டந்த ஆண்டு நவம்பரில் தமிழ்நாடு இன்வெஸ்ட்மெண்ட் கான்கிலேவ் என்ற பெயரில் மூன்றாவது முறையாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலாளிகளின் மாநாடு நடந்தது. ஏற்கனவே சென்னையில் இரு முறை நடத்தப்பட்ட மாநாடுகளின் மூலம், 21,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. தற்போது மூன்றாம் முறையாக கோவையில் நடந்த மாநாட்டில், 35,208 கோடி மதிப்பிலான 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் 75,000 பேருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 1448 கோடி மதிப்பில் 5-ஜி இணைய சேவைகளை வழங்கும் டேட்டா சென்டர்களை அதானி நிறுவனம் நிறுவுகிறது. ஏற்கனவே அதானி நிறுவனம் தமிழகத்தின் கடற்கரையும், விவசாய விளைநிலங்களையும் கபளீகரம் செய்து வருகிறது. இது போதாதென்று தற்பொழுது இணைய வான் வெளியையும் சூறையாட அனுமதி அளித்துள்ளது.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கார்ப்பரேட் சேவையில் மற்ற கட்சிகளுக்கு தான் எவ்விதத்திலும் சளைத்தது அல்ல என்பதை தனது செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போது சேலம் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்தது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பிறகு, அத்திட்டங்களுக்கான எதிர்ப்புக்களைக் கைவிட்டு அடக்கி வாசிக்கிறது. “நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில், சாலைப் போக்குவரத்து முக்கியமானது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட இத்திட்டத்தை எதிர்க்கவில்லை. மாறாக, மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டும்” என சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு வக்காலத்து வாங்கி, திமுக அரசின் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி போக்குவரத்துத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஜெர்க் வாங்கியுள்ளார்.

சேலம் எட்டு வழிச்சாலை மட்டுமல்லாமல், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், மீத்தேன் திட்டம், கெயில் குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட், கூடங்குளம் உள்ளிட்டு எந்தத் திட்டமானாலும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஆதரிப்பது, எதிர்க்கட்சியாக மாறினால் எதிர்ப்பது என்பதை, தமிழக திராவிடக் கட்சிகள் தங்களது காரியவாத, பிழைப்புவாத ஓட்டரசியலுக்கு ஏற்றவாறு நிலைப்பாட்டை எடுத்து வருவது ஒன்றும் புதிதல்ல.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில், கார்ப்பரேட்டுக்களுக்கு வாரி வழங்குவதற்காக தொழில் முதலீட்டு மாநாடுகளை அவ்வப்போது நடத்தி வருகின்றன. அதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் உருவாகும், மக்கள் வாழ்வாதாரம் உயரும் என்று சொன்னாலும் அது வேறு இந்தியாவின் வளர்ச்சி பற்றிய அறிக்கையாகும். அதனால் மக்களுக்கு உண்மை என்னவோ தலைகீழாகத் தான் இருக்கிறது. வேலை இழப்புக்களும், பணக்காரர்களது சொத்தும் தான் அதிகரிக்கிறது. தொழில் மாநாடுகளின் மூலம் உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடம்பிடித்துள்ள அதானியின் கொள்ளைக்காக ஒட்டுமொத்த தமிழகமும் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழகம் அதானியின் வேட்டைக்காடு!

இதற்கு ‘திராவிட மாடல்’ கூப்பாடு!

2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் உலகின் மிகப் பெரிய சோலார் உற்பத்தி நிலையத்தை அமைக்க அதானி நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அன்றைய மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.

இந்தத் திட்டத்தினால் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான உயர் மின் அழுத்தப் பாதைகள் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால், விவசாயிகள் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.


இதையும் படியுங்கள் : அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!


இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பற்றிய கவலையே இல்லாமல், 2021-ஆம் ஆண்டு திமுக-வின் ஸ்டாலின் அரசின் முன்னிலையில், 200 கோடி ரூபாய் மதிப்பில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை கரூர் மாவட்டத்தில், நிறுவுவதற்கான அனுமதி அதானி நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளது.

