ன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் சிவப்பு மல்லியாய் சித்தமல்லி கிராமத்தில் கிழக்கே உதிக்கும் சூரிய சிவப்பாய் 15-07-1931 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தார் . தோழர் முருகையன். தான் பிறந்த சித்தமல்லி கிராமத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்துப்பேட்டை பள்ளியில் நடந்தே சென்று கல்வி பயின்றார் .

படிக்கின்ற காலத்தில் கம்யூனிச இயக்கத்தின் தோழர்களின் தொடர்பால் ஈர்க்கப்பட்ட தோழர் மக்களுக்கு சேவை செய்ய 1952 ஆம் ஆண்டு வ .உ .சி கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தன்னாலும் தன் நண்பர்களாலும் சிறு சிறு நற்பணிகளை செய்து வந்தார். முத்துப்பேட்டை பள்ளியில் ஒரே வகுப்பில் இரண்டு மாணவர்கள் முருகையன் என்ற பெயரில் இருந்தனர் இது அறிந்த வகுப்பாசிரியர் இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்கள் தோழர் முருகையன் அவர்களுக்கு எஸ்.ஜி.முருகையன் என்ற பள்ளி வகுப்பேட்டியில் பெயர் திருத்தம் செய்து இனிமேல் நீ சித்தமல்லி கோவிந்தன் முருகையன் என்றும் அழைக்கப்படுவாய் என்று திருத்தம் செய்து அறிவித்தார். அதை வகுப்பாசிரியர் கே. பாலச்சந்தர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டார் தோழர் முருகையன்.

தான் படிக்கின்ற காலத்தில் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்க கடிதங்களை தோழர் வண்டல்வளி சங்கரன் அவர்கள் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்ட தோழர் தன் புத்தகப் பையில் மறைத்து எடுத்துச் சென்று கம்யூனிச இயக்க தலைவர்கள் மணலி கந்தசாமி ஜாம்புவானோடை சிவராமன் அவர்களிடம் ஒப்படைப்பார் தோழர் முருகையன்.மறைமுகமாக தோழர் ஜாம்பவானோடை சிவராமன் அவர்கள் தையல் கடை ஒன்றில் நடத்தும் கம்யூனிச பயிற்சி வகுப்பிலும் தோழர் முருகையன் தவறாமல் கலந்து கொள்வார். பள்ளியில் நடக்கும் பிரேயரில் தேச பக்தி பாடல் பாட வேண்டும் என்று தான் இருந்தது.

அன்று ஒரு நாள் எஸ் ஜி முருகையன் அவர்களும் தோழர் அறிவொளி அவர்களும் ஜனசக்தியில் வெளிவந்த நாட்டுப்பற்று பாடலை பாடினார்கள். இதனைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் வேதநாயகம் எஸ் ஜி முருகையனை அழைத்து படிக்கின்ற காலத்தில் கட்சி பணி இதெல்லாம் தேவையில்லை என்று எச்சரித்தார் .

அமெரிக்காவில் உளவு பார்த்ததாக ரஷ்ய நாட்டு தம்பதிகள் ரோஷன் பார்க் ஜூலியர் ரோஷன் பார்க் தம்பதிகளை தூக்கிலிட அமெரிக்க ஏகாதிபத்தியம் அரசு முடிவு செய்தது. முத்துப்பேட்டை பள்ளியில் சாதாரண ஒரு மாணவனாக இருந்த முருகையன் தூக்கிலிடக் கூடாது என கையெழுத்து இயக்கம் நடத்தினார். தன் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரிடத்திலும் கையெழுத்து பெற்றார் தோழர் முருகையன். இதனையும் தோழர் முருகையன் அவர்களுடைய செயல்பாடுகள் கம்யூனிச இயக்கம் சார்ந்து என அறிந்த தலைமையாசிரியர் ஜேம்ஸ் வேதநாயகம் தோழர் முருகையன் அவர்களை பள்ளி இறுதி ஆண்டு பரீட்சை எழுத தகுதியற்றவராக்க கருதி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றம் செய்கிறார் .

