கஸ்ட் 15 சுதந்திர தின உரை என்ற பெயரில் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி தனது உரையில், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாகவும், அதனை நிறைவேற்றுவதற்கு “விஸ்வகர்மா யோஜனா” என்ற பெயரில் திட்டம் ஒன்றை விஸ்வகர்மா தினமான செப்டம்பர் 17 முதல் துவங்குவதாக அறிவித்தார். இதற்கென பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்ற பெயரில் ரூபாய் 13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குலக்கல்வி என்ற பெயரில் அப்பன் பார்த்த தொழிலை மகன் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சனாதன பார்ப்பனர் ராஜாஜி கொண்டு வந்த திட்டத்தைப் போலவே மோடிஜி கொண்டு வந்துள்ள திட்டத்தின் பெயர் தான் விஸ்வகர்மா யோஜனா. இருவரும் வெவ்வேறு சாதிகள் என்றாலும் அவர்களை இணைப்பது சனாதன பார்ப்பனியம்!

இத்திட்டத்தில் முதற்கட்டமாக 18 தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், காலணி தைப்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் நெய்பவர், பொம்மைகளை செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், பூமாலைகளை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர்கள், கவசம் தயாரிப்பவர்கள், இரும்புக் கொல்லர்கள், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி நாள்களில் தினமும் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும். தொழிற்கருவிகளை பெற ரூ.15,000 வரை நிதியுதவியும் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். இத்திட்டத்தில் குறைந்த வட்டியில் கடனும் வழங்கப்படும்.

யார் இந்த விஸ்வகர்மா?

எட்டு மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு இரத்தம் சிந்தி பெற்றுக் கொடுத்த உரிமை தினமான மே தினத்தை ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக விஸ்வகர்மா தினம் என்று ஒரு தினத்தை முன்வைத்து அதையே தொழிலாளர்கள் கொண்டாட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது ஆர்எஸ்எஸ் இன் தொழிற்சங்கமான பிஎம்எஸ். (BMS)

ஏனென்றால் தேவலோகத்தில் தச்சர் வேலை செய்து வந்த தேவதச்சன் என்ற விஸ்வகர்மா தான் முதன் முதலில் ஆயுதங்களை பயன்படுத்தி தொழில் செய்தவர் என்று கதை அளக்கிறார்கள். நேற்று வரை கதையாக இருந்த இந்தப் புராண புளுகு மூட்டைகள் திருவாளர் மோடியின் தயவில் உண்மையாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த விஸ்வகர்மாவின் பெயரில் கொண்டாடப்படும் விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தன்று விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை துவங்கப் போவதாக அறிவித்து அதற்கான வேலைகளை ஆர் எஸ் பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது.

செருப்படிபட்ட குலக்கல்வி திட்டம்.

1953-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி ‘Modified scheme of Elementary Education’ என்ற பெயரில் “சாதி அடிப்படையிலான குலக்கல்வித் திட்டத்தை” அறிமுகப்படுத்தினார். அதன்படி ஆரம்பப்பள்ளிகளின் வேலைநேரத்தை 5 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைத்து, காலை, மாலை என இரு அமர்வுகளாக (shift) பிரித்து, முதல் அமர்வில் மாணவர்கள் பள்ளியில் கல்வியையும், இரண்டாவது அமர்வில் அவர்கள் தங்கள் தந்தைகளிடம் குலத்தொழிலையும் கற்குமாறு ஆணையிட்டார்.

