
அக்டோபர் 7, 2023 முதல் மேல்நிலை வல்லரசான அமெரிக்காவின் ஏகோபித்த ஆதரவுடன் ஜியோனிச இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு காசா மீதான இன அழிப்பு போரை நிகழ்த்தி வருகிறது. இடையில் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால போர் நிறுத்தம் அறிவித்திருந்த போதும் எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் இன்று வரை தனது நரவேட்டையை நிகழ்த்தி வருகிறது.
இந்தப் போரினால் காசாவின் பெரும்பாலான நிலப்பகுதி அழிக்கப்பட்டு மக்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் தவித்து வரும் நிலையில், ஐநாவின் ஒத்துழைப்புடன் பல்வேறு தரப்பினர் உதவி செய்ய முன்வந்தும் அனுமதிக்காமல் ஐநா-வாவது ம***வது என தடுத்து வருகிறது இஸ்ரேல் அரசு
கடந்த ஜூன் 9 அன்று மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்வதற்காக கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த சூழலியல் போராளி கிரேட்டா துன்பர்க் மற்றும் ரிமா ஹாசன், உமர் ஃபயாத் உள்ளிட்டோர் காசாவை அடைய முற்பட்டபோது சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்
இவர்கள் மட்டுமல்லாமல் எல்லையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை அனுமதிக்காமல் மக்களை பட்டினி சாவில் தள்ள முற்பட்டது கொடுங்கோலன் இஸ்ரேல் அரசு.
இதற்கு எதிராக உலகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த இனப்படுகொலையை நிறுத்த கோரியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி வழங்க கோரியும் ‘GLOBAL MARCH TO GAZA’ என்ற பெயரில் காசாவுக்கான உலகளாவிய பேரணியை மக்கள் தொடங்கியுள்ளனர்.
இந்த முயற்சி ஜூன் 13 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 20 வெள்ளி வரை நடைபெறுகிறது பிரதான பேரணி ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கு கொள்கிறார்கள். எல்-அரிஷ்-லிருந்து ரஃபா எல்லை வரை நடந்து செல்ல திட்டமிட்டுள்ளனர். பலர் விமானங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பேருந்துகள் மூலம் எகிப்துக்கு வந்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் 54 நாடுகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்களும் பங்கேற்கின்றனர்.
போர் தொடங்கியதிலிருந்து 55,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள். மார்ச் 2025 அன்று அனைத்து எல்லைகளையும் மூடி இஸ்ரேலிய பாசிஸ்டுகள் அத்தியாவசிய உதவிகள் வருவதை நிறுத்தினர். இப்போது 24 லட்சம் மக்கள் வசிக்கும் காசா முழுவதும் பஞ்சம் உருவாகும் அபாயம் உள்ளது. ஊட்டச்சத்து குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் சாவின் விளிம்பில் உள்ளனர்.
படிக்க:
🔰 காசாவில் சாவின் விளிம்பில் 14,000 குழந்தைகள்!
🔰 காசா முதல் காஷ்மீர் வரை ஊடகவியலாளர்களின் செயல்பாடு?
இதன் பின்விளைவுகளை உணர்ந்து சர்வதேச சமூகம் ஒன்று கூடி உள்ளது. ஜூன் 12 எகிப்தின் கெய்ரோவில் பேரணி தொடங்கிய ஒரு குழு எல்-அரிஷத்திலிருந்து பேருந்துகளில் சென்று பின்னர் எகிப்துக்கு மற்றும் காசாக்கும் இடையிலான ரஃபா எல்லையை சுமார் 50 கிலோமீட்டர் நடந்தே செல்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சௌமௌத் கான்வாய் என்று அழைக்கப்படும் மற்றொரு குழு ஜூன் 9 திங்கட்கிழமை துனிசியாவில் இருந்து புறப்பட்டு எகிப்தில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள வட ஆப்பிரிக்கா முழுவதும் பேருந்து மற்றும் கார்களில் பயணித்து வந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனங்களின் படி சில சர்வதேச பங்கேற்பாளர்கள் தங்கள் பயணத்தை தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது. 73 நபர்கள் இஸ்தான்புல்லுக்கு (துருக்கி) நாடு கடத்தப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் 200 பேர் கெய்ரோவில் உள்ள ஹோட்டல்களில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது. எகிப்து தனது நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும் என்று அச்சம் கொள்கிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரோ சங்கிகளைப் போல் ‘ஜிகாதி போராட்டக்காரர்கள்’ என்று முத்திரை குத்துகிறார். மறுபுறம் எங்கள் படைவீரர்களுக்கு ஆபத்து என்று அலறுகிறார்
80 நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் காசாவை நோக்கி முன்னேறுகிறார்கள். இவர்கள் மதம், மொழி, இனம் கடந்து ஒரே வர்க்கமாய் இணைவது இஸ்ரேல் இன வெறியர்களை மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய கொள்ளை கும்பலையும் அச்சுறுத்தவே செய்யும்.
- சாவின் பயம் அறியாமல் முன்னேறும் சர்வதேச மக்களின் நோக்கம் வெல்லட்டும்!
- ஏகாதிபத்திய கும்பலும், இனவெறி கும்பலும் வீழட்டும்!
சுவாதி
நாமும் காசாவுக்கு ஆதரவு தருவோம் இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசை வீழ்த்துவோம்