ஒரு நிலப்பகுதி எந்தளவு உள்ளது என்பதல்ல, அது சுதந்திரத்துடனும், தன்னாட்சி உரிமையுடனும் இயங்கும் உரிமை வேண்டும்! பிரெஞ்சு ஆட்சியாளர்களின் கீழ் இருந்த போது இருந்த உரிமைகளும்,அதிகாரமும் கூட தற்போது இல்லையென்றால் பெற்ற சுதந்திரத்திற்கு அர்த்தம் தான் என்ன?

புதுவை எனும் இப்பகுதி தோன்றி சுமார் 12 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றது. புதுவைக்கு புதுச்சேரி, பாண்டி, பாண்டிச்சேரி, புச்சேரி, பொந்திச்சேரி, பொதுகே, வேதபுரி உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறது. தொன்மை காலம், மன்னர் காலம், வெளிநாட்டினர் ஆட்சிக்காலம் என இப்பகுதி ஆளப்பட்டது.

சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் கிருஷ்ணதேவராயர் என பல்வேறு மன்னர்கள் ஆண்டுள்ளனர். பின்னர் டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் என இப்பகுதியை அடிமைப்படுத்தி ஆண்டுள்ளனர். இறுதியாக 1661 ஆம் ஆண்டு பிரெஞ்சுக் காரர்களால், செஞ்சி அரசர்களிடம் இருந்து மீட்கப்பட்டு தனது ஆட்சியாக உறுதிப்படுத்திக் கொண்ட பகுதி புதுவையாகும்.

பிரெஞ்சு நாட்டினர் தமிழகத்திற்குள் அடங்கிய புதுவை, காரைக்கால் பகுதிகளையும், ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அருகில் உள்ள ஏனாமையும், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகிலுள்ள மாகி பகுதியையும், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகிலுள்ள சந்திர நாகூரையும் ஆட்சி செலுத்தினர். உலகளாவிய நாடுகள் விடுதலைக்கு வித்திட்ட நிலையில், இந்திய விடுதலை 1947 -ம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்றது.

ஏழு ஆண்டுகள் கழித்து தான் பிரஞ்சு நாட்டிடமிருந்து புதுவை 1954 -ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் விடுதலை அடைந்தது. சில நிர்வாக காரணங்களுக்காக மேற்குவங்கத்தில் உள்ள சந்திரநாகூர் கொல்கத்தா மாநகராட்சியில் இணைக்கப்பட்டுவிட்டது. நான்கு மண்டலங்களான புதுவை, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி ஆகிய பகுதிகள் புதுச்சேரி ஆட்சி பரப்புக்குள் இருந்து வந்தது. 1956-ம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு அவர்களும், பிரெஞ்சு தூதரக அதிகாரிகளும் போட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இந்திய ஆட்சிப் பரப்புடன் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று புதுச்சேரி மாநிலம் இணைந்தது.

விடுதலை அடைந்து 8 ஆண்டுகள் கழித்து தான், புதுச்சேரி எல்லை கிராமமான வில்லியனூர் கொம்யூன் கீழூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றுகூடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கலந்துகொண்ட 200 பேரின் 185 பேர் இந்திய ஆட்சிப் பரப்புடன் இணைய வேண்டும் என பாக் கடிதத்தின் அடிப்படையில் இந்திய நாட்டுடன் புதுச்சேரி இணைந்தது. புதுவை மாநிலம் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் போது 39 சட்டப்பேரவை உறுப்பினர்களும், 18 நகராட்சிகளும், 200 அடித்தளத்து மாமூர் என பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படும் கவுன்சிலர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். அன்று வரை சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட புதுவை சட்டமன்றம் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் 1963 ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக சுருக்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி ஆகிய பகுதிகள் 485 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். புதுச்சேரி 282 சதுர கிலோ மீட்டர், காரைக்கால் 165 சதுர கிலோ மீட்டர், ஏனாம் 29 சதுர கிலோ மீட்டர் மற்றும் மாகி 9 சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஆகும். மக்கள் தொகை சுமார் 12 லட்சம் பேர், மொத்த வாக்காளர்கள் 11 லட்சம், மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 3.25 லட்சம், 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் 1, மாநிலங்களவை உறுப்பினர் 1 என ஜனநாயக கட்டமைப்பு உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி இரண்டடுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் மூலம் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கள்,98 கிராம ஊராட்சிகள் என 113 உள்ளாட்சி நிறுவன அமைப்புகளில் 1138 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தனர். துரதிஷ்டவசமாக மக்களுக்கு அதிகாரம் அளிக்க கூடிய உள்ளாட்சித் தேர்தல் புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டு காலமாக நடத்தப்படவில்லை.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றத்திற்கு புதுச்சேரியில் அதிகாரம் இல்லை.1963 ஆம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டப் படி சட்டமியற்றும் அதிகாரம் இந்த சட்டமன்றத்திற்கு முழுவதுமாக இல்லை நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் உள்ளதுபோல் எவ்வித ஜனநாயக உரிமையும் இந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு நடுவண் அரசால் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் செய்ய வேண்டிய துர்பாக்கியமான நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு உள்ளது. இதன் காரணமாகவே இங்கு மக்களுக்கு அதிகாரம், ஜனநாயக விரிவாக்கம் வழங்கிடும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது! ஆளும் குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 73 மற்றும் 74 ஆகிய சட்டத்  திருத்தங்கள் புதுச்சேரியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

