“நீட்’ தேர்வின் மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடப்பதால், அரசு மருத்துவ சேவைக்கான உள் ஒதுக்கீடு ரத்தாகிவிடும். இதனால் அரசு மருத்துவமனைகளில் தன்னை வருத்திக்கொண்டு சேவை செய்ய யாரும் விரும்பமாட்டார்கள். அது மட்டுமல்லாமல், லட்சங்களை செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவர்கள், தாங்கள் போட்ட முதலீட்டை எடுக்க தனியார் மருத்துவமனைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வார்களே தவிர, அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு சேவை செய்ய வரமாட்டார்கள்.
ஏற்கனவே, மோடி அரசு கையெழுத்திட்டுள்ள காட்ஸ் ஒப்பந்தப்படி பொதுசுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தங்குத்தடை இல்லாமல் அந்நிய நிதியை அனுமதிக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள நமது பொது சுகாதாரத் துறையை கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் தரத்தின் பெயரால் நீட் திணிக்கப்படுகிறது. இது நடந்துவிட்டால், அரசு மருத்துவக் கல்வி மட்டுமல்ல, அரசு மருத்துவ சேவையும் இனி ஏழைகளுக்கு கிடைக்காது. பெருவாரியான மக்கள் நோய், நொடியிலேயே செத்துமடியும் அபாயத்தை உருவாகும்.
இதுவரை வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது என்று இருந்தது. இனி அவர்களும் சேரலாம் என்று MCI சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்கல்வியை தரப்படுத்துவது இவர்கள் நோக்கம் இல்லை. சிறு கூட்டமான பார்ப்பனர்கள் – பணக்காரர்களில் இருந்து ‘தரமான’ நவீன கொத்தடிமைகளை உருவாக்குவது என்ற கார்ப்பரேட் நலனையும், பெருவாரியான ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை மறுக்கும் பார்ப்பன – புதிய மனுநீதியையும் இணைக்கும் புள்ளிதான் நீட்.” என்று தமிழகத்தை உலுக்கிய மாணவி அனிதா தற்கொலை ஏற்படுத்திய நீட்டுக்கு எதிரான கோபாவேசத்தை ஒட்டி, 2017 ஆம் ஆண்டில் நீட் எதிர்ப்பு இயக்கமாக முன்னெடுத்துக் கொண்டுச் சென்றது புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கல்வியில் தனியார்மயம் என்பது ராக்கெட் வேகத்தில் முன்னேறிச் சென்றது. அதன் ஒரு பகுதியாக ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தும் நாடு தழுவிய அளவில் அரசின் பிடியிலிருந்து படிப்படியாக அகற்றப்பட்டு கல்வி கார்ப்பரேட் கொள்ளையர்களின் கொடூரமான, வரம்பற்ற கல்விக் கொள்ளைக்கு வழி வகுத்தது.
உள்ளூரில் நடக்கின்ற சாதாரண ஆங்கில வழி பள்ளிக்கூடங்களிலும், மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்சி பள்ளிக்கூடங்களிலும் படிப்பது வாழ்க்கை போராட்டத்திற்கு உதவாது என்ற கருத்துருவாக்கம் மீண்டும், மீண்டும் பரப்பப்பட்ட காரணத்தினால் நாடு முழுவதும் கல்வி கொள்ளையர்கள் கார்ப்பரேட் பாணியில் கல்வி கொள்ளையில் குதித்து பல லட்சம் கோடிகளை சுருட்டி வருகின்றனர்.
படித்து முடித்தவுடன் வேலை தேடியலைகின்ற இளைஞர்கள் பட்டாளம் கோடிக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்வதால் படிக்கின்ற போதே அவர்களை மட்டறுக்கின்ற கொடூரமான முயற்சிகளின் ஒரு வடிவம் தான் போட்டித் தேர்வுகள்.
படிக்க:
🔴 கரப்பான் பூச்சிகளின் நாடாளுமன்ற முற்றுகையும், சோனம் வாங்சுக்கின் போராட்டமும்!
🔴 இந்தியாவின் கரப்பான்பூச்சிகள் அதிகார வர்க்கத்தை நடுங்க வைத்தது எப்படி?
