போட்டி முதலாளித்துவ காலகட்டத்தில் இருந்து முதலாளித்துவம் ஏகபோக தன்மையை அடைந்து ஏகாதிபத்தியமாக உருமாற்றம், அதாவது ஏகாதிபத்தியமாக பரிணாம வளர்ச்சியடைந்த காலகட்டத்தில், “முதலாளித்துவத்தின் அனைத்து ஒட்டுண்ணித் தன்மைகளும் ஏகாதிபத்தியத்தில் தீவிரமாகின்றன என்றும், ஏகாதிபத்தியத்தில் முதலாளித்துவம் அழுகிப்போகிறது என்றும்” தனது ஆய்வை முடிவை முன் வைத்திருந்தார் தோழர் லெனின்.
1916 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இந்த ஆய்வானது, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஏகாதிபத்தியத்தின் கோரமுகம் எவ்வளவு கொடூரமானது என்பதையும், அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிராக எவ்வாறு மாறியுள்ளது என்பதையும், உலகத்தின் முதல் நிலை பணக்காரனும், கோடிக்கணக்கான பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பு சக்தியை கொள்ளையடித்து உருவாகியுள்ள கார்ப்பரேட் முதலாளியுமான எலான் மஸ்க் முன் வைத்துள்ள கருத்தின் மூலம் நிரூபித்துள்ளது.
வரம்பற்ற, கட்டுப்பாடற்ற ஏகபோக நிதி மூலதனத்தின் மூலம் உலகை சூறையாடி கொழுத்து வரும் எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு முன் வைத்துள்ளார். “இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ-யிடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். 2036-ம் ஆண்டுக்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும். ஏஐ மனிதகுலத்தையே அழிப்பதற்கு 10 முதல் 20% வாய்ப்புகள் உள்ளன.
அதிகார அமைப்பில் விரைவில் மாற்றம் ஏற்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறிவையும் ஏஐ விஞ்சிவிடும். ஒரு விஷயத்தை மனிதர்களை விட சிறப்பாக ஏஐ மேற்கொள்ளும். ஏஐ உதவியால் மனிதர்கள் அனைவரும் நம்பமுடியாத அளவுக்கு முன்னேற்றம் அடைவர். வளம் பெறுவர்.
நாம் இதன் நேர்மறைப் பக்கத்தை பார்க்க வேண்டும். ஏஐ மற்றும் ரோபோக்களின் நம்பமுடியாத வேகத்தை உண்மையிலேயே தடுப்பதற்கு எந்த வழியையும் என்னால் பார்க்க முடியவில்லை”. என்கிறார் அந்தக் கார்ப்பரேட் முதலாளி.
முதலாளித்துவ சமூக அமைப்புதான் ஜனநாயகத் தன்மை கொண்டது என்றும், மனித குலத்தை பாதுகாக்க வல்லது என்றும், இதற்கு எதிராக தோன்றிய கம்யூனிசம் குறுகிய காலத்திலேயே பின்னடைவை சந்தித்தது என்றும், அது குறித்து ஆய்வு செய்கின்ற குட்டி முதலாளித்துவ ஆய்வாளர்களும் கம்யூனிச அமைப்புகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போன கழிசடைகளும் பல வகையில் பிதற்றி திரிகின்றனர்.
குறிப்பாக நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தவுடன் ஏகாதிபத்தியத்தின் தன்மையானது ஆய்வு செய்ய முடியாத அளவிற்கு பிரம்மாண்டமாகிவிட்டது என்றும், காலையில் ஒரு மாதிரியும், மாலையில் ஒரு மாதிரியும் நிதி மூலதனத்தின் செயல்பாடு மாறுகின்றது என்றும், அன்றாட வாழ்வில் மனித சிந்தனையை கட்டுப்படுத்துகின்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு கேளிக்கை செயலிகள் ஆகியவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தை பற்றி ஆய்வு செய்ய முடியாத அளவிற்கு சிக்கலாக்கி உள்ளது என்றும் பிதற்றுகின்றனர்.
படிக்க:
♦ சாட் ஜிபிடி புதிய தொழில்நுட்பம்! முதலாளிகளுக்கு பணம் காய்க்கும் மரம்!
♦ மனித குலத்தை ஒழித்துக் கட்ட வந்துள்ள செயற்கை நுண்ணறிவு திறன்! (AI)
ஆனால் ஏகபோகமாகப்பட்ட உற்பத்தி ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஏகாதிபத்திய நிதி மூலதனத்தையும் அதிலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய நிதி ஆதிக்க கும்பல்களையும் உருவாக்கியுள்ளது பற்றியும், தோழர் லெனின் துவங்கி தோழர் மாவோ வரையில் ஆய்வு செய்த ஆய்வுகளை புறந்தள்ளிவிட்டு ஏகபோக உற்பத்தியின் விளைவுகளை மட்டும் பார்த்து பிரமிப்படைகின்றனர் அல்லது அச்சமடைந்து திகைத்து நிற்கின்றனர்.
மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, கொடூரமான சமூக அமைப்பான முதலாளித்துவம், மனிதர்களின் உழைப்பு சக்தியை எவ்வாறு உறிஞ்சிக் கொழுக்கின்றது என்பதை தான் தனது மூலதனத்தில் ஆய்வு செய்தார் காரல் மார்க்ஸ். மார்க்ஸ்க்குப் பிந்தைய காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் பற்றி ஆய்வு செய்த தோழர் லெனின் முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏகபோகமாக மாறியுள்ளது குறித்தும், அதன் உச்சகட்ட தன்மையானது ஏகாதிபத்தியமாக மாறியுள்ளது குறித்தும் ஆய்வு செய்து முன் வைத்தார்.
