செய்தி ஒன்று :

அக்டோபர் 12 காலை நாளேடுகளில் பரபரப்புச் செய்தி : நரபலி பற்றி. கேரள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு பெண்கள் பலிகொடுக்கப்பட்டதாக.

இருவரில் ஒருவர், பத்மாவதி. தமிழக தருமபுரி  விவசாயக் கூலிக் குடும்பம். கேரளாவுக்கு பிழைப்புக்காக  வேலைதேடிச் சென்றவர்.  தற்போது லாட்டரிச்சீட்டு விற்கிறார்.மற்றவர் ரோஸ்லின் கேரளாக்காரர்.

பலமுரணான செய்திகள் வருகின்றன. செல்வம் பெருகுவதற்கு இவர்களை இரையாகப் பயன்படுத்தினார்கள் ‘முசுலீம் ‘மாந்திரீக முகமத் ஷாபி மற்றும் ‘ இந்து ‘ பகவல்சிங் – சிங், லைலா தம்பதியர், இவர்கள் ஆயுர்வேத போலி-மருத்துவர்கள் என்று ஒன்று ; வறுமையிலிருந்து அவர்கள் இருவரை மீட்க லட்ச ரூபாய் தருவதாக ஆசை காட்டி பேரம்பேசி விபச்சாரத்திற்குள் இழுத்தார்கள் என்று இன்னொன்று, பல கிசுகிசுக்கள்.

எத்தனைத் துண்டுகள் போட்டு தோட்டத்தில் புதைத்தார்கள் என்று கொலைக் கொடூரத்தை விவரித்தன வக்கிர ‘கலாச்சாரத்தூண்கள்’. தமிழ்ப்பெண் கொல்லப்பட்டாள் என்று மெல்லிய தமிழ்த்தேசியத்தை நுழைத்தன சில மஞ்சள் ஏடுகள்.நரபலிக்கான சமூகக் காரணிகளை எழுதி சமூகம் மீள வழி என்ன என அக்கறைப்படும் பொறுப்புள்ள ஜனநாயக, முற்போக்கு ஏடுகளைத் தேடுகிறேன், கிடைக்கவில்லை. அரசியல் சாசனத்திலேயே  ” அறிவியல் பரப்பும் கடமை ” இருப்பதாகச் சொல்கிறார்கள், நம்பவா போகிறீர்கள்? அதுவும் இருந்த பரப்பல்களும் ‘இடசாரி’ஆட்சி என்ற நம்பிக்கைவசப்பட்டு குறைந்துபோய்விட்டன.

செல்வத்தை இப்படி குறுக்குவழியில்  சம்பாதிக்க முடியாதென  அறிவியல்ரீதியாக மறுப்பு வரவேண்டும்.  பரப்பல்கள் கேரளாஉள்ளிட்டு அதிகப்படவேண்டும். முதலாளித்துவ செல்வ ஆசைகள் ஊழலோடும்  கொலை களவுகளோடும் ஒழுக்கக்கேடுகளோடும்  கலந்து வருமென்ற சமூக எச்சரிக்கைகளை அன்றாடம் பரப்பவேண்டும். இப்போதுள்ள கட்டமைப்பு இதைச் செய்யாது என்ற சொரணை நமக்கு வேண்டும். முற்போக்காளர் கைகட்டி நிற்க முடியாது. பிரச்சாரத்தை நகர்த்திக்கொண்டே இருக்கவேண்டும்.

செய்தி இரண்டு :

செய்தி 1 நடந்த பத்தனம்திட்டா சம்பவ இடத்துக்குப்போன கேரள மாநிலப் பெண்கள்குழுத் தலைவர் பெயர் சதிதேவி. அதிர்ச்சியா? அடுத்தடுத்த அதிர்ச்சிகளை எதிர் கொள்ளுங்கள். இவர்வழக்குரைஞர். முன்னாள் எம்.பி. தாண்டுங்கள், 2021ல் குழுத்தலைவராக்கப்பட்டார். மகுடமாக, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.  இவருக்கு இப்படி ஒரு பெயரை ஏன் சூட்டினார்கள்  ?உடன்கட்டை ஏறும் புனிதமாதா திருப்பெயர் வடக்கே சதிமாதா  சதிதேவி. மகளிர் குழுத்தலைவர் வீட்டிலிட்ட பெயரை இன்னமும்கூட  மாற்றாமல் இருக்கிறார். வளர்ந்தபிறகு மாற்றியிருக்கவேண்டும். அதை யாரும் தடுத்திருக்க முடியாது. குறைந்தது  அவரது அமைப்பின்மூலம் அவர் விரும்பும் முற்போக்கு அல்லது சாதா பெயர் சூடியிருக்கவேண்டும்.