இந்தப் போட்டித் தேர்வுகள் மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தையும், எதிர்கால லட்சியத்தையும், வாழ்க்கை பற்றிய கனவுகளையும் முளையிலேயே கருக்கி விடுகிறது என்பதால் தான் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை அது அமுல்படுத்த துவங்கிய காலத்திலேயே முன்வைத்தது புதிய ஜனநாயகம் உள்ளிட்ட அமைப்புகள்.
இத்தகைய போட்டித் தேர்வுகள் மூலம் எப்படியாவது இடத்தை பெற்று விட வேண்டும் என்ற வெறியூட்டப்படுவதன் காரணமாகவே போட்டித் தேர்வின் வினாத்தாள்களை அதிகார வர்க்கம் தொடர்ச்சியாகவும், சட்டவிரோதமான முறையிலும், ரகசிய முறையிலும் கசிய விட்டு அதிலும் பல ஆயிரம் கோடிகளை லாபம் பார்க்கின்றனர்.
“கடந்த பத்தாண்டுகளில் மட்டும் மத்திய மற்றும் மாநில அளவிலான அரசுப் பணித் தேர்வுகள், மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள் என மொத்தம் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதனால் 7.5 கோடிக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பல ஆண்டுகால கடின உழைப்பும், அவர்களின் பெற்றோர்களின் சேமிப்பும் ஒட்டுமொத்தமாகப் பாழாகியுள்ளது. வினாத்தாள் கசிவு இளைஞர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்று நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியே புலம்புகின்ற வகையில் நிலைமை மோசமாகிவிட்டது.
நீட் தேர்வுக்கு எதிரான மோசடிகளையும், வினாத்தாள் கசிவையும் எதிர்த்து நாடு தழுவிய அளவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் போராடி வருகின்ற சூழலில் இதுவரை பணியாத ‘சாணக்கியர்கள்’ (ரஜ புத்திர மன்னர்களுக்கு எவ்வாறு கிரிமினல் முறையில் ஆட்சி செய்ய வேண்டும் என கற்றுக் கொடுத்த) என்றெல்லாம் புகழப்பட்ட பாசிச மோடியும்< அவரது சகவான அமித்ஷாவும் முதல் முறையாக பணிந்துள்ளனர். வினாத்தாள் மோசடிகளுக்கு பொறுப்பேற்று அந்த துறை அமைச்சரான திருவாளர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
படிக்க:
🔴 மருத்துவ நுழைவுத் தேர்வு: ஆஸ்திரேலியாவிடமிருந்து கற்போம்!
🔴 மோடியின் நள்ளிரவு வீடியோவும், மாணவர்களின் போராட்டமும்!
ஆனால் இதற்கு முன்பாக மாணவர்களை எப்படியாவது அடக்கிப் பணிய வைக்க வேன்டும்; சமாதானம் செய்து விட வேண்டும் என்று ஆர்.எஸ்,எஸ்-பாஜக உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலின் மூளை பல்வேறு கிரிமினல் தரமான முறையில் முயற்சிகளை மேற்கொண்டது.
டெல்லியில் போராடிய மாணவர்களை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்ற முறையில் பிரிட்டன் காலனியாதிக்கத்தின் போது ஜாலியன் வாலாபாக்கில் ஒன்று கூடிய மக்களை சுட்டு பொசுக்கிய ஜெனரல் டயர் பாணியில், மின்சார லத்திக்கம்புகள் முதல் ஆணி அடித்த லத்தி கம்புகள், கண்ணீர் புகை குண்டுகள், பெல்லட் குண்டுகள் ஆகியவை அனைத்தையும் பயன்படுத்தி கொடூரமான, மிருகத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்த அடக்குமுறைகளை கண்டு மாணவர்கள் கலைந்து சென்று விடுவார்கள் என்று மனப்பால் குடித்ததற்கு மாறாக பெண் போராளிகள் இதுவரை போராட்டங்களை பார்த்திராத அல்லது நேரடியாக பங்கேற்காத பல மாணவக் கண்மணிகள் போராட்டத்தில் முன்னிலை வகித்தது மட்டுமின்றி, போர்க்குணத்துடன், போலீசையும், இராணுவத்தையும், அரசு அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து நின்றுப் போராடி மக்கள் எழுச்சியை உருவாக்கியுள்ளனர்.
