இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்துறையில் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் சென்னை, ஓசூர், கோயமுத்தூர், திருப்பூர் போன்றவை தொழில் நகரங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகள் படையெடுத்து வந்து குவிந்துள்ளன. மோட்டார் வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் உற்பத்தி, ஜவுளி தொழில் உள்ளிட்டு பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகின்றனர்.
ஆட்சியாளர்கள் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதையே தமது சாதனைகளாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இப்படி தொழில் நகரங்களில் படையெடுத்து வந்து குவிந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களும், அந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக, அதாவது உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காக இயங்குகிறதா? இத்தகைய நிறுவனங்களில் நடக்கும் உற்பத்தியால் ஆதாயம் அடைவது யார்? என்ற கேள்வியை முன் வைத்து ஒரு கள ஆய்வை 2026 ஜூலையில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், படப்பை உள்ளிட்ட இடங்களில் நடத்தினோம்.
உற்பத்தியில் மிக முக்கிய பங்களிப்பைச் செலுத்தும் தொழிலாளர் வர்க்கம் இதனால் எத்தகைய பலனை அடைந்துள்ளது என்பதை அவர்கள் மத்தியில் கேள்விகளாக தொகுத்துச் சென்று அதன் மூலம் கருத்துக்கணிப்பை நடத்தி முடித்து உள்ளோம்.
நாங்கள் தொழிலாளர்களை சந்தித்ததில் கிடைத்த முடிவுகளை கீழே தருகிறோம்.
-
தொழிலாளர்களின் வயது என்ன?
28 வயதுக்குட்பட்டவர்கள் 82%.
அதாவது பெரும்பாலானோர் வேலைக்கு சேர்ந்து “மூன்று மாதமாகிறது, ஆறு மாதமாகிறது, ஒரு வருடம் ஆகிறது” என்றுதான் பதில் சொல்லி உள்ளனர். ஆனால் இப்பகுதியில் ஆலைகள் வந்து 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் ஆகிறது. அப்படி இருக்க ஏன் மூத்த தொழிலாளிகளை, நிரந்தர தொழிலாளிகளை அதிகமாக சந்திக்க முடியவில்லை? வேறு ஒன்றும் இல்லை; வேலைக்கு எடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் தொழிலாளிகளை மொத்தமாக விரட்டி விடுகின்றனர். மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 20% கூட நிரந்தர தொழிலாளர்களாக இருப்பதில்லை.
-
திருமணமான தொழிலாளர்கள் எத்தனை பேர்?
நாங்கள் பேச முடிந்ததில் வெறும் 16 சதவீதம் பேர் மட்டும் தான் திருமணம் ஆனவர்கள். அதாவது 84 சதவீதம் தொழிலாளர்கள் திருமணமாகாத இளைஞர்கள்.
படித்து முடித்தவுடன் கல்லூரியில் இருந்து நேரடியாக அள்ளிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இரண்டு மூன்று வருடங்களுக்கு வேலை வாங்கிவிட்டு “வேறு தொழில் நகரங்களை பார்த்து போ” அல்லது “ஊர் பக்கம் போய் விடு” என்று விரட்டி அடித்து விடுகிறார்கள். கல்லூரியில் இருந்து வேலை கிடைத்து விட்டது என்று மகிழ்வுடன் வருபவர்களுக்கு அது தற்காலிக வேலைதான் என்றோ, ஆரம்பத்தில் நேரடியாக பன்னாட்டு நிறுவனம் தரும் குறைந்தபட்ச ஊதியத்தை கூட அதன் பின்னர் கான்ட்ராக்ட்களிடம் வேலைக்கு செல்லும் பொழுது தான் பெற முடியாது என்பதையோ அவர்கள் அறிந்திருப்பதில்லை. அதாவது அனுபவமும் திறமையும் கூடக் கூட சம்பளம் குறைந்து கொண்டு செல்லும். இந்த கள யதார்த்தத்தை எந்த கல்லூரியிலும், எந்த ஆசிரியர்களும் விளக்கிச் சொல்வது இல்லை. அதனால் தான் வெறும் அற்ப கூலியில் திருமணமாகி குடும்பமாக வாழ்வதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத நிலையில் இளம் தொழிலாளர்கள் மட்டுமே இங்கு பணியில் நீடிக்கின்றனர். இதுவே கள எதார்த்தமாக இருக்கிறது.
படிக்க:
🔴 எரியும் இந்தியா: தகிக்கும் வெயிலில் தவிக்கும் தொழிலாளர்கள்”
🔴 இந்திய தொழிலாளர்கள் விற்பனைக்கு!
