ரு ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது குற்றமல்ல; அது மக்களின் குரல். மக்கள் தங்களின் கோரிக்கைகளையும் உரிமைகளையும் வலியுறுத்தி நீண்ட நாட்கள் போராடும்போது, அந்தக் குரலைக் கேட்டு உரிய பதில் அளிப்பது அரசின் அடிப்படைப் பொறுப்பு.

ஆனால், போராட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் மற்றும் போராட்டக்காரர்கள் எதிர்கொண்டதாகக் கூறப்படும் அடக்குமுறைகள் குறித்து மௌனம் காக்கும் அரசியல் தலைமையே, பின்னர் போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை மட்டும் முன்னிறுத்திப் பேசும்போது, அது பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பிரதமரின் முன்னுரிமை எதுவாக இருக்க வேண்டும்? மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதா, அல்லது தேர்ந்தெடுத்து சில விமர்சனங்களுக்கு மட்டும் பதிலளிப்பதா?

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுக்கு எதிராக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய 36 நாட்கள் நீடித்த தொடர் போராட்டம், இந்தியாவின் கல்வி முறை மற்றும் வேலைவாய்ப்புச் சூழலில் நிலவும் ஆழ்ந்த நெருக்கடியைப் பிரதிபலித்தது. ஆனால், இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள நியாயமான கோரிக்கைகளை விட, போராட்டக்காரர்கள் பயன்படுத்திய ‘வசவுகளை’  முன்னிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரையாடல், ஒரு பாசிச அரசின் திசைதிருப்பல் உத்தியையே காட்டுகிறது.

அரசு வன்முறை குறித்த மௌனமும், போலி அறச்சீற்றமும்

ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புப் படைகள் கொடூரமான தாக்குதலை நடத்தின. குறிப்பாக, ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) பெல்லட் துப்பாக்கிகளைப் (pellet guns) பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் 19 வயது இளைஞர் ஒருவரின் கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த அடக்குமுறை குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியும், பிரதமர் மோடியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அவைக்கு வந்து விளக்கம் அளிக்கவில்லை. மாறாக, நள்ளிரவு வீடியோவில் தோன்றி, “வசவுகள் எதையும் தீர்க்காது” என்று தார்மீகப் பாடம் எடுப்பது, ஒரு நாட்டின் பிரதமராகத் தன் கடமையிலிருந்து பதிலளிக்காமல் ‘என்னை திட்டினார்கள்’ நான் மன்னிக்கிறேன் என்று பேச வேண்டியதை பேசாமல் திசை திருப்புகிறார்.

பெண் போராட்டக்காரர்கள் வசவுகளைப் பயன்படுத்தியதைக் கண்டு தமக்கு “கலாச்சார அதிர்ச்சி” (cultural shock) ஏற்பட்டதாகப் பிரதமர் கூறியுள்ளார். ஆனால், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி, அவையிலேயே ஒரு சக உறுப்பினர் மீது இஸ்லாமிய வெறுப்புடன் கூடிய வசவுகளைப் பயன்படுத்தியபோது பிரதமர் இதேபோன்ற ‘அதிர்ச்சியை’ வெளிப்படுத்தவில்லை. போராட்டக்களத்தில் நின்ற பெண்களுக்கு எதிராக இணையத்தில் தொடுக்கப்பட்ட பாலியல் மிரட்டல்கள் மற்றும் ‘டாக்ஸிங்’ (doxxing) குறித்து அவர் மௌனம் காப்பதும், அவரை விமர்சித்த பெண் மீது மட்டும் பிஎன்எஸ் (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்படுவதும், சட்டம் அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே பயன்படுகிறது என்பதையே உணர்த்துகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை “வழிதவறிய குழந்தைகள்” என்று பிரதமர் பேசியிருப்பது, அவர்களின் அரசியல் விழிப்புணர்வையும் உரிமைக் குரலையும் சிறுமைப்படுத்தும் செயலாகும். தான் அவர்களை “மன்னிப்பதாக”க் கூறுவதன் மூலம், போராட்டத்தின் அடிப்படை காரணங்களான நீட் தேர்வு முறைகேடு (NEET paper leaks) மற்றும் முறையான கல்விச் சீர்திருத்தம் குறித்த விவாதங்களைத் தட்டிக்கழிக்கிறார். தண்டனை வழங்குவதும், நீதிமன்றங்களுக்கு அலைக்கழிப்பதும் தீர்வாகாது என்று பிரதமர் பேசினாலும், காவல்துறை 15 அல்லது 25 வயதுடைய பெண்களைக் கூட கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரித்து வருவது பாசிஸ்டுகளின் இழிவான அடக்குமுறை பண்பை காட்டுகிறது.