இதையெல்லாம் கண்டு மிரண்டு போன பாசிச மோடி புதிது புதிதாக சட்டங்களைக் கொண்டு வந்து ஏய்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்.
படிக்க:
🔴 தலைநகரில் பெல்லட்கன் தாக்குதல்: மோடி அரசின் பாசிச படையின் அட்டூழியங்கள்!
பிரதமர் மோடி பேசியதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: “நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பானவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற வினாத்தாள் கசிவு மீண்டும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
வினாத்தாள் கசிவு ஒரு கொடிய பாவச் செயல். இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தவறான பாதையில் செல்வது எளிது. ஆனால் அதிலிருந்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவது மிகவும் கடினம். அவர்களை தூண்டிவிடாமல், நாம் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். அது நமது பொறுப்பு. இளைஞர்களின் எதிர்காலமே முக்கியம். இதில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுத்தல் தேசத்தின் பொறுப்பாகும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூட்டத்தில் வலியுறுத்தினார்.” என்று பாசிச மோடி மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் போல அறிக்கை வெளியிட்டார்.
பாசிச மோடி தனது சக பாடி அமைச்சர்களை பாதுகாப்பதற்காக அதிகார வர்க்கத்தினரை பலி கொடுப்பது என்ற நைந்துப் போன வழிமுறையை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதி தான் கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய திருவாளர் வினீத் ஜோஷி பதவி விலகியது ஆகும்.
இந்த வினீத், , கான்பூர் ஐஐடி.யில் பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர். 1992-ம் ஆண்டு மணிப்பூர் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியைத் துவக்கியுள்ளார். இவர் கல்வித் துறை செயலாளராக கடந்த 2025-ல் பொறுப்பேற்றார். அதன்பின் அவருக்கு யுஜிசி தலைவர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. இவரது பின்னணியையும் இவர் வகித்து வருகின்ற பொறுப்புகளையும் பார்க்கும்போது இன்னும் எத்தனை கிரிமினல் குற்ற செயல்கள் நடந்தேறியுள்ளன என்பதெல்லாம் ஆய்வுக்குரிய விஷயங்களாக மாறியுள்ளன
தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளது தற்காலிகமாக மாணவர்களின் எழுச்சிக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக உணர்வு கொண்டவர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும். ஆனால் இத்தகைய அமைச்சர்கள் ஆட்டம் போடுவதற்கு அடிப்படையாக உள்ள பாசிச அரசு கட்டமைப்பு தூக்கி எறியப்பட வேண்டும் என்பதும், அவ்வாறு தூக்கி எறியப்பட்டால் தான் நீட், கேட், சாட் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் முற்றாக ஒழிக்கப்படும்.
கார்ப்பரேட்டுகள் கல்வியை பண்டமாக மாற்றி பல்லாயிரம் கொள்ளையடிப்பதற்கும், மாணவர்கள் எதிர்காலத்தை குழி தோண்டி புதைப்பதற்கும், ஏற்கனவே ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த நிலைமையைப் போல பார்ப்பனர்கள் மற்றும் சொல்லிக் கொள்ளப்படும் சில மேல் சாதிகளை தவிர பிற பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கல்வி கற்கின்ற உரிமையை பெறவே முடியாது. இவை அனைத்தையும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அமுல்படுத்த பாசிச பாஜக வெறியுடன் அலைவதை ஒன்றிணைத்து பார்க்கும் போது தான் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி எவ்வளவு அவசியம் என்பது புரியும்.
போராட்டத்தில் முன்னணியாக நின்று களம் கண்டு பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்ட இளம் போராளிகளுக்கும், மாணவர்களுக்கும் புதிய ஜனநாயகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்பது மட்டும் இன்றி இந்தப் போராட்ட அனுபவங்களிலிருந்து நாடு தழுவிய அளவில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை கட்டியமைக்கின்ற மகத்தான பணியை, மக்கள் எழுச்சியின் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்ற மார்க்சிய லெனினிய விஞ்ஞானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதி அளிக்கிறது.
- தமிழ்ச்செல்வன்.
புதிய ஜனநாயகம் தினசரி