பள்ளி இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடந்த கூட்டத்தில் நான் பங்கேற்று பேசலாமா என்று தலைமை ஆசிரியரிடம் கேட்க தோழர் முருகையன் அனுமதிபெறுகிறார்.

பள்ளி இறுதி ஆண்டு தேர்வு எழுத தேர்வாகி இருக்கின்ற சக மாணவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை நீங்கள் எல்லாம் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவிட்டு கூட்டத்திலிருந்தும் பள்ளியில் இருந்தும் வெளியேறுகிறார்.

தோழர் முருகையன் பிறகு கல்வி நமக்கு எட்டாக்கனியாக போனதும் வாழ்க்கையே கேள்விக்குறியாகி போனதும் தோழர் அவர்களுடைய தந்தை குடும்பத்தில் தலை புள்ள நீ படிச்சு பெரிய ஆளா வருவேன் நெனச்சேனே என் கனவில் மண்ணை வாரிப் போட்டுட்டியே என்று சண்டையிடுகிறார் தாங்கிக் கொள்ளமுடியாத வலியும் வேதனையோடு வாழ்க்கை நகர்கிறது. மனம் தளராத தோழர் முருகையன் தான் உருவாக்கிய கப்பலோட்டிய தமிழன் வ .உ .சி கழகத்தில் தொடர்ந்து நற்பணிகளை செய்து வருகிறார். 1955 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது அப்பொழுது ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து காங்கிரஸ் கட்சிவேட்பாளரை எதிர்த்தும் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளரை எதிர்த்தும் சுயட்சையாக தோழர் முருகையன் அவர்களைவேட்பாளராக நிறுத்துகிறார்கள். தன்னை எதிர்த்து நின்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த வேட்பாளர்களை முறியடித்து தோழர் முருகையன் வெற்றிவாகை சூடுகிறார் . சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற தோழர் முருகையன் நொச்சியூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்றுகிறார். ஊராட்சி மன்ற தலைவரான தோழர் முருகையின் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார்.

ஊராட்சியில் மிகச் சிறப்பாக ஊரில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இவரின் செயல்பாடுகளை பாராட்டும் வண்ணம் சாலை ஓரங்களிலும் குளக்கரை ஓரங்களிலும் தென்னை மரங்களை நட்டார்.மற்றும் மீன் வளர்ப்பு பாய்கால் வடிகால் வசதி மின்சார வசதி சாலை வசதி என்றுஎண்ணற்ற அடிப்படை வசதிகளை நிறைவாக செய்து அனைத்து சமூக மக்களின் மனதிலும் இடம் பிடித்தார் . தோழர் முருகையன் மறுமுறை நடந்த ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இவரை எதிர்த்து யாருமே போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
அப்படி ஒரு நேர்மையான சேவையை மக்களுக்கு செய்தார் என்பதுதான் இதற்கு சாட்சி ….

ஊராட்சி மன்ற தலைவர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரை தேர்வு செய்ய வேண்டும் சிறப்பாக செயலாற்றிய தோழர் முருகையனின் புகழ் ஒன்றிய முழுமைக்கும் பரவலாக பேசப்படுகிறது. இதனை அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு வேட்பாளராக தோழர் முருகையன் அவர்களின் களம் இறக்குகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி .

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் 47 அங்கத்தினர்களை கொண்ட மேற்படி ஊராட்சி ஒன்றியத்தில் 28 வாக்குகள் பெற்று தோழர் முருகையன் வெற்றி பெறுகிறார் அகில இந்திய அளவில்இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற முதல் பட்டியலின பெருந்தலைவர் என்பது இவர் மட்டுமே.
இது போன்றதொரு தலைமை பொறுப்பை பின்தங்கி நிலையில் கீழ்ப்பாடற்றுக் கிடக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த என் போன்றவனுக்கு துணிவோடு வழங்கிய பெருமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சாரும் என்று பெருமையாக கூறிக் கொள்வார்.