இந்த மின் திட்டங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், 30 உயர் அழுத்த மின் பாதைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக மின் வாரியம். மேலும், மின் பகிர்மானத்துக்காக 130 ஏக்கரில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின் நிலையம் திருப்பூர் மாவட்டம் புகளூரில் அமைக்கப்படுகிறது. மேலும், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்கள் வழியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் வரை 1843 கி.மீ. தூரம், 5530 உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 345 கி.மீ தூரத்திற்கு மின் பாதை செல்கிறது.

இந்த உயர் மின் அழுத்தப் பாதைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள், நீர்ப்பிடிப்பு மற்றும் வனப் பகுதிகள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பாதையின் இருபுறமும் 100 அடி அகலத்திற்கு எந்த பயிர் சாகுபடியும் செய்ய முடியாது. மரங்களை வளர்க்க முடியாது. ஏற்கனவே வளர்ந்த மரங்களையும் அகற்ற வேண்டும். மேலும், இந்த கோபுரங்களுக்கு அருகே பாசணக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் என எதையும் அமைக்க முடியாது. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மேலும், மின் கோபுரங்களுக்கு அருகில் குடியிருப்பவர்களுக்கு கருச்சிதைவு, மூளைக்கட்டி போன்ற நோய்கள் வரும். இவை மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் போராட்டத்தை நடத்தி வரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்.

இத்திட்டங்களால், தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும். இந்த திட்டங்களுக்கான எவ்வித கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாமலும், (நடத்தினாலும் அது வெறும் கண்துடைப்பு தான்) நில உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமலும், மின் கோபுரங்கள் அமைக்க அரசு அதிகாரிகளும், பெரு ஒப்பந்த நிறுவனங்களும் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து குழி தோண்டுவதாக மேற்கு மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர்.

அதே போல், 2012-ல் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டுதல் மற்றும் சரக்கு கையாளுதல் ஆகியவற்றிற்காக தமிழக அரசு மற்றும் எல்&டி நிறுவனத்தின் கூட்டுடன் துவங்கப்பட்டது காட்டுப்பள்ளி துறைமுக திட்டம். 337 ஏக்கர் பரப்பில் இத்துறைமுகம் அமைந்த போது, சாத்தான்குப்பம் என்ற மீனவ கிராமம் அப்புறப்படுத்தப்பட்டது. துறைமுக உள்கட்டுமானங்களால், கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்களுக்கு அருகில் கடல் வந்துவிட்டது. எல்&டி துறைமுகத்தால், அப்பகுதி மீன்வளம் குறைந்து வருவதுடன், தங்களை வாழ்விடங்களை இழந்து, வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு அதிமுக-வின் எடப்பாடி ஆட்சியில், எல்&டி நிறுவனத்தின் 97% பங்குகளை வாங்கியதன் மூலம் துறைமுகத்தை 1950 கோடிக்கு சொந்தமாக்கிக் கொண்டது அதானி நிறுவனம்.

 

ஏற்கனவே மீனவ மக்கள் போராடி வரும் நிலையில், மீனவர்களின் வாழ்வைப் பற்றிக் கவலைப்படாமல், அதானியின் துறைமுகத்துக்காக ஆறு வழிச்சாலை அமைக்க அனுமதித்தது எடப்பாடி அரசு. தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக அமைக்கப்படும் இந்த சாலை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் தச்சூர் வழியாக, துறைமுகத்தை இணைக்கிறது. முப்போகம் விளையும் 1,238 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, 34 கிராமங்கள் வழியாக 116 கி.மீ. தூரம் இச்சாலை அமைக்கப்பட உள்ளது.

முப்போகம் விளையக்கூடிய நிலங்கள் என சான்றளிக்கப்பட்ட இடங்களின் வழியாக சாலைகள் அமைக்கக் கூடாது என்ற விதிமுறையை மீறி அதானி குழுமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகத்தின் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்கள், சாலை அமைக்க மண் பரிசோதனை செய்ய வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, ஆறுவழிச்சாலை திட்டத்திற்காக அளவீடு செய்து நடப்பட்ட கற்களை பிடுங்கி எறிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

330 ஏக்கர் அளவிலான காட்டுப்பள்ளி துறைமுகமே தங்களது வாழ்வாதரத்தை அழித்து விடும் என்று மக்கள் போராடினாலும் அதை எல்லாம் காதிலேயே வாங்காமல், 2021 துவக்கத்தில் 6100 ஏக்கர் அளவிற்கு துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் போன்ற பூர்வாங்க வேலைகள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.

