மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் கடந்த ஜூலை, ஆகஸ்ட், மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்தை உட்கொண்ட குழந்தைகளில் சுமார் 70 பேர் சிறுநீரகம் செயலிழந்து கொத்துக்கொத்தாக மரணமடைந்தனர். இம்மரணங்களால் தூக்கத்திலிருந்து விழிப்படைந்த காம்பிய அரசு அக்குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஆய்வுக்காக அனுப்பியது (அந்நாட்டில் அவற்றை சோதனை செய்வதற்கு ஒரு ஆய்வகம் கூட இல்லை என்பது வேறு விஷயம்). ஆய்வில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்துகளான ப்ரோமேத்தேசின் ஓரல் சிரப் (Promethazine oral syrup), கோஃபக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin baby cough syrup), மேகாஃப் பேபி காஃப் சிரப் (Makoff baby cough syrup), மற்றும் மேக்ரிப் ‘ன்’ கோல்டு பேபி காஃப் சிரப் (Magrip N Cold baby cough syrup) ஆகிய மருந்துகளில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான அளவில் டை-எத்திலின் கிளைக்கால் (diethylene glycol) மற்றும் எத்திலின் கிளைக்கால் (ethylene glycol) இருந்துள்ளதாகக் கண்டறிந்தனர். இவ்வேதிப்பொருட்கள் சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் தன்மை கொண்டது. மட்டுமல்லாமல், கடுமையான வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், மற்றும் மனநிலை பாதிப்பை உண்டாக்கக்கூடியது. இன்னும் சில மருந்து மாதிரிகளில் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் காம்பியா நாட்டு சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

காம்பியாவில் நிகழ்ந்த குழந்தை இறப்புகளுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேற்கண்ட 4 இருமல் மருந்துகள்தான் காரணம் என்றும் அவற்றை உபயோகிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை வெளியிட்டது. அதன்பின்னரே இவ்விவகாரம் வெளியில் வந்து பின்னர் வந்த வேகத்திலேயே மறக்கவும்பட்டது.

மரணத்தை ஏற்படுத்தும் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த இந்திய நிறுவனமான மெய்டன் ஃபார்மசீயூடிகல்ஸ் (Maiden Pharmaceuticals) நிறுவனம் மீது எந்த நடவடிக்கையையும் பரிந்துரைக்காமலும், அந்நிறுவனத்தை அங்கீகரித்து மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்த இந்திய அரசு, மற்றும் மருந்துகளை முறையாக சோதிக்காமல் இறக்குமதி செய்து தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய காம்பிய அரசையும் எந்தவித பொறுப்புக்கும் கேள்விக்கும் உள்ளாக்காத உலக சுகாதார நிறுவனம் அம்மருந்துகளை வாங்கிப் பயன்படுத்திய மக்கள்தான் இதற்கு பொறுப்பு என்பது போல ஒரே ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டுக் கழன்று கொண்டது.

நரக வேதனையை அனுபவித்து பெற்றோர் கண்ணெதிரே இறந்துபோன 70 குழந்தைகளுக்கு இதுவரை எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. நீதி விசாரணையும் நடத்தப்படவில்லை. இதைப் போன்ற சம்பவம் ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்ற பணக்கார வெள்ளைக்கார நாடுகளில் நடந்திருந்தால் உலக சுகாதார நிறுவனம் அல்லது உலக நாடுகளின் எதிர்வினை கண்டிப்பாக இப்படி இருந்திருக்காது.

காம்பியாவில் இறந்தும் போன குழந்தையின் படத்துடன் படம்.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட இந்திய அரசு ஹரியானா, சோனிபட்டில் உள்ள மெய்டன் ஃபார்மசீயூடிகல்ஸ் நிறுவனத்தை சோதனை நடத்தி அங்கு நடந்துள்ள விதிமீறல்களைக் கண்டு அதிர்ந்துபோய் இருப்பதாக நாடகம் ஆடிக்கொண்டுள்ளது.

தன்னுடைய மருந்துகளால் 70 இளம் பிஞ்சுகள் கொல்லப்பட்டது பற்றி சம்பிரதாயமாக ஒரு அறிக்கை வெளியிட்ட நிறுவனம் “குழந்தைகள் இறப்பிற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், அரசு துறைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும்” கூறி நிறுத்திக்கொண்டது.

தரமற்ற மருந்துகளை தயாரித்ததற்காக இந்நிறுவனம் ஏற்கனவே வியட்நாம் அரசால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா அரசும் தற்போது இந்நிறுவனத்தின் மருந்துகளை தடை செய்திருப்பதோடு, இந்தாண்டில் சிறுநீரக பாதிப்பால் இறந்துபோன 20 குழந்தைகளின் மரணத்தையும் விசாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பீகார் மற்றும் கேரளாவில் இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இலாபத்திற்காக காலாவதியான, மரணத்தை ஏற்படுத்தும் அளவிலான மூலப்பொருட்களைக் கொண்டும் மருந்துகளைத் தயாரித்த மெய்டன் ஃபார்மசீயூடிகல்ஸ் நிறுவனம், அவ்வப்போது சோதித்தறியாமல் இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கவும், ஏற்றுமதி செய்யவும் அனுமதி வழங்கிய இந்திய அரசுத் துறைகளும், இந்திய அரசும், மருந்துகளுக்கு அனுமதியளித்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்து தமது நாட்டு குழந்தைகளுக்கு கொடுத்த காம்பியா அரசு முதலானோர்தான் குற்றவாளிகள். ஆனால் இவர்கள் அனைவரும் குழந்தைகளின் மரணங்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு இது ஏதோ எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட ஒரு விபத்துபோல நடந்துகொள்வதைத்தான் சகிக்க முடியவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் நேரடியான மரணங்களை ஏற்படுத்தாத நிலையிலும் தயாரிப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறாக கூறி பல நூறு கோடிகளை கிலாக்ஸோ-ஸ்மித்க்லைன் (Glaxo-Smithkline), பைஸர் (Pfizer) போன்ற பகாசுர மருந்து நிறுவனங்கள் அபராதமாகக் கட்டியுள்ளனர். ஆனால் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 70 பிஞ்சு குழந்தைகள் தரமற்ற மருந்துகளால் மரணத்திற்கு தள்ளப்பட்டது பற்றி எந்த ஒரு சலனமும் இல்லாமல் கடந்து போகிறது சர்வதேச சமூகம்.

ஏற்கனவே ஏகாதிபத்திய சுரண்டலால் போதுமான மருத்துவ வசதியின்மை, பசி, பட்டினி மற்றும் வறுமையில் வாடும் ஆப்பிரிக்க மக்களை இதுபோன்ற தரக்குறைவான மருந்துகள் மூலமாகவும் கொன்று குவிக்கும் கலப்பட மருந்து வியாபாரிகளையும், அவர்களுக்குத் துணைபோகும் மக்கள் விரோதிகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம், பாதிக்கப்பட்ட காம்பிய நாட்டு மக்களுக்குத் துணை நிற்போம்.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here