-
என்ன படித்திருக்கிறார்கள்?
20% பேர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள். 43% பேர் டிப்ளமோ எனும் பட்டய படிப்பு படித்தவர்கள். 37% பேர் பட்டதாரிகள்.
அதாவது தொழிலாளர்களின் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் நன்றாக படித்திருக்கிறார்கள். அதிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தொழிற்கல்வியை முடித்திருக்கிறார்கள்.
-
எத்தகைய வேலை கிடைத்துள்ளது?
நாங்கள் சந்தித்ததில் 36% பேர் நிரந்தர தொழிலாளிகளாகவும், 24% பேர் ஒப்பந்த தொழிலாளிகளாகவும், 40% பேர் பயிற்சி தொழிலாளிகளாகவுமே இருந்தனர்.
அதாவது பிரஷ்ஷாக படித்து முடித்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் ஆலைகளில் பணிபுரிகின்றனர். அவர்களிலிருந்து வடிகட்டப்பட்டு பாதிப்பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றம் பெறுகின்றனர். பன்னாட்டு நிறுவனமானது முப்பது ஆண்டுகளாகவோ 20 ஆண்டுகளாகவோ இயங்கிக் கொண்டுள்ளது. ஆனால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. அதைத் தாண்டி நீடிக்க வேண்டுமென்றால் காண்ட்ராக்ட் முறையில் வேலைக்கு வந்தாக வேண்டும். இது ஒரு சூழ்ச்சி.
தொழில் தொடங்குவதற்கு 99 வருடத்திற்கு நிலத்தை இனாமாகவோ மலிவான குத்தகையாகவோ தாருங்கள் என்று கேட்டுத்தான் நுழைகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். வங்கியில் கடன் வாங்கி கட்டடங்களையும் எழுப்பி இயந்திரங்களையும் நிறுவி நிலையான நிரந்தர உற்பத்திக்காகவே கார்ப்பரேட்டுகள் தொழில் நகரங்களில் குவிந்துள்ளனர். ஆனால் வேலைக்கு எடுக்கும் தொழிலாளர்களை மட்டும் மூன்றாண்டுகளுக்கு மேல் வைத்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். என்ன ஒரு அயோக்கியத்தனம்? என்று எந்த ஒரு அரசாங்கத்துக்கும், அரசு அதிகாரிக்கும் கோபமே வரவில்லை.
5. தொழிலாளர்களுக்கான அடிப்படை சலுகையான இஎஸ்ஐ இபிஎப் வழங்கப்படுகிறதா?
32 சதவீதம் பேர் வழங்கப்படுகிறது என்றனர். 68 சதவீதம் பேர் அப்படி எதுவும் கிடைப்பதில்லை என்றனர்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை ஒட்டி உள்ள தொழில் பிராந்தியத்தில் தான் இத்தகைய பேரவலம். தொழிலாளர்களின் அடிப்படையான உரிமைகள் கூட கார்ப்பரேட்டுகளால் மறுக்கப்படுகிறது. அல்லது, அப்படி ஒரு ஏற்பாட்டை விதிகளின் அடிப்படையில் கணக்கு காட்டுவதற்காக ஒப்பந்த முதலாளிகளோ கார்ப்பரேட்டுகளோ செய்திருந்தாலும் கூட, அது குறித்து தொழிலாளிக்கு எந்த தகவலையும் தராமல் மூடி மறைத்துள்ளார்கள். தொழிலாளர் நல சட்டங்களும், விதிகளும் இவர்களை பொருத்தவரை கூந்தலுக்கு சமமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
படிக்க:
🔴 தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் உரிமையே புதிய பணிச் சூழல் சட்டங்கள்!
பெரும்பாலான தொழிலாளர்கள் NAPS(National Apprenticeship Promotion Scheme) பயிற்சி தொழிலாளர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சட்டப்படியான சலுகைகளான இ.எஸ்.ஐ, பி.எஃப் கிடையாது என்கிறது மோடி அரசு. அதாவது முதலாளிகள் சுரண்டலுக்கு ஏற்றவாறு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இதையெல்லாம் சரி செய்யாமல் எதற்காக சம்பளம் வாங்குகிறார்கள்? தொழில்துறை அமைச்சர் என்று ஒவ்வொரு ஆட்சியிலும் பதவி ஏற்பவர் தொழிலாளர்களுக்கான அமைச்சராக செயல்பட்டு இருக்கிறாரா? அல்லது கார்ப்பரேட்டுகளுக்கான அமைச்சராக செயல்பட்டு இருக்கிறாரா? என்பது பரிசீலனைக்கு உரியது.