1965 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பஞ்சாயத்து யூனியன் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வேட்பாளரை எதிர்த்து 48 வாக்குகளில் 42 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 6 வாக்குகள் மட்டுமே பெற்றார்.1953 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயிற்சி உறுப்பினராக சேர்ந்த தோழர் 1957ஆம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார் 11 ஆண்டுகள் கட்சியின் வளர்ச்சியில் பங்காற்றிய தோழர் முருகையன் படிப்படியாக உயர்ந்து மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் மாவட்ட ஸ்தல ஸ்தாபன கமிட்டி கன்வீனராகவும் மாவட்ட விவசாய சங்க பொருளாளராகவும் தமிழ்நாடு வாலிப சங்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினராகவும் 1968 ஆம் ஆண்டிலேயே பொறுப்புவகித்து கட்சி பணி ஆற்றினார்.

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்ற தோழர் முருகையன் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களும் துயரங்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
1961 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பட்டியலின ஒன்றிய பெருந்தலைவர் என்ற பெருமையோடு பதவிஏற்கச்சென்ற தோழர் முருகையனுக்கு அவமானமே காத்திருந்தது. வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒன்றிய அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது சூழ்ச்சியாலும் சாதிய வன்மமும் தலைவிரித்தாடியது . அதையெல்லாம் பொறுப்படுத்தாத தோழர் முருகையன் சாலையோரத்தில் பந்தலமைத்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பிறகு அவருக்கு வழங்கப்பட்ட அரசு வாகனம் ஜீப்பை அதிகாரிகள் வைத்துக் கொண்டு தர மறுத்தனர் இது எல்லாம் தன்னுடையஉயர்ந்த ஆளுமையால் முறியடித்தார் தோழர் முருகையன்.

கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 உயர்நிலைப் பள்ளிகளும் 48 ஊராட்சிகளில் தொடக்க பள்ளிகளும் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு செயலாற்றினார். அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல அதிகார வர்க்கமும் பண்ணையாரும் பள்ளிகள் அமைந்தால் ஏழை எளிய மக்கள் எல்லாம் படித்து விட்டால் கூலிக்கு வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள் என்ற தவறான புரிதலோடு பள்ளி தொடங்குவதற்கு மிகப்பெரிய தடைகளையும் சூழ்ச்சிகளையும் செய்து தடுத்து நிறுத்தினர் .தடைகளை எல்லாம் படிக்ககல்லாக மாற்றி வெற்றி கண்டார் தோழர் முருகையன் அவர்கள். ஒன்றியத்தில் பள்ளிகளே இல்லாத கிராமங்களே கிடையாது. அதுமட்டுமல்லாமல் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டைக்கும்இடைப்பட்ட கிராமங்களில் உள்ள 48 கிராம ஊராட்சிகளில் உள்ள மாணவ மாணவிகளும் படிப்பதற்கும் நகரத்தோடு தொடர்பு கொள்வதற்கும் சரியான சாலை வசதி இல்லை இதனை கருத்தில் கொண்டு மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை வரை தஞ்சாவூர் வளர்ச்சி மன்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மன்னார்குடி முத்துப்பேட்டைக்கு இடையே பாமினி ஆற்றின் கீழ்கரையை உயர்த்தி சாலை அமைத்து தாருங்கள் என பலமுறை கோரிக்கை வைத்தார் தோழர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வேத நாராயணன் புதிய சாலை அமைப்பதற்கு இப்போது நிதி இல்லை என்றும் நீங்கள் சொல்லும் திட்டம் ஏற்கனவே சர்தார் வேதரத்னம் பிள்ளை அவர்களும் கும்பட்டிதிடல் சந்தானம் ஐயங்கார் மத்திய ரயில்வே கேபினட் அமைச்சர் அவர்களும் சொன்ன திட்டம் தான் இது நடைமுறைப்படுத்த ஏகப்பட்ட பொருள்செலவும் சாத்தியமும் இல்லை என நிராகரிக்கப்பட்ட திட்டம் தான் இது முடியாது என்று அப்பவே கைவிடப்பட்டது. நீங்கள் சொல்லும் இந்த திட்டத்திற்கு இப்ப எல்லாம் சாத்தியம் இல்லை என்ற அதிகார தோரணையோடு பதில் அளித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர். இதனைக் கேட்ட தோழர் முருகையன் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது இருப்பினும் மனம் தளராத தோழர் முருகையன் மாவட்ட ஆட்சித் தலைவரை பார்த்து நான் மக்களை திரட்டி ஆற்றுக் கரையில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி சமன்படுத்தி மண்சாலையாக அமைத்து விடுகிறேன் நீங்கள் தார் சாலை அமைத்து பஸ் விட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் தோழர் உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அந்தத் திட்டத்தோடு உங்களை வந்து சந்திக்கிறேன் என சொல்லி விடை பெற்றார் தோழர் முருகையன் .

