“விக்சித் பாரத் 2047″ அதாவது “வளர்ந்த இந்தியா 2047” என்ற திட்டத்திற்காக அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறாராம் மோடி.
கடந்த காலத்தில் மோடி கூறிய பொய்கள் உலக அளவில் நாறிக் கொண்டிருக்கும் நிலையில் 25 வருடங்களுக்கான திட்டம் என்றால் மக்கள் நம்புவார்களோ மாட்டார்களோ என்ற சந்தேகம் தெய்வக் குழந்தைக்கு வந்துவிட்டது போலும்.
மக்கள் நம்பும் விதமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு, ‘நாங்கள் 25 ஆண்டுகளுக்கான திட்டம், 5 ஆண்டுகளுக்கான திட்டம், 100 நாட்களுக்கான திட்டம், என்று பிரித்துக் கொண்டு வேலை செய்வதாக’ அடித்து விட்டிருக்கிறார் நமது 56 இன்ச் மோடி.
விஸ்வகுருவான மோடி இத்துடன் நிற்கவில்லை. இந்தத் திட்டத்தை தன்னிச்சையாக (அதாவது, தான்தோன்றித்தனமாக) தயாரிக்காமல், கோடிக்கணக்கான மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்று அதன்படி அந்த இலக்கை எப்படி அடைவது என்பதற்கான ஒரு ரோடு மேப்பை அதாவது செயல் திட்டத்தை உருவாகியுள்ளதாக மோடி கதையளந்து கொண்டிருக்கிறார்.
மோடி மக்களிடம் கருத்து கேட்ட கதை:
“கடந்த இரண்டு வருடங்களாக விக்சித் பாரத் 2047ஐ மனதில் வைத்து வேலை செய்து வருகிறேன். அதற்காக, நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டேன். வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது குறித்து 15 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளேன்” என்றும் “மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் தொடர்பு கொண்டேன். பல்வேறு அரசு சாரா நிறுவனங்களை தொடர்பு கொண்டேன்” என்றும் ஏப்ரல் 15, 2024 அன்று மோடி கதை அளந்தார்.
மேலும், “20 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் உள்ளீடுகளை பெற்றுள்ளேன். இதன் அடிப்படையில், 2047ம் ஆண்டுக்கான விஷன் டாகுமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன்” என்று மே 16, 2024 அன்று அந்த பலூனை மோடி ஊதிப் பெருக்கினார்.
“கோடிக்கணக்கான மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களின் ஆலோசனைகளை நாங்கள் கேட்டிருந்தோம். விக்சித் பாரத், 2047 க்கு கோடிக்கணக்கான மக்கள் எண்ணற்ற ஆலோசனைகளை அனுப்பியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று ஆகஸ்ட் 15, 2024 அன்று அந்த பலூனை மேலும் ஊதிப் பெரிதாக்கினார்.
ஏப்ரல் 15, 2024 அன்று பேசும் பொழுது கடந்த ரெண்டு வருடமாக 15 லட்சம் மக்களிடம் கருத்து கேட்டுள்ளேன் என்ற மோடி…. (அடுத்த ஒரு மாதத்திற்குள்) மே 16, 2024 அன்று கடந்த ஐந்து வருடமாக 20 லட்சம் மக்களிடம் கருத்து கேட்டு வருவதாக புழுகித் தள்ளிவிட்டார்.
உயிரியல் ரீதியாகப் பிறக்காத தெய்வக் குழந்தையான மோடியின் மனம் இவ்வளவு பொய்யுடன் மனநிறைவு அடையவில்லை. எனவே, கோடிக்கணக்கான மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆகஸ்ட் 15 2024 அன்று (அதாவது சுதந்திர தினத்தன்று) ஒரே போடாய் மோடி போட்டுவிட்டார்.
மதவெறியூட்டும் பொய்யை பரப்பும் மோடி! | தூங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம்| வழக்கறிஞர் ராஜூ
இப்படி “விக்சித் பாரத் 2047” பலூன் மேலும் மேலும் ஊதிபெறுத்துக்கொண்டே போவதை பார்த்த ஆன்ட்டி இந்தியன் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இதுகுறித்து கேள்விகளை கேட்டுள்ளார்.
இந்தக் மோடியின் கருத்து கேட்பு குறித்த விபரங்களை அந்த நபர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு அந்த விபரங்களை கொடுக்க முடியாது என்று அரசு மறுத்து விட்டது.
பிரதமரின் ஆலோசனைக் கூட்டங்கள், கருத்து கேட்புக் கூட்டங்கள் எந்தப் தேதியில் எவ்வளவு நிமிடங்கள் நடந்தன? அந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்றனர்? என்பன போன்ற விசயங்கள் கட்டாயம் ஆவணப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த விபரமும் அரசிடம் இல்லை. ஆலோசனைக் கூட்டங்கள் நடந்திருந்தால் தானே ஆவணங்கள், குறிப்புகள் இருக்கும்?
மனிதப் பிறவிகளிடம் தான் ஆதாரங்களைக் கேட்க வேண்டும் தெய்வக் குழந்தையின் கூற்றை அப்படியே நம்ப வேண்டும் என்பதுதான் சங்கிகளின் மனோநிலை. இந்த சங்கிகளின் மன எழுச்சியை தூண்டும் விதமாக மே மாதம், அவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ‘தனது பார்வை அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதாக’ அறிவித்தார். அதாவது ‘அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டத்தையும் தான் தயாரித்து இருப்பதாக’ முத்தாய்ப்பாக மோடி ஒரு குண்டைத் தூக்கு போட்டு விட்டார்.
ஐயா மோடி அவர்களே…..
தெய்வக் குழந்தையே….
உயிரியல் ரீதியாக பிறக்காதவரே… நீங்கள் இறக்கும் இடிகளை சங்கிகளின் நெஞ்சம் தாங்கும் மக்களின் நெஞ்சம் தாங்குமா?
— குமரன்
செய்தி ஆதாரம்: Thewire