ன்றைய நவீன யுகத்தில், அதாவது டிஜிட்டல் யுகத்தில்’ தனது அன்றாட தேவைகள் துவங்கி விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் போன்றவை அனைத்தையும் நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரிமாற முடியும் என்பது நிலைமையாக உள்ளது.

சுவர்களில் எழுதுவது, சுவரொட்டி போட்டு ஒட்டுவது, துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது, தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவது போன்ற பிரச்சார வடிவங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேரடியாக மக்களை சந்திக்காமல் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கலாம் என்பது புதிய போக்காகவும், சுலபமான வழிமுறையாகவும் பலருக்கும் இனிக்கிறது

சமகாலத்தில் நிகழ்கின்ற அரசியல் நிகழ்வுகளின் மீது தனது கருத்துக்களை பதிவு செய்வது முதல் சொந்த வாழ்க்கையில் உள்ள இன்ப, துன்பங்கள் போன்றவற்றை பதிவு செய்வது வரை ‘ட்விட்டர்’ என்ற இணையதள சேவை உலகை ஆட்டிப் படைக்கிறது.

140 வரிகளுக்குள் தனது கருத்துக்களை எழுதத் தெரிந்திருக்க வேண்டும், இந்த ‘அருமையான வழிமுறையை’ ,    எழுத்தை ஒரு வியாபாரமாக பயன்படுத்துகின்ற ஜாம்பவான்கள் துவங்கி கற்றுக் குட்டிகள் வரை ட்விட்டரில் பதிவு செய்து தனது கருத்தை பிரச்சாரம் செய்து விட்டதாக மகிழ்ந்து வருகின்றனர் என்பது தனிக் கதை.

சமீபத்தில் ட்விட்டரில் 20 கோடி பயனர்களின் விவரங்கள் , திருடு போய்விட்டதாக இஸ்ரேலைச் சேர்ந்த இணையதள கண்காணிப்பு நிறுவனம் ஹட்சன் ராக் அறிவித்துள்ளது. இந்த திருட்டு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்பாக நடந்ததா? அல்லது பின்பாக நடந்ததா? என்று மயிர் பிளக்கும் வாதம் அதே ட்விட்டரில் நடக்கிறது.

ஏற்கனவே மெட்டா நிறுவனம் வாட்சப், facebook, instagram போன்ற அரட்டைக் கச்சேரிகளை ஊக்குவித்து அதன் மூலம் தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கங்களையும், அவர்களின் விருப்பம், ஆசைகள், எதிர்பார்ப்பு, கனவு, அவர்களின் தயார் நிலை அனைத்தையும் தரவுகளாக்கி டேட்டாவாக எடுத்து சேகரித்து வைத்துக் கொள்கின்றனர்.

இந்த டேட்டாக்களை பயன்படுத்தி தனிப்பட்ட நபர்கள் துவங்கி ஒரு நாட்டிலோ அல்லது உலகின் ஒரு பகுதியிலோ என்ன வகையான உணவை விரும்புகிறார்கள், என்ன வகையான அரசியலை விரும்புகிறார்கள், என்ன வகையான கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கிறார்கள்? அல்லது மீறுகிறார்கள்?  எந்த வகையான அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார்கள்? என்பது அனைத்தையும் ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்க இந்த தகவல் தொழில்நுட்ப செயலிகள் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்: பெகாசஸ் உளவு: நாட்டை ஆளும் கார்ப்பரேட்- காவி பாசிச பயங்கரவாத கும்பல்! | Pegasus Project

உதாரணத்திற்கு , ஒரு நாட்டில் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் மக்களின் மன உணர்வுகளைஅறிந்து கொள்ள, வீடு வீடாகவோ அல்லது கிராமம் கிராமமாகவோ சென்று ஆய்வு நடத்த தேவையில்லை. இது போன்ற தகவல் தொழில்நுட்ப செயலிகள், அதன் பயனர்களின் விவரக் குறிப்புகளை வாங்கிக் கொண்டால் போதும். அதை வைத்து அவர்களை எப்படி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக மாற்றுவது என்ற பணியை இது போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திட்டமிட்டு செய்கின்றன.

ட்விட்டர் 2006ஆம் ஆண்டு நான்கு நண்பர்களைக் கொண்டு துவக்கப்பட்ட போது, அது இது போன்ற பல்வேறு மாய வித்தைகளை புரிவதற்கு பயன்படும் என்ற எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. கருத்து தெரிவிப்பதற்கு ஒரு சாதனம் என்ற வகையிலேயே ட்விட்டர் பயன்படுத்தப்பட்டது.