பிறகு ஊராட்சியிலும் கட்சியிலும் விவாதம் செய்து மக்களைத் திரட்டி வீட்டுக்கு ஒருவர் கூடை மண்வெட்டி அருவாளுடன் பாமணி ஆற்றின் கீழ் கரைக்கு வர தேதி குறிப்பிட்டு சைக்கிளிலும் நடந்தும். ஆறுகளில் நீந்தியும் சென்று சென்று தோழர் முருகையன் 48 ஊராட்சிகளுக்கும் அங்குள்ள ஊர் பெரியவர்களுக்கும் பண்ணையர்களுக்கும் பொது மக்களுக்கும் அனைத்துக் கட்சி நண்பர்களுக்கும் கூட்டம் போட்டு இந்த சாலையின் அவசியம் என்ன என்பதை அனைவருக்கும் விளக்கி பேசி மக்களைத் திரட்டினார் தோழர் முருகையன் ஒரே நாளில் பல லட்சம் கணக்கான மக்கள் திரண்டனர் காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஒரு கூடை மண்ணை வெட்டி தோழர் முருகையன் தலையில் வைக்க அதை தூக்கி சுமந்த தோழர் முருகையனும் சிரமதான பணியில் ஈடுபட்டு காலையில் 6 மணிக்கு தொடங்கிய இந்த வரலாற்றுச் சம்பவம் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது ஆம் உண்டானது.

மன்னார்குடிக்கும் முத்துப்பேட்டைக்கும் இடையே புதிய மண் சாலை. பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னது போல் தார்சாலையாக மாற்றப்பட்டது. பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது தஞ்சை பெரிய கோயிலை கட்டியதற்கு ராஜராஜ சோழன் தான் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டிய கோவில் கட்டிய வரலாற்று நிகழ்வுக்கு பிறகு இந்த நிகழ்வை தான் மக்கள் எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து வியந்த வரலாற்று நிகழ்வாய் இந்த சாலை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிரமதான பணி (உழைப்பு கொடை )ரஷ்ய நாட்டில் தோழர் லெனின் தலைமையில் உண்டான புதிய அரசு செய்த பணி அந்தப் பணியை தான் இந்திய அரசு நகலெடுத்து செயலாற்றியது இந்த சிறப்பான பணியை செய்ய இந்தியாவில் எந்த ஒன்றியமோ முயற்சி மேற்கொள்ளவில்லை ஆனால் கோட்டூர் ஒன்றியத்தில் தோழர் முருகையன் இதை சிறப்பாக செய்து காட்டி வரலாற்றில் இடம் பிடித்தார் .இந்த நிகழ்வை பாராட்டி பத்திரிகைகள் எல்லாம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது.

