டந்த 2008 ஆம் ஆண்டு முதல், கலாஷேத்ரா கல்லூரியில், மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக, கடந்த வியாழன் கல்லூரியில் பயிலும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள மத்திய கலாச்சாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கலாஷேத்ரா அறக்கட்டளையின்  கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும், அந்த கல்லூரியில் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக தெரிகிறது.

மாணவிகள் தொடர்ந்து நிர்வாகத்திடம் புகார் கூறியும் இன்று, நாளை என்று நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளை தப்ப வைக்க முயலுவதால், மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். “WE WANT JUSTICE” முழக்கமிடுகின்றனர்.

தேசிய மகளிர் ஆணையத்தின் கயமைத்தனம்

கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் இயக்குநரே, சமூகவலைதளத்தில் இந்த புகாரை வைத்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் கலாஷேத்ராவை சேர்ந்த, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், பேராசியர்கள் மீது தவறாக பாலியல் புகார் அளித்துள்ளதாகவும் மனு அளித்திருந்தார்.

இதனை காரணமாக வைத்துக் கொண்டு தேசிய மகளிர் ஆணையம் அங்கு யாருக்கும் பாலியல் தொந்தரவு நடக்கவில்லை என்கிற காரணத்தினால் காவல்துறை விசாரணைக்கான உத்தரவை திரும்பப் பெற்றது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கலாஷேத்ரா வளாகத்திற்கு ஒருநாள் திட்டமிடாமல் வருகை தந்தார். இந்த செயல், மாணவர்களிடையே எதிர்ப்பை அதிகரித்தது. இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் சில ஆசிரியர்களை சந்தித்தார் ரேகா ஷர்மா.

பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், அதாவது பொது இடங்களில் தன்னிடம் கூறுமாறு அவர் கேட்டுக் கொண்டதாக மாணவர்கள் கூறுகின்றனர். இது அப்பட்டமாக பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசிய மகளிர் ஆணையம் செயல்படுவதை காட்டுகிறது. அதனால் தான் மாணவிகள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

குற்றவாளிகளை காப்பாற்ற முனையும் அதிகார வர்க்கம்

போராடும் மாணவி ஊடகத்திடம் பேசுகையில் “கடந்த நவம்பர் மாதம் இந்த பிரச்சினை வெளியில் வர ஆரம்பித்தது, அது முதலே நாங்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவிகள் கூறுகிறார்கள்: கல்லூரியில் உள்ள சில ஆசிரியர்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். அதை காரணமாக வைத்துக் கொண்டு அந்த ஆசிரியர்கள் தான் போராட்டத்தை தூண்டி விடுவதாக நிர்வாகம் கூறுகிறது.

போராடும் மாணவிகளிடம் சென்று  “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆதாரம் உள்ளதா?” என்று கலாஷேத்ராவின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் கேட்டுள்ளார். இவையெல்லாம் போராடுபவர்களையே குற்றவாளியாக்கும் முயற்சி.

சாதிய பாகுபாடு

போராடும் மாணவிகள், கல்லூரியில் சாதிய பாகுபாடு நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் நீங்கள் என்ன சாதி? ஐய்யரா? ஐய்யங்காரா? என்று ஆசிரியர்கள் கேட்கிறார்கள். தாங்கள் நன்றாக நடனம் ஆடினாலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. என்ன சாதி என்று கேட்டு தான் மார்க் போடுவார்கள் என மாணவிகள் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு தான் PG கொடுக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அங்கும் பார்ப்பனியம் மையம் கொண்டுள்ளது, என்பது இதிலிருந்து தெரிகிறது.

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கருத்து

இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா “கலாஷேத்ராவில் மாணவிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை அல்ல. ஏனென்றால் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். இது இன்று நடந்த விசயமாக தெரியவில்லை. நீண்ட காலமாக நடப்பதாக தெரிகிறது. குற்றம் நடப்பதற்கான சூழல் அங்குள்ளது. அதனால் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரணை நடக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மகளிர் ஆணையம் விசாரணை

31.03.2023 அன்று, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, மாணவிகளை தனித்தனியாக அழைத்து 12 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார். 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமான புகார்களை அளித்துள்ளனர். குறிப்பாக (ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய்கிருஷ்ணன், ஸ்ரீநாத்)ஆகிய  4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர். தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டத்தை கைவிட்டு விடுதிக்கு சென்று படிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார் குமாரி.

இதனை அடுத்து ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யப்படவில்லை.

தவறு செய்பவர்கள் யார்? என்பதை பொறுத்தே விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு தான் சட்டமே கிடையாதே! அதனால் தான் தேசிய மகளிர் ஆணையம், அவசர அவசரமாக தலையிட்டு மாணவிகளின் போராட்டத்தை முடக்கப் பார்க்கிறது.

இதையும் படியுங்கள்:

உயர்கல்வி நிறுவனங்கள் முழுவதும் பார்ப்பன கும்பலிடம் சிக்கியுள்ளது. இதில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சாதிய வன்முறைகள், மத ரீதியான தாக்குதல் தினம் தினம் நடக்கிறது. ரோகித் வெமுலா தொடங்கி சென்னை ஐஐடி, கான்பூர் ஐஐடி வரை மாணவர்களின் தற்கொலைகள் தொடர்கின்றன. ஆனால் அரசும், அதிகார வர்க்கமும் கண்டும் காணாமல் செல்கிறது. பெயருக்கு வழக்குப்பதிவு செய்கிறதேயொழிய தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. இதே குற்றத்தை சாமானியன் செய்திருப்பான் என்று நினைத்தாலே, காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சித்திரவதை செய்து, விசாரணை என்ற பெயரிலே கொலை செய்த சம்பவங்களும், இதே நாட்டில் தான் நடக்கிறது.

கலாஷேத்ராவின் தற்போதைய மாணவர்கள், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றாலும், மக்களுடைய ஆதரவு இல்லாமல் பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது கடினம். மக்கள் போராட்டமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. போராடும் மாணவிகளுக்கு துணை நிற்போம். காவிகள் பிடியில் இருந்து, கல்வி நிறுவனங்களை பாதுகாப்போம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here