப்பு என்பதாக மாற்றப்பட்டு விட்டது. மருத்துவத் துறையில் இருக்கும் கார்ப்பரேட்டுகளும், கல்வித்துறையில் இருக்கும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்துக்கொண்டு கடை விரிக்கிறார்கள். இதற்கு நேர் எதிராக ஆஸ்திரேலிய கல்வித் துறை செயல்படுகிறது.

போதிய தகுதியே இல்லாதவர்கள் தன் பெற்றோரிடம் பணம் உள்ளது என்ற ஒரே தகுதியை பயன்படுத்திக் கொண்டு நீட் தேர்வின் மூலம் இந்தியாவில் மருத்துவராகி விட முடிகிறது. இந்த அநீதியைத் தாங்க முடியாமல், போதிய தகுதி இருந்தும் மருத்துவ கல்விக்கான வாய்ப்பை பறிகொடுக்கும் ஏழை மாணவர்கள்  மனம் உடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் நடக்கிறது.

இந்த அநீதிக்குக் காரணமாக உள்ள நீட் தேர்வு முறையையும் அதில் நடைபெறும் முறைகேடுகளையும் எதிர்த்து தான் தற்போது இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துப் பரவி வருகின்றன. பகிரங்கமாகவே வினாத்தாள்களைக் காசுக்கு விற்று மோசடியில் ஈடுபட்டு, மீண்டும் மீண்டும் மோடி அரசு அம்பலமாகிறது. இதற்கு காரணமான கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி  போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது.

நாடு முழுவதற்கும் ஆனா ஒரே நுழைவுத் தேர்வு என்பது சரியானதா? அனைத்து நாடுகளிலும் மருத்துவக் கல்வி என்பது கடைச்சரக்காக கோடிகளை கொட்டி பெறுவதாகத்தான் இருக்கிறதா? வகை மாதிரிக்கு ஆஸ்திரேலியாவை எடுத்து பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் மருத்துவக் கல்வி!

ஆஸ்திரேலியாவில் மருத்துவம் (MBBS / MD) படிக்க இரண்டு முக்கிய நுழைவுப் பாதைகள் உள்ளன. நீங்கள் விண்ணப்பிக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அதற்கான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்:

இளங்கலை மருத்துவப் படிப்பு (Undergraduate Entry – 12ஆம் வகுப்பு முடித்த பிறகு) நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நேரடியாக மருத்துவம் படிக்க விரும்பினால், UCAT ANZ (University Clinical Aptitude Test) தேர்வு எழுத வேண்டும்.தேர்வின் நோக்கம்: மாணவர்களின் பகுத்தறிவு, முடிவெடுக்கும் திறன், மற்றும் மனோபாவத்தை சோதிப்பது.தேர்வு முறை: கணினி வழியிலான தேர்வு (Computer-based Test). இதில் எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marking) இல்லை.

பிற தகுதிகள்:

    • 12ஆம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண்கள் (ATAR 95-99+) மற்றும் நேர்காணல் (Interview).
    • டிகிரியில் நல்ல GPA மதிப்பெண் (குறைந்தது 5.0 – 6.0+) மற்றும் நேர்காணல்.

குறிப்பு: சில பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு ISAT (International Student Admissions Test) தேர்வை நடத்துகின்றன.

பொதுவாக, நீங்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்து, உங்கள் கல்வித் தரங்கள் மற்றும் UCAT மதிப்பெண்கள் மதிப்பாய்வு செய்யப்பட்ட பிறகு, நீங்கள் போதுமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பல்கலைக்கழகங்கள் உங்களை நேர்காணலுக்கு அழைக்கும். நேர்காணல்கள் பல சிறு நேர்காணல் (MMI) அல்லது குழு நேர்காணல் வடிவில் நடைபெறும்.

படிக்க:

🔴 ஆஸ்திரேலியாவில் சமூக வலைதள பயன்பாட்டுக்கு தடை! ’கருத்துரிமைக் காவலன்’ எலான் மஸ்க் எரிச்சல்!

🔴 சமூக ஊடக அடிமைத்தனம் மீள்வது எப்படி?