அவ்வாறு முன்வைக்கின்ற போது இது முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்பதை குறிக்காது, அது அழுகி நாறுகின்ற தன்மை கொண்ட முதலாளித்துவ வளர்ச்சி என்பதை துலக்கமாகவே முன் வைத்தார்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கத்தின் கையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுகின்ற புரட்சிகளும் நடந்தேறி உள்ளது. அதே சமயம் அந்த புரட்சிகளை சீர்குலைக்கின்ற வகையில் ஏகாதிபத்தியங்கள் பல்வேறு சதித்தனங்கள் செய்து மீண்டும் தனது அதிகாரத்தை கைப்பற்றியதும் நடந்துள்ளது.
ஏகாதிபத்தியம் பற்றிய ஆய்வு செய்த காலத்திலேயே தோழர் லெனின் மற்றொரு அம்சத்தையும் முன் வைத்திருந்தார் என்பதையும் ஏற்கனவே புதிய ஜனநாயகம் தினசரியில் எழுதி இருந்தோம். அதாவது காலனிய நாடுகளில் (காலனி அரைக் காலனி, நவீன காலனி மற்றும் தற்போது மறுகாலனியாக்கப்படுகின்ற நாடுகள்) நாடுகளில் சூறையாடுகின்ற நிதி மூலதனத்தை வைத்துக்கொண்டு தனது காலனியாதிக்கத்தின் கீழ் உள்ள நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தை சந்தர்ப்பவாதத்தில் விழ வைக்கின்றது என்பதையும் முன்வைத்து பாட்டாளி வர்க்கத்திற்கு எச்சரித்தார்.
படிக்க:
♦ முகநூல் (ஃபேஸ்புக்) ஏகாதிபத்தியம் பின்னி வைத்திருக்கும் எதிர்ப்புரட்சி சிலந்தி வலை!
இதனை நிரூபிக்கின்ற வகையில், 90களில் சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடைந்த பிறகு உலகம் முழுவதும் தலைவிரித்தாடிய பின் நவீனத்துவ போக்குகள் மூலமும், மார்க்சியத்தின் மீது பல்வேறு திருத்தங்களை முன்வைக்கின்ற குட்டி முதலாளித்துவ ஆய்வாளர்கள் முன்வைக்கின்ற ஆய்வுகள் மூலமும், பாட்டாளி வர்க்கத்தை சந்தர்ப்பவாதத்தின் கீழ் வீழ்ச்சியடையச் செய்வதற்காக பல்வேறு ‘ இந்திரஜித் மாயாஜாலங்களை’ மேற்கொண்டனர்.
இதனால் உலகம் முழுவதும் தற்காலிகமாக புரட்சிகர கம்யூனிச இயக்கத்திற்கு பின்னடைவும், முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தைகளான போலி கம்யூனிசம், தாராளவாத ஜனநாயகம், மனிதாபிமான முதலாளித்துவம் முன்னேறி உள்ளது என்று சித்தரிக்கும் போக்குகள் தலை விரித்தாடி வருகிறது.
என்னதான் அழுகிப்போன புண்ணின் மீது உயர்ந்த வாசனை திரவியங்களை தடவினாலும் நாற்றத்தையும் அது கெட்டு ஒழிந்து போவதையும் தடுக்க இயலாது என்பதைப் போலத்தான், ஏகபோக நிதி மூலதனத்தின் லாப வெறியானது, செயற்கை நுண்ணறிவுத் திறன் என்ற கண்டுபிடிப்பின் மூலம் மனிதர்களின் உழைப்பை தவிர்த்து விட்டு தானியங்கி இயந்திரங்கள்; ஆளில்லாமல் இயங்குகின்ற கருவிகள்; ரோபோக்கள் மற்றும் பல்வேறு வகையில் செயல்படுகின்ற நவீன தொழில்நுட்ப தானியங்கி கருவிகள் ஆகியவற்றின் துணை கொண்டு உலகை சூறையாடுவதற்கு அலைந்த நிலையில், அவர்களே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுத்திறன் இன்னமும் பத்தாண்டுகளில் மனித குலத்தையே அழிக்க துவங்கி விடும் என்று அலறத் துவங்கியுள்ளனர்.
இதைத்தான் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஒ சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ”ஏஐ அமைப்புகள் அதிக திறன் வாய்ந்ததாக மாறும் ஒரு சகாப்தத்திற்குள் மனிதகுலம் நுழைகிறது. ஏஐ மனிதர்களை விட அதிக அறிவாற்றலுடன் செயல்படும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்” என்றார். இதுபோல எதிர்கால ஏஐ மாதிரிகள் மனித தலையீடு இல்லாமலேயே தங்களை விட சக்திவாய்ந்த அடுத்த தலைமுறை பதிப்புகளை வடிவமைத்து, மேம்படுத்தி, செயல்படுத்தக் கூடும் என்று கூறியுள்ளார். ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது..
செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு அனைத்தையும் சாதித்து விடலாம் என்று கொக்கரிக்கின்ற கார்ப்பரேட் முதலாளித்துவமே மனித குலத்திற்கு பேரழிவை உண்டாக்கும் என்று அலறுகின்ற சூழலில் பாட்டாளி வர்க்கம் இதனை எதிர்த்து கடுமையாக போராடுவதும், உழைப்பு சக்தியை கொச்சைப்படுத்துகின்ற; இழிவு படுத்துகின்ற; நாசக்கார தன்மை கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சவக்குழிக்கு நாள் குறித்து முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
- ஆல்பர்ட்
புதிய ஜனநாயகம் தினசரி