கார்ப்பரேட் சார்பும் பாசிசக் கொள்கைகளும்

இந்தியாவின் கல்வித்துறையைக் கார்ப்பரேட் மயமாக்குவதும், அதன் மூலம் எளிய மக்களின் கல்விக் கனவைச் சிதைப்பதும் இந்த அரசின் மறைமுகத் திட்டமாக உள்ளது. நீட் தேர்வில் நிலவும் குளறுபடிகள் பல ஆண்டுகளாகியும் சரிசெய்யப்படாத சூழலில், அரசு அவசரமாக ஒரு சட்டத்தை (anti-paper leak law) கொண்டு வந்துவிட்டு, அதுவே இறுதித் தீர்வு என்பது போலப் சித்தரிக்கிறது. மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய பிரதமர், தன்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்டி (victim card) அனுதாபம் தேடுவது, கார்ப்பரேட் ஆதரவு பாசிச ஆட்சிகளின் பொதுவான குணாதிசயமாகும்.

படிக்க:

 ப..ரா..க்..! ப..ரா..க்..! குஜராத் – மணிப்பூர் புகழ் மோடி வருகிறார் ப..ரா..க்..!

 மோடியின் நள்ளிரவு வீடியோவும், மாணவர்களின் போராட்டமும்!

மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் அடக்குமுறைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டவர்கள் ஏராளமான மக்கள். அவர்களில் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, பெரும்பான்மை இந்துக்களும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, கொரோனா லாக்டவுன் ஆகியவற்றின் மூலம் மிகப்பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். எவ்வளவு நாட்கள் மதவெறி அரசியலையும் தேசிய வெறி அரசியலையும் வைத்துக்கொண்டு மக்களை பிளவுப்படுத்தி அரசியல் செய்ய முடியும்?

அரசின் திட்டங்கள் மக்களுக்கு எதிராக இருக்குமானால் மக்கள் போராடவே செய்வார்கள். அது அவர்களுடைய ஜனநாயக உரிமை. பாசிச மோடியின் ஆட்சியில் இப்போராட்டங்கள் அதிகார வர்க்க தாக்குதல் எந்திரங்களின் மூலம் ஒடுக்கப்படுகிறது. உள்நாட்டு மக்கள் மீதே இராணுவ தாக்குதலை நடத்துகிறது. கூடுதலாக ஆர்.எஸ்.எஸ் குண்டர்படைகளையும் போராட்டக் களத்தில் இறக்கிவிட்டு கொடூரமாக தாக்குகிறது. இதெல்லாம் பிரதமர் மோடிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது. இதற்காக மோடியோ அமித்ஷாவோ மன்னிப்பு கேட்க போவதில்லை.

ஒரு பிரதமர் நாட்டு மக்களுக்குத் தேவைப்படும்போது பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால், மக்களின் குரலை ஒடுக்க பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தும் அரசு, அதற்குப் பரிகாரமாக நள்ளிரவில் மன்னிப்பு வீடியோக்களை வெளியிடுவது என்பது வெறும் நாடகமே. உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர்களை “மன்னிப்பதாகக்” கூறி அவர்களை நல்வழிப்படுத்தப் போவதாகப் பிரதமர் பேசுவது, அவர்களின் எழுச்சியைக் கண்டு அரசு அஞ்சுவதையே காட்டுகிறது.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here