நேர்காணல் கட்டத்தில், பல்கலைக்கழகங்கள் உங்கள் தனிப்பட்ட தொடர்புத் திறன்களைச் சோதித்து, அதற்கான மதிப்பெண்ணை வழங்கும். இதைத் தொடர்ந்து, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மூன்று தகுதிகளில் சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ கருத்தில் கொண்டு, உங்களுக்குச் சேர்க்கைக்கான வாய்ப்பை அனுப்புவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

இந்த செயல்முறை பல்கலைக்கழகங்களுக்கு இடையில் மாறுபடும். உதாரணமாக, நியூகாசில் பல்கலைக்கழகத்தில் (கூட்டு மருத்துவத் திட்டம்) உங்களுக்கு நேர்காணல் அழைப்பு வந்த பிறகு, அவர்கள் முந்தைய கணக்குகளை நீக்கிவிட்டு, உங்களுக்கு அழைப்பு விடுப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும்போது உங்கள் நேர்காணல் செயல்திறனை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். இந்தத் தேர்வு முறை பொறுப்புமிக்கதாகவும், சிறப்பானதாகவும் அமலில் உள்ளது.

கல்வி என்பது அரசின் பொறுப்பு!

ஆஸ்திரேலியாவில் கல்வி என்பது அரசின் பொறுப்பு. தனியாருக்கு கல்வித் துறையில் வாய்ப்பு கிடையாது. ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அரசு நிதியுதவி பெறும் பொதுப் பல்கலைக்கழகங்கள் (Public Universities) என்றாலும், ஒரு சில முன்னணி தனியார் பல்கலைக்கழகங்களும் மிக உயர்தரமான மருத்துவக் கல்வியை (MBBS / MD) வழங்குகின்றன. அதாவது மிகக் குறைந்த மருத்துவ கல்வி இடங்கள் தான் பணம் உள்ளவர்கள் எளிதாக படிப்பதற்கானதாக விடப்பட்டுள்ளது.

அருகாமை பள்ளிகளில் தான் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். ஊரில் உள்ள, நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் அரசு சமமாகவே பராமரிக்கிறது.

பள்ளிகளில் எடுக்கும் மதிப்பெண்ணை மட்டுமே, அல்லது பள்ளி படிப்பை தொடர்ந்து நடக்கும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை வைத்து மட்டுமே அங்கே மருத்துவ படிப்புக்கான இடத்தை ஒருவர் அடைந்து விட முடியாது.

படிக்க:

🔴 ஜனநாயகன் படத்துக்கு அனுமதி! நீட்டுக்கு எதிரான போராட்டத்துக்குத் தடை!

🔴 நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வை ஒழித்துக் கட்டுவோம்!

பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவன், நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவன் கூட நேர்காணலில் வாய்ப்பை இழக்கிறான். அதே நேரம் அவனை விட குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மருத்துவராககும் வாய்ப்பை பெறுகிறார்.

இது எப்படி நடக்கிறது?

ஆஸ்திரேலியாவின் தேர்வு முறை மிகவும் ரகசியமானதாக பராமரிக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவ மாணவியிடம் அவரது தந்தை கேட்டதற்கு  “நேர்காணல் குறித்து நீங்கள் கேட்க வேண்டாம்; அது ரகசியம். நேர்காணல் குறித்து வெளியே பேசமாட்டேன் என்று உறுதிமொழி கையெழுத்தை போட்டு விட்டு தான் கேள்விக்குள்ளேயே நுழைந்தேன். நான் எனது உறுதிமொழிக்கு உண்மையாக இருப்பேன்” என்கிறார்.

பெற்றோருக்கு சுமையை ஏற்படுத்தக் கூடாது என்று டியூசன் எடுத்து தனது படிப்பு செலவுக்காக சம்பாதித்துக் கொள்ளும் அந்த மருத்துவ மாணவர், தான் பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் டியூசன் எடுப்பதில்லை என்றார். ஏனென்றால் தனது மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தன்னை தயார் படுத்தினால், நான் மருத்துவ நுழைவுத் தேர்வு முறை, நேர்காணல் தேர்வுகளை அணுக வேண்டிய முறை குறித்து சொல்லிவிட வாய்ப்புண்டு. எனவே மருத்துவ மாணவர்கள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் எடுக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர் என்றார்.

ஒரே தேர்வு மையம், தேர்வுமுறை இல்லை!

