ந்தியாவின் தலைநகரான டெல்லியில் 2023 ஆம் ஆண்டு பிறந்தவுடன் மூன்று மணி நேரத்திற்குள் நடந்த கொடூரமான படுகொலை பெண்களுக்கு நாட்டின் தலைநகரிலேயே பாதுகாப்பு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக அறிவித்துள்ளது.

ஈவன்ட் ஷோ என்று சொல்லக்கூடிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் நிர்வாகியாக பணிபுரிந்து தன்னுடைய தோழி நிதின் என்பவருடன் ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பிய 20 வயதான அஞ்சலி சிங் மரணம் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

டெல்லியின் காவல்துறை முழுக்க இந்திய ஒன்றிய அரசான பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அந்த மாநிலத்தை ஆளுகின்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் பலமுறை விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பிற்கென்று டெல்லியைச் சேர்ந்த 18000 போலீசாரை பணியில் அமர்த்தியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் அதிக நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று புளுகுகின்றனர்.

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள சுல்தான்புரி என்ற இடத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அஞ்சலி சிங் ஓட்டி சென்ற ஸ்கூட்டி மீது பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி உள்ளிட்ட ஐந்து பேரை ஏற்றி வந்த மாருதி கார் படு வேகமாக மோதியது.

தாங்கள் ஓட்டி வந்த கார் ஒருவர் மீது மோதி ஒருவர் விபத்துக்குள்ளானதையும் அவர் கார் சக்கரத்தின் அடியில் சிக்கியது கூட தெரியாமல் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று நிர்வாணமான உடலை வீசிச் சென்றனர் காரை ஓட்டிய ஐவர் கும்பல்.

காருக்கு அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அஞ்சலிசிங்

புத்தாண்டு கொண்டாட்டம் என்றவுடன் குடிவெறியுடன் போதை தலைக்கேற விடிய விடிய குடித்துக் கொண்டே கும்மாளம் அடிப்பது என்பதைத்தான் 2000 கிட்ஸ் கலாச்சாரம் என்று பரப்பி வருகிறது இந்தியாவின் ஆளும் வர்க்கம்.

இதற்கு இதற்கு ஏற்ப 5 நட்சத்திர, மூன்று நட்சத்திர விடுதிகள் துவங்கி சாதாரண ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், கடற்கரைகள் பூங்காக்கள் என அனைத்தையும் ஆக்கிரமிக்க துவங்குகிறது புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் இப்படிப்பட்ட கழிசடை கலாச்சாரத்தை கொண்டாடுகின்ற கும்பல்.

பாரத பண்பாடு என்றெல்லாம் பீற்றுகின்ற பாரதிய ஜனதா கட்சி கும்பலும் இதில் எந்த விதத்திலும் விதிவிலக்கு இல்லை என்பதை சுல்தான்புரி பகுதியின் நிர்வாகியான மனோஜ் மித்தல் நிரூபித்துள்ளார். அவனது தலைமையில் தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன் ஆகிய நால்வரும் தலைநகருக்கு சென்று கூட்டு குடி என்ற வன்செயலில் ஈடுபடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.

இந்த கழிசடை கூட்டம்  குடித்து, குடித்து போதை தலைக்கு ஏறியவுடன் வாடகைக்கு எடுத்த வந்திருந்த மாருதி காரை  தாறுமாறாக படுவேகத்துடன் ஒட்டி சென்ற போதுதான், வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய அஞ்சலிசிங் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

விபத்து நடந்து இரண்டு மணி நேரத்திற்குள் கட்டுப்பாட்டு அறைக்கு ஐந்து முறை தகவல் போய் உள்ளது. ஆனால் நாட்டின் பாதுகாப்பையே தூக்கி சுமப்பதாக மார்தட்டிக் கொள்ளும் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசு 2 மணி நேரத்திற்கு பிறகு அஞ்சலி சிங்கை கண்டுபிடித்த போது அவர் மூளை சிதறி உடல், கை கால்களில் படுகாயமுற்று, அணிந்து இருந்த ஆடை கிழிக்கப்பட்டு நிர்வாணமாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் தலை நகரத்தில் உள்ள சாலை ஒன்றில் 12 கிலோ மீட்டருக்கு ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதை கண்காணித்து தடுத்து நிறுத்துவதற்கு துப்பு கிடையாது. இப்படிப்பட்டவர்கள் தான் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் என்று தனக்குத்தானே புகழ்ந்து கொள்கின்றனர்.