கோட்டூர் என்று பத்திரிகைகளில் தலையங்கம் எழுதினார்கள்.ரஷ்ய நாட்டில் வெளிவரும் புகழ் பெற்ற ப்ராவ்தா என்ற பத்திரிக்கை இந்த சாலை அமைத்த பணியைசெய்த தோழர் எஸ் ஜி முருகையன் அவர்களை பாராட்டி எழுதியது அதனை அப்படியே மொழிபெயர்த்து தினத்தந்தியும் பாராட்டி எழுதியது உடனே இந்திய அரசாங்கம் தோழர் எஸ்.ஜி முருகையன் அவர்களை அழைத்துகௌரவித்து
சாம்பியன் ஆப் சிரமதான் என்ற விருதை வழங்கியது உடனே ரஷ்யா அரசாங்கம் தோழர் முருகையன் அவர்களை தன்னாட்டுக்கு அழைத்து கௌரவித்தது பிறகு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விழுந்த பெருமாள் கோவில் இடத்தில் ரஷ்ய நாட்டின் கட்டிட கலையமைப்புடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கட்டி அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்களை அழைத்து திறந்தார் தோழர் முருகையன் ஒன்றிய வளாகத்தில் கலையரங்கம் ஒன்று அமைக்கப்பட்டது அதில் ரஷ்யாவில் புகழ்பெற்ற பாலே நடன இசைக்குழுவை அழைத்து வந்து ரஷ்ய கலாச்சார நடனம் பிரம்மாண்ட முறையில் கோட்டூரில் நடைபெற்றது என்பது மிகவும் சிறப்பு இந்த பெருமைமிகு நிகழ்ச்சிக்கு தோழர் முருகையன் ஏற்பாடு செய்து நடத்திக் நிகழ்த்தி காட்டினார். தோழரும் முருகையன் ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்ற பின் ஆதிச்சபுரம் வேதபுரம் சாலையை மக்களின் உழைப்புகொடையின் மூலம் போடப்பட்டது….

வீராக்கி விக்கிரபாண்டியம் சாலையை மக்களால் உருவாக்கித் தந்தார்

கமலாபுரம் கண்கொடுத்தவணிதம் வெண்ணவாசல் சாலை புதிய சாலையை சிரமதான பணியின் மூலம் செய்து கொடுத்தார்

கொரடாச்சேரி கப்பலுடையான் சாலையை மக்களின் உழைப்பு மூலம் உருவாக்கித் தந்தார்

சித்த மருத்துவமனைகள் பெருகவாழ்ந்தான் விக்ரபாண்டியம் திருக்களார் ஆகிய ஊர்களின் அமைத்துக் கொடுத்தார்.

கால்நடை மருத்துவமனைகளை கோட்டூரிலும் பெருகவாழ்ந்தானிலும் அமைத்துக் கொடுத்தவர்

இவருடைய முயற்சியில்
பாம்புகாணி
பெருமாள்கோயில் நத்தம் எளவனூர் சோத்திரியம் கண்டமங்கலம் பெரியகுருவாடி மகாராஜபுரம் பாலையூர் நத்தம் தெற்கு தென்பரை காரைத்திடல் என்று 48 ஊராட்சி கிராமங்களிலும் பள்ளிகள் இல்லாத கிராமங்களே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தி தந்தவர்

விக்கிரபாண்டியம் ராதா நரசிம்மபுரம் கோட்டூர் பெருகவாழ்ந்தான் மழவராயநல்லூர் களப்பால் புத்தகரம் ஆகிய ஊர்களில் உயர்நிலைப் பள்ளிகளை உருவாக்கித் தந்தார்

பட்டவெளி, வெங்குழி, சோத்ரியம் மற்றும் இன்னும் பல ஊர்களில் கிராம உள் சாலைகளை மக்களை திரட்டி சிரமதான பணியின் மூலம் அமைத்து தந்தவர்.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்
நாகையின் முதல் பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினரும் இவரே.

