சமீப நாட்களாக இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர்கள் அடிக்கடி வண்டி ஆப் ஆவதாக புகார்களைத் தெரிவிக்கின்றனர். பைக்கை சர்வீஸ் செய்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் திடீரென வண்டியில் இத்தகைய பிரச்சினை வருவதற்கும் தாம் நிரப்பும் பெட்ரோலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கின்றனர்.

சட்டபூர்வமாகிறது கலப்படம்!

மத்திய அரசு 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஊக்குவித்து (திணித்து) வருகிறது. இந்த பெட்ரோலால் வாகனங்களின் ‘மைலேஜ்’ குறைவதாகவும், என்ஜின் பழுதுபடுவதாகவும் சில புகார்கள் எழுந்தன. இதனை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி மறுத்தார். ‘மைலேஜ்’ குறையலாம். ஆனால் வாகனம் பழுதுபடாது என அவர் கூறினார்.

எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) தான் தற்போது விற்பனையாகிறது. தற்போது தமது வண்டிக்கு நிரப்பப்படுவது கலப்பட பெட்ரோல்தான் என்பதை வாகன ஓட்டிகள் பலரும் அறிந்திருக்கவில்லை. திடீரென வண்டி பழுதாவதால் அதன் காரணம் தெரியாமல் சாலைகளில் புலம்பிய படியே வண்டிகளை தள்ளிச் செல்வதையும் பார்க்க முடிகிறது.

படிப்படியாக கலப்பட விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்த பின், மோடி அரசின் எத்தனால் கலப்பிற்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. எத்தனால் கலக்காத 100% தூய பெட்ரோல் வேண்டும் என விரும்பும் வாகன ஓட்டிகள், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்றும்  நிதின் கட்கரி திடமிராக கூறியுள்ளார்.

நாங்கள் தரும் பணம் என்பது கலப்படமற்ற பெட்டட்ரோலுக்குத்தான். நீங்கள் ஓசியில் ஒன்றும் எங்கள் வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப வில்லை” என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் கட்கரியின் முகத்தில் அறையும்படி பதில் தர வேண்டி உள்ளது.

கலப்படம் இதோடு நிற்க போவதில்லை. முதல் கட்டமாக 10% மட்டுமே எத்தனால் கலக்கப்பட்டது. பின்னர் அது 20% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 25 சதவீதமாக உயர்த்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஏன் இந்த கலப்படத்தில் குதித்தது மோடி அரசு? அதையும் பார்ப்போம்.

நெருக்கடியை தீர்க்கும் கலப்படம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு, இந்தியாவிற்குள் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் போன்ற நெருக்கடிகளை சமாளிக்கவே உள்நாட்டிலிருந்து பெறப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலந்து விற்பது என்ற முடிவுக்கு பாஜக அரசு வந்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் எத்தனால் கலப்பு (E20) கொள்கை மிகவும் அவசியமானது என்கிறது பாசிச பாஜக.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இரு மடங்காக லாபத்தை குவிக்கின்றன மோடி அரசும், எண்ணெய் கார்ப்பரேட்டுகளும்.

சர்வதேச சந்தையில் இன்றைய நிலவரப்படி, ஒரு பேரல் (Barrel) ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) சுமார் $85.00 முதல் $85.18 வரையிலும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் (WTI Crude) சுமார் $79.82 முதல் $79.99 வரையிலும் வர்த்தகமாகி வருகிறது.

ஜூலை மாத நடுப்பகுதியில் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட மோதல்களால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 10% வரை உயர்ந்து பேரல் $83-ஐக் கடந்தது. இந்த பதற்றத்தின் போது பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை $83 முதல் $85 வரையிலும், WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு $78 முதல் $80 வரையிலும் வர்த்தகமானது.

ஏற்றுமதிக்கே தூய பெட்ரோல்!

இந்தியாவில் கச்சா எண்ணெயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலானது பிற நாடுகளுக்கு மலிவாக, கலப்படமில்லாத பெற்றோலாக ஏற்றுமதியாகிறது. பிற நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.50 முதல் ரூ.70 விலையில் ஏற்றுமதி செய்வதிலேயே ரிலையன்சின் அம்பானிகளுக்கு கோடிகளில் லாபம் குவிகிறது என்றால், உள்நாட்டில் 20 சதவீதம் எத்தனால் கலப்பட பெட்ரோலையே  ரூ.110க்கு விற்கிறார்களே எத்தனை மடங்காக லாபம் பெருகும்?

எண்ணெய் கார்ப்பரேட்டுகளுக்குப் இணையாக போட்டி போட்டுக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களும் கல்லா கட்டுகின்றன.  இந்தியன் ஆயிலும்,  ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் பெட்ரோலியமும் பெட்ரோல் பங்க்குகளில் கலப்படப் பெட்ரோலையே விலையை ஏற்றி விற்பதன் மூலம்  பதற்கொள்ளையை அல்லவா நடத்துகிறார்கள்.

சமீபத்தில் கூட பூட்டான் நாடு தமக்கு கலப்படமில்லாத தூய பெட்ரோல் தான் வேண்டும் என்றும், எத்தனால் கலப்பானது  ஈரப்பதத்தை உறிஞ்சி நீர்த்துப் போகும் தன்மையை கொண்டிருக்கிறது என்றும், தமது நாடு மலைப்பகுதியில் இருப்பதால் அதிக திறன் கொண்ட எரிபொருள்தான் உகந்தது என்றும், கலப்படமற்ற பெட்ரோலையே தரும்படியும் கேட்டுக் கொண்டதாக செய்திகள் பரவியது. இப்படி ஒரு கோரிக்கை பூட்டானிலிருந்து வரவில்லை என்று  பாஜக அரசு மறுத்தும் உள்ளது.

