ஜெய் கிசான், ஜெய் ஜவான் என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்து, ஒன்றிய ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க அரசு, தான் பேசிய அனைத்தும் பித்தலாட்டமே என்பதை துலக்கமாக நிரூபித்து விட்டது.

5 மாநிலத்தேர்தலை ஒட்டி விவசாயிகளிடம் நயவஞ்சகமாகப்பேசி போராட்டத்தை வாபஸ் பெற வைக்க முயன்றது மோடியின் பா.ஜ.க அரசு. இவர்களின் நேர்மை பற்றி அறிந்திருந்த விவசாயிகள், வெறும் வாக்குறுதியை நம்ப முடியாது; பாராளுமன்றத்தில் சட்டத்தை திரும்பப்பெறு; அதன் பிறகு போராட்டத்தை திரும்பப்பெறுவது பற்றி பார்ப்போமெனக் கூறி விட்டனர். வேறு வழியின்றி பாராளுமன்றத்தில் சட்டங்களை திரும்பப்பெற்றது மோடி அரசு.

அத்துடன், குறைந்தபட்ச ஆதாரவிலை கோரிக்கை தொடர்பாக ஆராய குழு அமைக்கப்படும் என்றும், அதில் சம்யுக்த கிசான் மோர்ச்சா பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என்றும்  அரசு அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை அமுல்படுத்த மாட்டோம் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவிற்கு  டிசம்பர் 9, 2021 தேதியிட்ட கடிதத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்தது.

காரியம் ஆக வேண்டுமா, காலில் விழு! காரியம் முடிந்ததும் காலை வாரி விடு!

எழுத்துப்பூர்வமாக ஒத்துக்கொண்ட இந்தக் கோரிக்கைகளை இன்றுவரை அமுல்படுத்த மறுத்து வருவதுடன் அதற்கு நேரெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த பாசிச அரசு.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் பற்றி விவாதிக்க அரசாங்கம் இன்னும் தயாராக இல்லை. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதற்கான குழு அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு கேட்ட போதே, அந்தக்குழு தொடர்பான சில கேள்விகளை SKM எழுப்பியது. அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காத ஒன்றிய அரசு, ஜுலை மாதத்தில் SKM -க்கான பிரதிநிதிகளாக 3 பேருக்கு இடம் விட்டு தன்னிச்சையாக ஒரு குழுவை அறிவித்தது. கேள்விக்கு பதிலே அளிக்காமல் தன்னிச்சையாக குழுவை அமைத்ததன் மூலம் ஒன்றிய அரசு தனது நேர்மையின்மையையும் வஞ்சக நோக்கத்தையும் வெளிப்படுத்தி விட்டது.


இதையும் படியுங்கள் : விவசாயத்துறையை காா்ப்பரேட்டுகள் விழுங்குவது பற்றி பஞ்சாப் தேர்தல் கட்சிகள் அடக்கி வாசித்து ஏன்!


“இந்தக் குழுவின் அதிகார வரம்பு மற்றும் விதிமுறைகளை அரசாங்கம் தெளிவுபடுத்தாத வரை, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதியை இந்தக் குழுவிற்கு நியமிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றும் “இந்தக் குழு குறித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் சந்தேகங்கள் அனைத்தும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் நிஜமாகியுள்ளன. விவசாயிகளுக்கு எதிரான மற்றும் அர்த்தமற்ற இந்தக் குழுவிற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளை அனுப்புவதில் எந்த நியாயமும் இல்லை.” என்றும் கிசான் மோர்ச்சா அறிவித்து விட்டது.

ஆனால், இந்த உண்மைகளை மறைத்து சம்யுக்த கிசான் மோர்ச்சா பிரதிநிதிகளின் பெயர்களைத் தராததால் தான் குழு அமைப்பது தடைபட்டதாக வேளாண்துறை அமைச்சர் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள, ஒன்றிய அரசு நியமித்துள்ள வேளாண்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், நிதி அயோக் உறுப்பினரும் வழக்கறிஞருமான ரமேஷ் சந்த் மற்றும் பிற வல்லுநர்கள்தான் MSP க்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக உள்ளனர்.

மேலும், விவசாயி தலைவர்கள் என்ற பெயரில், 5 விசுவாசிகளை அரசாங்கம் நியமித்துள்ளது. இவர்கள் அனைவரும் விவசாயிகள் விரோத மூன்று சட்டங்களையும் வெளிப்படையாக ஆதரித்த பாஜக-ஆர்எஸ்எஸ் உடன் நேரடியாக தொடர்பில் உள்ள தலைவர்களாவர். இந்த ஐந்து பேரும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசினார்கள்; இன்றும் விவசாயிகள் இயக்கத்திற்கு எதிராக விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதை விடக்கொடுமை என்னவென்றால், “MSP குறித்து சட்டம் இயற்றுவது பற்றி இந்தக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதாவது, இந்த குழுவின் முன் MSP பிரச்சினை வைக்கப்படவில்லை. மாறாக, மூன்று கறுப்புச் சட்டங்களையே வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் என்ற பெயரில், மீண்டும் கொண்டு வருவதற்கேற்ப ஒரு விடயம் செருகப்பட்டுள்ளது” என்றும் இந்த உண்மைகளின் பின்னணியில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா தனது பிரதிநிதிகளை இந்தக் குழுவிற்கு அனுப்புவதில் எந்த நியாயமும் இல்லை; விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்துக்கான (MSPக்கான) போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது பல லட்சம் விவசாயிகளைத் திரட்டி வலிமையான போராட்டத்தை நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சா.

மின்சார மசோதா 2022: விவசாயிகளை மட்டும் பாதிப்பதல்ல!

