நாயகி ஒரு மருத்துவர். கேரளாவின் பாலக்காட்டில் தனியாக போலீஸ் ஸ்டேசன் வந்து, தன்னிடம் ஒருவன் தப்பாக நடந்துகொண்டதாகவும், அவனை கொலை செய்துவிட்டதாகவும், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்துள்ளதாகவும் வந்து புகார் தருகிறார். அதே சமயத்தில் பல ஊடகங்களும் வந்து சேர, பரபரவென தீப்பிடித்த மாதிரி விசயம் சூடு பிடிக்கிறது. மக்கள் மத்தியிலும் பேசு பொருளாகிறது.

நாயகி போலீஸுடன் சென்று, காட்டுப் பகுதியில் ஒரு இடத்தை காட்ட.. தோண்ட ஆரம்பிக்கிறார்கள். அங்கு ஒருவடைய உடல் அல்ல இருவருடைய உடல்கள் கிடைக்கின்றன. அதில் ஒரு ஆள் நாயகியின் காதலன். இந்த கொலையை தான் தனியாக செய்யவில்லை. அவள் புகார் கொடுத்த ஸ்டேசனின் இன்ஸ்பெக்டர் தான் தனக்கு உதவினார் என அடுத்த குண்டை தூக்கி போடுகிறார். அந்த இன்ஸ்பெக்டருக்கு அந்த பகுதியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு உதவுகிற ஆள் என இழிபுகழ் பெற்றிருக்கிறார். அந்த அதிகாரி செய்திருப்பார் என ஊர் மக்களும் ஊடகத்தில் கருத்து சொல்கிறார்கள்.

நாயகி ஏன் அப்படி சொன்னாள்? அவளுக்கு என்ன ஆனது? கொலைகளுக்கான காரணம் என்ன? இன்ஸ்பெக்டருக்கும், அந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு? என பல கேள்விகளுக்கு முக்கால் வாசி படத்தில் திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு போலீஸ் அதிகாரி தப்பு செய்தால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்காமல், அது மொத்த துறைக்கும் களங்கம், அதனால் அந்த நபரை காப்பாற்றியே ஆகவேண்டும் என்பது துறை சார்ந்த அதிகாரிகளின் மனநிலையாக இயல்பாக இருக்கிறது. ஆளும் அரசியல்வாதிகளும் அதற்கு பொறுப்பு என்பதால் அவர்களும் பெரும்பாலும் மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். யார் கேள்வி கேட்டாலும், மட்டையடியாக பதில் சொல்கிறார்கள். கூடுதலாக அந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருந்தால், இன்னும் அதிகாரமிக்கவராகிவிடுகிறார். எந்த அராஜகத்தையும் செய்ய துணிகிறார். படத்தில் அந்த இன்ஸ்பெக்டரின் மொத்த நடவடிக்கையுமே ஆபத்தாக இருக்கிறது.


இதையும் படியுங்கள் : டாணாக்காரன் – திரைப்பார்வை


தான் நினைத்தால்… இப்படியும் கதை எழுதுவேன். அப்படியும் கதை எழுதுவேன் என உயர் போலீஸ் அதிகாரி ஓரிடத்தில் குரூர புன்னகையுடன் சொல்கிறார். அப்படித்தான் ஒவ்வொரு வழக்கிலும் அரசியல், அதிகாரம், செல்வாக்கு, பணம் என்ற பின்னணியில் போலீசு “கதை” எழுதுகிறார்கள் என்பதும் யதார்த்தமாக இருக்கிறது. பல முக்கிய வழக்குகளில் அப்படி ”கதை, திரைக்கதை, வசனம்” எழுதிய விசயம் அம்பலமாகியிருக்கிறது. சமீபத்திய உதாரணம் : தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு. புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் தலைமையில் மக்களின் விடாப்பிடியான போராட்டத்தினால் தான் பல சமயங்களில் நீதி கிடைத்திருக்கிறது. யாருக்கோ பிரச்சனை என நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால், அநீதியின் கரங்களில் சிக்கிக்கொள்கிறோம்.

படத்தில் கொலைகள் ஏன் நடந்தன என்பதை படத்தின் இறுதி வரை அந்த சஸ்பென்சை கொண்டு சென்றிருப்பது சிறப்பு. நாயகியாக சூரரைப் போற்று நாயகி அபர்ணா. முக்கிய கதைப்பாத்திரத்தில் தமிழ் பேசும் உயர் அதிகாரியாக ஹரீஷ் உத்தமன் வருகிறார். எல்லோரும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரஞ்சித் உன்னி என்பவர் கதை எழுதி, சுதீஷ் ராமச்சந்திரன் இயக்கியிருக்கிறார். Zee5ல் வெளியாகியிருக்கிறது. பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here