நாகையில் இயங்காமல் கடந்த துறைமுகத்தை அன்றைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவிரட்டியை சந்தித்து நாகை துறைமுகத்தை இயங்க வைத்து கப்பல் போக்குவரத்து தொடங்க ஏற்பாடு செய்தவரும் இவரே (வருடம் 1977 முதல் 1978 )

அயல்நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் வழங்க எம்.பி பரிந்துரை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது அதன் அடிப்படையில் இந்திய அளவில் அதிக கையொப்பம் இட்ட எம்.பிஇவர் மட்டுமே

இந்தியா முழுமைக்கும் உள்ள அஞ்சல் துறை கடை நிலை ஊழியரான ஈ டி பேக்கர் சுமார் 2 லட்சம் பேர் ஊதியம் இல்லாமல் அரசிடம் வேலை பார்த்து வந்தனர் இந்த அவல நிலையை பாராளுமன்றத்தில் தோழர் எஸ். ஜி. முருகையன் அவர்கள் உரையாற்றி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர படிகளை பெற்றுதந்து சுமார் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்தார் தோழர் முருகையன் இன்று வரை அவரை கருணையோடு நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றனர் அஞ்சல் துறை ஊழியர்கள்

சிங்காரவேலர் காலம் தொட்டு நாகையிலே இயங்கி வந்த ரயில் பெட்டி தொழிற்சாலையை பொன்மலைக்கு எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது அதை அன்று சிங்காரவேலரும் தடுத்து நிறுத்தினார் சிங்காரவேலரின் சீடருமான எஸ் ஜி முருகையினும் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் காலம் வரை தடுத்து நிறுத்தி நாகையிலேயே இயங்க வைத்தார். தோழர் எஸ் ஜி முருகையன் மறைவுக்குப் பின் அந்த ரயில் பெட்டி தொழிற்சாலை பொன்மலைக்கு மாற்றம் செய்யப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம்.

விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதன் முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் தோழர் எஸ் ஜி முருகையன் அதன் அடிப்படையிலேயே பின்னாளில் தமிழ்நாடு நுகர்பொரு வாணிப கழகம் தொடங்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்

உழைக்கும் மக்களின் உழைப்பை தானமாக பெற்று நாட்டு வளர்ச்சியில் பயன்படுத்த முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவரும் இவரே
இப்படி பல எண்ணற்ற மக்கள் பணிகளை தேவைகளை பூர்த்தி செய்யஅனைத்து கட்சி நண்பர்கள் ஜாதி மத இன வேறுபாடுகள் இன்றி தான் நேசித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலுடன் கட்சி தோழர்களின் ஆலோசனைகளை கேட்டு தனது பணியை சிறப்பாக செய்து வந்த தோழர் இவரின் சேவை ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் காலத்தால் அழிக்க முடியாத காவியமாகும்.

இவரின் அரசியல் எளிமை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
எஸ் ஜி முருகையன் அவர்களின் வாழ்வு என்பது 47 வயது வரை மட்டுமே வாழ்ந்தார் இவ்வளவு சிறிய வயதில் வியக்கத்தக்க பணிகளையும் செய்து முடித்தார் என்பது வியப்பான ஒன்று .

இவர் பிறந்த தேதியும் ஐயா காமராஜர் அவர்கள் பிறந்த தேதியும் ஒரே நாளில் வருவதால் ஐயா காமராஜரை போன்று எளிமையாக வாழ வேண்டும் என்பதை முழுமையாக கடைப்பிடித்து தன் இறுதி நாள் வரையும் அப்படியே வாழ்ந்து மறைந்தார் .

இவர் பத்தாண்டுகள் ஊராட்சி மன்றத்தின் தலைவர் குடிசை வீடு …….

பத்தாண்டுகள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அதே குடிசை வீடு ….

கடைசியாக எம்பியாக இருக்கும் பொழுதும் அதே குடிசை வீடு இந்தியாவில் 543 எம்பிகளில் குடிசையில் வாழ்ந்த எம்பி என்று உலகமே புகழ்ந்த எம்பி இவர் மட்டுமே ….