எனவே புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேச சட்டம் 1963 வருவதற்கு முன்பு அதிக அதிகாரம் கொண்ட புதுச்சேரி இன்று அதிகாரம் குறைக்கப்பட்டு ஜனநாயகம் முடக்கப்பட்டு ஒரு குறைபாடு உள்ள மாநிலமாக காட்சி அளிக்கிறது. மேலும் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் அதற்கான நிதி போன்றவை மத்திய அரசால் வழங்கப்படும் என எதிர்பார்க்கும் அவல நிலை இங்கு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு தற்போது உள்ள மொத்த கடன் தொகை ரூ.9420 கோடியாகும். இதற்கு நாளொன்றுக்கு வட்டியாக சுமார் 2 கோடி ரூபாய் பல்வேறு வங்கி நிறுவனம் அமைப்புகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி வானளாவிய அதிகாரம் கொண்ட மாநிலமாக விடுதலைக்கு முன்னர் இருந்தது. இதன் அதிகாரத்தைக் குறைத்து சட்டப்பிரிவு 239-A-ன் படி குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் அதன் பிரதிநிதியான துணைநிலை ஆளுநர் நிர்வாக ரீதியாக புதுச்சேரியை ஆட்சி செய்வது ஜனநாயகத்தின் அலங்கோலம் ஆகும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாத காரணத்தால், இங்கு தேவைப்படுகின்ற தொழிற்சாலைகளை வரவழைக்கவோ, சுற்றுலாவுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ,வளர்ர்சி திட்டங்களை செயல்படுத்தவோ முடியவில்லை.ஆகவேபுதுச்சேரி மக்களின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆண்டு பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் தரும் உதவி கொஞ்சமும் போதுமானதாக இல்லை. உதாரணமாக, நடப்பு பட்ஜெட்டில் 1.57 சதவீதம் அதிகரிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.இப்படியான நிலை தொடரும் வரை வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லாமல் தேக்க நிலையே தொடரும்!

போதாக்குறைக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தில் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.அதை ஈடுகட்டவும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கவும் வேண்டும். கிட்டதட்ட ஒரு மாநகராட்சிக்கான அதிகாரத்துடன் தான் புதுச்சேரி திணறுகிறது! மத்திய ஆளுகைக்கு உட்பட்ட யூனியன் பிரதேசமாக இருப்பதால், எங்கோ சில ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மத்திய ஆட்சியாளர்களின் தயவில் தான் எங்கள் ஒவ்வொரு நகர்வும் உள்ளது. ஆகவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து தவிர்க்க முடியாத அவசியமாகும்!

ஒரு நிலப்பகுதி எந்தளவு உள்ளது என்பதல்ல, அது சுதந்திரத்துடனும், தன்னாட்சி உரிமைகளுடனும் இயங்கும் உரிமை வேண்டும்! எனவே, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மாநிலத் தகுதியும், மக்களுக்கு அதிகாரம் வழங்கிடும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையான ஜனநாயகம் புதுச்சேரியில் கிட்டும்.

கட்டுரையாளர்; புதுவை ஜெகன்நாதன்

நன்றி: அறம் இணையதளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here