இது நேரடியாக  மக்கள் விரோத பிற்போக்குக் கொலைகளுக்குச் சம்பந்தமுள்ளதா ? இல்லை, ஆனால் அறிவியல் பரப்புதலுக்கு இடையூறுதானே ?

செய்தி மூன்று :

மூன்றாம் செய்தி  இந்திய அரசியல் சூழ்நிலைச் செய்தி. தமிழகத்தின்

‘ புளிச்சமாவு ‘ பட கதாநாயகன் ஜெமோ என்ற ஜெயமோகன்

‘ ஷ்ருதி  டி.வி ‘ யில்  மதமாற்றத்துக்கு எதிராக ஒரு போலீஸ் ஏஜெண்டுக்குக்  குறையாதவிதத்தில் பேசிய பேச்சு வெளியாகியுள்ளது. கேரள நரபலி பிற்போக்குக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? ஜெமோ கேரளாவிலும் பேர்போனவர்.  இன்றைய  கேரள பெண்கள் நரபலிக்கெதிராக அறிக்கை விடவில்லை. தொடர்ந்த  அறிவியல் பரப்புரைக்கு அவர் எங்கே வரப்போகிறார் ?

இதைக்காட்டிலும்  கொடிய நரபலிக்கு  எதிர்காலத்துக்கும் சேர்த்து  ஆர்எஸ்எஸ்ஸூக்கு ஆதரவான சித்தாந்தியாக இருக்கிறார். ஜெயமோகன் ஆர்எஸ்எஸ்ஸூக்கு தன் நிழலை விற்றுவிட்டவர். அதனால்  செய்திகளை இணைத்து எதிர்ப்பதில்  தவறில்லை.

விசயத்துக்கு வருவோம்.  ஜெமோ— கிறித்தவர்கள், முசுலீம்கள் செய்யும் மதமாற்றத்துக்கு  வெளிநாட்டுப்பணம் வரும் ஆதாரம்  அவரிடம் இருக்கிறது என்கிறார்.

” சைவம் இந்துமதம் அல்ல என்று சொல்வதற்கு தமிழகத்திற்கு இந்த ஆண்டு 100 கோடி ருபாய் அப்படிப்பணம்வந்திருக்கிறது…. ”

” இந்துமதத்திற்குள் இருக்கும் பிளவுகளை முன்னிறுத்துபவருக்கு ( அந்தச் சக்திகளுக்கு ) கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது…” மதம்மாற்றும் சக்திகளைப் பார்த்து வாயிலும் வயித்திலும் அடித்துக் கொள்கிறார் ஜெமோ.

எந்த மதம் மாறுவதற்கும், மதமற்ற பகுத்தறிவாளருக்கும் ஜனநாயக உரிமை உண்டு என்று நாம் சொன்னால் அதில் ஜெமோவுக்கு சிக்கல். அறுவதுகள் முதலே எல்லா இந்துப் போலிச் சாமியார்களும் அமெரிக்காவுக்கும்  ஐரோப்பாவுக்கும் பறந்து பறந்து கோடிக்கணக்கில் பணம் புரட்டியதும்  அமேரிக்க ஹிந்து ஸ்வயம் சேவக், விஸ்வ ஹிந்து பரிஷத்தின்   ( 1970 )அயல் கிளைகள் பணம் புரட்டி  இந்தியாவுக்கு அனுப்புவதும், 1947ல்  சங்பரிவாரின் முதல் அயல்கிளை கென்யாவில்திறக்கப்படுவதும் சும்மா அல்ல.

