டந்த 28 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் அகில இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த வேலைநிறுத்தம் புதிய பரிமாணத்துடன் நடந்தேறியது.

கடந்த காலங்களில் தொழிலாளர்கள் போராடும் போது விவசாயிகள் அவர்களுடன் ஒன்றிணைய மாட்டார்கள். அது போல வியாபாரிகள் ஒத்துழைக்க மாட்டார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக கையாண்டு வரும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் ஆளும் வர்க்கத்திற்கு விசுவாசமாக ஒரு பிரிவு போராடும்போது மற்றொரு பிரிவை இணைக்காமல் தனித்தனியே போராடுவதற்கு பழக்கி உள்ளனர்.

2014 முதல் மோடி அமுல்படுத்துகின்ற கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கை தீவிரமாக தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமைகளை நசுக்குகிறது. வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆகியவை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டுகின்ற கார்ப்பரேட் மய- புதிய விவசாயக் கொள்கையை, மூன்று வேளாண் சட்டங்களின் மூலம் அமல்படுத்த எத்தனித்து தற்காலிகமாக பின் வாங்கியுள்ளது.

சிறு தொழில் முனைவர்கள் நெசவாளர்கள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், சொந்த மண்ணில் வேலை கிடைக்காமல் நாடு முழுவதும் வேலை தேடி அலைகின்ற நாடோடி புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் பாதிப்புக்குள்ளாகி கடும் போராட்டத்தின் கீழ் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

இந்தப் புறநிலை நிர்பந்தம் மக்கள் அனைவரையும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து போராட தூண்டுகிறது. நாடு முழுவதும் செயல்படும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஓரளவிற்கு இந்தமுறை அனைவரையும் ஒன்றுபடுத்தி போராட்டக் களத்தில் இறக்கியது இதன் விளைவாக 25 கோடி பேர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கேந்திரமான தொழில்களான போக்குவரத்து, தொலைத்தொடர்பு வங்கி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், மின் துறை, சுரங்கத்தொழில் ஆகிய துறைகளைச் சார்ந்த கோடிக்கணக்கான ஒப்பந்த, காண்ட்ராக்ட், நிரந்தர தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்டனர்.

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், பீகார், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வேலைநிறுத்தம் பெருமளவில் வெற்றியை பெற்றது.

இந்தியா முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள்

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் சுரண்டல் கொள்ளைக்கு உகந்த வகையில் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரத்தை மறுகாலனியாக்கக் என்ற திசையில் வேகமாக கொண்டு செல்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்.

இதற்காக கார்ப்பரேட்டுகளின் அடக்குமுறைகளை கனிமவளக் கொள்ளை முதல் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகளின் கூலியை கொடூரமாக சுரண்டுவது வரை அனைத்திலும் பாசிசமாக வடிவெடுத்துள்ளது.

இந்த கார்ப்பரேட் பாசிசத்துடன் ஒன்றிணைந்துள்ள காவி பாசிச கும்பல் நாட்டை பேரழிவு பாதையில் கொண்டு செல்வதை எதிர்த்து முறியடிக்க எமது தொழிற்சங்க அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பாசிச எதிர்ப்பு ஜனநாயக தொழிலாளர் முன்னணியை உருவாக்குவதற்கு அறைகூவல் விடுத்திருந்தது.

இந்த அறைகூவலை முன்வைத்து தமிழகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு எல்லைகள் வரை பரவலான பிரச்சாரத்தை கொண்டு சென்றது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டமைப்பை உருவாக்கியது.

புஜதொமு மற்றும் இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து நடத்திய போராட்டங்கள்:

தமிழகத்திலும் வாய்ப்புள்ள அனைத்து பகுதிகளிலும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கின்ற கட்சிகளின் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தது.

இந்த இரண்டு நாள் போராட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரம் அமைப்பு அறைகூவல் விடுத்ததுடன் நேரடியாகவும் களத்தில் பல மாவட்டங்களில் கலந்து கொண்டது. தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகியவையும் தொழிலாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து போராட்டக் களத்தில் இறங்கியது.

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு பரந்துபட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவர்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கின்ற வகையில், மக்கள் முன்னணியை நிறுவுகின்ற வகையில் இந்தப் போராட்டக் களத்தில் பல்வேறு பிரிவினரையும் இணைத்துக் கொண்டு ஒன்றிணைத்து போராடியது புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

இந்திய தொழிலாளி வர்க்கம் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு கடந்து செல்ல வேண்டிய தூரம் தொலைவானது. எனினும் இந்த இரண்டு நாள் போராட்டம் ஒரு புதிய துவக்கத்தை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here