6. எத்தனை வருடங்களாக தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகிறீர்கள்?
இரண்டு வருடங்களுக்குள் என்று சொன்னவர்கள் 60% பேர். இரண்டு முதல் ஐந்து வருடங்கள் என்று சொன்னவர்கள் 20 சதவீதம் பேர். ஐந்து முதல் பத்து வருடங்கள் என்று சொன்னவர்கள் 10% பேர். 10 வருடங்களுக்கு மேல் என்று சொன்னவர்கள் 10% பேர்.
படித்து முடித்துவிட்டு தொழில் நகரங்களுக்கு வேலை தேடி வருபவர்கள் ஏன் ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை? ஏன் சொந்த ஊரை நோக்கி சென்று விடுகின்றனர்? ஏனென்றால், இங்கு உற்பத்தி உலக தரத்திலானதாக இருக்கிறது. உற்பத்தி செய்யும் நிறுவனம் உலக அளவில் முன்னணியானதாகக் கூட இருக்கிறது. ஆனால் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை உலகத் தரத்தில் இருப்பதில்லை. பெரும்பான்மையான தொழிலாளர்கள் நிறுவனத்துடன் எந்த வகையிலும் தொடர்பே இல்லாதவர்களாக மாற்றப்பட்டு பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
படிக்க:
🔴 தொழிலாளர்களை ஊழல் படுத்தும் கார்ப்பரேட் கிருமிகள்!
கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆயிரம் பேர் தேவை என்றால், அதை ஈடு செய்ய மேன்பவர் சப்ளை என்று ஒரு உள்ளூர் அரசியல்வாதி ஒரு காண்ட்ராக்ட் காரராக அவதாரம் எடுக்கிறார். அவர் 10 உள்ளூர் கான்ட்ராக்டர்களுக்கு 100 பேராக அனுப்புங்கள் என்று உள் கண்ட்ராக்ட்டை பிரித்து தந்து விடுகிறார். அப்படி நூறு பேர் கொண்ட தொகுதியில் ஒருவராகத்தான் தொழிலாளி பணியில் நீடித்தாக வேண்டும். அவருக்கு ஒரு கான்ட்ராக்ட் முதலாளி. அந்த காண்ட்ராக்டர்களுக்கு எல்லாம் சேர்த்து ஒரு பெரிய கான்ட்ராக்ட் முதலாளி. அந்த பெரிய காண்டாக்ட் முதலாளிகளுக்கு மேல் தான் பன்னாட்டு நிறுவனம் என்ற கட்டமைப்பு உள்ளது.
அதாவது தனது உண்மையான முதலாளி யார் என்று இவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கும் ஆலைக்கும் எவ்வித தொடர்பும் உறவும் கிடையாது என்று மிகவும் நைச்சியமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் இவர்கள் உழைப்பில் சிறிய காண்ட்ராக்டர்கள் கொள்ளை அடிப்பார்கள். பெரிய காண்ட்ராக்டர்களும் கொள்ளையடிப்பார்கள். அதுபோக ஒப்பந்த முறையில் அத்து கூலிக்கு ஆள் எடுப்பதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனமும் பெரும் கொள்ளை அடிக்கும்.
இத்தகைய கொள்ளைக்கெல்லாம் ஈடு கொடுத்து இங்கு வாழ முடியாது என்றுதான் ஐந்து ஆண்டுகளுக்குள் வெறுத்துப் போய் தொழிலாளிகள் சொந்த ஊரை பார்க்க சென்று விடுகின்றனர்.
ஆனால், தொழிலாளர் நலத்துறையில் உள்ள அதிகாரிகளோ, ஊழியர்களோ ஐந்தாண்டுகளில் தமது வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு செல்வதில்லை. அரசியல்வாதிகளும் கூட ஐந்து ஆண்டு ஆட்சி முடிந்த பின் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பதவியைப் பெறவே முண்டியடிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுக்க வேலை தேவை. ஓய்வு பெற்ற பின்னரும் பென்சன்கள் தேவை. ஆனால் இவர்களின் நீதிபதிபரிபாலனத்தின் கீழ் வரும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை “நீ ஐந்தாண்டுகள் வேலை செய்தாலே போதும்; சொந்த ஊருக்கு ஓடி விடு” என்று விரட்டி விடுகின்றனர்.
(தொடரும்…)