1977 ஆம் ஆண்டு வீசிய கடும் புயலில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டதை புயல் தலைகீழாக புரட்டி போட்டது எம்பி ஆக இருந்த தோழர் முருகையன் சித்தமல்லியில் இருந்து ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு நாகப்பட்டினம் வரை சைக்கிளில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொன்ன மகத்தான ஒரு எம்பி

நாகையை சென்றடைந்த உடன் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பகுதிகளை போய் பார்க்கிறார் தோழர் முருகையன்.
அங்குள்ள மக்கள் பசியாலும் பட்டினியாலும் துடிக்கிறார்கள் அதிகாரிகள் யாரும்வரவில்லை ஐயா எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறுகிறார்கள்.

கண்கள் சிவந்த தோழர் முருகையன் அங்கிருந்த தோழர் கிட்டப்பா என்ற தோழரை அழைத்துக் கொண்டு இரும்பு கம்பி ஒன்றை எடுத்து வா கட்டளை இடுகிறார் தோழர் கிட்டப்பா ஒரு இரும்பு கம்பியை எடுத்து வர உணவு தானிய கிடங்கு எங்கே இருக்கிறதுஎன்று கேட்டு அங்கே செல்கிறார்கள் உணவு தானியக்கிடங்கை உடைக்கிறார் தோழர் எஸ் ஜி முருகையன் தானியக்கிடங்கில் உள்ள அனைத்து பொருட்களும் எடுத்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் இல்லங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது .இந்த செய்திதஞ்சை மாவட்டத்தில் காட்டுத்தீயை போல் பரவியது உணவுக் கிடங்கை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர் உணவு தானியங்கி கிடங்குகளில் உள்ள பொருட்களை மக்களுக்கு உடனடியாக வழங்க செய்ய அரசு ஆணை பிறப்பித்தது.

புயல் நிவாரண பணிகளை முடித்து ஒரு மாதம் கழித்து தன் வீட்டிற்கு திரும்புகிறார் தோழர் முருகையன் புயலால் பாதிக்கப்பட்ட தன் குடிசைக்கும் அதிகாரிகள் நிவாரண தொகை வழங்கியிருந்தார்கள். இந்த நிவாரணத் தொகை கூட கிடைக்காத எத்தனையோ குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன அதை போய் நீ வாங்கி இருக்கிறாயே என மனைவியிடம் கடிந்து கொண்ட தோழர் முருகையின் அந்த தொகையையும் தன் ஒரு மாத சம்பளத்தையும் புயல் நிவாரண நிதிக்கு முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.இந்த நிகழ்வை தினமணி நாளிதழ் தமிழக
எம் .பி யின் சீரிய உதாரணம் என தலையங்கம் எழுதியது

இவரின் எளிமையும் நேர்மையும் பிடிக்காத அரசியல் நயவஞ்சகர்களும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்த பெரும்புள்ளிகளும் அதிகார வர்க்கமும் ஆட்சியாளர்களும் இவரை வீழ்த்த சதித்திட்டம் தீட்டி இவர் வீட்டுக்கு வரும் நேரம் பார்த்து காத்திருந்தனர்.