2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற பெண் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தப்பட்டபோது நாடே அதிர்ந்து நின்றது. காமவெறி, குடிபோதை தலைக்கேறி அந்த கும்பல் நடத்திய பாலியல் வன்கொடுமை இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நகரங்களில் டெல்லி தலைநகராக விளங்குகிறது என்பது நிரூபணம் ஆனது.

அஞ்சலி சிங் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்ததாக அவரது தாய் கூறுகிறார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே போன்றதொரு சம்பவம் ஆனால் வேறொரு பாணியில் அஞ்சலி சிங்குக்கு நிகழ்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. அன்றாடம் 500, 1000 க்கு வேலை செய்கின்ற உதிரி தொழில்கள் பெருகி, வாழ்க்கை முறையையும், சிந்தனையையும், கலாச்சாரத்தையும் சீரழித்து வருகிறது.

நாளை என்பதே கிடையாது இன்று இப்பொழுதே அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு இளைய தலைமுறை சீரழிக்கப்படுகிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்குகின்ற நுகர்வு வெறியையும், அரசாங்கம் நாடு முழுவதும் திறந்து விட்டுள்ள சாராய பார்கள், எலைட் பார்கள் போன்றவை இளைஞர்களுக்கு தற்காலிகமான தீர்வாகவும், பிரச்சனைகளை பற்றி கண்டுகொள்ளாமல் மூளையை மழுங்கடிப்பதற்கு ஒரு கருவியாகவும் மாறிவிடுகிறது.

இதையும் படியுங்கள்: மனுதர்மத்தின் ஆட்சியும், பாலியல் கொலை குற்றவாளிகள் விடுதலையும்!

நாட்டை சரியான வழியில் வழி நடத்துவதற்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஆளும் வர்க்கம், ஆளத் தகுதி இழந்து மிகப்பெரும் நெருக்கடிக்குள் சிக்கி உள்ளது. இத்தகைய சூழல் சமூககட்டமைப்பை பாசிச கட்டமைப்பாக மாற்றுவதற்கு பொருத்தமாகவும் உள்ளது.

இந்தியாவில் நள்ளிரவில் ஒரு பெண் எப்போது சுதந்திரமாக நடந்து செல்கிறாரோ அப்போதுதான் உண்மை சுதந்திரம் என்று காந்தி கூறியதாக பீற்றிக்கொள்வார்கள்.

அஞ்சலி சிங் கொடூரமாக விபத்தில் கொல்லப்பட்டது இன்னமும் அத்தகைய நிலைமை நாட்டில் உருவாகி விடவில்லை. சுதந்திரம் என்பது வெறும் ஏட்டில் மட்டும்தான் உள்ளது. காமக் கொடூரர்களும், குடிவெறி மிருகங்களும் சட்டப்படியே பாதுகாப்புடன் உலவுவதற்கு பொருத்தமாக தான் இந்திய சமூக அமைப்பு கட்டப்பட்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழலில் கிராமப்புறங்களை பற்றி கேட்கவே வேண்டியதில்லை. சமூகத்தில் சரிபாதி உள்ள பெண்களை, நுகர்வு பொருளாகவும் போகப் பொருளாகவும், பண்டமாகவும், ஆணாதிக்க வெறித்தனத்திற்கு கட்டுப்பட்ட அடிமையாகவும், கூலி இல்லாத வேலைக்காரியாகவும் கீழ்த்தரமாக அணுகுகின்ற இந்த சமூக அமைப்பு இனியும் நீடிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை.

  • பா.மதிவதனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here