ரு நாட்டை ஆள்பவர்கள், அந்நாட்டின் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள், எந்த ஒரு பிரச்சனையையும் வர்க்க சார்புடன்தான் கையாளுகின்றனர். தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடங்கி பாராளுமன்றம் வரை நீண்ட CJP யின் போராட்டமும், அதன் மீதான அடக்குமுறைகளும் இத்தகைய அணுகுமுறைக்கான முன் உதாரணமாக  மாறியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி அரசாகவே பாசிச பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

மக்களில் ஒரு பிரிவினர் தமது கோரிக்கைகளுக்காக மனு கொடுக்கின்றனர்; ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்; அல்லது உண்ணாவிரதம் இருக்கின்றனர்; பேரணி, முற்றுகை போராட்டமும் நடத்துகின்றனர். இதெல்லாம் ஜனநாயகத்தில் ஏற்புடைய ஒன்றுதான்.

ஆனால் ஜனநாயகத்தையே விரும்பாத, வெறுக்கின்ற பாசிஸ்டுகளால் இத்தகைய போராட்டங்களின் மீது கொடூர அடக்குமுறைதான் பதிலுக்கு ஏவப்படுகின்றன. சோனம் வாங்சுக் மீதான கைது நடவடிக்கை மூலம் அடக்குமுறையை தொடங்கி வைத்தது மோடி அமித்ஷா கும்பல்.

“நீட்டை ரத்து செய்! நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதானே பதவி விலகு!” என்று முழக்கம் வைத்துள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு பதில் சொல்வதற்கு மோடி அரசுக்கு துப்பில்லை. பாசிஸ்டுகளுக்கு கேள்விகள் பிடிக்காது; கீழ்படிவதை மட்டுமே வரவேற்கும்.

நீட்டை கைவிட மோடி அரசு தயாராக இல்லை. அதற்கு பதிலாக உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், வழிமுறைகளின் மூலமே போராடும் இளைஞர்களுக்கு பாடம் நடத்துகிறது.

தடை செய்யப்பட்ட பெல்லட் கன்!

காட்டு விலங்குகளை கண்ணை மூடிக்கொண்டு வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் பெல்லட் கன்களை ஜனநாயக நாட்டில் அரசின் துருப்புக்கள் கையில் ஏந்த கூடாது. உலக நாடுகள் இத்தகைய ஆயுதத்தைத் தடை செய்துள்ளன.

இந்தியாவில் சர்வசாதாரணமாக இந்த துப்பாக்கியால் காஷ்மீரிகளின் உடலை சல்லடைகளாக துளைத்து வந்துள்ளது இந்திய ராணுவம். அங்கு நூற்றுக்கணக்கான சிறுவர்களின் கண்களை குருடாக்கியுள்ளன பெல்லட் தோட்டாக்கள்.

அதே துப்பாக்கி இப்பொழுது டெல்லியின் தெருக்களிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது டெல்லியை காஷ்மீராக மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி அமித்ஷா கும்பல் !

‘ஒழுங்கு விதிகள் எங்களுக்கு இல்லை!’

பாசிஸ்டுகளுக்கு ஒழுங்குமுறைகளும், கட்டுப்பாடுகளும், விதிகளும் ஒத்து வராது. எனவேதான் தன் அரசின் மீதான விமர்சனங்களுக்கு அடக்குமுறையையே பதிலாக ஏவும் வகையில்  காவி குண்டர் படையை கையில் ஆயுதங்களுடன் களம் இறக்கி விட்டுள்ளது மோடி அரசு. அவர்களில் சிலர் காவலர்களைப் போல காக்கி உடையை அணிந்துள்ளனர். பலர் சீருடை இல்லாமல் நிற்கின்றனர்.

காவல்துறை, துணை இராணுவப் படையினர் உள்ளிட்டவர்களும் கூட பெயர் வில்லைகளை(Name Badge) கழட்டி வைத்துவிட்டுத்தான்  களத்தில் நிற்கின்றனர். காவிக்குண்டர்களோ தலையில் ஹெல்மெட்டுடனும், கையில் நீளமான லத்திகளுடனும் நிற்கின்றனர். தொழில்முறை கிரிமினல்களாக, வேட்டை நாய்களாக பாயவும் செய்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை எப்படி தாக்க வேண்டும்? எதைக் கொண்டு எந்த இடத்தில் அடிக்க வேண்டும்? என்றெல்லாம் பயிற்சி பெற்றுக் கொண்டு வந்து சாமானிய இளைஞர்களை அடித்து துவைக்கின்றனர்.

படிக்க:

 இந்திய அரசின் துரோகத்தை மறைக்கும் அமரன்!

 கரப்பான் பூச்சிகளின் நாடாளுமன்ற முற்றுகையும், சோனம் வாங்சுக்கின் போராட்டமும்!

லத்தியால் பெண்களின் பிறப்புறுப்பில் குத்துவது, ஆடைகளை கிழித்து மார்பகங்களில் தாக்குவது என்று மிகவும் கீழ்த்தரமான வழிமுறைகளையே மோடி அமித்ஷா கும்பல் ஏவி வருகிறது. இப்படி அவமானப்படுத்துவதன் மூலம் போராட்ட களத்தில் இருந்து மாணவிகளை, பெண்களை வெளியேற்றி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

இத்தகைய தாக்குதல்கள் உலகுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இணையதள சேவையை நிறுத்தி வைத்து, ஜாமர் கருவிகளை பொருத்தி வைத்து சுற்றி வளைத்து அடித்து நொறுக்குகிறார்கள். கலைந்து சென்று விடாதபடி  பேரிகார்டுகளுக்கும் சீல் வைக்கிறார்கள்.