எத்தனால் கலந்த எரிபொருளால் வாகன என்ஜின் பழுதடைகிறது என்ற குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலும் நிராகரித்தார். மேலும், இது குறித்த புகார்கள் எதுவும் அரசிடம் வரவில்லை எனவும், வாகனங்கள் பலகட்ட சோதனைகளுக்குப் பின்னரே பயன்பாட்டுக்கு வருகின்றன என்கிறது பாஜக அரசு.

வேறு சில நாடுகளிலும் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளதுதான். ஆனால் அந்த எரிபொருளுக்கு உகந்த வகையில் வாகனத்தை வாகனத்தின் எஞ்சினை வடிவமைக்கிறார்கள்.

எத்தனால் பயன்பாட்டில் உலக முன்னணியில் உள்ள பிரேசில் நாடு, 27.5% முதல் 30% வரை எத்தனால் கலந்த (E27.5 – E30) எரிபொருளைப் பயன்படுத்துகிறது. மேலும், 100% எத்தனால் (E100) அல்லது அதிக சதவீத எத்தனாலைக் கையாளக்கூடிய ஃப்ளெக்ஸ்-எரிபொருள் (Flex-fuel) வாகனங்களை அதிகளவில் இயக்கும் ஒரே நாடாகும்.

உலகின் மிகப்பெரிய எத்தனால் தயாரிப்பு நாடான அமெரிக்காவில், 10% எத்தனால் கலந்த பெட்ரோல் (E10) நிலையான எரிபொருளாக உள்ளது. மேலும், E15 மற்றும் E85 (85% எத்தனால்) போன்ற உயர் கலவைகளும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன.

இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ‘E10’ நிலையான எரிபொருளாகவும், பழைய வாகனங்களுக்காக ‘E5’ (5% எத்தனால்) எரிபொருளும் விற்பனை செய்யப்படுகின்றன.

எத்தனால் கலப்பு பொருந்தாது!

இந்தியாவில் உற்பத்தியாகி பயன்பாட்டில் உள்ள நமது வாகனங்கள் எத்தனால் கலப்படத்திற்கு ஏதுவாக உருவாக்கப்படவில்லை. அதாவது பெட்ரோல் வண்டியில் டீசலை ஊற்றியோ, டீசல் வண்டியில் மண்ணெண்ணெய்யை ஊற்றியோ ஒட்டக்கூடாது. அதுபோல்தான் எத்தனால் கலப்படத்தையும் அப்படியே பயன்படுத்த முடியாது. ஆனாலும் பாசிச மோடி அரசுக்கு இது பற்றி எல்லாம் எவ்வித கவலையும் கிடையாது.

நமது வாகனத்திற்கு எத்தகைய எரிபொருள் தேவை என்பதை இனிமேல் நாம் தீர்மானிக்க முடியாது. பாசிச பாஜகவின் மோடி அரசு எதை விற்கிறதோ அதையே எரிபொருளாக நிரப்பியாக வேண்டும். அதனால் எஞ்சின் பழுதடைந்தாலும், மைலேஜ் குறைந்தாலும், அதையெல்லாம் நாம் அவர்களுக்கு நிரூபிக்க முடியாது.

“எனது வண்டியில் மைலேஜ் குறைந்துவிட்டது” ஏன் எத்தனால் கலக்கிறீர்கள் என்று  கேள்வி கேட்ட நிருபருக்கு “நீங்கள் ஒன்றும் நிபுணர் கிடையாது” என்று திமிருடன் பதில் தந்துள்ளார் நிதின் கட்கரி. ஏனென்றால் அவர்கள் ‘நிபுணர்களின் ‘ அறிக்கைகளை மட்டுமே ஏற்பார்கள்.

நாம் மாற்ற வேண்டியது பழுதடையும் என்ஜின்களை அல்ல; என்ஜின்களை பழுதடைய வைக்கும் பாசிச பாஜக அரசைத்தான். நாம் முடிவு கட்ட வேண்டியது கலப்பட பெட்ரோலுக்கு மட்டுமல்ல; எரிபொருள் துறையில் கொடி கட்டிப் பறக்கும்  கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தையும் தான்.

 இளமாறன்

1 COMMENT

  1. பெட்ரோலில் எத்தனால் கலந்து மக்களின் சேமிப்பு சுரண்டும் மோடி அரசு !கார்ப்பரேட் முதலாளிகள் அம்பானி அதானி மட்டும் கொள்ளையடித்தால் போதாது பிஜேபி சேர்ந்த நிதின் கட்கரி மகனும் கொள்ளை அடிக்க வேண்டும் அதற்கு இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதும், மக்கள் உரிமைக்காக கேள்வி எழுப்பினால் தேசத்துரோகி என பட்டம் கொடுப்பதுதான் நடந்தேறி வருகிறது.
    பெட்ரோல் டேங்க் முழுவதும் ஃபில் பண்ணாத பல கோடிக் கணக்கான பைக்குகள் இருக்கிறது அவர்களெல்லாம் ஒரு நாளைக்கு 100ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டு ஓட்டக்கூடிய அப்பாவி உழைக்கும் மக்களே. இந்த அநீதியை கட்டுரை எனக்கு உணர்த்தியுள்ளது மக்கள் போராட்டம் மட்டும் தான் கலப்படமில்லா கம்யூனிஸ அரசாங்கத்தை படைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here