“விவசாயிகளைப் பாதிக்கும் மின்சார மசோதாவில் உள்ள விதிகள் குறித்து, முதலில் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடன் விவாதம் நடைபெறும். அதன் பிறகுதான் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்”. என்று கூறிய ஒன்றிய அரசு, அதை அப்பட்டமாக மீறி தனது வாக்குறுதிக்கு பச்சையாக துரோகமிழைத்தது. பாராளுமன்றத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக மின்சார திருத்த மசோதா 2022 பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அது நிறைவேறினால், உற்பத்தியில் மட்டுமல்லாமல், மின்சார விநியோகத் துறையிலும் தனியார் நிறுவனங்கள் நுழைந்து விடும். தொலைத்தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல் ஓரம் கட்டப்பட்டு தனியார் ஆதிக்கம் செலுத்துவது போல, நமது மின் துறையின் கட்டமைப்புகளைப்பயன்படுத்தி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழி செய்யப்படும்.

விவசாயிகளுக்கும், நம் நாட்டில் உள்ள மற்ற அனைத்துப் பிரிவினருக்குமான மானியத்தை இந்த மின்சார மசோதா முடிவுக்கு கொண்டுவந்து விடும். விவசாயிகளுக்கான இலவச அல்லது மலிவான மின்சாரம் நிறுத்தப்படும். விவசாயிகளின் உற்பத்திச் செலவு மேலும் உயரும். எனவே, உணவுப்பொருட்களின் விலையும் எகிறும். விவசாயத்தை விட்டு விவசாயிகள் இன்னும் விரைவாக விரட்டப்படுவார்கள். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் கடுமையாக பாதிக்கப்படும். காசில்லாதவருக்கு கரண்ட் கிடையாது என்ற கேடுகெட்ட கொள்கை மூலம் இருண்ட வாழ்வை நோக்கி ஏழைகள் தள்ளப்படுவார்கள். மனித வள குறியீட்டில் நாடு மேலும் பின்னுக்கு தள்ளப்படும். ஆனால், அப்போது மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் கார்ப்பரேட் நண்பர்கள் உலகப்பணக்காரர் பட்டியலில் மேலும் முன்னேறியிருப்பார்கள்; அல்லது புதிய நண்பர்கள் யாரேனும் இந்தப்பட்டியலில் சேர்ந்திருப்பார்கள்.


இதையும் படியுங்கள் : புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா ; 2020 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து! மக்கள் மீது கட்டணக் கொள்ளை!


மோடி அரசு கொடுத்த மற்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என்பதை இதற்கு மேலும் விளக்கத்தேவையில்லை. விவசாயிகள் மீதான பொய் வழக்குகள் திரும்பப்பெறப் படவில்லை. பலக்கிம்பூர் கேரி கொலைகாரன் அஜய் மிஸ்ரா தேனி இன்றும் ஒன்றிய அமைச்சர்கள் குழுவில் நீடிக்கிறார்.

தொடர்கிறது விவசாயிகளின் போராட்டம்!

இந்த துரோகத்தையும் வஞ்சகத்தையும் கண்டித்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டங்களும், சாலைமறியலும் நடத்தப்பட்டன.

இந்திய ‘சுதந்திரத்தின்’ 75வது ஆண்டு விழாவையொட்டி, மாநில அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி, ஆகஸ்ட் 18-19-20 தேதிகளில் லக்கிம்பூர் கேரியில் 75 மணி நேர நிரந்தர போராட்டத்தை சம்யுக்தா கிசான் மோர்ச்சா நடத்தியுள்ளது. தொடர்ந்தும் போராட்ட திட்டங்களை வகுத்து வருகிறது.

பாசிச சதிகளை முறியடிப்போம்! விவசாயிகளின் போருக்கு தோள் கொடுப்போம்!

மறுபுறம், விவசாயிகளின் ஒற்றுமையை உடைக்க சகுனி வேலையில் இறங்கிவிட்டது பார்ப்பன – பாசிச அரசு. சம்யுக்த கிசான் மோர்ச்சாவிலிருந்து விலகிய சிலரைக்கொண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்ததுடன், அதுதான் உண்மையான SKM என்பது போன்ற பிரச்சாரத்தைத் தனது கார்ப்பரேட் ஊடகத்தினர் மூலம் ஊதிப்பெருக்கி குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயன்று வருகிறது. பார்ப்பன புராண இதிகாசங்களைக் கரைத்துக்குடித்த பாசிஸ்டுகளுக்கு சாம, பேத, தான, தண்டம் என்ற நால் வகை தர்மங்களும் அத்துப்படி. பிரித்தாளும் கொள்கையில் ஆங்கிலேயர்களும், பொய்ப்பிரச்சாரத்தில் நாஜிக்களும் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளிடம் பிச்சையெடுக்க வேண்டும். இந்த பார்ப்பன நரிகளின் தந்திரத்தை எச்சரிக்கையாக இருந்து SKM முறியடித்து முன்னேற வேண்டும். அத்துடன் சோறு தின்னும் நம் அனைவரின் ஆதரவும் அவசியம்.

மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றப்படும் முன்னரே கட்டப்பட்ட அதானியின் 5000 கோடி மதிப்பிலான குளிரூட்டப்பட்ட தானியக் கொள்முதல் நிலையங்கள் எந்த பதட்டமுமின்றி கொள்முதலுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.

கார்ப்பரேட்டுகளின் இந்த நம்பிக்கையைத் தகர்க்காமல் விவசாயிகளுக்கு நாம் நம்பிக்கையூட்ட முடியாது. தன்னைத் தியாகம் செய்து நாட்டிற்கு சோறு போடும் விவசாயிகளுக்கு நாம் நம்பிக்கையூட்டப்போவது எப்போது?

  • வீரசேகரன்

புதிய ஜனநாயகம்
செப்டம்பர் மாத இதழ்.

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here