இந்த விரிவாக்க திட்டம் நடைமுறைக்கு வந்தால், 2291 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுவர். 6 கி.மீ. கடல் பரப்பில் 1967 ஏக்கரில் மணல் கொட்டி தரையை உயர்த்துவதால், பல மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகும். இதன் மூலம் 80 தமிழக – ஆந்திர எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் காலி செய்ய நேரிடும். அதன் உப விளைவாக வெள்ள வடிகாலாக இருக்கும் பழவேற்காடு ஏரியும், கொசஸ்தலை ஆறும், எண்ணூர் கழிமுகமும் சில நூறு மீட்டர்களாக சுருக்கப்பட்டு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்கள் நிரந்தரமாக மழை வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள் என்கிறார்கள் சூழலியலாளர்களும், மீனவ பஞ்சாயத்தாரும்.

மேலும், தற்போதுள்ள துறைமுகத்துக்காக 7.7 சதுர கி.மீ. பரப்பளவிலான கடல் பகுதியை மீன்பிடிப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி 2019 லேயே விண்ணப்பித்துள்ளது அதானி நிறுவனம். துறைமுக விரிவாக்கத்திற்குப் பிறகு 50 சதுர கி.மீ. பரப்பளவுள்ள 12,300 ஏக்கர் கடல் பரப்பை மீன்பிடிப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக மாறும் என்கிறார், அத்திட்டத்தை எதிர்த்துப் போராடும் எண்ணூர் கடற்கழியைக் காப்பாற்றுவதற்கான இயக்கத்தைச் சேர்ந்த சரவணன்.

மேலும், இப்பிரச்சினைக்காக தொடர்ந்து குரலெழுப்பி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன், “காட்டுப்பள்ளியில் அமையவிருக்கும் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 320 மில்லியன் டன்கள். இது தமிழகத்திலுள்ள மொத்த துறைமுகங்களின் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகமாகும். மேலும், இத்துறைமுகம் தென்னிந்தியாவிலேயே பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னிந்தியாவிலுள்ள மற்ற அரசு துறைமுகங்களின் வணிகத்தை எல்லாம் அதானியே முழுங்கி விடுவார்.” என்கிறார்.

மேலும், “கடலும், உவர் ஏரியான பழவேற்காடு ஏரியும் சங்கமிக்கும் முகத்துவாரத்தின் வழியாக 6 மணி நேரத்திற்கு ஒரு முறை கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் செல்லும் வகையிலான இயற்கையான நீரோட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம், நீர் ஏற்றத்திற்கு ஏற்ப கடல் வாழ் உயிரினங்கள் ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்துவிட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இங்கு இயற்கையாகவே நடக்கும். இதனாலேயே இப்பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரித்து 160 வகையான மீன்களும், 25 வகையான மிதவைப் புழுக்களும், பலவகையான மெல்லுடலிகளும், இறால், நண்டு வகைகளும் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. இதன் காரணமாகவே, எண்ணற்ற வலசைப் பறவைகளுக்கும், இயல் பறவையினங்களுக்கும் இது வாழிடமாக இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த இயற்கைச் சூழலையும் இத்திட்டம் அழித்துவிடும்.” என்றார் பிரபாகரன்.

காட்டுப்பள்ளி துறைமுகத்தால், மீன்வளமும், கடல்வளமும் பாதிக்கப்பட்டு, தங்களது கிராமங்களையே காலி செய்ய நேரிடும் என்பதை உணர்ந்து மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், மக்களது வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், முதலாளிகளின் நலன்களை முன் வைத்தே ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளும் சிந்தனையும் உள்ளது.

இப்படி வடகோடி சென்னை முதல் தென்கோடி திருநெல்வேலி வரையிலான தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் வாரிச் சுருட்டக் காத்திருக்கிறது அதானி நிறுவனம். நிலம் போதாதென்று, 5ஜி அலைக்கற்றை நிறுவும் வகையில் இணைய வெளியையும் அதானிக்குக் கொடுத்துள்ளது திமுக-வின் ஸ்டாலின் அரசு.