இந்தியாவில் வெவ்வேறு பாடத்திட்டங்களில் பள்ளி படிப்பை முடித்து இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒரே தகுதி தேர்வையே, அதாவது நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே தகுதி தேர்வையே இன்றைய மோடி அரசு திணித்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு மாநிலமும் சுயமாகவும் தேர்வை நடத்துகிறது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான பணிகளை எளிதாக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள் ஒரு சீரமைக்கப்பட்ட விண்ணப்ப செயல்முறையைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஒரு சேர்க்கை மையம் உள்ளது. கீழேயுள்ள அட்டவணை ஒவ்வொரு மாநிலத்திற்குமான கல்வி அதிகார அமைப்புகளைக் காட்டுகிறது:

விக்டோரியா: விக்டோரியன் உயர் கல்வி சேர்க்கை மையம் (VTAC)
நியூ சவுத் வேல்ஸ்: பல்கலைக்கழக சேர்க்கை மையம் (UAC)
குயின்ஸ்லாந்து: குயின்ஸ்லாந்து உயர் கல்வி சேர்க்கை மையம் (QTAC)
தெற்கு ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலிய உயர்கல்வி சேர்க்கை மையம் (SATAC)
மேற்கு ஆஸ்திரேலியா: உயர்கல்வி நிறுவனங்கள் சேவை மையம் (TISC)
டாஸ்மேனியா: டாஸ்மேனியா பல்கலைக்கழகம் (UTAS)

ஆஸ்திரேலியாவின்  ஏழு மாநிலங்களில்,  மருத்துவ படிப்புக்கான தகுதித் தேர்வை, நேர்காணல்களை  நடத்தும் ஏழு  அதிகார மையங்கள் சுயேச்சையாக இயங்குகின்றன.

இது எப்படி சாத்தியமாகிறது?

தனது குடிமக்களின் நலனை உயர்வானதாக மதித்து நடப்பதால்தான் சாத்தியமாகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வை பார்க்காமல் ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனும் அடிப்படை உரிமையான மருத்துவ சிகிச்சை பெறுவதை உத்தரவாதப்படுத்துவதில் தீவிரமாக இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.

படிக்க:

🔴 நீட் தேர்வில் முறைகேடு! ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு முறையை ஒழிப்பதே தீர்வு!!

🔴 நீட் உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முடிவு கட்டு!

ஆஸ்திரேலியாவை பொருத்தவரை நோய்களைப் பற்றியோ, நோய்களுக்குத் தரப்படும் சிகிச்சை முறைகளை பற்றி மட்டுமோ  முறையாக கற்றுக் கொள்வது போதாது. அதாவது மருத்துவத்துறையில் உயர்ந்த அறிவை வளர்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதையும் கடந்து உயிர்களை மதிக்க வேண்டும். மக்களை மதிக்க வேண்டும். நோயாளிகளை கனிவுடன் அணுக வேண்டும். அத்தகைய பண்புகளைக் கொண்டிருந்தால்தான் அங்கு மருத்துவராகும் இடம் கிடைக்கும் என்பதாக யூகிக்க முடிகிறது. இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

நாய்க்கடிக்கு “இந்திய” சிகிச்சை!

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்திருந்த போது நண்பர் ஒருவரை நாய் கடித்து விட்டது. அவர் உடனடியாக அருகிலுள்ள நமது அரசு மருத்துவமனைக்குச் சென்று ஊசி  போட்டுக் கொண்டார்.  அந்த ஊசியை, ஊசி மருந்தை புகைப்படமும் எடுத்துக் கொண்டு அடுத்த சில நாளில் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி விட்டார்.

அடுத்தடுத்த டோஸ்களை போட்டுக் கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தான் இந்தியாவில் நாய்க்கடிக்குள்ளானதையும், அங்கு தனக்கு சிகிச்சை தந்துள்ளார்கள் என்பதையும், தனக்கு போடப்பட்ட ஊசி மருந்து இதுதான் என்று புகைப்பத்தை காட்டியும் விளக்கியுள்ளார்.

அங்குள்ள மருத்துவர்கள் இவர் காட்டிய புகைப்படத்தை பரிசோதித்து விட்டு “இந்த மருந்து போலி; ஒவ்வொரு மருந்துக்கும் அது எந்த தொகுதியைச் சார்ந்தது என்பதற்கான குறியீடு இருக்கும்; இந்த மருந்தில் அது இல்லை” என்பதை விளக்கியுள்ளனர். இதுவரை நீங்கள் சரியான மருந்தை எடுக்கவில்லை என்பதை விளக்கி பொறுப்புடன் எச்சரித்துள்ளனர்.

படிக்க:

🔴 நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?