தஞ்சாவூர் நிகழ்ச்சிகள் எல்லாம் முடித்துவிட்டு மன்னார்குடிக்கு பேருந்தில் வந்து இறங்குகிறார் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் பெரும் கூட்டம் காத்திருக்கிறது பேருந்தில் வந்திறங்கும் எளிமையான எம்பியை பார்த்தவுடன் மக்கள் மனதிலும் முகத்திலும் சந்தோஷம் ஏற்படுகிறது மக்கள் அருகில் வந்து ஐயா நம்ம ஊருக்கு வர வேண்டிய பஸ் வர வில்லை என பொதுமக்கள் சொல்ல பதறிப் போன தோழர் உடனே போக்குவரத்து கழக மேனேஜரை அணுகி முத்துப்பேட்டை செல்ல வேண்டிய பஸ் வரவில்லை,மார்கழிப் பனியில் ஒரு பஸ்ஸுக்கு மேலாக கூட்டம் இருக்கிறது என்பதை சொல்ல உடனடியாக மேலாளர் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து தருகிறார் தன்னுடன் வந்த தோழர்களிடம் நான் வீட்டுக்கு போய் ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு பிள்ளைகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வாங்க தோழர் என்று பணம் கொடுக்கிறார் தோழர் உடனே எதிரே உள்ள கடையில் சென்று அந்த தோழர் வாங்கி வந்து தோழரிடம் கொடுக்கிறார் அதை பெட்டியில் வைத்துக் கொண்டு அதே பேருந்தில் தானும் ஏறிக்கொண்டு மக்களோடு மக்களாய் பேருந்தில் ஏறி புறப்பட்டு செல்கிறார் அந்த ஏழைத்தாயின் மகன்
தன் கடைசி மூச்சு உள்ளவரை ஏழை எளிய மக்களுக்காக வாழ்ந்து வந்த இவரை காத்திருந்த வன்முறை கும்பல் கூலிப்படை 5-01-1979 ஆம் ஆண்டு நள்ளிரவு 12. 30 மணி அளவில் சித்தமல்லி அவர் வீட்டு அருகே பேருந்து வந்து நிற்கிறது நடத்துனர் ஐயா நான் வீடு வரை வந்து விட்டு விட்டு வரட்டுமா மின்சாரம் வேறு இல்லையே என்று கேட்கிறார் அதற்கு தோழர் எஸ் ஜி முருகையன் தம்பி அதெல்லாம் வேண்டாம் நீங்கள் செய்தது மிகப்பெரிய உதவி நீங்கள் போங்க நான் பார்த்துக்கொள்கிறேன் தம்பி என்று பரிவோடு சொல்கிறார் பேருந்து புறப்பட்டு செல்கிறது காத்திருந்த கயவர் கூட்டம் மார்கழிப் பணிக்காக அவர் பொறுத்தி இருந்த சிகப்பு துண்டால் கழுத்தை இறுக்கி முதுகுக்கு பின்னால் கத்தியால் எட்டுக்குத்துக்களும்அந்த மாவீரன் கீழே சாய்ந்த உடன் நெஞ்சிலே 25 கத்தி குத்துகளும் ஒட்டுமொத்தமாக 33 கத்தி குத்துகளுடன் ரத்த வெள்ளத்தில் த சித்தமல்லியில் சிவப்புமல்லியாய் சாய்ந்தார் அந்த தன்னலமற்ற மாவீரன்

அவர் இறக்கும் பொழுது அவரிடம் இருந்து பெட்டியில் 100 ரூபாய் பணம் மக்கள் அவருக்கு கொடுத்த மனுக்கள் ஒரு கதர் சட்டை வேட்டி குழந்தைகளுக்காக வாங்கிய மில்க் பிக்கிஸ் பிஸ்கட் பாக்கெட் ஒன்று அவரின் லெட்டர் பேடு 2 பாராளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மூக்கு கண்ணாடி அவரின் பாராளுமன்ற உறுப்பினர் முத்திரை கொஞ்சம் சில்லறை காசுகள் மட்டுமே இருந்தன…

இவருக்கென எந்த வங்கிகளும் வங்கி கணக்கு சேமிப்பு இல்லை என்பது நாடறிந்த உண்மை

இப்படி எளிமை இலக்கணமாக வாழ்ந்து மறைந்த அந்த மாமனிதனின் புகழ் வானும் மண்ணும் உள்ளவரை வாழும்

நன்றி:
பிரபு ஜீவன்.
முகநூல் பகிர்வு.

1 COMMENT

  1. உத்தரவாதமான குட்டி முதலாளித்து உன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே கம்யூனிசம் என்று பேசும் பல பேருக்கு தோழர் முருகையனின் வாழ்வு எதிர்மறை பாடமாக உள்ளது.
    குடியிருக்க வீடு கட்டிக் கொண்டோம், பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தோம்
    மூன்று வேளை உணவுக்கும் உத்தரவாதம் செய்து கொண்டே கம்யூனிசமும் பேசி வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here