2001-ல் நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகு தான் அதானியின் தொழிலும் வியாபாரமும் உயரே பறக்கத் தொடங்கியது. 2002 குஜராத் இந்துமத பயங்கரவாத படுகொலைகளுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் கிடைத்த மோடியின் நட்பும், ஆர்.எஸ்.எஸ். விசுவாசமும் அதானிக்கு இந்திய வளங்களைச் சூறையாட தாராள அனுமதி கிடைத்தது.

அதன் பலனாக, 1988-ல் சாதாரண ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் தொடங்கிய நிறுவனம், இன்று துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், சரக்கு போக்குவரத்து, மின் பகிர்மானம், பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா செண்டர், வேளாண் வணிகம், ரியல் எஸ்டேட், பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் கோலோச்சும் பகாசுர நிறுவனமாக வளர்ந்துள்ளது.

2020-ம் ஆண்டு 8.9 பில்லியனர் அமெரிக்க டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு 2022 மே மாதம், 105.9 பில்லியன் டாலர் என 2 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்து, பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி இன்று உலகின் 3-வது பெரிய பணக்காரராக ஆக்கியுள்ளது.

உலகப் பணக்காரரான அதானியின் கொள்ளைக்காடாக தமிழகத்தை மாற்றுவதில் கட்சி பேதமின்றி அனைத்து திராவிட கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றனர். இதில், மாநில உரிமை, சமூகநீதி, பகுத்தறிவு என்று முற்போக்கு பேசி வரும் திமுக-வும் வேறல்ல என்பதை அரசின் நடவடிக்கைகளே நிரூபிக்கிறது.


இதையும் படியுங்கள்:அதானிக்கு காவு கொடுக்கப்பட்ட காட்டுப்பள்ளியின் கதை!


முற்போக்கு கருத்துக்களைப் பேசுவதால் மட்டுமே பாதிக்கப்படும் மக்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையைக் கொடுத்து விட முடியாது. தனது மக்களைக் காக்கும் வகையிலான சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டி அமைக்கும் வகையிலான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட அரசின் மூலம் தான், தனது ஆட்சியின் கீழ் உள்ள மக்களுக்கு இறையாண்மை மிக்க வாழ்வை அளிக்க முடியும்.

ஆனால், இந்திய நாட்டின் அங்கமாக, ஒன்றிய அரசை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையில் தான் மாநில அரசுகள் இருக்கின்றன. அதற்கு தமிழக அரசும் விதிவிலக்கல்ல. அதோடு, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில அதிகாரங்களை, நிதி ஆதாரங்களைப் பறிப்பதன் மூலம் அதிகார ஒன்று குவிப்பைச் செய்து வருகிறது.

எனவே, மோடி என்ற ஆக்டோபஸின் கொடுங்கரமாக உள்ள அதானி என்ற ஒரு கார்ப்பரேட் முதலாளியை வீழ்த்த வேண்டுமென்றால் கூட, இந்து – இந்தி – இந்தியா என்ற கட்டமைப்பைத் தகர்க்க வேண்டும். அந்த வரலாற்றைப் படைக்கும் மாபெரும் சக்தி மக்கள் தான்.

இந்த ஆட்சி அமைப்பிற்கு அப்பாற்பட்டு, சாதி, மத பேதமற்ற, வர்க்க உணர்வு கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சமூகத்தையும், மக்களையும் நேசிக்கும் அமைப்புக்கள் அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டும். அப்போராட்டத்தை ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதற்கான போராட்டமாக மாற்ற வேண்டும்.

அப்போது தான் அதானி போன்ற ஆக்டோபஸ் கொடுங்கரங்களை மட்டுமல்ல; அந்த ஆக்டோபஸ் கரங்களுக்கு தலையாக விளங்கும் கார்ப்பரேட் பாசிசத்தையும் வீழ்த்த முடியும்.

  • தயாளன்

புதிய ஜனநாயகம்
செப்டம்பர் மாத இதழ்.

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here