மிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம்(Tan tea) இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட மலையக தமிழர்களுக்காக 1968 ஆம் ஆண்டு தமிழக அரசால் அப்போது ஆட்சியில் இருந்த திமுகவால் உருவாக்கப்பட்டது.

இன்று நிதி பிரச்சனைகளை காரணம் காட்டி வனத்துறையிடம் இருந்து குத்தகை எடுத்த நிலங்களை திரும்பவும் வனத்துறையிடம் ஒப்படைக்கிறது தமிழக அரசு. இதனால் அந்தப் பகுதி தோட்டங்களில் வேலைபார்த்த தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி அரசியல் செய்ய விரும்புகிறது தமிழக பாஜக. நாட்டை கார்ப்பரேட்களிடம் கூறு போட்டு விற்கும் பாஜகவிற்கு இதைப்பற்றி பேச தகுதி உள்ளதா?

டான் டீ நிறுவன வரலாறு :

150 ஆண்டுகளுக்கு முன்னர் 1860-களில் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற ,அடிமைகளாக; தமிழகத்தின் குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்தவர்கள் ஆங்கிலேய காலனியவாதிகளால் அழைத்து செல்லப்பட்டனர். பல தலைமுறைகளாக அங்கேயே உழைத்தார்கள். இலங்கை மண்ணின் மக்களாக மாறினார்கள். இன்று மலையக தமிழர்களாக அறியப்படுபவர்கள் இவர்கள்தான். இந்த நிலையில் 1948 -ல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்த தொழிலாளர்களின் தனிப்பட்ட உரிமையை இலங்கை அரசு மறுத்தது. 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இந்தியா திரும்ப வேண்டும் எனக் கோரியது. இதில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

1982 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் கப்பல் மூலம் தோட்டத் தமிழர்கள் வந்தடைந்தனர். | பட உதவி: சதானந்த் மேனன்

இதனையடுத்து அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட அப்போதைய இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயக்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1964-இல் 5 லட்சத்து 25 ஆயிரம் மலையக தமிழர்கள் மீண்டும் தமிழகம் திரும்பினார்கள்.

தமிழகம் திரும்பிய பெரும்பாலானோர் தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த மண்ணில் திக்கற்று, தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தார்கள்.

இலங்கையில் ஒப்பந்தம் போடும் போதே தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய என எழுதி வாங்கி வந்தவர்களுக்கு அரசு உருவாக்கியதுதான் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ( Tan tea).

நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லும் தமிழக அரசு!

கோவை மாவட்டத்தில் வால்பாறை, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, நடுவட்டம், சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், பாண்டியார் ஆகிய ஊர்களிலும் என எட்டு பிரிவுகளாக 4431 ஹெக்டேர் பரப்பளவில் டான் டீ நிறுவனம் செயல்படுகிறது. இதில் 6 இடங்களில் டான் டீ நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகள் இயங்கி வருகின்றன. மொத்தமாக 3800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் Tan tea நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறது Tan tea நிர்வாகம். இதனால் தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு சொந்தமான(Tan tea)  2,152 ஹெக்டேர் நிலங்களை மீண்டும் வனத்துறையிடமே ஒப்படைக்க போவதாக அரசாணை வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் வால்பாறை மற்றும் நடுவட்டம் பிரிவில் இயங்கிவரும் தோட்டங்கள் முழுமையாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

அரசு சொல்லும் காரணம்:

அரசு சொல்லும் முதன்மையான காரணம் , நிதி நெருக்கடி. 7094 பணியாளர்கள் தேவைப்படுகிற இடத்தில் 3319 பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதாகவும், Tan tea தோட்டங்களில் பணியாற்ற போதிய தொழிலாளர்கள் கிடைக்காததும், இந்திய தேயிலை சந்தை சரிவதுமே தற்போதைய இழப்புக்கு காரணம் என சொல்கிறார்கள். தொழிலாளர் பற்றாக்குறை இருக்கும் போது ஏன் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்யவில்லை?

இந்த காரணம் சரியானதா?

தனியார் தேயிலை தோட்டங்கள் எவ்வாறு லாபகரமாக இயங்க முடிகிறது. இவர்கள் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டுகிறார்கள். இதற்கு மாற்றை யோசிக்க வில்லை. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இதனை சரிசெய்யலாம். ஆனால் இதைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. டான் டீயில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தரகர் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இதனை நிறுவனமே செய்தால் நிச்சயம் லாபம் ஈட்ட முடியும். ஆனால் அதையும் அவர்கள் மறுக்கிறார்கள். தேசிய தேயிலை வாரியத்தின் விதிகள் 90% உற்பத்தியை தரகர்கள் மூலம் தான் சந்தைப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது. தேயிலை வாரியத்தின் விதிகளை மீற முடியாது என கூறுகிறார்கள்.

முதலைக் கண்ணீர் வடிக்கும் பாஜக!

இந்த பிரச்சனையை பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்கிறது தமிழக  பாஜக. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறும்போது ”டான் டீ நிறுவனத்தை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் கொடுத்து விடுங்கள்” என்கிறார். சாத்தான் வேதம் ஓதுவதை போல் உள்ளது.

காசு கொடுத்து ஆட்களை சேர்த்து நீலகிரியில் போராட்டம் ஒன்றை நடத்தி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் நீலகிரி பகுதியில் ஒரு காலக் கட்டத்தில் பாஜகவுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. இதை மீண்டும் கொண்டு வருவதற்காக இது போன்ற நாடகங்களை நடத்தி உழைக்கும் மக்களை ஏமாற்ற நினைக்கிறது உழைக்கும் மக்களின் எதிரியான பாஜக.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிர்வகிக்க துப்பில்லாமல் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு கடைவிரிக்கும் பாசிச பாஜகவுக்கு இதைப்பற்றி பேச தகுதியே கிடையாது. BSNL நஷ்டத்தில் இயங்குகிறது எனக் கூறி மூடுவிழா நடத்த நினைக்கும் பாஜக ,டான் டீ நிறுவனத்தை எடுத்து நடத்துவதாக சொன்னால் யாரும் நம்ப தயாராக இல்லை.

இதையும் படியுங்கள்: ஏலம் போகும் பொதுத்துறை நிறுவனங்கள்!

தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை (Hill bio tech)  கொரோனா காலத்தில் செயல்படுத்த முடியாவிட்டால் தமிழக அரசிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தபோது அதை காற்றில் பறக்க விட்டவர்கள் தேயிலைத் தொழிலாளர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

டான் டீ நட்டமடைவதற்க்கு அரசு நிர்வாகமே காரணம்:

தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்க தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் 480 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றவில்லை என்று காரணம் காட்டுகிறது. தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதும் டான் டீயில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளை தரகர்களிடம் வழங்காமல் நேரடியாக ஏலம் விடுவதும், டான் டீ நிர்வாக குளறுபடிகளை சரி செய்வதன் மூலமே தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும்.

தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் உருவான தேயிலைத் தோட்ட கழகத்தை லாபமில்லை எனக்கூறி மூடுவது நியாயமற்றது. தேயிலைத் தொழிலாளர்களின் 2500 குடும்பங்களை Tan tea தொழிற்சாலையை தொடர்ந்து இயக்குவதன் மூலமே பாதுகாக்க முடியும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here