போராட்டக் களத்தில் இருந்து அள்ளிச் செல்லப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் இளைஞர்களை சந்திப்பதற்கு கூட பத்திரிக்கையாளர்கள், மீடியாக்களை சேர்ந்தவர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. ஜே.பி.நட்டாவின் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் மருத்துவமனைக்கு உள்ளேயே நுழைய முடியும் என்கின்றனர் காவலர்கள்.

படிக்க:

 இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட 3 காஷ்மீர் பழங்குடிகள்

 ஜனநாயகன் படத்துக்கு அனுமதி! நீட்டுக்கு எதிரான போராட்டத்துக்குத் தடை!

மோடி ஆதரவு மீடியாக்கள் மட்டுமே அனைத்து இடங்களிலும் சுற்றித் திரிகிறது. போராட்டக்காரர்களை “பிரிவினைவாதிகள்” என்றும் அன்னிய கைக்கூலிகள் என்றும் பொய் செய்தியை பரப்பியும் வருகிறது.

பற்றி படரும் போராட்டத்தீ!

பாசிச மோடி அரசின் தாக்குதல்கள் எந்த அளவு மூர்க்கமானதாக, ஜனநாயக விரோதமாக மாறுகிறதோ, அந்த அளவிற்கு இளைஞர்கள் போராட்ட களத்தில் குதிக்கும் வேகமும் அதிகரித்து வருகிறது.

தலைநகரில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதத்தைப் பார்த்தவுடன் நாடு முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். போராட்ட களம் என்பது டெல்லியின் ஜந்தர் மந்தரில் இருந்து நாடு முழுவதுமாக விரிவடைந்து வருகிறது. பாசிச அரசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்தான் போராட்டத் தீயை விசிறி விட்டு  விரிவாக்கியும் வருகிறது.

பாஜகவின் B-டீம்களாக ஆளும் மாநில அரசுகள், அதே பாணியில் தமது படையினரின் பெயர் விலை கழற்றி வைத்துவிட்டு  போராடும் மாணவர்களை தாக்குவதற்கு உத்தரவிட்டு வருகின்றன. தமிழகத்தில் TVK -வின் போலீசும் Name Badge இல்லாமல் தான் மாணவர்களை அடித்து துவைக்கிறது.

இவர்தான் ‘ஜனநாயகனா’?

சென்னையின் திருவொற்றியூரில், கல்லூரி மாணவர்களை, மாணவர் அமைப்பின் தலைவர்களை வகுப்பறைக்குள் நுழைந்து இழுத்துச் செல்கிறது தமிழக காவல்துறை. இதன் மூலம் மருத்துவத் துறையை – மருத்துவக் கல்வியை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் நோக்கில் கொண்டுவரப்படும் நீட்டை முதல்வர் விஜய் ஆதரிக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது. துணைவேந்தர் நியமனம் உள்ளிட்டவற்றில் மோடி அரசோடு ஒத்துப் போவதன் மூலமும் TVK அரசாங்கமானது பாஜகவின் B – டீம்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

படிக்க:

 இந்து போலீசாக மாற்றப்பட்டு வரும் டெல்லி போலீஸின் வக்கிரம்!

♦ டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசின் கொடூர தாக்குதல்!

விஜய் 40 பேரின் உயிரைக் குடித்துத்தான் ஆட்சி கட்டிலில் ஏறியுள்ளார். எந்த இளைஞர்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தாரோ அந்த இளைஞர்களுக்கு எதிராகவே தற்போது காய்களையும் நகர்த்துகிறார்.

நீட்டினால் தமிழகத்திலும் தற்கொலைகள் நடந்துள்ளன. மாணவர்கள் நீட்டுக்கு எதிராக தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர். ஆனாலும் தவெக அரசாங்கம் மாணவர்களின் பக்கம் நிற்க மறுக்கிறது. அதாவது தமது அரசின் வர்க்க சார்பு என்பது கார்ப்பரேட் நலன்தான், பாஜகவின் ஆதரவு நிலைப்பாடு தான் என்பதையே விஜய் உறுதிப்படுத்துகிறார்.

அடக்குமுறைகளின் மூலமே தொடர்ந்து ஆண்டு விடலாம்; தமது கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை அடுக்கடுக்காக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மனப்பால் குடிக்கும் மோடி அமித்ஷா கும்பலுக்கு நாட்டு மக்கள்தான் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

காவல்துறை, சேம பாதுகாப்பு படை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ படைப் பிரிவில் இருப்பவர்கள் “எங்களை விட்டுவிட்டு ஏன் குண்டர் படைகளை, சட்டவிரோத கிரிமினல் படைகளை கட்டியமைக்கிறீர்கள்?” என்று மோடி – அமித்ஷாவை கேள்விக்குள்ளாக்கவும்  வேண்டும். நீதியின், உண்மையின் தரப்பிற்கு மாறி வரவும் வேண்டும்.

பாஜகவின் B – டீம்களால் ஆளப்படும் மாநிலங்களிலும் மக்கள் இதே பாடத்தை புகட்ட வேண்டும்.  அதற்கு மீடியாக்களும் உண்மையை காட்சிப்படுத்தி கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு துணை நிற்க வேண்டும். நாங்களும் நிற்போம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here