அமேரிக்காவில் ‘ முடிவிலி நிறுவனம் ‘ — (Infinity Foundation )உட்பட 5 ஹிந்து அமைப்புக்கள் கிருஷ்ணன் பொம்மை வைத்து விளையாடுகின்றன என்கிறாரா ஜெமோ ?  அமேரிக்காவிலும்பிரிட்டனிலும்  கோயில் கட்டியதும்/ கட்டுவதும் வேறு,  இந்திய மதமாற்றம் வேறு என்கிறாரா ? பேட்டியில் முக்கிய உயிர்த்தலம் அதுதான்.  ” ……இந்துமக்கள் ஒருவகையில் ( இந்தியாவில் )திரண்டுவரும்போது…..”  இப்படிச் செய்கிறார்களே என்பதே ஜெமோவின் உள்ளக்குமுறல்.  “அதனால் அந்த ஆக்களை நான் எதிர்க்கிறேன். எதிர்க்கிறது, இங்கே அருவெறுக்கிறேன் என்றுதான் சொல்லணும் ” என்பது ஜெமோ வாக்குமூலம்.

கோடிக்கணக்கான மக்களுக்கு எதிரான திட்டம், அதாவது  இந்துராஷ்டிரத் திட்டத்தை அமல்படுத்தும்  தந்திரத்தில் ஆர்எஸ்எஸ்  முசுலீம், கிறித்தவர்களை  நரபலி வாங்கும் பாதையை நிரந்தரமாகத் தேர்ந்தெடுப்பது அவருக்கு ‘ அருவெறுப்பாக ‘த் தெரியவில்லை. ஜனநாயகம்  மட்டுமே அவருக்கு  அருவெறுப்பு, விஷம்.

இப்போது இணைத்துப் பாருங்கள், புரியும்.

முதலில் கொலைச் சம்பவம் :

நேரடியாகப கேரளத்தில் பிற்போக்கின் சடங்கான நரபலி ;

இரண்டாவது :

அதே களத்தில் பிற்போக்கை பேரளவே எதிர்க்கின்ற

செயலற்ற, முரணுள்ள இடைச்சக்தி ;

மூன்றாவது :

வழக்கில் தானாகவே வந்து போலீஸ் ஏஜெண்ட் போல ஆஜராகும் சித்தாந்தவாதி, ஆயிரம் வட்டார ராஜகுருக்களில்  ஒருவரான ஜெயமோகன் வகையறா.

காஷ்மீரை, குஜராத்தை மறந்தவர்கள் மட்டுமே சமூகரீதியில் நடத்தப்பட்ட நரபலிகளை மறப்பார்கள் ;

இறந்த கணவனோடு உடன்கட்டை ஏறும் பெண்களின் ஆருயிர்களை, சதிவழக்கத்தை மறந்தவர்கள் மட்டுமே  பெண்களின் அரிய உயிர்களை, பெண் நரபலிகளை மறப்பார்கள் ; சம்பூக வதம் நடத்தி  பட்டாபிஷேகத்திற்கு “வருணாச்சிரம ரூட் கிளியர் செய்து கொடுத்ததை” மறந்தவர்களே அந்த உத்தம ராமனின் லீலைகளை, நர பலிகளை மறப்பார்கள்.

நரபலி நாயகர்களை ஏதோ ஓரிருவர் என்று குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். குறைத்து எடை போடுவதே ஓர் அரசியல்தான். உலக வரலாற்றிலேயே ஆக மிகக் கொடிய மறுகாலனியப் பாசிசத்தின் இந்தியக் கலப்பான ஹைபிரீட் கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை  ” சனாதனம் ” என்று ( பொதுவாகப் பழமை என்று அறியாமல் பிழையாக கிளிப்பிள்ளை போல இரவல் வாங்கிச்  சொல்லும், பாட்டுப் படிக்கும்  ) பொதுவாகப் பிற்போக்கு, பொதுவாக அடிப்படைவாதம், பொதுவாக  மதவெறி என்று சொல்வதே குறைத்து எடை போடுவதுதான்.

பொந்துகளில் அக்கினிக் குஞ்சுகளைப் போட்டால், முதலில் வெளியே வருவது  அழிப்புச் சக்தியின் துணைக் கருவியான  நரபலி பிரச்சார கலாச்சார டீம்தான். அப்புறம் அவர்களின் படைவரும். என்று அந்தக் காடு வெந்து தணியும் ?

என்று பாசிசப் பெருங்காடு வெந்து தணியும்?

  • இராசவேல்

1 COMMENT

  1. ஜெயமோகன் வகையறாக்களுக்கு நெற்றியில் அடித்தாற் போல் எழுதப்பட்டுள்ள சிறப்பு கட்டுரை. வாழ்த்துக்கள்! தோழர்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here