குறுகிய காலத்திற்குள் ட்விட்டர் 100 மில்லியன் பயணங்களை அடைந்தவுடன் ட்விட்டரை விழுங்குவதற்கு ஏற்கனவே டெஸ்லா இன்க், ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங், நியூரோ லிங்க் போன்ற நிறுவனங்களை நடத்தி  பல லட்சம் கோடிகளை சுருட்டி வரும் எலன் மஸ்க், சமீபத்தில் 44 மில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கியவுடன் இது போன்ற புகார்கள் எழுந்துள்ளது.

லீக்கான டிவிட்டர் டேட்டாவின் சாம்பிள் (source: BleepingComputer)

இதே ட்விட்டர் நிறுவனத்தில் 2022 ஜூலை மாதத்தில் 5.4 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் கணக்குகள் பாதிப்புக்கு உள்ளானது. தற்போது ட்விட்டரை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கான பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள், கணக்குகள், அவர்களின் சுயவிவரக் குறிப்புகள், அவர்களைப் பின் தொடர்பவர்களின் முகவரிகள் போன்ற  அனைத்தும் திருடுபோய் உள்ளதால் இத்தகைய தரவுகள் அனைத்தையும் நிர்வகிக்கும் ட்விட்டரின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது 20 கோடி பயனர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது என்பதை பற்றி அதிகாரபூர்வமாக வாய் திறக்காமல் கருத்துரிமைக்கு சேவை செய்து வருகிறார் எலான் மஸ்க்.

எலன் மாஸ்க் தனது பிடிக்குள் ட்விட்டர் நிறுவனத்தை கொண்டு வந்தவுடன் கருத்துரிமையை அனுமதிப்பாரா அல்லது கல்லறை கட்டுவாரா என்ற விவாதமும் உலக அளவில் நடக்கத் துவங்கியது. தற்போது 20 கோடி பயனர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது என்பதை பற்றி அதிகாரபூர்வமாக வாய் திறக்காமல் கருத்துரிமைக்கு சேவை செய்து வருகிறார்.

தனிப்பட்ட நபர்களின் கருத்துரிமை துவங்கி சமூக விடுதலைக்கு போராடுகின்ற தனிநபர்கள், அமைப்புகள், கம்யூனிச இயக்கங்கள் வரை ட்விட்டரில் தனது கருத்தை வெளியிடுவதன் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். “நீங்கள் உங்கள் கருத்துகளை வெளியிடலாம், ஆனால் ட்விட்டரின் வழியே” என்பது தான்  நவீன உலகத்தில் ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க கும்பல் உருவாக்கி இருக்கும் புதிய வகையான விஷ வலையாகும்.

கூகுள் தேடு பொறி மூலம் உலகை தேடுவதும், ட்விட்டரில் தனது கருத்துக்களை பரிமாற்றம் செய்வதும், முகநூல் பக்கத்தில் தன்னை பற்றிய சுயவிவர குறிப்புகளை வெளியிடுவதும், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தனது விருப்பங்களை, அந்தரங்கங்களை பரிமாறிக் கொள்வதும் எந்த வகையிலும் பாதுகாப்பானது அல்ல என்பதை தான் twitter பயனர்களின், ‘தரவுகள் திருட்டு’ அறிவிக்கிறது.

இதையும் படியுங்கள்: எச்சரிக்கை! உங்களின் தரவுகளை திருடும் ஏகாதிபத்திய திருட்டுக்கும்பல்!

இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் இவற்றை பயன்படுத்துவதற்கு அறிவில்லை என்று சலித்துக் கொள்வதை விட, இத்தகைய பயன்பாடுகள் எந்த அளவிற்கு எதிர் விளைவுகளை உருவாக்குகிறது என்பதையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

இணையதளத்தை பயன்படுத்துகின்ற போதே, இணையதளத்தை முடக்குகின்ற ஹேக்கர்கள் அதை பயன்படுத்தி பிஷிங் மற்றும் டாக்ஸி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுப்பதற்கு சுரண்டல் நோக்கமற்ற வகையில் கருத்து பிரச்சாரத்தை கொண்டு செல்வது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு சிந்திப்பதற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவ நிதியாதிக்க கும்பல்களால் ஒருபோதும் முடியாது.

ட்விட்டரை எலன் மஸ்க்  கைப்பற்றியவுடன் முதல் நடவடிக்கையாக அதில் உள்ள  60 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்களை வெளியேற்றி தனது லாப வெறியை நிரூபித்துக் கொண்டார். அடுத்த கட்டமாக ப்ளூ  சந்தா மூலமும், ப்ளூ டிக் மூலமும் ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் கட்டணத்தின் மூலம் சுரண்டுவதற்கு தயாராகி வருகிறார்.

இதுதான் கருத்துரிமையை பிரச்சாரம் செய்ய உதவுவதாக கூறப்படும் ட்விட்டரின் யோக்கியதை!

  • இரா. கபிலன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here