🔴 நீட் தேர்வில் முறைகேடு! ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு முறையை ஒழிப்பதே தீர்வு!!

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகளுக்கு முறையான தடுப்பூசிகள் போடப்படுவதால், ரேபிஸ் பரவும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதற்கான ஊசிகளை இருப்பு வைப்பதும் மிகவும் குறைவு. உடனடியாக அந்த மருந்தை வரவைத்து இலவச சிகிச்சையையும் தந்துள்ளனர்.

நோயாளிக்கும் மருத்துவருக்குமான உறவு!

ஆஸ்திரேலியாவில்  மருத்துவர்கள் நோயாளிகளை எப்படி அணுகுகின்றனர் என்பது குறித்து  நண்பர் சொன்னதுதான் முக்கியமானது. மருத்துவமனையில் காத்திருப்பு அறையில் உட்கார்ந்து இருக்கும் பொழுது மருத்துவர் நேரில் வந்து எனது பெயரைச் சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டு,  எனது கையில் உள்ள ஃபைலையும் தான் வாங்கிக் கொண்டு, ஆதரவோடு தோளை பிடித்து உள்ளே அழைத்துச் சென்று என்னை இருக்கையில் அமர வைத்து விட்டு, அதன் பின்னர் தான் அவர் அமர்ந்து கொண்டு பரிசோதனைகளை ஆரம்பித்தார். கேள்விகளையும் கேட்டார் என்று விவரித்தார்.

அதாவது சிகிச்சை தொடங்குவதற்கு முன்னே “பயப்பட வேண்டாம்; உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்” என்ற தார்மீக ஆதரவையும், நம்பிக்கையும் முதலில் தருகின்றனர் என்று விளக்கினார். ஆஸ்திரேலிய மருத்துவர்களின் அணுகுமுறை இத்தகையதாக உள்ளது. இதை நம் இந்திய மருத்துவர்களுடன் ஒப்பிட முடியுமா?

விதிவிலக்காக அப்பல்லோக்களில் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் “வாடிக்கையாளர்களை” இப்படி மருத்துவர்கள் பரிவுடன் அணுகுகிறார்கள்தான்.

இந்தியாவிலும் கொரோனா வந்த பொழுது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களும் செவிலியர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை நாம் பார்த்தோம். இவர்கள் மாநில தகுதி தேர்வில், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வானவர்கள். நீட் வருவதற்கு முன்னே மாநில அரசின் நுழைவுத் தேர்வை எழுதி மருத்துவம் படித்து முடித்து விட்டவர்கள். இவர்கள் எவ்வகையில் தகுதி குறைவானவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதை மோடி அரசால் விளக்க முடியாது.

ஆனால் தற்போது நீட்டில் பூஜ்ஜிய சதமான(Zero Percentile) மதிப்பெண்ணை எடுத்தவர்களும் கூட, கோடிகளை கொட்டி கொடுத்து விட்டு மருத்துவராகின்றனர். அரசியல்வாதிகளின், அதிகார வர்க்கத்தின், மேட்டுக்குடியின் கொழுப்பெடுத்த குலக்கொழுந்துகளிடம் இத்தகைய பண்பை நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்திய தேர்வு முறைக்கும், பிற நாடுகளின் மருத்துவத் தேர்வு முறைக்கும் பெரிய வேறுபாடு இருக்கவே செய்கிறது. குறிப்பாக குடிமக்களின் நலனில் அக்கறை காட்டும் அரசானது, கல்வியை, அதிலும் குறிப்பாக மருத்துவத்தை, காசுக்கானதாகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கானதாகவும் திறந்து விடுவதை அனுமதிக்கவே முடியாது. வேறு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆஸ்திரேலிய அரசின் அணுகுமுறை ஓர் உதாரணம்.

ஆஸ்திரேலியாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அந்த நாட்டின் விதிகளுக்கு உளப்பூர்வமாக கட்டுப்படுகிறார்கள். அந்த கட்டுப்பாட்டை மனமுவந்து மதித்து நடக்கிறார்கள். நமது நாட்டில் அப்படியா நடக்கிறது? அனைத்தும் காசுக்கு ஏலம் விடப்படுகிறது. இதுதான் இன்றைய மாணவர் இளைஞர்களின் போராட்டத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. மருத்துவ தகுதித் தேர்வில் நீட்டை ஒழிப்போம். மாநிலங்களின் சுயேட்சையான தேர்வு முறைகளை, மாநிலத்தின் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்.

  •  இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here