இத்திட்டம் முதலில் 1953–54 கல்வியாண்டில் கிராமப்புறப் பள்ளிகளிலிலும், பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் அமல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இத்திட்டம் தொடங்கப்பட்டதற்கான ஆதாரத்தை அப்போதைய 1952-1957 மெட்ராஸ் சட்டசபையின் அறிக்கை மூலமும் உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால் இந்த திட்டத்தை அப்போதே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராஜர், பெரியார் உட்பட பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் “பழைய கள்ளு, புதிய மொந்தையில்” என்ற கதையாக தமிழகத்தில் செருப்படிபட்ட குலக்கல்வி திட்டம், விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் ஒட்டுமொத்த இந்திய மக்களின் தலையில் திணிக்கப்படுகிறது. இதன்மூலம் எப்படி சனாதனத்தில் முன் வைக்கப்படும், வர்ணாசிரம அடிப்படையில் நான்கு பிரிவுகளாக சொல்லப்படுகின்ற பிராமணர்கள் (பூசாரிகள் மற்றும் ஆசிரியர்கள்), க்ஷத்ரியர்கள் (ஆட்சியாளர்கள் மற்றும் போர்வீரர்கள்), வைசியர்கள் (விவசாயிகள் மற்றும் வணிகர்கள்), மற்றும் சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) என்ற தொழில் வரிசையில் மட்டுமே மக்கள் தொழில் செய்ய வேண்டும் என்று எப்படி சாதி அமைப்பு ஊக்குவிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில் இந்த விஸ்வகர்மா திட்டமும், சாதி அமைப்பை ஊக்குவிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது ஆர்எஸ்எஸ். பாஜக.

ஓபிசி ஓட்டுகளை பொறுக்க பாஜக சதித்தனம்!

மோடி அறிவித்துள்ள இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலக்கல்வியை போதிக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மேல் சாதியினரின் ஓட்டுகளை பெறுவதற்கு திட்டமிட்டு ஆர் எஸ் எஸ் பாஜக களமிறங்கியுள்ளது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டுக்குள் கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் 30 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள், முதன்மையாக OBC களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு 5% சலுகை வட்டி விகிதத்துடன் ரூ.1 லட்சம் (முதல் தவணை) மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) வரை கடன் உதவி வழங்கப்படும் என்று மோடியின் விஸ்வகர்மா திட்டம் அறிவிக்கிறது.

லோக்சபா தேர்தல்களில் OBC வாக்குகள் மிகவும் முக்கியமானவை, OBC கள் மக்கள் தொகையில் 40%-45% வெவ்வேறு எண்ணிக்கையில் உள்ளனர், மண்டல் கமிஷன் மூலம் 52% ஆக உயர்ந்தது, மேலும் கடந்த இரண்டு தேர்தல்களிலும் பிற்படுத்தப்பட்ட  சாதிகளைச் சார்ந்த இவர்கள் கிங்மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர்.

விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 30 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள், இது 90 லட்சம் வாக்குகளாக ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கு மாற்றப்படும் என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டுள்ளனர்.,

இதையும் படியுங்கள்:

 விஸ்வகர்மா யோஜனா: ஒன்றிய அரசின் நவீன குலக்கல்வித் திட்டம்!
 புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல்  பகுதி 2

இந்தி பேசுகின்ற வட மாநிலங்களில் உள்ள ஓபிசி வாக்காளர்கள் பல ஆண்டுகளாக பாஜகவுக்குச் சென்றுள்ளனர். 2009 இல் 22% ஆக இருந்த BJPக்கான OBC ஆதரவு 2019 பொதுத் தேர்தலில் 44% ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தி குயின்ட் பத்திரிக்கையில் அமிதாப்  திவாரி என்ற கட்டுரையாளர் ஆய்வு செய்துள்ளார்.

நாடு முழுவதும் பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் சொல்லிக் கொள்ளப்படும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் தற்போதைய விஸ்வகர்மா யோஜனா மூலம் அப்பன் தொழிலை மகன் செய்வது ஒருபுறம் பாஜகவின் ஓட்டு வாங்கியாக மாறுவார்கள் என்பது மறுபுறம் என்பதே ஆர்எஸ்எஸ் பாஜகவின் சதித்திட்டம்.

திராவிட இயக்கங்கள் முன்வைக்கின்ற சமூக நீதி என்ற கொள்கையானது சொல்லிக் கொள்ளப்படும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றுவதற்கு ஓரளவு முயற்சி செய்கிறது. ஆனால் சனாதனத்தை முன்வைக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக அவர்களை அப்பன் தொழில் செய்து பிழைப்பதற்கு திட்டம் தீட்டுகிறது.

இந்தக் கேடுகெட்ட திட்டத்திற்கு விஸ்வகர்மா யோஜனா என்ற பெயர் வேறு தூ….

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here